திங்கள், 7 அக்டோபர், 2024

பெருகிவரும் பாலியல் வன்புணர்வுகள்- தீர்வு என்ன?


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இமாம் மதீனா பள்ளிவாசல், பட்டினம்பாக்கம் சென்னை-28 

 

கடந்த பத்தாண்டுகளாகப் பாலியல் வன்புணர்வுக் குற்றங்கள் பெருகி வருவதைக் கண்டு யாரும் மனம் வருந்தாமல் இருக்க முடியாது. குறிப்பாகக் கடந்த ஐந்தாண்டுகளுக்குள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பாலியல் வன்புணர்வுக் குற்றங்கள் மிகுதியாகிவருகின்றன. பெண்கள் பணியாற்றும் இடங்கள், பள்ளிகள், கல்லூரிகள், படப்பிடிப்பு இடங்கள், பொதுவெளிகள், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் பெண்களுக்கெதிரான குற்றங்கள் நடைபெற்று வருகின்றன. அவர்கள் வன்புணர்வு செய்யப்படுவது மட்டுமின்றிக் கொலையும் செய்யப்பட்டுவிடுகின்றனர் என்பது மிகுந்த சோகத்திற்குரியது.

 

நிர்பயா வழக்கு: டிசம்பர் 2012 ஆம் ஆண்டு, 23 வயதான பிசியோதெரபி மாணவி ஒருவர் திரைப்படம் பார்த்துவிட்டுத் தம் ஆண் நண்பருடன், பேருந்தில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். சம்பவத்தில் அவருடைய நண்பரும் தாக்கப்பட்டார். மிகவும் மோசமாகக் காயமடைந்த அம்மாணவியைச் சாலையோரம் அக்கும்பல் தூக்கி எறிந்தது. படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி, 13 நாள்களுக்குப் பின்னர் உயிரிழந்தார். அதன்பிறகு அது கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டது. அந்தக் கொலை வழக்கு நாடு முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. அவ்வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேர் 2017ஆம் ஆண்டு தூக்கில் போடப்பட்டனர். அதனைத் தொடர்ந்து நிர்பயாஎனும் பெயரிலேயே சில சட்ட வரையறைகள் முன்மொழியப்பட்டன. 

 

ஆசிஃபா பானு பலாத்கார வழக்கு: அந்தக் குற்றவாளிகள் தூக்கில்போடப்பட்ட பின்னர்ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா அருகே உள்ள ரசானா கிராமத்தில் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம், 8 வயது முஸ்லிம் சிறுமி ஆசிஃபா பானு ஏழு ஆண்களால் (ஆறு ஆண்கள் மற்றும் ஒரு சிறார்) கடத்தப்பட்டு, கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். ஜூன் 10, 2019 அன்று, ஏழு பிரதிவாதிகளில் ஆறு பேர் குற்றவாளிகள் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களுள் மூவருக்கு ஆயுள் தண்டனையும், மீதமுள்ள மூவருக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

 

இவ்வாறு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை, ஆயுள் தண்டனை எனத் தண்டனைகள் வழங்கப்பட்டாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. பெண்களுக்கெதிரான வன்புணர்வுக் குற்றங்களும் பெண்சீண்டல்களும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. தேசியக் குற்றப் பதிவுத்துறை ((NCRB) அறிக்கையின்படி, 2018 முதல் 2024 வரை உபி., மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் வன்புணர்வுக் குற்றங்கள் மிகுந்துள்ளன என்பதை அறிகிறோம்.

 

போக்ஸோ சட்டம்: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பெருகிவருவதை மிகுந்த வருத்தத்தோடு பார்த்துவருகிறோம். பெண்கள் பலவீனமானவர்கள். அவர்களுள் பெண்குழந்தைகள் மிகவும் பலவீனமானவர்கள். இளம்பிஞ்சுகளான அவர்களை வன்புணர்வு செய்வோரை எதிர்த்து அவர்களால் எதுவும் செய்ய இயலாது என்பதால்தான் அவர்களைக் குறிவைத்து வன்புணர்வு செய்கின்றார்கள். எனவே அத்தகையோர் பிடிக்கப்பட்டால் அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில்தான் போக்ஸோ (POCSO) சட்டம்  2012இல் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டது. இந்தச் சட்டம் மே 21, 2016 முதல் செயல்பாட்டுக்கு வந்தது. இச்சட்டம் 18 வயதுக்குட்பட்ட ஒவ்வொருவரையும் குழந்தைஎன்றே வரையறுக்கிறது.

