நபிகளார் நவின்ற
மூன்றுகள்-14
(தாராளமாகத் தர்மம் செய்வோம்)
மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி, ஃபாஸில் தேவ்பந்தீ, (பிஎச்.டி.)
ஃபலஸ்தீன்வாசிகளுள்
பேச்சாளர் ஒருவர் கூறியதாவது: அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் பின்வருமாறு
கூறியதை நான் செவியேற்றுள்ளேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்
உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த ஏகஇறை)வன் மீதாணையாக! மூன்று விசயங்களை நான் அறுதியிட்டுச்
சொல்வேன்; 1. தர்மம் செய்வதால் எந்தச் செல்வமும் குறையாது; ஆகவே, (தாராளமாகத்) தர்மம் செய்யுங்கள். 2. அடியார் ஒருவர்
தமக்கிழைக்கப்பட்ட அநீதியொன்றை அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி மன்னித்தால் அதன் காரணமாக
அவரது தகுதியை அல்லாஹ் உயர்த்தாமல் இருப்பதில்லை. -பனூ ஹாஷிம் குலத்தாரின் முன்னாள்
அடிமைகளுள் ஒருவரான அபூசயீத் அல்பஸ்ரி அவர்களது அறிவிப்பில் (இந்த இடத்தில்) அதன் காரணமாக
மறுமை நாளில் அவரது கண்ணியத்தை அல்லாஹ் அதிகமாக்காமல் இருப்பதில்லை என இடம் பெற்றுள்ளது.
- 3. அடியார் ஒருவர் யாசகத்தின் வாசலைத் திறந்தால் அவருக்கு அல்லாஹ் வறுமையின் வாசலைத்
திறக்காமல் இருப்பதில்லை. (நூல்: அஹ்மது: 1584)
தர்மம் செய்வதால்
எந்தச் செல்வமும் குறையாது; ஆகவே,
தாராளமாகத் தர்மம் செய்யுங்கள்
என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ள கூற்று, நம் இறைநம்பிக்கையை
வலுப்படுத்துகிறது. பொதுவாக நாம் அவ்வப்போது ஒரு சில ரூபாய்களைத் தர்மம் செய்தாலும்
ரமளான் மாதம் வந்ததும் நம்முள் நிறையப் பேர்
கணக்கின்றித் தர்மம் செய்ய முன்வருவதைப் பார்க்க முடிகிறது. கஞ்சனும் தன் பங்கிற்குத்
தர்மம் செய்ய முன்வருவதை ரமளான் மாதத்தில் நாம் காணலாம்.
தர்மம் மனிதனின்
நிம்மதியான வாழ்க்கைக்கும் மகிழ்ச்சிக்கும் காரணமாக அமைகிறது. ஒருவன் மனத்தூய்மையோடு
பிறருக்குத் தர்மம் செய்தால் அதில் கிடைக்கின்ற சுகமே தனிதான். அதன்மூலம் அவனுக்குக்
கிடைக்கின்ற மனத்திருப்திக்கும் மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை. அது மட்டுமல்ல, நாம் நம்முடைய
பொருளைப் பிறருக்காகச் செலவு செய்தால் வானவர்கள் நமக்காகப் பிரார்த்தனை செய்கிறார்கள்.
எனவே அதில் அபிவிருத்தி ஏற்படுகிறது. ஆகவே நம் செல்வம் நிறையுமே அன்றிக் குறையாது.
ஆதலால் நாம் தாராளமாகத் தர்மம் செய்வோம்.
தர்மம் துன்பங்களை
அகற்றுகிறது என்பது நபிமொழி. ஏதேனும் நமக்குத் துன்பம் ஏற்பட்டால், அப்போது நாம் நம்மால் இயன்றதை யாருக்கேனும் தர்மம் செய்துவிட்டால் அந்தத் தர்மத்தின்
காரணமாக அல்லாஹ் அத்துன்பத்தை அகற்றிவிடுகின்றான். அதை விட்டுவிட்டு, அந்தத் துன்பத்தைப்
பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தால் ஒன்றும் ஆகப்போவதில்லை. எனவே அல்லாஹ்விற்காகத்
தர்மம் செய்தல் நம் நலனுக்கே என்பதை நாம் முதலில் உணர்தல் வேண்டும்.
இரண்டாவது, ஓர் அடியார் தனக்கு இழைத்துவிட்ட அநீதியை அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி மன்னித்துவிடுவதால்
அல்லாஹ் மகிழ்ச்சியடைகிறான். அதன் காரணமாக அல்லாஹ் அவரது மதிப்பை இவ்வுலகிலேயே உயர்த்துகிறான்.
மறுமையிலும் அவரது தகுதியையும் உயர்வையும் மேலோங்கச் செய்கிறான். ஆகவே ஒருவர் தமக்குச்
செய்துவிட்ட ஓர் அநீதியைப் பெரிதுபடுத்தாமல் அவரை மன்னித்து விட்டுவிடுவதே ஓர் இறைநம்பிக்கையாளரின்
நற்பண்பாகும்.
ஒரு நபிமொழியில்
காணப்படுவதாவது: உன் உறவைத் துண்டித்தவரோடு சேர்ந்து வாழ்; உனக்கு(க் கொடுக்காமல்) தடுத்துக்கொண்டவருக்குக் கொடு; உனக்கு அநியாயம் செய்தவரை மன்னித்துவிடு (நூல்: அஹ்மத்: 16810) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இந்நபிமொழியிலிருந்து
நாம் அறிவது, கொடுக்காதவருக்குக் கொடுப்பதும் அநியாயம் செய்தவரை
மன்னித்துவிடுவதும் நல்லோர்களின் பண்பாகும். ஆகவே நமக்கு ஒருவர் அநியாயம் செய்தாலும், திருப்பி அவருக்கெதிராக அநியாயம் செய்யாமல் அவரை மன்னித்து விட்டுவிடுதலே நமக்கு
உயர்வைத் தரும். அல்லாஹ் நம் மதிப்பை இம்மையிலும் மறுமையிலும் உயர்த்துவான்.
அது மட்டுமல்ல
மன்னிப்போர் குறித்து அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்: அவர்கள் செல்வ நிலைமையிலும், வறுமை நிலைமையிலும் தானம் செய்து கொண்டேயிருப்பார்கள்.
கோபத்தை விழுங்கி விடுவார்கள். மனிதர்(களின் குற்றங்)களை மன்னித்து விடுவார்கள்.
(3: 134)
இறையச்சமுடையோரைப்
பற்றிக் கூறும்போது, அவர்கள் வறுமையிலும் வளத்திலும் பிறருக்குச் செலவு
செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். பிறரால் கோபங்கொள்ளுமாறு தூண்டப்பட்டாலும்
அச்சமயத்தில் அக்கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொள்வார்கள். பிறர் தமக்குச் செய்யும்
குற்றங்கள், அநியாயங்கள் ஆகியவற்றை மன்னித்து விட்டுவிடுவார்கள்.
மாறாக அதற்காகப் பழிவாங்கும் முயற்சியில் ஈடுபட மாட்டார்கள். அத்தகையோர்தாம் இறையச்சமுடையோர்
ஆவர்.
மூன்றாவது, அடியார் ஒருவர் யாசகத்தின் வாசலைத் திறந்தால் அவருக்கு அல்லாஹ் வறுமையின் வாசலைத்
திறக்காமல் இருப்பதில்லை என்ற நபிகளாரின் கூற்றிலிருந்து நாம் விளங்குவது யாதெனில், ஒருவன் தன் தேவைக்காக இறைவனிடம் கையேந்தாமல் மக்களிடம் யாசகம் கேட்பதற்காகக் கையேந்தத்
தொடங்கிவிட்டால் அல்லாஹ் அந்த அடியானைத் தன் பொறுப்பிலிருந்து கழற்றி விட்டுவிடுகிறான்.
ஏனெனில் அவனுக்கு இறைநம்பிக்கை இருந்திருந்தால் அல்லாஹ்விடம் அல்லவா கையேந்தியிருப்பான்.
அவன் பிறரிடம் கையேந்தத் தொடங்கியதிலிருந்தே அவனுடைய இறைநம்பிக்கையில் குறை இருப்பதாகத்
தெரிகிறது. எனவேதான் அல்லாஹ் அவனை விட்டுவிடுகிறான். அது மட்டுமல்ல, அவன் பிறரிடம் எவ்வளவுதான் யாசகம் பெற்றாலும் அதில் ஒரு திருப்தி ஏற்படாமலே போய்விடுகிறது.
அதனால் அவனுடைய மனதில் வறுமை நீடித்துவிடுகிறது. இறுதி வரை அவனுக்கு வறுமையின் வாசல்
அடைபடாமல் திறந்தே இருக்கிறது. ஆகவே பிறரிடம் கையேந்துவதற்குமுன் படைத்தவனிடம் கையேந்த
வேண்டும் என்பதைத்தான் நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் நமக்குச் சொல்லித் தருகின்றார்கள்.
இது தவிர, யாசகத்தின் இழிவைப் பல்வேறு நபிமொழிகள் வாயிலாக அண்ணலார் உணர்த்தியுள்ளார்கள்.
ஒருவர் பிறரிடம் யாசகம் கேட்பதைவிட, அவர் தம் கையால் உழைத்துச் சாப்பிடுவதே சிறப்பாகும்
என்றும் கூறியுள்ளார்கள். உழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். உழைக்கும் கைக்கு முத்தமிட்டு வாழ்த்தியுள்ளார்கள்
என்பதை நாம் நபிமொழித் தொகுப்பு நூல்களில் காண்கிறோம்.
மேற்கண்ட நபிகளாரின்
பொன்மொழியில் முதல் கூற்றும் மூன்றாம் கூற்றும் ஒன்றுக்கொன்று முரண்படுவதாகத் தோன்றுகிறது.
அதாவது, முதல் கூற்றில், தாராளமாகத் தர்மம்
செய்யுங்கள் என்றும் மூன்றாம் கூற்றில்,
யாசகத்தின் வாசலைத் திறந்தால்
அல்லாஹ் அவனுக்கு வறுமையின் வாசலைத் திறக்கிறான் என்றும் கூறப்பட்டுள்ளது. யாரும் யாசகமே
கேட்காவிட்டால் பிறகு யாருக்குத்தான் தர்மம் செய்ய முடியும்? தர்மத்தின்மூலம் நன்மையை எவ்வாறு ஈட்டிக்கொள்ள முடியும்?
மேலோட்டமாகப்
பார்த்தால் முரண்பாடு இருப்பதாகத் தோன்றினாலும், இரண்டுமே இறைவன்மீது
நம்பிக்கைகொள்வதைத்தான் குறிப்பிடுகின்றது. ஒருவன் தர்மம் செய்யாமல் இருப்பதற்கும், ஒருவன் பிறரிடம் யாசகம் கேட்பதற்கும் அடிப்படைக்
காரணம் இறைநம்பிக்கையில் உள்ள குறைபாடுதான். இறைவன்மீது முழுமையான நம்பிக்கைகொண்டோர், கொடுத்தால் செல்வம் குறைந்துவிடும் என்ற அவநம்பிக்கையைத் தூக்கியெறிந்துவிட்டுப்
பிறருக்குத் தர்மம் செய்யத் துணிந்துவிடுவர். அதேபோல், படைத்த இறைவன் எல்லோருக்கும் வாழ்வாதாரம் வழங்குவதைப்போல் எனக்கும் வழங்குவான்
என்ற இறைநம்பிக்கைகொண்ட ஓர் ஏழை பிறரிடம் எவ்வாறு கையேந்துவான்? ஆக, இரண்டு சாராருக்கும் இறைநம்பிக்கையே அடிப்படை. அந்த
இறைநம்பிக்கையில் குறைபாடு ஏற்படும்போதுதான் தர்மம் செய்தல் குறைகிறது; யாசகம் கேட்பதும் தலைதூக்குகிறது.
இறைநம்பிக்கையில்
குறைபாடுடையோர்தாம் மற்ற காலங்களிலும்,
குறிப்பாக ரமளான் மாதத்திலும்
வீடு வீடாக, கடை கடையாக, பள்ளிவாசல் பள்ளிவாசலாகப்
பிச்சையெடுக்க அலைகின்றார்கள். அவர்கள் தம்
யாசகத்தின்மூலம் எவ்வளவுதான் பணத்தைச் சேர்த்தாலும் அவர்களின் மனது மட்டும் நிறைவடைவதே
இல்லை. இன்னும் இன்னும் என்று ஏங்கிக்கொண்டே இருக்கும். அவர்கள் தமக்கான வாசலைத் திறந்துகொண்டதால்
அதை அவர்களின் மரணம் வரை அடைக்கவே முடியாது என்பதை நாம் உணர்ந்துகொள்ளலாம்.
அதேநேரத்தில் இறைநம்பிக்கையில்
உறுதியாக உள்ள அடியார்கள் தம் வறுமையிலும் பிறரிடம் கையேந்தாமல், கிடைத்ததைச் சாப்பிட்டுக்கொண்டு அல்லாஹ்விடம் மட்டுமே கையேந்திக்கொண்டு வெளியுலகில்
கண்ணியமாக வாழ்வார்கள். அவர்கள் மக்களிடம் வலியுறுத்திக் கேட்க மாட்டார்கள். அத்தகையோரை
இனம் கண்டு நாம் நம்முடைய தான தர்மங்களைச் செய்வோம். ஈருலக நன்மைகளை அடைவோம்.
-தொடரும் இன்ஷா அல்லாஹ்
(நன்றி: மனாருல் ஹுதா ஜூலை 2014 மாத இதழ்)