சனி, 8 நவம்பர், 2014

நபிகளார் நவின்ற மூன்றுகள் (தொடர்-17)


                                                               
                                                (தடுக்கப்பட்ட மூன்று செயல்கள்)

                        மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி, ஃபாஸில் தேவ்பந்தீ, (பிஎச்.டி.)

ஒரு கூட்டத்தினருக்குத் தலைமை தாங்கி தொழுகை நடத்தும்போது அவர்களை விட்டுவிட்டுத் தமக்காக மட்டும் பிரார்த்தனை செய்யக்கூடாது. அப்படிச் செய்தால் அவர்களுக்கு அவர் துரோகம் இழைத்துவிட்டார். (வீட்டின் உள்ளே நுழைய) அனுமதி பெறுவதற்கு முன்பு வீட்டின் உட்பகுதிகளை அவர் பார்க்கக் கூடாது.  அவ்வாறு அவர் பார்த்துவிட்டால் (அனுமதி பெறாமலேயே வீட்டில்) நுழைந்தவராவார். மலலத்தை அடக்கிக்கொண்டு சிரமத்துடன் தொழக்கூடாது. ஆக இம்மூன்று காரியங்களும் செய்ய உங்களுள் யாருக்கும் அனுமதி இல்லை என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.   (நூல்கள்: அபூதாவூத்: 83, திர்மிதீ, இப்னுமாஜா, அஹ்மது)

ஒரு குழுவினருக்குத் தலைமையேற்றுத் தொழுகை நடத்தும்போது அந்த இமாம் பொதுநலன் கருதிப் பிரார்த்தனை செய்தல், ஏதேனும் வீட்டினுள் நுழைவதற்குமுன் அவ்வீட்டாரிடம் அனுமதி கோருதல், சிறுநீர், மலம் ஆகியவற்றை அடக்கிக்கொண்டு தொழுகாதிருத்தல் ஆகிய மூன்று கருத்துகள் இங்கே கூறப்பட்டுள்ளன. இம்மூன்றினுள் கடைசி இரண்டை ஏற்றுக்கொள்ளும் அறிஞர்களுள் சிலர் முதலாம் விசயத்தை ஏற்க மறுக்கின்றனர். அதனால் இந்த நபிமொழியே பலவீனமானது என ஒதுக்கிவிடுகின்றனர் சிலர். காரணம் மேற்கண்ட ஹதீஸில் உள்ள முதலாம் கருத்து நபிகளாரின் செயல்பாடுகளுக்கு முரணாகத் தெரிகிறதே என்பது அவர்களின் எண்ணம். ஆனால் அந்தக் கருத்தில் எந்த முரண்பாடும் இல்லை என்பதை மற்றொரு நபிமொழியின் மூலம் நாம் அறியலாம்.

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரளி) அவர்கள் அறிவித்துள்ள பின்வரும் நபிமொழி மேற்கண்ட நபிமொழிக்கு ஆதாரமாக உள்ளது. நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தபோது "அஸ்ஸலாமு அலல்லாஹி மின் இபாதிஹி, அஸ்ஸலாமு அலா ஃபுலானின் வஃபுலான்' (அடியார்கள் சார்பாக அல்லாஹ்வுக்கு சலாம் உண்டாகட்டும்) என்று கூறிக்கொண்டிருந்தோம். (இதனை அறிந்த) நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் மீது சலாம் உண்டாகட்டும்' என்று கூறாதீர்கள் ஏனெனில், அல்லாஹ்தான் "சலாம்' ஆக இருக்கிறான். மாறாக, "அத்தஹிய்யாத்து லில்லாஹி வஸ்ஸலவாத்து வத்தய்யிபாத்து அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன் நபிய்யு வ ரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன்'' எனக் கூறுங்கள்.
இதை நீங்கள் கூறினால் வானம் பூமியிலுள்ள அனைத்து நல்லடியார்கள் மீதும் சலாம் கூறியதாக அமையும். (பின்னர்) "அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு'' என்றும் கூறுங்கள். இதன் பிறகு உங்களுக்குப் பிடித்தமான பிரார்த்தனையைத் தேர்ந்தெடுத்து (வேண்டி)க்கொள்ளுங்கள் என்று கூறினார்கள். (நூல்: புகாரீ: 835)

இந்த ஹதீஸில் வந்துள்ள, "உங்களுக்குப் பிடித்தமான பிரார்த்தனையைத் தேர்ந்தெடுத்து வேண்டிக்கொள்ளுங்கள்'' எனும் கடைசி வாக்கியம் மிகுந்த கவனத்திற்குரியது. அதாவது அத்தஹிய்யாத்து ஓதி முடித்தபின், ஒவ்வொருவரும் தத்தம் விருப்பம்போல் பல்வேறு துஆக்களை வேண்டலாம். அதில், என்னை நரகத்தைவிட்டுக் காப்பாற்று, என் பாவங்களை மன்னித்துவிடு, என் கல்வியைப் பெருகச் செய் என்பன போன்ற துஆக்கள் இருக்கலாம். ஆனால் இவ்வாறு ஓர் இமாம் ஓதுகின்றபோது அவர் தமக்காக மட்டும் ஒருமையில் கேட்காமல், தம்மைப் பின்பற்றித் தொழுகின்ற அனைவருக்கும் சேர்த்துப் பிரார்த்தனை செய்ய வேண்டும். எனவே, எங்களை நரகத்தைவிட்டுக் காப்பாற்று, எங்கள் பாவங்களை மன்னித்துவிடு என்று பன்மையாகக் கேட்க வேண்டும் என்பதையே முதலாம் ஹதீஸில் உள்ள முதல் கருத்து சுட்டிக்காட்டுகிறது என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்.

பொதுவாக, நாம் தொழுகையில் அத்தஹிய்யாத்து, தரூதே இப்ராஹீம், துஆ ஆகியவற்றை ஓதுகின்றோம். அத்தஹிய்யாத்து, தரூதே இப்ராஹீம் ஆகிய இரண்டும் ஹதீஸ்கள் மூலம் தீர்மானிக்கப்பட்டவை. ஆனால் துஆ என்னும் இடத்தில் குறிப்பிட்ட துஆவை மட்டும் ஓதாமல் குர்ஆன், ஹதீஸில் வருகின்ற பல்வேறு துஆக்களை நாம் ஓதலாம் என்பது பலருக்கும் தெரிவதில்லை. பதிவுசெய்யப்பட்ட ஒரு கருவியைப் போன்று நாம் நம் தொழுகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். குழுவாகத் தொழுகின்றபோது இமாம் தாம் விரும்புகின்ற துஆவைத் தம்மைப் பின்பற்றித் தொழுவோருக்கும் சேர்த்துப் பன்மையாகக் கேட்க வேண்டும். அந்நேரத்தில் பின்னால் உள்ளவர்கள், இமாம் சலாம் கொடுத்துத் தொழுகையை முடிக்கின்ற வரை, தமக்குத் தெரிந்த துஆக்களை ஓதிக்கொண்டிருக்க வேண்டும். அது முடிந்தபின், அவரவர் தொழுகின்ற உபரித்தொழுகைகளில் அத்தஹிய்யாத்து இருப்பில் இருந்துகொண்டு அத்தஹிய்யாத்து, தரூதே இப்ராஹீம் ஆகிய இரண்டையும் ஓதி முடித்தபின் தாம் விரும்பிய துஆக்களை, தமக்குத் தெரிந்த துஆக்களை ஓத வேண்டும். ஒரே ஒரு துஆதான் ஓத வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டு அதை மட்டும் எந்தவித உயிரோட்டமுமின்றி, மனனமாக ஓதி முடித்துவிட்டு, உடனடியாக சலாம் கொடுத்துத் தொழுகையை முடித்துவிட்டு ஓடுவதில் கவனம் செலுத்தக்கூடாது. மாறாக, அந்த அத்தஹிய்யாத்து இருப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஏனெனில் அது துஆ அங்கீகரிக்கப்படுகின்ற இடமும் நேரமும் ஆகும். 

இரண்டாவது, பிறரின் வீட்டினுள் நுழைய அனுமதி பெறுவதற்கு முன்பு வீட்டின் உட்பகுதிகளைப் பார்க்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் தடைவிதிக்கின்றார்கள். அவ்வாறு அவர் பார்த்துவிட்டால் அனுமதி பெறாமலேயே வீட்டினுள் நுழைந்தவராவார் என்று எச்சரிக்கின்றார்கள். பொதுவாக ஒரு வீட்டிற்குச் சென்று, அங்குள்ளோருக்கு சலாம் கூறி, அங்குள்ளோர் பதிலளித்து அனுமதி கொடுத்தால்தான் அவ்வீட்டிற்குள் நுழையலாம். இல்லையேல் திரும்பி வந்துவிட வேண்டும் என்பது இஸ்லாமிய மரபாகும். அந்த அடிப்படையில் இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ள கருத்து நமக்குத் தெளிவாகவே விளங்குகின்றது.  

மூன்றாவதாக, மலலத்தை அடக்கிக்கொண்டு சிரமத்துடன் தொழக்கூடாது  என்று நபி (ஸல்) அவர்கள் தடைவிதிக்கின்றார்கள். காரணம் தொழுகை என்பது மனஓர்மையோடு செய்யப்படுகின்ற ஒரு வழிபாடு. அத்தகைய வழிபாட்டை மேற்கொள்கின்றபோது உடலும் உள்ளமும் இயல்பாக இருந்தால்தான் ஒருவர் தாம் ஈடுபடுகின்ற அந்த வழிபாட்டைச் செவ்வனே நிறைவேற்ற முடியும். மாறாக, படபடப்பும் பதற்றமும் இருக்கும் நிலையில் ஒருவர் எவ்வாறு தம்  தொழுகையில் மனஓர்மையோடு ஈடுபட முடியும்? எவ்வாறு மனமுருகி இறைவனிடம் வேண்ட முடியும்? ஒருவருக்குச் சிறுநீரோ, மலமோ முட்டிக்கொண்டு வெளியேற இருக்கும் நிலையில் அவற்றை அடக்கிக்கொண்டு அவர் எவ்வாறு மன ஓர்மையோடு தொழ முடியும்? எப்போது இமாம் தொழுகையை முடிப்பார், நாம் கழிவறை செல்லலாம் என்ற சிந்தனைதானே தொழுகை முழுக்க நீடிக்கும்? எனவேதான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைத் தடைசெய்தார்கள். ஆக, நபி (ஸல்) அவர்கள் தடை செய்த இம்மூன்று செயல்பாடுகளையும் விட்டு நாம் நீங்கிட இறைவனிடம் இறைஞ்சுவோம்.
                                                                                                      -இன்ஷா அல்லாஹ் தொடரும்