 

ஹத்ராஸ் பாலியல் வன்புணர்வுக் கொலை வழக்கு: 2020ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 14ஆம் தேதி டெல்லியிலிருந்து 200 கி.மீ தொலைவிலுள்ள ஹத்ராஸ் பகுதியில் 19 வயது பட்டியலினப் பெண் ஒருவர், மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட அவரை அலிகர் மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து, காயங்களின் தீவிரத்தால் மேல் சிகிச்சைக்காக டெல்லியிலுள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சைப் பலனின்றி 2020 செப்டம்பர் 29ஆம் தேதி அந்தப் பெண் உயிரிழந்தார். அப்பெண்ணின் மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டாலும், நீதிமன்றம் மூவரை விடுவித்துவிட்டு, ஒருவரை மட்டுமே குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது பெரும் சோகமாகும்.

 

இவ்வாண்டு (2024) ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மாணவியை 10 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்புணர்வு செய்ததோடு, கொலையும் செய்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது. இது அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாக ஆனது. இதனைத் தொடர்ந்து மேற்கு வங்காளச் சட்டமன்றத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு, புதியதொரு சட்டத்தையும் இயற்றியுள்ளது. இனி, வன்புணர்வுக் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை என்று தீர்மானித்துள்ளது பாராட்டத்தக்கது எனலாம்.

 

 

என்னதான் சட்டங்கள் வந்தாலும், ஒவ்வொரு நாளும் பெண்களுக்கெதிரான வன்முறைகளும் வன்புணர்வுகளும் கொலைகளும் சங்கிலித் தொடராய்த் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆகவே இதற்குச் சட்டங்கள் மட்டும் தீர்வல்ல என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். கடுமையான தண்டனை வழங்குவது ஒரு வகைத் தீர்வாக இருந்தாலும், பள்ளிகள்தோறும் நீதிபோதனை வகுப்புகளைத் தொடங்கி, ஒழுக்கம், நன்னெறி, மனிதநேயம் முதலானவற்றைக் கற்பிப்பதும் பெண்கள்மீதான மரியாதையை ஆண்களின் மனங்களில் பதிய வைப்பதுமே நிரந்தரத் தீர்வாக அமையும் எனலாம். 

கடந்த காலங்களில் பள்ளிக்கூடங்கள்தோறும் நீதிபோதனை வகுப்புகள் நடைபெற்றன. ஒழுக்கமும் நன்னெறிகளும் போதிக்கப்பட்டன. ஒழுக்கமாக ஆடைகள் அணிந்தனர். பாலுணர்வைத் தூண்டும் வகையில் ஆடைகள் அணிவதோ பாலுணர்வைத் தூண்டும் வகையில் காட்சிகளைக் காண்பதோ அரிதிலும் அரிது. ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் அஞ்சும் பிள்ளைகள் இருந்தனர். ஆனால் தற்காலத்தில் பாலுணர்வைத் தூண்டக்கூடிய காட்சிகளையும் வன்முறையைத் தூண்டக்கூடிய காட்சிகளையும் பதின்பருவத்தினர் எளிதாகப் பார்க்க முடிகிறது. ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் அஞ்சும் பிள்ளைகளைக் காண்பது அரிதிலும் அரிது. ஆகவே அவர்களைத் தட்டிக் கேட்க ஆளில்லை. அதனால் குற்றங்கள் பெருகிவருகின்றன என்பதே உண்மை.

 

பாலியல் குற்றங்கள்: அண்மையில் கேரளாவில் திரைப்படக் குழுவினர்மீது பாலியல் தொல்லை வழக்குத் தொடரப்பட்டது. நடிகர்கள் தங்களுக்குப் பாலியல் தொல்லைகள் கொடுத்ததாக நடிகைகள் குற்றம் சாட்டினர்.  அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் நடிகைகள் சிலர் எங்களுக்கும் அவ்வாறே நடந்துள்ளதுஎன்றனர். இறுதியாக தமிழ்நாட்டு நடிகைகளுள் ஒருவர், “பெண்கள் படப்பிடிப்பிற்குச் செல்லும்போது தனியாகச் செல்லாமல் ஓர் ஆண் துணையுடன் சென்றால் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றார். அதை 1400 ஆண்டுகளுக்கு முன்பே அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறிவிட்டார்கள்: உங்களுள் ஒருவர் ஒரு (அந்நியப்) பெண்ணோடு தனிமையில் இருக்க வேண்டாம். ஏனெனில் அவ்விருவருக்குமிடையே (மூன்றாவதாக ஷைத்தான் இருக்கின்றான்.” (முஸ்னது அஹ்மது: 114) 

 

திரைப்படக்காட்சிகள்: பெண்களைத் தன்வயப்படுத்தும் உத்திகளைத் திரைப்படங்களில் அப்பட்டமாகக் காட்சிப்படுத்துகின்றார்கள். அவற்றைப் பார்க்கின்ற வக்கிர எண்ணம்கொண்ட இளைஞர்கள் அதைத் தம் காதலிகளிடம் அல்லது தம்மோடு பழகக்கூடிய பெண்களிடம் நேரடியாகச் செய்து பார்க்கத் துடிக்கின்றார்கள்.  அதுதான் இன்று பெரும்பாலும் பெண்சீண்டலுக்கான முதன்மைக் காரணமாகத் திகழ்கிறது. ஒரு பெண்ணைப் பாலியல் வன்புணர்வு செய்ய வேண்டுமென்ற கெட்ட எண்ணம் தோன்றிவிட்டால், நான்கைந்து பேர் கூட்டாகச் சேர்ந்து திட்டமிடுகின்றார்கள். யாருக்காவது பிறந்த நாள் என்று சொல்லி ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்கின்றார்கள். அப்பெண்ணை அந்நிகழ்ச்சிக்கு அழைத்து மது அருந்த நிர்ப்பந்தப்படுத்துகின்றார்கள். அல்லது மென்பானங்களை (கூல் டிரிங்ஸ்) அருந்தச் செய்கின்றார்கள். அதில் மயக்க மருந்தைக் கலந்துவிடுகின்றார்கள். பின்னர் அப்பெண் மயங்கியதும் அவர்கள் தம் விருப்பம்போல் அவளைச் சீரழிக்கின்றார்கள்.

 

இது பொதுவாகப் பெண்களுக்கு நடக்கும் நிகழ்வு என்றாலும், மதவெறியூட்டப்பெற்ற மாநிலங்களில் முஸ்லிம் பெண்கள் அல்லது தலித் பெண்களைக் குறிவைத்து பாலியல் பலாத்காரம் செய்கின்றார்கள். சிலர் வன்புணர்வு செய்து அவளைச் சீரழிப்பதோடு விட்டுச் செல்கின்றார்கள். வன்னெஞ்சம் கொண்ட மனித மிருகங்களாக உலா வருகின்ற சிலர், வன்புணர்வு செய்து சீரழிப்பதோடு, அவளைக் கொலையும் செய்துவிடுகின்றார்கள். ,இவ்வாறு இது தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியுமா?

 

2012இல் நிகழ்ந்த நிர்பயா வன்புணர்வுக் கொடுமைக்குப்பின் 2013இல் பணியிடத்தில் பெண்கள்மீதான பாலியல் துன்புறுத்தல் தடைச் சட்டம்நிறைவேற்றப்பட்டது. நம் நாட்டில் ஒவ்வொரு சட்டத்திற்குப் பின்னணியிலும் ஓர் உயிர்ப்பலியோ ஒன்றுக்கு மேற்பட்ட உயிர்ப்பலிகளோ இருக்கின்றன. இந்தச் சட்டத்திற்குப்பின் பெண்கள்மீதான பாலியல் துன்புறுத்தல் முடிவுக்கு வந்துவிட்டதா? இதன்பிறகும் பெண்கள் வன்புணர்வுக்கு ஆளாகிக்கொண்டுதானே இருக்கின்றார்கள்

 

மிடூ (MeToo) இயக்கம்: அமெரிக்க நாட்டின் சமூக ஆர்வலரும், சமூக ஏற்பாட்டாளருமான தாரன புர்கே என்பவர் முதன்முதலில் 2006இல் "MeToo" எனும் சொற்றொடர் மூலம் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளைச் சமூக ஊடகங்கள் மூலம் வெளிக்கொணர்ந்தார். பின்னர் இது உலக அளவில் பரவியது. இதனைக் கேள்விப்பட்ட பெண்கள், ‘எனக்கும்தான் ஏற்பட்டதுஎன்று ஒவ்வொரு பெண்ணும் வரிசையாகச் சொல்லிப் புலம்பத் தொடங்கினர். ஒவ்வொரு பெண்ணும் தனக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல் குறித்தும், பாலியல் தொல்லைகள் குறித்தும் கூறத் தொடங்கினர். அது தற்போது வரை தொடரத்தான் செய்கிறது. அண்மையில் கேரளத் திரைப்படத்துறையில் பெண்களுக்கெதிரான பாலியல் வரம்புமீறல்கள் வெளிச்சத்திற்கு வந்தபின், ‘இங்கும் அப்படித்தான்என்று தமிழ்நாட்டு நடிகைகள் கூறத்தொடங்கினர். அதனைத் தொடர்ந்து ஆந்திர நடிகைகள் சொல்லத் தொடங்கினர். ஆக அது ஒரு தொடர்கதைதான்.

 

அதே நேரத்தில் மறுகோணத்திலும் சிந்திக்க வேண்டும். ஆண்களால் பெண்களுக்குத் தொல்லை ஏற்படுவதைப் போலவே பெண்களால் ஆண்களுக்குத் தொல்லைகள் ஏற்படுவதும் உண்டு. பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்த, வி டூ (WeToo) என்ற ஹேஸ்டேக் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பிரபலமாகி வரும் அந்த ஹேஸ்டேக் மூலம், 1600 பேர் தங்களுக்குப் பெண்களால் நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்துப் பதிவிட்டுள்ளனர். ஆக ஆண்களும் பெண்களும் கலந்து பணியாற்றும்போது இத்தகைய சிக்கல்களை இருபாலரும் சந்தித்துதான் ஆக வேண்டும். அதனால்தான் இருபாலரும் ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பு அறவே இருக்கக் கூடாது என்று இஸ்லாம் தடைவிதிக்கிறது.

 

ஆகவே பணியிடங்களில் ஆண்-பெண் இணைந்து பணியாற்றுதல், இருபாலரும் இணைந்து படித்தல், நடித்தல் உள்ளிட்டவை நீக்கப்பட்டு, மகளிர் பேருந்து போலவே மகளிர் பள்ளிக்கூடம், மகளிர் கல்லூரி எனத் தனித்தனியாக இயங்கினால்தான் கல்விக்கூடங்களில் நிகழும் பெண்சீண்டலைக் களைய முடியும். என்னால் யாருக்கும் தொல்லை இல்லைஎன்ற உறுதிமொழியை ஒவ்வோர் ஆணும் பெண்ணும் ஏற்றுக்கொள்ள வேண்டும்; ஒருவரையொருவர் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இவையே பெண்சீண்டல், ஆண்சீண்டல், வன்புணர்வு, வன்புணர்வுக்கொலை உள்ளிட்டவை இனிவரும் காலங்களில் அருகிப்போவதற்கான வழிகளாகும்.

-======================

கருத்துகள் இல்லை: