வியாழன், 17 அக்டோபர், 2024

நகைச்சுவையை விரும்பிய நபிகள் நாயகம்

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 

சிரிக்கத் தெரிந்த உயிரினம் என்று மனிதனுக்கு வரைவிலக்கணம் கூறுவார்கள். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நகைச்சுவையுணர்வு உறைந்துள்ளது. அதை வெளிப்படுத்தத் தெரியாமல் மனிதர்கள்  தவிக்கின்றார்கள். நகைச்சுவையுணர்வை வெளிப்படுத்த முதலில் இளகிய மனம் இருக்க வேண்டும்.  தம் மனதை இளகிய நிலையில் வைத்திருப்பவரால் மட்டுமே அவ்வப்போது நகைச்சுவையுணர்வை வெளிப்படுத்த முடியும். மனம் விட்டுச் சிரிக்க முடியும். அல்லாஹ்வின் அருளால் நீர்  அவர்களிடம் மென்மையாக நடந்துகொண்டீர் (3: 159) என்று அல்லாஹ் தன் இறுதித்தூதர் குறித்துக் கூறுகின்றான். அல்லாஹ்வின் அருளால்தான் அவனுடைய இறுதித்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களிடம் மென்மையாகவும் நகைச்சுவையுணர்வோடும் நடந்துகொண்டார்கள். அத்தகைய நற்பண்பின்மூலமே நபியவர்களால் மக்களைக் கவர முடிந்தது.

 

அல்லாஹ்வின் அருளால் இளகிய மனம்கொண்ட அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் குறித்து, “அல்லாஹ்வின் தூதரைவிட மிக அதிகமாகப் புன்னகை செய்வோரை நான் கண்டதில்லைஎன்று அப்துல்லாஹ் பின் ஹாரிஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியுள்ளார்கள். (திர்மிதீ: 3641) கண்ணியமானோரின் சிரிப்பு புன்னகையாகவே இருக்கும். சத்தமிட்டுச் சிரிக்க மாட்டார்கள். நம் சிரிப்பு அடுத்தவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கிவிடக்கூடாது; பொறாமையை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை உள்நாக்குத் தெரியும் அளவிற்குச் சிரிப்பவர்களாகக் கண்டதில்லை; அவர்கள் புன்னகைப்பவர்களாகவே இருந்தார்கள் (புகாரீ: 4828) என்று நபியவர்களுடைய துணைவியாரான ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் நபியவர்கள் குறித்துக் கூறுவது அதற்குச் சான்றாக உள்ளது.

 

நகைச்சுவையாகப் பேசுவதற்கு ஆழ்ந்த சிந்தனைத்திறன் வேண்டும். சிலர் மேலோட்டமாக, சாதாரணமாகப் பேசுவதே நகைச்சுவையாக இருக்கும். ஆனால் அதில் எந்த நற்கருத்தும் இருக்காது.  சிலரின் பேச்சு ஆழ்ந்து சிந்தித்தால் சிரிப்பு வரும். சிலர் சிலேடையாகப் பேசுவார்கள். வேறு சிலர் இரட்டைப் பொருளில் பேசுவார்கள். அதை விளக்கிச் சொல்லும்போது சிரிப்பு வரும். அந்த வகையில்  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிந்தனைத்திறன்மிக்க பேச்சு, விளக்கிச் சொல்லும்போது சிரிப்பு வரும் வகையில் அமைந்திருந்தது. அதற்கான சான்றுகள் நிறைய உள்ளன.

 

ஒரு தடவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் சபையில் (ஆண்களும் பெண்களும் அமர்ந்திருந்த நிலையில்) கிழவிகள் சொர்க்கத்தில் நுழைய முடியாதுஎன்று கூறினார்கள். அதைக் கேட்ட மூதாட்டி ஒருவர் (வருத்தப்பட்டு) அழத் தொடங்கினார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “அன்றைய நாளில் அவர் கிழவியாக இருக்கமாட்டார்; அவர் இளம்பெண்ணாக இருப்பார் என்று கூறிவிடுங்கள். நிச்சயமாக அவர்களை நாம் புதியதொரு படைப்பாகப் படைப்போம்; நாம் அவர்களைக் கன்னிப் பெண்களாக ஆக்குவோம் (56: 35-36) என்று அல்லாஹ் கூறுகின்றான்என்றார்கள். (பைஹகீ: 346)

 

சொர்க்கத்தில் நுழையும் ஒவ்வோர் ஆணும் பெண்ணும் இளமைத் தோற்றத்தில்தான் இருப்பார்கள்.  அதனடிப்படையில் கிழவியாக அல்லது கிழவனாக இறந்துபோன ஒருவர் கிழவியாகவோ கிழவனாகவோ உள்ள நிலையில் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள். மாறாக இளமைப்பருவம் மீண்டும் வழங்கப்பட்டோராகவே சொர்க்கத்தில் நுழைவார்கள். அந்த இளமையோடுதான் அவர்கள் என்றென்றும் அதில் தங்கியிருப்பார்கள். அங்கு அவர்களுக்கு ஒருபோதும் மூப்பு வராது.

 

மேற்கண்ட அதே விதத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நகைச்சுவையான பேச்சுக்கு மற்றொரு சான்றைப் பார்க்கலாம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒருவர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் பயணம் செய்ய ஓர் ஒட்டகத்தை எனக்குத் தாருங்கள்என்று கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “நான் உமக்கு ஓர் ஒட்டகக் குட்டியைத்தான் தருவேன்என்று கூற, “நான் அந்த ஒட்டகக் குட்டியை வைத்துக்கொண்டு என்ன செய்வேன் (எவ்வாறு பயணம் செய்வேன்)?” என்று கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “ஒவ்வோர் ஒட்டகமும் அதனுடைய தாய்க்குக் குட்டிதானே? என்று (நகைச்சுவையாகக்) கூறினார்கள். (அபூதாவூத்: 4998)

 

இவ்வாறு நகைச்சுவையான பேச்சை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மட்டுமல்லாது அவர்களின் தோழர்களும் பேசியிருக்கின்றார்கள். அதற்கான சான்றாகப் பின்வரும் நிகழ்வு உள்ளது.    நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஸுஹைப் ரளியல்லாஹு அன்ஹு வந்தார். அப்போது நபியவர்களுக்குமுன் பேரீச்சம் பழங்களும் ரொட்டியும் இருந்தன. நெருங்கி வந்து சாப்பிடுவீர் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூற, அவர் நெருங்கி வந்து சாப்பிடத் தொடங்கினார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவரைப் பார்த்து, உமக்குக் கண்வலி இருக்கிறது (பார்த்துச் சாப்பிடுவீர்) என்று கூறினார்கள். அதற்கு அவர், (கண்வலி இல்லாத) மற்றொரு பகுதியில்தான்  நான் சாப்பிடுகிறேன்என்று (விகடமாகப்) பதிலளித்தார். அதைக் கேட்ட நபியவர்கள், புன்னகை செய்தார்கள். (முஸ்னது அஹ்மத்:  16591)

 

பொதுவாக ஒவ்வொருவருக்கும் வலப்பக்கத் தாடை இடப்பக்கத் தாடை என இரண்டு தாடைகள் உள்ளன. அதுபோலவே வலக்கண், இடக்கண் என இரண்டு கண்கள் உள்ளன. ஆகவே கண்வலி இல்லாத தாடைப் பகுதியிலுள்ள பற்களால் மென்று உண்கிறேன் என்று அவர் சாதுர்யமாக, விகடமாகப் பேசி நபியவர்களைச் சிரிக்க வைத்தார். 

 

இப்படியான பல்வேறு தருணங்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நகைச்சுவையாகப் பேசியிருப்பதோடு தம் தோழர்களையும் அவ்வாறு பேச அனுமதித்திருக்கின்றார்கள். அத்தோடு தம் தோழர்களோடும் குடும்பத்தாரோடும் நகைச்சுவையுணர்வோடு பேசியும் பழகியும் இருக்கின்றார்கள்.  ஒரு தடவை நபித்தோழர் ஒருவரோடு நபியவர்கள் நடந்துகொண்ட நகைச்சுவையான  நிகழ்வைப் பார்க்கலாம்.

