மூவருக்கு உதவுவது அல்லாஹ்மீது கடமை
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பேருக்கு உதவி செய்வது மகத்துவமும் வல்லமையும் மிக்க அல்லாஹ்வின்மீது கடமையாக உள்ளது. 1. அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர், 2. கற்பைக் காக்க நாடித் திருமணம் செய்ய முனைபவர். 3. கடனை நிறைவேற்ற நாடுகின்ற விடுதலைப் பத்திரம் எழுதிக்கொடுக்கப்பட்ட அடிமை. (நசாயீ 3069)
நபிகளார் காலத்தில் எதிரிகளை எதிர்த்துப் போரிட வேண்டிய நிர்ப்பந்த நிலை முஸ்லிம்களுக்கு இருந்தது. எனவே அக்காலத்தில் நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களைப் போருக்கு அழைத்தார்கள். அவர்களோ அறப்போரில் கலந்துகொள்ள மிகுந்த ஆர்வமுடையவர்களாக இருந்தார்கள். அத்தகையோர் தம் குடும்பத்தையும் பொருட்படுத்தாமல் அல்லாஹ்வின்மீது நம்பிக்கைவைத்துப் போர்க்களத்திற்குச் சென்றார்கள். அதனால் அவர்களுக்கு அல்லாஹ் உதவிசெய்தான். அல்லாஹ்விற்காக அவர்கள் தம் குடும்பத்தையும் பொருட்படுத்தாமல் தம் உயிரையும் பொருட்படுத்தாமல் போருக்குச் சென்றதால் அவர்களுக்கு உதவிசெய்வது அல்லாஹ்வின்மீது கடமையாகின்றது. அந்த உதவி இரண்டு வகைகளில் கிடைக்கலாம். ஒன்று போர்க்களத்திலேயே அல்லாஹ்வின் உதவி கிடைப்பது. அதன்மூலம் அவர்கள் வெற்றி பெறுவது. மற்றொன்று அவர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் பொருளாதார உதவி செய்வது. ஆக அல்லாஹ்வின் உதவி அவர்களுக்குக் கட்டாயம் உண்டு.
முதன்முதலில் நடந்த போர் பத்ருப்போர் ஆகும். அது இஸ்லாமிய மார்க்கத்திற்கே திருப்புமுனையாக அமைந்தது. அப்போதைக்கு இருந்த முஸ்லிம்கள் 313 பேர் மட்டுமே. அவர்கள் அனைவரும் அப்போரில் கலந்துகொண்டார்கள். அந்தப் போரில் முஸ்லிம்கள் அனைவரும் தீரமுடன் கலந்துகொண்டதால் அல்லாஹ் அவர்களுக்கு உதவி செய்தான். முஸ்லிம்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக வானவர்களை அனுப்பி எதிரிப்படையினரை வெருண்டோடச் செய்தான். அல்லாஹ்வின் பாதையில் போராடுகின்ற போராளிகளுக்கு அவனுடைய உதவி கட்டாயம் உண்டு என்பதை இது உறுதிப்படுத்துகிறது.
இரண்டாவது கற்பைக் காக்க நாடித் திருமணம் செய்ய முனைபவருக்கு அல்லாஹ்வின் உதவி உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் தெரிவித்துள்ளார்கள். ஒருவர் விபச்சாரத்தின் தீமையை உணர்ந்து அதன் தண்டனையைப் பயந்து அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சி, தம் கற்பைக் காத்துக்கொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் திருமணம் செய்ய நாடுகிறார் என்றால் அவருடைய நாட்டத்தை நிறைவேற்றும்பொருட்டு அல்லாஹ் அவருக்கு உதவி செய்கின்றான். அதாவது அவன் மணப்பெண்ணுக்கு வழங்க வேண்டிய மஹர் தொகையைச் செலுத்துவதற்கான ஏற்பாட்டைச் செய்கின்றான். அதன்மூலம் அவன் திருமணம் செய்ய உதவி செய்கின்றான். மேலும் அல்லாஹ் கூறியுள்ளதைக் கவனியுங்கள்: (ஆணாயினும், பெண்ணாயினும்) உங்களுள் எவருக்கும் வாழ்க்கைத் துணை இல்லாவிட்டால், அவர்களுக்கு(ம் விதவைகளுக்கும்) திருமணம் செய்துவிடுங்கள். (அவ்வாறே) உங்கள் அடிமையிலுள்ள நல்லோர்கள் ஆணாயினும் பெண்ணாயினும் சரி (வாழ்க்கைத் துணைவரில்லாத) அவர்களுக்கும் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாயிருந்தாலும் அல்லாஹ் தன்னுடைய அருளைக் கொண்டு அவர்களுடைய வறுமையை நீக்கி விடுவான். (24: 32)
மூன்றாவது, கடனை நிறைவேற்ற நாடுகின்ற விடுதலைப் பத்திரம் எழுதிக்கொடுக்கப்பட்ட அடிமைக்கு அல்லாஹ்வின் உதவி உண்டு. அக்காலத்தில் அடிமைகள் இருந்தனர். அவர்கள் தம் உரிமையாளர்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். அவர்களின் கட்டுப்பாட்டிலேயே வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும். அத்தகைய தருணத்தில் அந்த அடிமைகள் விடுதலைபெற நாடினால் தமக்கான விலையை அந்த உரிமையாளரிடம் செலுத்த வேண்டும். அநத் அடிமைக்கான தொகையை நிர்ணயித்து விடுதலைப் பத்திரத்தை அந்த உரிமையாளர் எழுதிக்கொடுப்பார். நிர்ணயிக்கப்பட்ட தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்திவிட்டு அவர் தம் அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற்றுக்கொள்ளலாம். இதுவே அக்காலத்தில் நடைமுறையில் இருந்த விடுதலைப் பத்திரமாகும்.
விடுதலைப் பத்திரம் எழுதப்பட்டவுடன் அந்த அடிமை விரும்பிய இடத்திற்குச் சென்று சம்பாதித்துப் பொருளீட்டித் தன் உரிமையாளரிடம் செலுத்த வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் அவ்வளவு பணத்தைச் சம்பாதிக்க முடியாமல் மீண்டும் அடிமையாகவே ஆகிவிடும் நிலையும் ஏற்படலாம். அதனால் அத்தகைய தருணத்தில் அல்லாஹ் அந்த அடிமைக்குத் திண்ணமாக உதவி செய்வான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
மகத்துவமும் வல்லமையும் மிக்க அல்லாஹ்வின் படையினர் மூன்று பேர் ஆவர். (அவர்கள்) 1. போர்வீரர், 2. ஹஜ் செய்பவர், 3. உம்ராச் செய்பவர் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (நசாயீ: 3070)
அல்லாஹ்வின் படையினர் என்று போர்வீரரோடு, ஹஜ் செய்பவரையும் உம்ராச் செய்பவரையும் அல்லாஹ்வின் தூதர் இணைத்துக் கூறியுள்ளார்கள். அதன்மூலம் ஹஜ்ஜும் உம்ராவும் செய்வது போர்செய்வதற்குச் சமமான இறைவழிபாடு என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். காரணம் போர்க்களத்தில் எவ்வாறு பல்வேறு சிரமங்களையும் துன்பங்களையும் சகித்துக்கொண்டு போரிட வேண்டுமோ அதுபோலவே ஹஜ்ஜிலும் பல்வேறு மொழிபேசுகின்ற, பல்வேறு நாட்டவர்களின் சிரமங்களையும் துன்பங்களையும் சகித்துக்கொண்டு பொறுமையை மேற்கொள்ளத்தான் வேண்டும். அது மட்டுமல்ல, தட்ப வெப்ப நிலை, காலநிலை மாற்றம், நேர மாற்றம் இப்படி எத்தனையோ இயல்பான வாழ்க்கையைப் பாதிக்கின்றவை இருக்கின்றன. நீண்ட தூரப் பயணம், உணவு முறை ஆகிய சிரமங்களும் உள்ளன. ஆகவேதான் அவ்வாறு கூறியுள்ளார்கள்.
மகத்துவமும் மேன்மையும் மிக்க அல்லாஹ் ஓர் அம்பின் மூலம் மூன்று பேரைச் சொர்க்கத்தில் நுழையச் செய்கிறான்: 1. செய்கின்றபோது நன்மையை நாடி அதைச் செய்பவன், 2. அதை எறிபவன், 3. அதை (மீண்டும் பயன்படுத்த எடுத்துக் கொடுத்தோ பொருளாதார உதவிசெய்தோ) பரிமாறுபவன் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உக்பா பின் ஆமிர் (ரளி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நசாயீ: 3095)
போர்க்களத்தில் பயன்படுத்தப்படும் அம்பைச் செய்கின்றபோது அதைச் செய்பவர் நன்மையை நாடிச் செய்தால் அவரின் எண்ணத்திற்கேற்ப நற்கூலியை அல்லாஹ் அவருக்கு வழங்குகின்றான். இதன் மூலம் சண்டைகள் பெருக வேண்டும்; அதன் காரணமாக நிறைய வாங்கப்பட வேண்டும்; நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமில்லாமல் தூய எண்ணத்தோடு அதைச் செய்தால் அவருக்குச் சொர்க்கம் உண்டு. இரண்டாவது, அந்த அம்பை எதிரிகளை நோக்கி எறிபவனுக்குச் சொர்க்கம். இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிராகப் போர்புரிவோர்மீது எய்யப்படுகின்ற ஒவ்வோர் அம்புக்கும் நன்மை உண்டு. அந்த அடிப்படையில் அதை எறிபவருக்குச் சொர்க்கமே உண்டு. போருக்கு உதவியாக இருப்பவருக்கும் சொர்க்கம் உண்டு. ஒன்று பயிற்சியின்போது எய்யப்படுகின்ற அம்பை மீண்டும் மீண்டும் எடுத்துக்கொடுப்பதன்மூலம் சொர்க்கத்தை அடையலாம். அல்லது போருக்காக அம்புகள் வாங்கப் பண உதவி செய்து சொர்க்கத்தை அடையலாம். ஆக ஓர் அம்பு மூவர் சொர்க்கத்தில் நுழையக் காரணமாக அமைகிறது.
தற்காலத்தில் இஸ்லாமியப் போரும் இல்லை; அம்பும் இல்லை. ஆனால் அந்த அம்புக்குப் பதிலாக இன்றைய காலத்திற்கேற்ப இஸ்லாமிய மார்க்கத்திற்குப் பயன்படுகின்ற, மார்க்கத்தைப் பாதுகாப்பதற்குத் தேவைப்படுகின்ற பொருள்களை வாங்கிக் கொடுப்பதன்மூலம் அந்த நன்மையை அடையலாம். சான்றாக, நாவால் செய்யப்படுகின்ற மார்க்கப் பிரச்சாரம், எழுதுகோல்களால் எழுதப்படுகின்ற இஸ்லாமியக் கருத்துகள், இணையதளங்கள்மூலம் பரப்பப்படுகின்ற ஏகத்துவப் பிரச்சாரங்கள், அதற்கான உறுதுணைகள் யாவும் அந்த வகையில் சேரும். ஓர் அம்பு மூவர் சொர்க்கம் செல்லக் காரணமாக இருக்கும் என்றால் ஏன் ஓர் எழுதுகோல் மூவர் சொர்க்கத்திற்கு நுழையக் காரணமாக இருக்கக்கூடாது? நிச்சயமாக நம்முடைய எழுதுகோல் நம்மைச் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லக் காரணமாக அமைய வேண்டுமென்றால் அது நம் கையில்தான் இருக்கிறது.
ஆம்! அந்த எழுதுகோல்மூலம் நாம் நன்மையைப் பரப்புவோராக இருக்க வேண்டும். அத்தகைய நல்வாய்ப்பு இக்காலத்தில் நிறையவே இருக்கின்றது. முகநூல், சுட்டுரை, வாட்ஸ்அப் முதலிய இணையதளங்கள் உள்ளன. அவற்றைத் தாண்டி எத்தனையோ இணையதளங்களிலும் பத்திரிகைகளிலும் நாம் சொந்தமாக எழுதுவதற்காக வாய்ப்பு நிறையவே உள்ளது. எனவே நம் எழுதுகோல் மூலம் நாம் சொர்க்கம் செல்ல இன்றிலிருந்து முயல்வோமாக!
=========================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக