-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
இமாம்
மதீனா பள்ளிவாசல், பட்டினம்பாக்கம் சென்னை-28
நிலையற்ற உலகில் நிலையாக வாழப்போவதாக
எண்ணிக்கொண்ட மனிதர்கள் பிற மக்கள் மத்தியில் போலிக் கௌரவங்களைக்
காட்டிக்கொள்ள முனைகின்றார்கள். அதனால் அவர்கள் தம் இயல்பான வாழ்க்கை நிலையைவிட
உயர்வாக இருப்பதாகக் காட்டிக்கொள்ள மிகுதியாகக் கடன்பெறுகின்றார்கள். வீட்டிற்கு
அவசியத் தேவையற்ற பொருள்கள், வாகனங்கள் வாங்கிக் குவிப்பதன் மூலம் நாங்கள் சாதாரண
ஆள் இல்லை என்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்திக்கொள்கின்றார்கள்.
கடன்
வாங்குவது அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது எப்போது வாங்க வேண்டும்? உணவுக்கோ கல்விக்கோ
பணமில்லாதபோது கடன் வாங்கலாம். அதைத் திருப்பிச் செலுத்தும் எண்ணத்தோடு
வாங்குவது மிக முக்கியமானது. திருப்பிச் செலுத்தும் எந்தத் திட்டமும் இல்லை; எந்தப் பொருளாதாரப்
பின்னணியும் இல்லை எனும்போது அவர் கடன் வாங்குவது எங்ஙனம் கூடும்? அவசியத் தேவைக்காக அல்லாமல்
பிறர் தம்மைச் சாதாரணமாகக் கருதிவிடக் கூடாது என்பதற்காகவும் போலிக் கௌரவத்தை
நிலைநாட்டிக்கொள்வதற்காகவும் கடன் வாங்குவது தவிர்க்கப்பட வேண்டும். அதிலும்
குறிப்பாக, வட்டிக்குக் கடன் வாங்குவது முற்றிலும் தவிர்க்கப்பட
வேண்டும்.
வெளிப்புற
ஆடம்பரத்தையும் போலியான வாழ்க்கை நிலைகளையும் கண்டு இன்றைய மக்கள் பலர்
ஏமாறுகிறார்கள். வெளிப்படையாகப் பார்த்தால் மாப்பிள்ளைக்கு எழுபதாயிரம் சம்பளம்; காரில் பயணம்; சொந்த வீடு. உள்ளே நுழைந்து
பார்த்தால், அவ்வளவும் கடன். வாங்கும் சம்பளத்தில் பாதிக்கு மேல்
இஎம்ஐ கட்டியே தீர்ந்துவிடும். மீதியை வைத்துத்தான் குடும்பம் நடத்த வேண்டும்.
அல்லது மனைவியையும் வேலைக்கு அனுப்பி அதில் வரும் வருவாயில்தான் குடும்பம் நடத்த
வேண்டும்.
வாங்கிய
கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல், கடனுக்கு வாங்கிய காரைத்
திருப்பிக் கொடுக்கும் நிலையும், கடன் வாங்கிக் கட்டிய வீட்டை விற்கும் நிலையும்
ஏற்பட்டுவிடுகிறது. கடன் என்றாலே வட்டியின்றி இல்லை. அப்படியிருக்கும்போது
எவ்வளவுதான் செலுத்தியும் அந்த வட்டியைத்தான் செலுத்த முடிந்ததேயன்றி, வாங்கிய கடன் இன்னும்
முடிந்தபாடில்லை. இந்த உண்மை நிலையை உணராத பெற்றோர், தம் பெண்ணுக்கு மாப்பிள்ளை
பார்க்கும்போது, வந்த நல்ல நல்ல (ஸாலிஹான) மணமகன்களையெல்லாம்
ஒதுக்கிவிட்டு, எழுபதாயிரம் சம்பளம்; சொந்தக் கார்; சொந்த வீடு உள்ளவரைத்
தேடிப் பிடித்துத் தேர்வுசெய்து மணமுடித்துவைக்கின்றார்கள். திருமணம் முடிந்த
பிறகுதான், எல்லாமே போலிக் கௌரவங்கள் என்பது புரிகிறது.
மிகுந்த
படபடப்போடும் பதற்றத்தோடும் இருப்பவரைப் பார்த்து, ‘கடன்பட்டார் நெஞ்சல்போல்’
எனும் முதுமொழியை உவமையாகச் சொல்வார்கள். அதாவது கடன்பட்டவர், கடன்கொடுத்தவரைக் கண்டால்
அக்கடனை அடைக்க முடியாமல் எவ்வளவு படபடப்போடும் பதற்றத்தோடும் காணப்படுவாரோ
அவ்வாறு காணப்படுகிறாரே என்று உவமை கூறுவார்கள். ஆனால் இன்று கடன் வாங்குவது மிகச்
சாதாரணமாகிவிட்டது. அதைத் திருப்பிச்
செலுத்த வேண்டுமே என்ற பதற்றமோ படபடப்போ இல்லை. மாறாக, கடன்கொடுத்தவர்தாம்
படபடப்போடும் பதற்றத்தோடும் காணப்படுகிறார். வாங்கிய கடனை இவர் திருப்பித்
தருவாரோ, மாட்டாரோ என்று குழம்பிப்போகிறார். மீண்டும்
மீண்டும் கேட்டு அலைகிறார். அல்லது ‘பிறகு தருகிறேன்’ ‘பிறகு தருகிறேன்’ என்று
கடன் வாங்கியவர் அவ்வப்போது சொல்வதால் அலைக்கழிக்கப்படுகிறார்.
இன்றைய
அவசர உலகில் பலர் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றிவிடுகின்றார்கள்.
அதற்கான தண்டனை குறித்தோ மறுமை விசாரணை குறித்தோ சிறிதளவும் அஞ்சுவதில்லை.
பொதுவாகவே உறவினர்களிடமும் நண்பர்களிடமும்தான் கடன் வாங்குகின்றார்கள். ‘நம்முடைய
நண்பர்தானே’, ‘நம்முடைய உறவினர்தானே’ என்ற நம்பிக்கையில் அவர்கள்
கடன் கொடுக்கின்றார்கள். ஆனால் வாங்குவோர் அந்த நம்பிக்கையைக்
காப்பாற்றுவதில்லை. பல மாதங்களாகியும், பல ஆண்டுகளாகியும்
திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றுவது மிகப்பெரிய பாவமாகும்.
சமுரா
ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், எங்களுக்கு உரை
நிகழ்த்தினார்கள். அப்போது “இன்ன குலத்தவரில் ஒருவர் இங்கே இருக்கின்றாரா?” எனக் கேட்டார்கள். அதற்கு
ஒருவரும் பதில் கூறவில்லை. பின்பு “இன்ன குலத்தவரில் ஒருவர் இங்கே இருக்கின்றாரா?” என்று கேட்டார்கள்.
அவர்களுக்கு
ஒருவரும் பதில் அளிக்கவில்லை. பின்னர் (மூன்றாம் முறையாக “இன்ன குலத்தவரில் ஒருவர்
இந்த இடத்தில் இருக்கின்றாரா?” என்று கேட்டார்கள். அப்போது ஒரு மனிதர் எழுந்து
“நான் இருக்கிறேன் அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார். அவரிடம் நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம், “முதல் இரண்டு தடவை நீ எனக்குப் பதிலளிக்காத காரணம்
என்ன” என்று கேட்டுவிட்டு, “நான் உங்களிடம் நன்மையைத் தவிர வேறெதையும்
பேசக்கூடாது என்று கருதுகிறேன். (அவர்களுள் நீங்கள் குறிப்பிடுகின்ற) இன்னவர்
மற்றொருவருக்குக் கொடுக்க வேண்டிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இறந்து
விட்டதால் (சொர்க்கத்தில் நுழைய முடியாமல்) தடுக்கப்பட்டுவிட்டார்” என்று
கூறினார்கள். சமுரா ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள்: அந்த மனிதருக்காக மற்றொரு
மனிதர் அவரது கடனை நிறைவேற்றியதையும் அதனால் யாரும் தர வேண்டிய கடனைத் தரும்படி
கேட்காததையும் நான் கண்டேன். (அபூதாவூத்: 3341/ 2900)
ஆக ஒரு
முஃமின் சொர்க்கம் செல்லத் தடையாக இருப்பது பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தாததே
ஆகும். எனவே நாம் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்துவதில் மிகுந்த அக்கறை காட்ட
வேண்டும். இல்லையேல் ‘நாம் எவ்வளவுதான் நன்மைகள் செய்தபோதிலும்’ நாம் சொர்க்கம்
செல்ல முடியாமல் போவதற்கு அதுவே காரணமாகிவிடும்.
இன்றைய
மனிதர்கள் இளம் வயதிலேயே இறந்துவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். திடீர்
திடீரென நெஞ்சு வலி (ஹார்ட் அட்டாக்)
காரணமாக மரணத்தைத் தழுவுகின்றார்கள். இதயக்கோளாறு, சிறுநீரகக் கோளாறு, கேன்சர் உள்ளிட்ட
பாதிப்புகள் ஏற்படுகின்றன. பின்னர் நாம் சிகிச்சையளித்துத் தேற்றிக்
கொண்டுவந்துவிடலாமென நினைக்கின்ற தருணத்தில் திடீரென இறந்துபோய்விடுகின்றார்கள்.
நாம் ஒன்றும் செய்ய முடிவதில்லை. இத்தகைய
மரணம் யாருக்கு வரும், யாருக்கு வராது என்று வகைப்படுத்திச்
சொல்வதற்கில்லை. எனவே நாம் யாரிடம் கடன் வாங்கினாலும் அதை ஒரு குறிப்பேட்டில்
எழுதிவைத்துக்கொள்ள வேண்டும். நாம் வாழும் காலத்தில் அதை அடைக்க முடிந்தால், நாமே அடைத்துவிடலாம்.
இல்லையேல் நாம் இறந்த பிறகு நம்முடைய சந்ததிகளேனும் அந்தக் குறிப்பேட்டிலுள்ள
விவரத்தைப் பார்த்து, நம் சார்பாக நம் கடனை அவர்கள் உரியவர்களிடம்
திருப்பிச் செலுத்துவார்கள். அதனால் நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டுச் சொர்க்கம்
செல்லலாம். ஆகவே பெற்ற கடனை உரிய முறையில் எழுதி வைத்துக்கொள்ளும் பழக்கத்தை
மேற்கொள்ள வேண்டும். இது அல்லாஹ்வின் ஆணையும்கூட.
அல்லாஹ்
கூறுகின்றான்: இறைநம்பிக்கைகொண்டோரே! நீங்கள் ஒரு குறித்த தவணையின் மீது
(உங்களுக்குள்) கடன் கொடுத்துக் கொண்டால் அதை எழுதிவைத்துக்கொள்ளுங்கள். (2:
282)
கடன்
வாங்குவதிலிருந்து நபியவர்கள் பாதுகாப்புத் தேடியுள்ளார்கள் என்றால் கடன் வாங்கக்
கூடாது என்றுதானே அர்த்தம்? அதில் ஏன் அந்த அளவிற்குப் பேணுதலாக இருந்துள்ளார்கள்
என்பதை நாம் பின்வரும் செய்தியின்மூலம் அறியலாம்.
ஆயிஷா
ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழுகையில்
துஆ செய்யும் போது, அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மினல் மஃஸமி வல்மஃக்ரமி
(இறைவா! பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்)
என்று கூறுவார்கள். (இதைச் செவியுற்ற)
ஒருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கடன் படுவதிலிருந்து இவ்வளவு அதிகமாகப்
பாதுகாப்புத் தேடுவதற்குக் காரணம் என்ன?'' என்று கேட்டார். அதற்கு நபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், "மனிதன் கடன்படும் போது பொய் பேசுகிறான்; வாக்குறுதி தந்து (அதற்கு)
மாறு செய்கிறான்'' என்று பதிலளித்தார்கள். (புகாரீ: 2397)
பெற்ற
கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருப்பது ஒருவரின் உரிமையைப்
பறித்துக்கொள்வதற்குச் சமமாகும். எனவேதான் நபியவர்கள் யாரேனும் ஒருவருக்கு ஜனாஸா
தொழுகை நடத்த முற்பட்டாலும் அதற்குமுன் அவருக்குக் கடன் ஏதும் உள்ளதா என்று
கேட்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தாதவராக
இருந்தால் அவருக்குத் தொழுகை நடத்தமாட்டார்கள். பிறரின் உரிமை குறித்து
நபியவர்கள் எந்த அளவிற்கு எச்சரிக்கையாக இருந்துள்ளார்கள் என்பதற்குக்
கீழ்க்காணும் செய்தி தக்க சான்றாகும்.
சலமா
பின் அக்வஃ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களிடம் அமர்ந்திருந்தபோது ஒரு ஜனாஸா (பிரேதம்) கொண்டுவரப்பட்டது. நபித் தோழர்கள், “நீங்கள் இவருக்குத் தொழுகை
நடத்துங்கள்!” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “இவர் கடனாளியா?” என்று கேட்டபோது
நபித்தோழர்கள், “இல்லை” என்றனர்.
“ஏதேனும் (சொத்தை) இவர் விட்டுச் சென்றிருக்கிறாரா?” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் கேட்டபோது, “இல்லை” என்றனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவருக்குத் தொழுகை நடத்தினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டபோது
“அல்லாஹ்வின் தூதரே! இவருக்குத் தொழுகை நடத்துங்கள்” என்று நபித்தோழர்கள்
கேட்டனர். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “இவர் கடனாளியா?” என்று கேட்டபோது “ஆம்” எனக்
கூறப்பட்டது. “இவர் ஏதேனும் விட்டுச்
சென்றிருக்கிறாரா?” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டபோது
“மூன்று தங்கக் காசுகளை விட்டுச் சென்றிருக்கிறார்” என்றனர். அவருக்கும் தொழுகை
நடத்தினார்கள்.
பிறகு
மூன்றாவது ஜனாஸா கொண்டு வரப்பட்டது. “நீங்கள் தொழுகை நடத்துங்கள்” என்று
நபித்தோழர்கள் கூறினர். “இவர் எதையேனும் விட்டுச் சென்றிருக்கிறாரா?” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் கேட்டபோது “இல்லை” என்றனர். “இவர் கடனாளியா?” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் கேட்டபோது, “மூன்று தங்கக் காசுகள் கடன் வைத்திருக்கிறார்” என்று
நபித்தோழர்கள் கூறினர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “உங்கள் தோழருக்கு நீங்களே
தொழுகை நடத்துங்கள்” என்றனர். அப்போது அபூகத்தாதா ரளியல்லாஹு அன்ஹு “இவரது
கடனுக்கு நான் பொறுப்பு; அல்லாஹ்வின் தூதரே! இவருக்குத் தொழுகை நடத்துங்கள்!”
என்று கூறியதும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவருக்குத் தொழுகை நடத்தினார்கள்.
(புகாரீ: 2289)
ஆக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எந்த
அளவிற்குக் கடன் விஷயத்தில் கவனமாக இருந்துள்ளார்கள் என்பதைக் கூர்ந்து கவனிக்க
வேண்டும். ஏனெனில் ஒருவரின் ஜனாஸா தொழுகையில் அல்லாஹும்மஃக்ஃபிர் லஹு வர்ஹம்ஹு
(இறைவா! இவருடைய பாவத்தை மன்னித்து, இவருக்கு அருள்புரிவாயாக)
என்று பிரார்த்தனை செய்ய வேண்டும். பிறரின் உரிமையைப் பறித்துக்கொண்டவருக்கு ஓர்
இறைத்தூதர் எவ்வாறு அங்ஙனம் பிரார்த்தனை செய்ய முடியும்? எனவேதான் நபியவர்கள் அவரது ஜனாஸாவுக்குத்
தொழுவிக்கவில்லை. பின்னர் அவரின் கடனுக்கு ஒருவர் பொறுப்பேற்றுக்கொண்ட பின், அவரது ஜனாஸாவுக்குத்
தொழுவித்தார்கள்.
ஒருவர்
கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏன் வருகிறது? பிறரைப் பார்த்து அவர்களைப்
போலவே நாமும் வாழ வேண்டும் என்ற ஆசையால்தான் கடன் வாங்க வேண்டிய சூழல்
ஏற்படுகிறது. ஒவ்வொருவரும் தத்தமது வருவாய்க்குள் வாழ்க்கை நடத்தக்
கற்றுக்கொண்டால், தம்மைவிட மேலே உள்ளோரைப் பார்க்காமல் தம்மைவிடக்
கீழே உள்ளோரைப் பார்த்து வாழப் பழகிக்கொண்டால் கடன் வாங்க வேண்டிய தேவை
ஏற்படாது. கார் வாங்கவும் வீடு கட்டவும் கடன் வாங்கிவிட்டு, அதைத் திருப்பிச் செலுத்த
முடியாமல் அல்லாடுவோர் பலர் உள்ளனர். அவர்கள் சற்றேனும் சிந்திக்க வேண்டும்.
நம்முள்
சிலர் திருமணத்திற்காகக் கடன் வாங்குகின்றனர். பிறகு அதைத்
திருப்பிச்செலுத்துவதற்குள் இன்னொரு பிள்ளைக்குத் திருமண வயது வந்துவிடுகிறது.
அதனால் அந்தப் பிள்ளைக்காகவும் கடன் வாங்கித் தடபுடலாகத் திருமணம் செய்து
வைக்கிறார் தந்தை. அதன்பின் அந்தக் கடன்களை அடைப்பதற்குள் அவரது ஆவி
பிரிந்துவிடுகிறது. இத்தகைய சூழல் ஏற்படக் காரணம், நாம் பிறரைப் பார்த்து, அதைப் போலவே செய்ய
எண்ணுகிறோம். ஒவ்வொருவரும் தத்தமது சூழ்நிலைக்கேற்பச் செயல்பட முற்பட்டால், போலிக் கௌரவத்தைக் கைவிடத்
துணிந்துவிட்டால் திருமணம் உள்ளிட்ட எல்லாச் செயல்பாடுகளையும் எளிதாக
எதிர்கொள்ளலாம்; கடனின்றி வாழலாம். அத்தகைய நல்வாய்ப்பை நாம்
உருவாக்கிக்கொள்ள இறைவனிடம் இறைஞ்சுவோம்.