 

 

கிராமத்து அரபியரும் விவசாயியுமான ஸாஹிர் பின் ஹராம் என்பவர் தம் கிராமத்திலிருந்து வரும்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அங்கு விளைகின்ற காய்கறிகளைக் கொண்டுவந்து கொடுப்பார். அவர் திரும்பிச் செல்லும்போது நபியவர்களும் அதற்குப் பகரமாகத் தம்மால் இயன்றதைக் கொடுத்தனுப்புவார்கள். அவர் அழகற்றவராக இருந்தும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவரை நேசிப்பவர்களாக இருந்தார்கள். ஒருமுறை அவர் வழக்கம்போல் கடைவீதியில் காய்கறி விற்றுக் கொண்டிருந்தபோது அவருக்குத் தெரியாமல் அவருக்குப் பின்புறமாக வந்து அவரை நபியவர்கள் கட்டிப் பிடித்தார்கள். அவர், “யாரது? என்னை விடுங்கள்என்று கூறியவராகத் திரும்பிப் பார்த்தபோது அது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்தாம் என்பதை அறிந்த அவர் தமது முதுகுடன் நபியவர்களின் நெஞ்சை அப்படியே நெருக்கமாக வைத்துக்கொண்டார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நகைச்சுவையாக, “இந்த அடிமையை யாரேனும் விலைக்கு வாங்குகிறீர்களா?” என்று கேட்க, அதற்கு அவர், “அல்லாஹ்வின் தூதரே என்னை விற்றால் விலை மதிப்பற்ற செல்லாக் காசையே நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள்என்று அவரும் (விளையாட்டாகக்) கூறினார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்விடம் நீர் விலை மதிப்புள்ளவர்தாம்என்று கூறினார்கள். (ஷரஹுஸ்ஸுன்னா: 3604)

 

மிகச் சாதாரண மனிதர்களையும் மதித்து அவர்களோடு அளவளாவி விகடமாகப் பேசி, தாம் அனைவருக்கும் சொந்தம் என்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நிரூபித்துக் காட்டியுள்ளார்கள். அனைத்து வகையான மனிதர்களையும் நேசித்திருக்கின்றார்கள். ஒவ்வொருவரும் தத்தம் உள்ளத்திலுள்ள இறையச்சத்தின் மூலமே அல்லாஹ்விடம் மதிப்பளிக்கப்படுகின்றார்கள் என்பதைத் தெளிவாக எடுத்துரைத்து, அதன்மூலம் சமுதாயத்திற்கு நல்லதொரு பாடத்தையும் கற்பித்துள்ளார்கள்.

 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் தோழர்களுடன் விகடமாகப் பேசுவதைக் கண்ட தோழர்கள், இறைத்தூதராக இருந்துகொண்டு இந்த அளவிற்கு விகடமாக, நகைச்சுவையாகப் பேசுகின்றீர்களே என்று கேட்டார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “நான்  (விகடமாகப் பேசினாலும்) உண்மையைத் தவிர (வேறெதையும்) பேசமாட்டேன்என்றார்கள். (திர்மிதீ: 1990)

 

நம்முள் சிலர் பிறரைச் சிரிக்க வைப்பதற்காக என்னென்னவெல்லாமோ செய்கின்றார்கள். பொய்யான கதைகளைப் பேசிச் சிரிக்க வைக்கின்றார்கள். கற்பனைக் கதைகளைச் சொல்லிச் சிரிக்க வைக்கின்றார்கள். கேலியாகப் பேசிச் சிரிக்க வைக்கின்றார்கள். திரைப்பட நடிகர்களைப் போலப் பேசி (மிமிக்ரி) இரசிக்கவும் சிரிக்கவும் வைக்கின்றார்கள். ஆனால் இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு நபியவர்கள் தம் நகைச்சுவையான பேச்சால் மக்களைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்திருக்கின்றார்கள். அதில் உண்மை மட்டுமே இருந்தது.

சிலர் யாரேனும் ஒருவரின் ஏதேனும் பொருளை ஒளித்து வைத்துவிட்டு, அவரைத் தேடவிடுவார்கள்.  அவர் தமது பொருள் காணாமல் போய்விட்டதே என்று பதற்றப்படுவார்; கவலைப்படுவார். அவர் தேடுவதைப் பார்த்து, ஒளித்து வைத்தவர்கள் சிரித்துக்கொண்டிருப்பார்கள். அவ்வாறு ஒருவரைப் பதற்றமடையச் செய்யக்கூடாது என்று நபியவர்கள் தடைசெய்துள்ளார்கள்.

 

நபித்தோழர்கள் ஒரு தடவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் பயணம் சென்றார்கள். பயணத்தின் இடையே (ஓரிடத்தில் ஓய்வெடுக்கும்போது) அவர்களுள் ஒருவர் தூங்கிவிட்டார். அச்சமயம் அவர் வைத்திருந்த கயிற்றை எடுத்து அவருக்குத் தெரியாமல் மறைத்து வைத்துக்கொண்டனர். அவர் விழித்தவுடன் (தம் கயிறு காணாமல் போனது குறித்து) அவருக்கு ஒருவிதமான திடுக்கம் ஏற்பட்டது. அதைக் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “ ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமைப் பதற்றமடையச் செய்வது ஆகாதுஎன்று கூறினார்கள். (அபூதாவூத்: 5004)

 

சிமாக் பின் ஹர்ப் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது: நான் ஜாபிர் பின் சமுரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம், “நீங்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அவையில் அமர்ந்திருக்கிறீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ஆம், அதிகமாக (அமர்ந்திருக்கிறேன்). அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சூரியன் உதயமாகாத வரை (சுப்ஹு தொழுத இடத்திலிருந்து) எழமாட்டார்கள். சூரியன் உதயமான பின் (அங்கிருந்து) எழுவார்கள். அப்போது மக்கள் அறியாமைக் காலம் குறித்துப் பேசிச் சிரித்துக் கொண்டிருப்பார்கள். (அதைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் புன்னகைத்துக் கொண்டிருப்பார்கள்என்று கூறினார்கள். (முஸ்லிம்: 286/ 1188)

 

பள்ளிவாசலில் அதிகாலை வேளையில் கூட்டுத் தொழுகை முடித்த கையோடு அதே இடத்தில் அமர்ந்தவாறு தம் தோழர்களோடு கலந்துரையாடுவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின் வழக்கம். சிலர் தாம் கண்ட கனவைக் கூறி, அதற்கான விளக்கம் கேட்பார்கள். சிலர்  தாம் சார்ந்த ஏதேனும் சிக்கலைக் கூறி, அதற்கான தீர்வைக் கேட்பார்கள். எதுவும் இல்லையெனில், தம் தோழர்கள் பேசிக்கொண்டிருக்க, அதைக் கேட்டு இரசித்துக்கொண்டிருப்பார்கள். அவர்கள் அறியாமைக் காலத்தில் நடந்த நிகழ்வுகளையெல்லாம் பேசிச் சிரித்துக் கொண்டிருப்பார்கள். அவற்றையெல்லாம் கேட்டு நபியவர்கள் புன்னகை தவழச் சிரித்துக்கொண்டிருப்பார்கள். ஓர் இறைத்தூதர் தம் தோழர்களோடும் சக மனிதர்களோடும் இன்முகத்தோடு பேசிப் பழகியிருக்கின்றார்கள் என்பதை மேற்கண்ட நிகழ்வு மூலம் நாம் அறியலாம்.

 

மக்களோடு பேசிச் சிரித்தால் கண்ணியம் போய்விடும் என்ற எண்ணத்தில் சிலர் சிரிக்காமலேயே இருப்பார்கள். அத்தகையோருக்குப் பின்வரும் இந்தச் செய்தி மிகுந்த பயனுள்ளதாக அமையும். உன் சகோதரனிடம் நீ புன்னகை செய்வது உனக்குத் தர்மம் ஆகும்...என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (திர்மிதீ: 1956)

 

எனவே நபியவர்கள் எவ்வாறு சிரித்து மகிழ்ந்து வாழ்ந்தார்களோ அவ்வாறே நாமும் பிறரைச் சிரிக்க வைத்து, மனமகிழ்ச்சியோடு இவ்வுலகில் வாழ்ந்து இறைவனின் திருப்தியைப் பெற்று ஈருலகிலும் வெற்றிபெறுவோம்.

=============

திங்கள், 14 அக்டோபர், 2024

விடாமுயற்சியின் வெற்றிக்கனி (குறுநாவல்)

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி

 

நிலக்கடலையும் நெல்லும் மிகுதியாக விவசாயம் செய்யப்படுகிற ஊரில் அப்துல் அஹத் பிறந்தார்; அவர் தம் பெற்றோருக்கு ஐந்தாவது பிள்ளை. அவருடைய மூதாதையர்கள் அரசவைக் கவிஞர்களாகவும் புலவர்களாகவும் வாழ்ந்து மறைந்தவர்கள். மிகச் சிறந்த குடும்பப் பாரம்பரியத்தில் பிறந்ததால் கல்வியில் சிறந்து விளங்கினார். சிறுபிராயத்திலேயே தாயை இழந்த அவர், தம் தந்தையின் அரவணைப்பிலேயே வாழ்ந்து வந்தார்.

 

ஆசிரியர்கள் வகுப்பறைகளில் சொல்லும் அறிவுரையை நன்கு செவியுற்று, அதன்படி செயல்படுபவர். ஒரு நாள் அந்த ஊரின் பாலர் வகுப்பில் (மக்தப் மத்ரஸா) சிறுவர்களுக்குக் குர்ஆன் கற்பித்த ஆசிரியர், மாணவர்களுக்கு அறிவுரை கூறினார். அதில் மார்க்கக் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இன்னின்ன அரபுக் கல்லூரிகளில் கல்வி பயின்று மார்க்க அறிஞராக உருவாகலாம். இன்று ஆலிம்களின் தேவை அதிகமாக உள்ளது என்று சொல்லி, சில அரபுக் கல்லூரிகளின் பெயர்களையும் கூறினார். அதில் ஒன்று அஹதுடைய மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது.

 

அஹத் தம் தாயை இழந்துவிட்டதால், தந்தைவழிப் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தார். அந்தப் பாட்டிக்கு அரைகுறையான பார்வைதான். அதனால் சமையல் வேலையில் அவருக்கு அஹதுதான் உதவியாக இருப்பார். தந்தை, மூத்த சகோதரர்கள், தம்பி, தங்கை ஆகியோர் அடங்கிய பெரிய குடும்பம் அது. காலை உணவு முடித்துவிட்டுத் தந்தையும் மூத்த சகோதரர்களும் வேலைக்குச் சென்றுவிட்டால், காலையிலேயே பகலுணவைத் தயாரிப்பதில் தம் பாட்டிக்கு உதவி செய்துவிட்டு, பிறகுதான் அவர் பள்ளிக்கூடம் செல்ல முடியும்.

 

பிறகு மூத்த அண்ணனுக்குத் திருமணம் ஆனபின் சமையல் வேலையை அண்ணி கவனித்துக்கொண்டதால் அஹதுக்குச் சமையல் வேலையிலிருந்து விடுதலை கிடைத்தது. இருப்பினும்  இப்போது மற்றொரு வேலை அவர் பொறுப்பில் வந்தது.  அன்று தேவையான காய்கறிகளை, அவர்தம் தந்தை, தாம் வேலை பார்க்கும் கடலை எண்ணெய் ஆலையில் வாங்கி வைத்துவிடுவார். ஒரு கிலோமீட்டர் தூரமுள்ள அந்த ஆலைக்கு நடந்தே சென்று, அதை எடுத்துக்கொண்டுவந்து வீட்டில் அண்ணியிடம் கொடுத்துவிட்டுத்தான் அஹது பள்ளிக்கூடம் போக வேண்டும். இதனால் ஒவ்வொரு நாள் காலையிலும் அவர் ஓட்டமும் நடையுமாகச் செயல்பட்டால்தான் அந்த வேலையை முடித்துவிட்டுப் பள்ளிக்கூடத்திற்கு உரிய நேரத்தில் போக முடியும்

 

பள்ளிக்கூடம் செல்லும்போதெல்லாம் மத்ரஸாசென்று ஓத வேண்டும் என்ற அவரது ஆர்வம் அவருக்குள் வந்து வந்து போனது. அவருடைய ஆசிரியர் கூறிய மத்ரஸாபெயரும் அவருடைய நினைவில் நிலைத்துப்போனது. தம்முடைய நண்பர்கள் முஹம்மது கனி, அப்துல் லத்தீப் ஆகியோரிடம் இது குறித்துப் பேசுவார். மத்ரஸா சென்று ஓதினால் ஒவ்வொரு நிமிடமும் நன்மையாக மாறிவிடுமே என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருப்பார்.

 

பள்ளிக்கூடம் விட்டு வந்ததும், காட்டுப் பகுதியில் விழுந்து கிடக்கும் சிறு சிறு குச்சி (சுப்பி) களைப் பொறுக்கி வந்து தம் அண்ணியிடம் கொடுப்பார். அதை வைத்துத்தான் அவருடைய அண்ணி அடுப்பைப் பற்றவைத்து இரவு உணவைத் தயார் செய்வார். அதன்பிறகு பள்ளிவாசலுக்குத் தொழச் செல்வதும், பள்ளிக்கூடப் பாடங்களைப் படிப்பதும் எழுதுவதும் தொடரும். இப்படியே அவருடைய வாழ்க்கை மிகுந்த நெருக்கடியில் சென்று கொண்டிருந்தது. அவர் வயதொத்த நண்பர்களோடு விளையாடுவது மிக மிகக் குறைவு.

 

ஒரு நாள் சுப்பிகளைப் பொறுக்கிக்கொண்டிருந்தபோது அவரது அடிக்காலில் முள் தைத்துவிட்டது; இரத்தம் பீறிட்டுக் கொட்டியது. அதைத் தம் பாட்டியிடம் சொன்னதும் அதன்மீது மஞ்சள் தடவிவிட்டனர். காயம் ஆறிவிட்டதாக உணர்ந்தார். ஆனால் காலில் தைத்த முள்ளின் ஒரு பகுதி உள்ளேயே தங்கியிருந்திருக்கிறது. அது அவருக்குத் தெரியவில்லை.

சில நாள்கள் கழித்து, அவரால் தம் காலை ஊன்ற முடியவில்லை; வலியால் துடித்தார். அங்கே அருகில் குடியிருந்த ஃபரீதா என்பவரை அவருடைய பாட்டி அழைத்தார்.

 

அடியே ஃபரீதா, என் பேரனுக்கு முள் குத்தி வலிக்குதுங்கிறான். கொஞ்சம் என்னென்னு பாருஎன்று அவருடைய பாட்டி கேட்டுக்கொண்டார்.

 

அவர் மேலோட்டமாகப் பார்த்துவிட்டு, “ஒண்ணும் இல்ல ஆயிஷாக்காஎன்று கூறிவிட்டார். அவர் போதிய  அனுபவம் இல்லாதவர். அப்படியே சில நாள்கள் கழிந்தன. மீண்டும் அவரால் நடக்க முடியவில்லை.

 

ஃபரீதாவின் அம்மா ராபிஆவை அழைத்து, “ஏ ராபியா, என் பேரனுக்கு முள் குத்தி வலிக்குதுங்கிறான். கொஞ்சம் என்னென்னு பாறேன்என்று அன்பொழுகக் கேட்டுக்கொண்டார்.

 

அவர் அனுபவசாலி. காயம் பட்ட காலைச் சற்று மேலே தூக்கிப் பார்த்தார். பிறகு ஊசியைக் கொண்டுவரச் சொல்லி அவ்விடத்தில் குத்திக் கிளறிவிட்டார். அதன்பிறகு பக்கவாட்டில் இரண்டு கைகளை வைத்து அழுத்திப் பிதுக்கினார். உள்ளிருந்து சலம் பொத்துக்கொண்டு வந்தது. பிதுக்கிப் பிதுக்கி எல்லாச் சலத்தையும் வெளியே எடுத்தார். பிறகு அண்டைவீட்டு சஹர்பானு மஞ்சளை அரைத்து வந்து கொடுத்தார். அதை அவ்விடத்தில் அப்பிவிட்டு, பருத்தித் துணியால் கட்டுப் போட்டுவிட்டார். அதன்பின் சில நாள்களில் இயல்பு நிலைக்கு வந்தார். இது அவரது வாழ்க்கையில் அவரால் மறக்க முடியாத நிகழ்வாகும்.

 

*** 

 

பள்ளிக்கூடத்தில் ஒன்பதாம் வகுப்பு படித்துவந்த அப்துல் அஹத், ஒரு நாள் தம் தந்தையிடம் கோபித்துக் கொண்டு, யாரிடமும் சொல்லாமல் அந்த அரபுக் கல்லூரியை நோக்கி நடந்தே புறப்பட்டார். திருச்சிக்குச் சென்று அங்கு ஓர் ஓட்டலில் சேர்ந்து பத்து மாதங்கள் வரை பணிசெய்தார், அதில் கிடைத்த சம்பளப் பணத்தைச் சேர்த்துவைத்து, துணி வாங்கி, தையலரிடம் கொடுத்து ஜுப்பா தைத்துக்கொண்டு, குறிப்பிட்ட மாதத்தில் அந்தப் பழைமையான மத்ரஸா நோக்கிப் பேருந்தில் புறப்பட்டார்.

 

பேருந்து நிலையத்தில் இறங்கி, ஆட்டோ ஒன்றில் ஏறி, மத்ரஸாவின் பெயரைச் சொல்ல, அந்த ஆட்டோ சில பல தெருக்களைத் தாண்டி, அந்த மத்ரஸாவின் வாசலில் போய் நின்றது. அந்த மத்ரஸாவின் கட்டடத்தைப் பார்த்ததும் முதலில் மலைத்துப் போய்விட்டார். இவ்வளவு பெரிய மத்ரஸாவில்தான் நாம் ஓதப்போறோமா என்று தம்மைத்தாமே கேட்டுக்கொண்டார். அங்கு பள்ளிவாசலைத் தூய்மைப்படுத்திக்கொண்டிருந்தவரிடம், மத்ரஸாவுக்குள் எப்படிப் போக வேண்டும் என்று கேட்க, அவர் உள்ளே செல்வதற்கான வழியைக் காட்டினார். உள்ளே சென்றதும், யாரைச் சந்திக்கணும் என்று கேட்டுக்கொண்டே அந்த மத்ரஸாவின் முதல்வர் அறையை அடைந்துவிட்டார்.

 

அவரைப் பார்த்த அக்கல்லூரி முதல்வர், “யாருமில்லாமத் தனியா வந்திருக்கியே, உன்னை எப்படி மத்ரஸாவில் சேர்த்துக்கொள்வது? போய், உன்னோட அத்தாவ கூட்டிட்டு வா!என்று கூற, முதல்வரின் அருகில் அமர்ந்திருந்த கண்ணியத்திற்குரிய உஸ்தாத் கமாலுத்தீன் ஹள்ரத், “ஓதணும்னு ஆர்வத்தோட வந்திருக்கான். சேத்துக்கங்க ஹஸ்ரத். பிற்காலத்தில் நல்லா வருவான்என்று கூறியதை ஏற்றுக்கொண்டு, கல்லூரியின் சட்ட விதிமுறைகளைக் கூறினார். பிறகு, “நீ போய் தலைமுடி மழித்துவிட்டு வாஎன்று சொன்னார்.

 

அதன்பின் தலைக்கு ஒரு மொட்டையைப் போட்டுக்கொண்டு, குளித்து, லுங்கி-ஜுப்பா அணிந்துகொண்டு, முதல்வரின் முன்னிலையில் போய் நின்றபோது, “இப்பதான்டா நீ ஓதுற புள்ள மாதிரி இருக்கெஎன்று கூறினார்.

 

பின்னர் அங்கு வந்திருந்த சேலத்தைச் சார்ந்த அன்வர்தீன் என்பவரிடம், நூர் முஹம்மது உஸ்தாதிடம்  வாய்மொழி நுழைவுத் தேர்வுக்காக அவரை அழைத்துச் செல்லுமாறு கல்லூரி முதல்வர் பணித்தார். நுழைவுத் தேர்வு நடைபெற்றது. தேர்ச்சி பெற்று இப்திதாஎனும் தொடக்க வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அவ்வாண்டு ஒருவர்பின் ஒருவராக ஏழு பேர் அவருடன் சேர்ந்தார்கள். அதன்பின் அவர்கள் அனைவரும் ஒருவர்பின் ஒருவராக அக்கல்லூரியை விட்டுச் சென்றுவிட்டார்கள். அவர் ஒருவர் மட்டுமே எஞ்சியிருந்தார். அந்த எழுவருள் ஒருவரான முபாரக் என்பவர் இன்றும் அஹதுடன் தொடர்பில் இருக்கிறார்.

  

அவர் நினைத்துச் சென்ற அதே அரபுக் கல்லூரியில் சேர்ந்துவிட்டதில் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியோடும் ஆர்வத்தோடும் நல்ல முறையில் பாடங்களைக் கற்றுவந்தார். பின்னர் அவருக்கு வீட்டு நினைவு வந்ததும் தந்தைக்கு ஒரு கடிதம் எழுதினார். காணாமல்போன தம் மகனை நீண்ட காலமாகத் தேடித் தேடித் துவண்டு போய், நம்பிக்கையிழந்துபோன தந்தைக்கு மகனின் கடிதம் மகிழ்ச்சியைத் தந்தது. அத்தோடு தம் மகன் அரபுக் கல்லூரியில் சேர்ந்திருப்பது அவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தந்தது.

 

கல்லூரியில் படிக்கும் காலத்தில் கைச்செலவுக்காக ஒவ்வொரு மாதமும் அவருடைய தந்தை ஐம்பது ரூபாய் மட்டுமே அனுப்பிவைத்தார். அது போதாததால் அவருடைய அண்ணன் சித்தீக்கிடம் பணஉதவி கேட்டார். அவருடைய சகோதரர்கள் சித்தீக், லத்தீப் ஆகிய இருவரும் மளிகைக்கடை நடத்திவந்தனர். எனவே அவர் தம்  தம்பி அஹதுக்கு மாதந்தோறும் நூறு ரூபாய் அனுப்பிவைத்தார். அதை வைத்துக்கொண்டுதான் அவர் சிக்கனமாகச் செலவு செய்துவந்தார்.

 

***  

அக்கல்லூரியில் நடத்தப்படுகிற பாடங்களை நல்லவிதமாகப் படித்ததோடு, கூடுதல் திறமைகளை வளர்த்துக் கொள்வதிலும் கவனம் செலுத்தினார். சக மாணவர்களுள் ஒருவரிடமிருந்து, ‘எளிய முறையில் ஆங்கிலம்எனும் நூலை வாங்கிச் சுயமாகப் படித்து முன்னேறினார். அதன்பின் ஆங்கில நூல்களையும், திருக்குர்ஆனின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் வாசிக்கத் தொடங்கினார். அதன்மூலம் ஆங்கில அறிவை வளர்த்துக்கொண்டார்.

 

மேலும் அக்கல்லூரியின் மாணவர் கையேட்டுப் பிரதிக்குத் துணையாசிரியராகவும், பின்னர் அடுத்த ஆண்டு ஆசிரியராகவும் இருந்துள்ளார். தொடக்க வகுப்பிலேயே சிறியதொரு கட்டுரை எழுதியமைக்காக, அப்போது அந்தக் கையேட்டு இதழுக்கு ஆசிரியராக இருந்த ஜாகிர் ஹுஸைன் என்பவரிடம், ‘பேனாவை ஊக்கப்பரிசாகப் பெற்றார். அதுமுதல் மாணவர் மன்றக் கையேட்டுப் பிரதிக்கு எழுத்தராகப் பணியாற்றியதோடு, அதில் கட்டுரைகள், கவிதைகள் எழுதுவதையும் தொடர்ந்தார்.

 

ஒன்பதாம் வகுப்பைப் பாதியில் நிறுத்தியிருந்த அவர், மேல்வகுப்பு நண்பர்களின் வழிகாட்டுதலோடு, பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதினார். பத்தாம் வகுப்பின் கணக்குப் பாடத்தைச் சொல்லிக் கொடுத்தவர் ஜுபைர் அஹ்மது என்பவர்தாம். அவர் அப்போது பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்திருந்தார்.

 

பின்னர் மேல்வகுப்பு நண்பரும் மாற்றுத்திறனாளியுமான அபூதாஹிர் என்பவரின் வழிகாட்டுதலோடு, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத் தொலைநிலைக் கல்வி மூலம் இளங்கலை வரலாறு படித்தார். அத்தோடு அங்கு பயிலும்போது சென்னைப் பல்கலைக் கழகம் நடத்துகிற பி.ஏ. அரபிக் பட்டத்திற்கு நிகரான அஃப்ளலுல் உலமா தேர்வையும் எழுதிமுடித்தார். அஹத் ஒரு தடவை மாணவர் மன்றத்தில் ஆங்கிலத்தில் உரையாற்றியபோது அதனைப் பாராட்டி, அவர் நண்பரான அபூதாஹிர் அவருக்கு நூல் ஒன்றைப் பரிசளித்து ஊக்கப்படுத்தினார். 

 

அவர் கையேட்டு இதழுக்கு எழுதும் கட்டுரையில் தம் பெயருக்குப் பின்னால் பி.ஏ., ஏ.யு. (ஏ.யு. என்பது அஃப்ஸலுல் உலமா படிப்பிற்கான சுருக்கம்) என்று குறிப்பிடுவது அவரது வழக்கம். அதன்மேல் ஒரு கோடும் இடுவதுண்டு. (அப்போது அவ்விரண்டையும் படித்துக்கொண்டிருந்ததால்...) அவரது பெயரைச் சொல்லும்போது சக வகுப்புத் தோழர்கள் சிலர், ‘பி.ஏ., ஏ.யு. அதன்மேல் ஒரு கோடுஎன்று அழுத்திச் சொல்லி கிண்டலாகச் சிரிப்பதுண்டு. ஆனால் அவர்களின் கேலி, கிண்டலைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அவர் தம்மைச் செதுக்கிக்கொள்வதிலேயே கவனம் செலுத்தினார். அங்கேயே எட்டாண்டுகள் படித்து ஆலிம் பட்டம் பெற்றார். 

 

அக்கல்லூரியில் ஆலிம் பட்டம் பெற்ற கையோடு தாருல் உலூம் தேவ்பந்த் செல்ல முடிவு செய்து, அவரும் அவருடைய நண்பர் முஹம்மது முபாரக்கும் சென்றனர். அங்கு நடத்தப்பெற்ற நுழைவுத் தேர்வில் வெற்றிபெற்று தவ்ரத்துல் ஹதீஸ் பாடப் பிரிவில் சேர்ந்து, ஓராண்டு பயின்று பட்டம் பெற்றார். இதுவரை படித்துப் பட்டம் பெற்றது போதாது என்று கருதிய அவர்  மேலும் படிக்க வேண்டும் என்று எண்ணினார். ஆகவே எங்கேனும் பணியாற்றிக்கொண்டே உயர்கல்வி படிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார். அதனால் அதற்குச் சென்னைதான் சரியாக இருக்கும் என்று முடிவெடுத்து, அங்கு வந்தார்.

 

***

சென்னையில் தம் மூத்த சகோதரர் யூசுஃப் இருப்பதால் அவருடைய துணையோடு ஏதாவது பள்ளிவாசலில் இமாமாகச் சேர்ந்துகொள்ளலாம். அதன்பின் உயர்படிப்பைப் பற்றி யோசிக்கலாம் என்று உறுதிகொண்டார். அதன்பின் அவரே ஏழ்மை நிலையில் சிரமப்படுகிறபோது, நாம் அங்கு சென்று தங்கினால் அவருக்கு மிகுந்த சிரமமாக இருக்கும்என்றெண்ணி, அம்முடிவைக் கைவிட்டார். அவருக்குத் தெரிந்த நண்பர் அமீர் என்பவர்  சென்னையில் ஒரு மஹல்லாவில் இமாமாகப் பணியாற்றுவதை அறிந்து அவரிடம் சென்றார்.

 

 

அந்த நண்பர், அந்தப் பகுதியில் பல்லாண்டுகளாக இமாமாகப் பணியாற்றி மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருந்த மௌலவி ஒருவரிடம் அழைத்துச் சென்றார். ஏனெனில் இமாம் தேவையென்றால் அவரிடம்தான் தகவல் சொல்வார்கள். அவர்தாம் அப்பகுதியைச் சுற்றியுள்ள எல்லாப் பள்ளிகளுக்கும் இமாமையும் முஅத்தினையும் அனுப்பிவைப்பார். அவரோ, “தற்போது காலியிடம் எதுவும் இல்லை. ஆனால் நீங்கள் விரும்பினால் பள்ளிவாசல் கட்டுமானப் பணிக்காக வசூல் செய்யப் போகலாம். போறீங்களா?” என்று கேட்டார்.

 

தன்மானத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ்ந்து பழகிய அஹத், ஒவ்வொரு பள்ளிவாசலாகச் சென்று வசூல் செய்வதை விரும்பவில்லை. வேண்டாம் ஹஜ்ரத்என்று கூறி, உடனடியாக அதை மறுத்துவிட்டார்.

 

அங்கிருந்து வெளியே வந்தபின், “நீங்க ஏன் முகத்தில் அடித்தாற்போல், வேண்டாம் என்றீர்கள்? பாக்குறேன்; யோசித்துச் சொல்றேன் என்று ஏதாவது சொல்லியிருக்கலாமே?” என அமீர் அவரைக் கடிந்துகொண்டார்.

 

பாய், சோப்பு போட்டு மொழுகி, நழுவியெல்லாம் எனக்குப் பேசத் தெரியாது. எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக, தெளிவாகச் சொல்லிடுவேன்; அதுதான் என்னோட பழக்கம்என்றார்.

 

சென்னை மண்ணடியிலுள்ள பெண்கள் மத்ரஸாவில் வாரந்தோறும் புதன்கிழமை ஆலோசனை நடைபெறும். அங்கு போங்க, இமாமத் பணி, முஅத்தின் பணி குறித்த தேவைகளுக்கு அங்குதான் எல்லோரும் பதிவு செய்வாங்க. அங்கு போனா கண்டிப்பாக ஏதாவது வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும்என்று நண்பர் ஒருவர் கூறி, அனுப்பிவைத்தார்.

 

அங்கு சென்று தம்முடைய தேவையைச் சொன்னார். அங்கிருந்த பதிவாளர் நகரத்தின் ஓரப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பள்ளிவாசலுக்கு இமாம் தேவைப்படுகிறார்; நீங்க போறீங்களா?” என்று கேட்டார். சரி, நான் போறேன்என்று கூறி, அப்பள்ளியின் முகவரியை வாங்கிக்கொண்டு அங்கு சென்றார். அங்கிருந்த பள்ளிவாசலின்  தலைவரைச் சந்தித்து, “மண்ணடி மத்ரஸாவில்தான் இந்த முகவரியைக் கொடுத்து அனுப்புனாங்கஎன்று சொன்னதும், “ஆம்! நாங்கதான் அங்கு சொல்லிவச்சிருந்தோம்என்று கூறினார்.

 

அதன்பின் அப்பள்ளியின் தலைவர் பேசினார். இங்குள்ள யாரேனும் பாங்கு சொல்லிடுவாங்க. நீங்க தொழுகை நடத்தணும்; காலையில் சின்னப் பிள்ளைகளுக்குத் திருக்குர்ஆன் ஓதிக்கொடுக்கணும்; அதன்பிறகு வாரந்தோறும்  ஞாயிற்றுக்கிழமை இந்த மஹல்லாவைச் சுற்றியுள்ள முஸ்லிம் வீடுகளிலும் கடைகளிலும் சந்தா வசூல் செய்யணும்; மூன்றுவேளை உணவு ஏற்பாடு செய்து தந்துவிடுகிறோம்; சம்பளம் ஈராயிரத்து ஐநூறுஎன்றார்.

 

அதைக் கேட்ட அஹதுக்கு, “சந்தா வசூல் செய்யணும்என்பதுதான் உறுத்தலாக இருந்தது. இருப்பினும்  உயர்படிப்பைத் தொடர வேண்டுமென்ற உயர் இலட்சியத்தோடு இருந்ததால், அவர் கூறிய அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டு பணியில் சேர்ந்துவிட்டார்.


பணியில் சேர்ந்த ஒரு மாதத்தில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. அரபிக் சேர்ந்துவிட்டார். அதன்பின் நிர்வாகத்தினரிடம், “லுஹர் தொழுகை மட்டும் உங்களுள் யாராவது பார்த்துக்கொள்ளுங்கள். நான் மேற்படிப்பு படிக்கப்போறேன்என்று கூற, அவர்களும் நல்ல விஷயம்தானேஎன்று அனுமதி கொடுத்துவிட்டார்கள். வாரத்தில் நான்கு நாள்கள்தான் வகுப்புக்குச் செல்வார். வெள்ளிக்கிழமைகளில் வகுப்புக்குச் செல்லாமல் விடுப்பு எடுத்துக்கொள்வது அவரைப் போலவே பணியில் இருந்துகொண்டு படிக்கும் ஆலிம்கள் சிலரின் வழக்கம்.

 

அண்ணன் யூசுஃப் கொடுத்த சைக்கிள் ஒன்றை வைத்திருந்தார்.  அதை வைத்துக்கொண்டுதான் பணியாற்றும் பள்ளியிலிருந்து முக்கியச் சாலையில் அமைந்திருக்கும் வேறொரு மஸ்ஜித் வரை சென்று, அங்கு அதை நிறுத்தி வைத்துவிட்டு, பேருந்தில் செல்வார். போரூரிலிருந்து சென்னைப் பல்கலைக் கழகம் வரை செல்லக்கூடிய 25ஜி பேருந்தில்தான் அவர் வழமையாகச் செல்வார். பின்னர் திரும்பி வந்து, அந்த சைக்கிளை எடுத்துக்கொண்டு வேகமாக வேகமாக மஸ்ஜிதை நோக்கி விரைவார்.

 

அந்த மஹல்லாவில் ஆறு மாதங்கள் வரை நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது. அதன்பின் அந்தப் பள்ளியின் நிர்வாகிகள், “இந்த நோன்போடு உங்களை நிறுத்திவிட முடிவு செய்துட்டோம். ஏன்னா, நீங்க லுஹருக்கு வருவதில்லை. அதனால கமிட்டி நிர்வாகிகள் பேசி முடிவு பண்ணிட்டாங்கஎன்று சொல்லிவிட்டார்கள்.

 

அதன்பிறகு மற்றொரு பள்ளியைத் தேடி அலைந்தார். இறுதியில் ஒரு பள்ளியில் பணியில் சேர்ந்தார். அங்கும் ஆறு மாதத்திற்கு மேல் நீடிக்க முடியவில்லை. நீங்கள் தொடர்ந்து லுஹருக்கு வராததால் உங்களை நீக்குகிறோம்என்று கூறிவிட்டார்கள். பின்னர் தென்சென்னையில் ஒரு கூரைப் பள்ளியில் பணிக்குச் சேர்ந்தார். அங்கிருந்து  சென்னைப் பல்கலைக் கழகம் சென்றுவர எளிதாக இருந்தது. அங்கு நிர்வாகியாக இருந்த ராஷித் என்பவர் இமாமின் படிப்புக்கு முக்கியத்துவம் அளித்தார். ஓராண்டுக் காலம் அங்கு நல்லவிதமாகப் போனது.

 

அதன் அருகிலேயே அவருடைய உஸ்தாத் ஓர் அரபுக் கல்லூரியைத் தொடங்கியிருந்தார். அம்மாணவர்களுக்கு காலை நேரத்தில் ஒரு பாடம் மட்டும் நடத்துவதற்கு அஹத் இமாமுக்கு அனுமதி வழங்கியிருந்தார். காலை உணவை அங்கு சாப்பிட்டுவிட்டு, பல்கலைக் கழகம் செல்வது அவரது வழக்கம். 

 

அந்த மஹல்லா மக்களிடம் நல்லவிதமாகப் பழகினார். அங்கிருந்த மக்களும் இமாமிடம் நெருங்கிப் பழகினார்கள். ஹாஜரா என்ற பெண்மணி அஹதைத் தம்பி போல் பாவித்து உணவு வழங்கிவந்தார். அவருடைய பிள்ளைகளுக்கும் அவருடைய தங்கையின் பிள்ளைகளுக்கும் அவர் குர்ஆன் ஓதக் கற்பித்துள்ளார். கறிக்கடை காஜா வீட்டிலும், யூசுஃப் பாய் வீட்டிலும் ஆசிரியை ரஹீமா வீட்டிலும் அவருக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. அவர்களின் வீட்டிலெல்லாம் அவர் குர்ஆனை ஓதக் கற்பித்துள்ளார். பள்ளியிலிருந்து அவர்களின் வீடு வெகுதூரம் என்பதால் அவர் தம் ஓய்வு நேரத்தில் அங்கு சென்று அவர்களின் பிள்ளைகளுக்குக் குர்ஆன் ஓதக் கற்றுக்கொடுத்துவந்தார். அவர்களுடனான நட்பு இன்றும் தொடர்கிறது என்பதே அவர்மீது அவர்கள் கொண்டுள்ள தூய அன்புக்குச் சான்றாகும்.

 

***

ஏற்கெனவே அந்தப் பள்ளியில் ஒரு பிரச்சனை புகைந்துகொண்டே இருந்தது. அது அவ்வப்போது வெளிவரும். பின்னர் அமுங்கிவிடும். அந்தப் பிரச்சனை இப்போது மிகப் பெரிய அளவில் கிளம்பியது. அதாவது அந்தப் பள்ளியின் இடத்தை வக்ஃப் செய்த சுலைமான் இறந்துவிட்டார். அந்தப் பள்ளியை நிர்வாகம் செய்தவர் பள்ளியின் பெயரைச் சொல்லிச் சொல்லிப் பணத்தை வசூல் செய்துகொண்டே இருந்தாரே தவிர, அப்பள்ளியைக் கட்டவே இல்லை. கூரைப் பள்ளியாகவே அது நீடித்துவந்தது.

 

அங்கு தொழ வருகிற சுலைமான் என்பவரின் மகன் ராஷித், “இந்தப் பள்ளி ஏன் இன்னும் இப்படிக் கூரைப் பள்ளியாகவே இருக்கிறது? எப்பதான் இதைக் கட்டுவீங்க? பள்ளிப் பேரைச் சொல்லிப் பணம் வசூல் செய்யிறீங்க. ஆனால் கட்டுமானப் பணியைத் தொடங்க மாட்டேங்கிறீங்களே?” என்று கேட்டார். அவரோ பதில் சொல்ல முடியாமல் விழிபிதுங்கி நின்றார். கூடிய சீக்கிரம் பணியைத் தொடங்கிடுவேன்என்று சொல்லிச் சமாளித்தார்.

 

ஒரு நாள் அந்த சுலைமானின் மகன்கள் ஐந்துபேரும் சேர்ந்து, “எங்க அத்தா கொடுத்த இந்த இடத்தை எங்களிடம் கொடுத்துவிடுங்கள்; நாங்களே இதைக் கட்டிப் பராமரித்துக்கொள்கிறோம்என்று கூறி, நிர்வாகப் பொறுப்பை வாங்கிக்கொண்டனர். பிறகு பள்ளி சார்ந்த எல்லாப் பணிகளையும் அவர்களே கவனித்துக்கொண்டார்கள்.

 

வசூல் செய்வதற்கான கதவு மூடப்பட்டுவிட்டதைப் பொறுத்துக்கொள்ளாத அந்தப் பழைய நிர்வாகி, இந்த இடத்தை எப்படியாவது மீட்க வேண்டும் என்று உறுதிகொண்டார். அந்தப் புகைச்சல் இருக்கும் நிலையில்தான் அஹத் அங்கு இமாமாகச் சேர்ந்திருந்தார்.  தற்போது அந்தப் பழைய நிர்வாகி மக்கள் அனைவரையும் தமக்குச் சாதகமாக அணிதிரட்டிக்கொண்டு வந்து, அஹத் இமாமை வெளியே அனுப்பிவிட்டு, பள்ளிக்குப் பூட்டு போட்டுவிட்டார். நீங்க ஒங்க தலைவரிடம் சொல்லி, அவரை இங்கு வரச் சொல்லுங்கஎன்று கூறினார்.

 

அதன்பின் அஹத் இமாம் தொலைபேசியில் தொடர்புகொண்டு, அப்பள்ளிக்குத் தொழ வருகிற ராஷித் என்பவரிடம் விஷயத்தைச் சொன்னார். அவர் தம் சகோதரர்களை அழைத்துக்கொண்டு அங்கு வந்தார். அவர்கள் அனைவரும் காவல் நிலையம் சென்றனர். நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பின்னர் சுலைமானின் மகன்கள், “இங்கு ஒரே பிரச்சனையாக இருக்கு; எனவே நீங்க வேறு இடம் பார்த்துக்கொள்ளுங்கள்என்று கூறிவிட்டனர்.

 

அதனால் அங்கிருந்து விலகிச் செல்ல வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு ஆளானார். இருப்பினும் அங்கு இருந்தபோதே எம்.ஏ. படிப்பை முடித்துவிட்ட மகிழ்ச்சியில் அங்கிருந்து புறப்பட்டார்.

 

*’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’* (தொடரும்)



 

ஞாயிறு, 13 அக்டோபர், 2024

திங்கள், 7 அக்டோபர், 2024

பெருகிவரும் பாலியல் வன்புணர்வுகள்- தீர்வு என்ன?


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இமாம் மதீனா பள்ளிவாசல், பட்டினம்பாக்கம் சென்னை-28 

 

கடந்த பத்தாண்டுகளாகப் பாலியல் வன்புணர்வுக் குற்றங்கள் பெருகி வருவதைக் கண்டு யாரும் மனம் வருந்தாமல் இருக்க முடியாது. குறிப்பாகக் கடந்த ஐந்தாண்டுகளுக்குள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பாலியல் வன்புணர்வுக் குற்றங்கள் மிகுதியாகிவருகின்றன. பெண்கள் பணியாற்றும் இடங்கள், பள்ளிகள், கல்லூரிகள், படப்பிடிப்பு இடங்கள், பொதுவெளிகள், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் பெண்களுக்கெதிரான குற்றங்கள் நடைபெற்று வருகின்றன. அவர்கள் வன்புணர்வு செய்யப்படுவது மட்டுமின்றிக் கொலையும் செய்யப்பட்டுவிடுகின்றனர் என்பது மிகுந்த சோகத்திற்குரியது.

 

நிர்பயா வழக்கு: டிசம்பர் 2012 ஆம் ஆண்டு, 23 வயதான பிசியோதெரபி மாணவி ஒருவர் திரைப்படம் பார்த்துவிட்டுத் தம் ஆண் நண்பருடன், பேருந்தில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். சம்பவத்தில் அவருடைய நண்பரும் தாக்கப்பட்டார். மிகவும் மோசமாகக் காயமடைந்த அம்மாணவியைச் சாலையோரம் அக்கும்பல் தூக்கி எறிந்தது. படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி, 13 நாள்களுக்குப் பின்னர் உயிரிழந்தார். அதன்பிறகு அது கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டது. அந்தக் கொலை வழக்கு நாடு முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. அவ்வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேர் 2017ஆம் ஆண்டு தூக்கில் போடப்பட்டனர். அதனைத் தொடர்ந்து நிர்பயாஎனும் பெயரிலேயே சில சட்ட வரையறைகள் முன்மொழியப்பட்டன. 

 

ஆசிஃபா பானு பலாத்கார வழக்கு: அந்தக் குற்றவாளிகள் தூக்கில்போடப்பட்ட பின்னர்ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா அருகே உள்ள ரசானா கிராமத்தில் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம், 8 வயது முஸ்லிம் சிறுமி ஆசிஃபா பானு ஏழு ஆண்களால் (ஆறு ஆண்கள் மற்றும் ஒரு சிறார்) கடத்தப்பட்டு, கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். ஜூன் 10, 2019 அன்று, ஏழு பிரதிவாதிகளில் ஆறு பேர் குற்றவாளிகள் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களுள் மூவருக்கு ஆயுள் தண்டனையும், மீதமுள்ள மூவருக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

 

இவ்வாறு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை, ஆயுள் தண்டனை எனத் தண்டனைகள் வழங்கப்பட்டாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. பெண்களுக்கெதிரான வன்புணர்வுக் குற்றங்களும் பெண்சீண்டல்களும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. தேசியக் குற்றப் பதிவுத்துறை ((NCRB) அறிக்கையின்படி, 2018 முதல் 2024 வரை உபி., மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் வன்புணர்வுக் குற்றங்கள் மிகுந்துள்ளன என்பதை அறிகிறோம்.

 

போக்ஸோ சட்டம்: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பெருகிவருவதை மிகுந்த வருத்தத்தோடு பார்த்துவருகிறோம். பெண்கள் பலவீனமானவர்கள். அவர்களுள் பெண்குழந்தைகள் மிகவும் பலவீனமானவர்கள். இளம்பிஞ்சுகளான அவர்களை வன்புணர்வு செய்வோரை எதிர்த்து அவர்களால் எதுவும் செய்ய இயலாது என்பதால்தான் அவர்களைக் குறிவைத்து வன்புணர்வு செய்கின்றார்கள். எனவே அத்தகையோர் பிடிக்கப்பட்டால் அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில்தான் போக்ஸோ (POCSO) சட்டம்  2012இல் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டது. இந்தச் சட்டம் மே 21, 2016 முதல் செயல்பாட்டுக்கு வந்தது. இச்சட்டம் 18 வயதுக்குட்பட்ட ஒவ்வொருவரையும் குழந்தைஎன்றே வரையறுக்கிறது.

 

ஹத்ராஸ் பாலியல் வன்புணர்வுக் கொலை வழக்கு: 2020ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 14ஆம் தேதி டெல்லியிலிருந்து 200 கி.மீ தொலைவிலுள்ள ஹத்ராஸ் பகுதியில் 19 வயது பட்டியலினப் பெண் ஒருவர், மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட அவரை அலிகர் மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து, காயங்களின் தீவிரத்தால் மேல் சிகிச்சைக்காக டெல்லியிலுள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சைப் பலனின்றி 2020 செப்டம்பர் 29ஆம் தேதி அந்தப் பெண் உயிரிழந்தார். அப்பெண்ணின் மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டாலும், நீதிமன்றம் மூவரை விடுவித்துவிட்டு, ஒருவரை மட்டுமே குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது பெரும் சோகமாகும்.

 

இவ்வாண்டு (2024) ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மாணவியை 10 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்புணர்வு செய்ததோடு, கொலையும் செய்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது. இது அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாக ஆனது. இதனைத் தொடர்ந்து மேற்கு வங்காளச் சட்டமன்றத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு, புதியதொரு சட்டத்தையும் இயற்றியுள்ளது. இனி, வன்புணர்வுக் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை என்று தீர்மானித்துள்ளது பாராட்டத்தக்கது எனலாம்.

 

 

என்னதான் சட்டங்கள் வந்தாலும், ஒவ்வொரு நாளும் பெண்களுக்கெதிரான வன்முறைகளும் வன்புணர்வுகளும் கொலைகளும் சங்கிலித் தொடராய்த் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆகவே இதற்குச் சட்டங்கள் மட்டும் தீர்வல்ல என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். கடுமையான தண்டனை வழங்குவது ஒரு வகைத் தீர்வாக இருந்தாலும், பள்ளிகள்தோறும் நீதிபோதனை வகுப்புகளைத் தொடங்கி, ஒழுக்கம், நன்னெறி, மனிதநேயம் முதலானவற்றைக் கற்பிப்பதும் பெண்கள்மீதான மரியாதையை ஆண்களின் மனங்களில் பதிய வைப்பதுமே நிரந்தரத் தீர்வாக அமையும் எனலாம். 

கடந்த காலங்களில் பள்ளிக்கூடங்கள்தோறும் நீதிபோதனை வகுப்புகள் நடைபெற்றன. ஒழுக்கமும் நன்னெறிகளும் போதிக்கப்பட்டன. ஒழுக்கமாக ஆடைகள் அணிந்தனர். பாலுணர்வைத் தூண்டும் வகையில் ஆடைகள் அணிவதோ பாலுணர்வைத் தூண்டும் வகையில் காட்சிகளைக் காண்பதோ அரிதிலும் அரிது. ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் அஞ்சும் பிள்ளைகள் இருந்தனர். ஆனால் தற்காலத்தில் பாலுணர்வைத் தூண்டக்கூடிய காட்சிகளையும் வன்முறையைத் தூண்டக்கூடிய காட்சிகளையும் பதின்பருவத்தினர் எளிதாகப் பார்க்க முடிகிறது. ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் அஞ்சும் பிள்ளைகளைக் காண்பது அரிதிலும் அரிது. ஆகவே அவர்களைத் தட்டிக் கேட்க ஆளில்லை. அதனால் குற்றங்கள் பெருகிவருகின்றன என்பதே உண்மை.

 

பாலியல் குற்றங்கள்: அண்மையில் கேரளாவில் திரைப்படக் குழுவினர்மீது பாலியல் தொல்லை வழக்குத் தொடரப்பட்டது. நடிகர்கள் தங்களுக்குப் பாலியல் தொல்லைகள் கொடுத்ததாக நடிகைகள் குற்றம் சாட்டினர்.  அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் நடிகைகள் சிலர் எங்களுக்கும் அவ்வாறே நடந்துள்ளதுஎன்றனர். இறுதியாக தமிழ்நாட்டு நடிகைகளுள் ஒருவர், “பெண்கள் படப்பிடிப்பிற்குச் செல்லும்போது தனியாகச் செல்லாமல் ஓர் ஆண் துணையுடன் சென்றால் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றார். அதை 1400 ஆண்டுகளுக்கு முன்பே அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறிவிட்டார்கள்: உங்களுள் ஒருவர் ஒரு (அந்நியப்) பெண்ணோடு தனிமையில் இருக்க வேண்டாம். ஏனெனில் அவ்விருவருக்குமிடையே (மூன்றாவதாக ஷைத்தான் இருக்கின்றான்.” (முஸ்னது அஹ்மது: 114) 

 

திரைப்படக்காட்சிகள்: பெண்களைத் தன்வயப்படுத்தும் உத்திகளைத் திரைப்படங்களில் அப்பட்டமாகக் காட்சிப்படுத்துகின்றார்கள். அவற்றைப் பார்க்கின்ற வக்கிர எண்ணம்கொண்ட இளைஞர்கள் அதைத் தம் காதலிகளிடம் அல்லது தம்மோடு பழகக்கூடிய பெண்களிடம் நேரடியாகச் செய்து பார்க்கத் துடிக்கின்றார்கள்.  அதுதான் இன்று பெரும்பாலும் பெண்சீண்டலுக்கான முதன்மைக் காரணமாகத் திகழ்கிறது. ஒரு பெண்ணைப் பாலியல் வன்புணர்வு செய்ய வேண்டுமென்ற கெட்ட எண்ணம் தோன்றிவிட்டால், நான்கைந்து பேர் கூட்டாகச் சேர்ந்து திட்டமிடுகின்றார்கள். யாருக்காவது பிறந்த நாள் என்று சொல்லி ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்கின்றார்கள். அப்பெண்ணை அந்நிகழ்ச்சிக்கு அழைத்து மது அருந்த நிர்ப்பந்தப்படுத்துகின்றார்கள். அல்லது மென்பானங்களை (கூல் டிரிங்ஸ்) அருந்தச் செய்கின்றார்கள். அதில் மயக்க மருந்தைக் கலந்துவிடுகின்றார்கள். பின்னர் அப்பெண் மயங்கியதும் அவர்கள் தம் விருப்பம்போல் அவளைச் சீரழிக்கின்றார்கள்.

 

இது பொதுவாகப் பெண்களுக்கு நடக்கும் நிகழ்வு என்றாலும், மதவெறியூட்டப்பெற்ற மாநிலங்களில் முஸ்லிம் பெண்கள் அல்லது தலித் பெண்களைக் குறிவைத்து பாலியல் பலாத்காரம் செய்கின்றார்கள். சிலர் வன்புணர்வு செய்து அவளைச் சீரழிப்பதோடு விட்டுச் செல்கின்றார்கள். வன்னெஞ்சம் கொண்ட மனித மிருகங்களாக உலா வருகின்ற சிலர், வன்புணர்வு செய்து சீரழிப்பதோடு, அவளைக் கொலையும் செய்துவிடுகின்றார்கள். ,இவ்வாறு இது தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியுமா?

 

2012இல் நிகழ்ந்த நிர்பயா வன்புணர்வுக் கொடுமைக்குப்பின் 2013இல் பணியிடத்தில் பெண்கள்மீதான பாலியல் துன்புறுத்தல் தடைச் சட்டம்நிறைவேற்றப்பட்டது. நம் நாட்டில் ஒவ்வொரு சட்டத்திற்குப் பின்னணியிலும் ஓர் உயிர்ப்பலியோ ஒன்றுக்கு மேற்பட்ட உயிர்ப்பலிகளோ இருக்கின்றன. இந்தச் சட்டத்திற்குப்பின் பெண்கள்மீதான பாலியல் துன்புறுத்தல் முடிவுக்கு வந்துவிட்டதா? இதன்பிறகும் பெண்கள் வன்புணர்வுக்கு ஆளாகிக்கொண்டுதானே இருக்கின்றார்கள்

 

மிடூ (MeToo) இயக்கம்: அமெரிக்க நாட்டின் சமூக ஆர்வலரும், சமூக ஏற்பாட்டாளருமான தாரன புர்கே என்பவர் முதன்முதலில் 2006இல் "MeToo" எனும் சொற்றொடர் மூலம் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளைச் சமூக ஊடகங்கள் மூலம் வெளிக்கொணர்ந்தார். பின்னர் இது உலக அளவில் பரவியது. இதனைக் கேள்விப்பட்ட பெண்கள், ‘எனக்கும்தான் ஏற்பட்டதுஎன்று ஒவ்வொரு பெண்ணும் வரிசையாகச் சொல்லிப் புலம்பத் தொடங்கினர். ஒவ்வொரு பெண்ணும் தனக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல் குறித்தும், பாலியல் தொல்லைகள் குறித்தும் கூறத் தொடங்கினர். அது தற்போது வரை தொடரத்தான் செய்கிறது. அண்மையில் கேரளத் திரைப்படத்துறையில் பெண்களுக்கெதிரான பாலியல் வரம்புமீறல்கள் வெளிச்சத்திற்கு வந்தபின், ‘இங்கும் அப்படித்தான்என்று தமிழ்நாட்டு நடிகைகள் கூறத்தொடங்கினர். அதனைத் தொடர்ந்து ஆந்திர நடிகைகள் சொல்லத் தொடங்கினர். ஆக அது ஒரு தொடர்கதைதான்.

 

அதே நேரத்தில் மறுகோணத்திலும் சிந்திக்க வேண்டும். ஆண்களால் பெண்களுக்குத் தொல்லை ஏற்படுவதைப் போலவே பெண்களால் ஆண்களுக்குத் தொல்லைகள் ஏற்படுவதும் உண்டு. பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்த, வி டூ (WeToo) என்ற ஹேஸ்டேக் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பிரபலமாகி வரும் அந்த ஹேஸ்டேக் மூலம், 1600 பேர் தங்களுக்குப் பெண்களால் நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்துப் பதிவிட்டுள்ளனர். ஆக ஆண்களும் பெண்களும் கலந்து பணியாற்றும்போது இத்தகைய சிக்கல்களை இருபாலரும் சந்தித்துதான் ஆக வேண்டும். அதனால்தான் இருபாலரும் ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பு அறவே இருக்கக் கூடாது என்று இஸ்லாம் தடைவிதிக்கிறது.

 

ஆகவே பணியிடங்களில் ஆண்-பெண் இணைந்து பணியாற்றுதல், இருபாலரும் இணைந்து படித்தல், நடித்தல் உள்ளிட்டவை நீக்கப்பட்டு, மகளிர் பேருந்து போலவே மகளிர் பள்ளிக்கூடம், மகளிர் கல்லூரி எனத் தனித்தனியாக இயங்கினால்தான் கல்விக்கூடங்களில் நிகழும் பெண்சீண்டலைக் களைய முடியும். என்னால் யாருக்கும் தொல்லை இல்லைஎன்ற உறுதிமொழியை ஒவ்வோர் ஆணும் பெண்ணும் ஏற்றுக்கொள்ள வேண்டும்; ஒருவரையொருவர் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இவையே பெண்சீண்டல், ஆண்சீண்டல், வன்புணர்வு, வன்புணர்வுக்கொலை உள்ளிட்டவை இனிவரும் காலங்களில் அருகிப்போவதற்கான வழிகளாகும்.

-======================