வியாழன், 26 செப்டம்பர், 2024

சிறந்த ஆசிரியர்

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.


கல்வியறிவற்ற பாமர மக்களை நல்வழி நோக்கி அழைக்கவே முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இறைத்தூதராக அனுப்பப்பட்டார்கள். இறைவனிடமிருந்து கற்ற ஞானங்களை மக்களுக்குப் போதித்து அவர்களை நேரிய பாதை நோக்கி அழைத்தார்கள். ஓர் ஆசிரியருக்கு இருக்க வேண்டிய நற்பண்புகளும் அன்பான அணுகுமுறையும் கனிவான பேச்சும் அவர்களிடம் நிறைவாக இருந்தன.  வன்னெஞ்சம் கொண்டோரையும் தம் அன்பான சொற்களால் ஈர்க்கும் நற்பண்புகளைக்கொண்ட நல்லாசிரியராக நபியவர்கள் திகழ்ந்தார்கள். 


அல்லாஹ் கூறுகின்றான்: கல்வியறிவில்லாத மக்களிடம் அவர்களுள் ஒருவரை அவன் (தன்னுடைய) தூதராக அனுப்பி வைத்தான். அவர்கள் இதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலிருந்த போதிலும், அத்தூதர் அவர்களுக்கு அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதிக்காண்பித்து, அவர்களுக்கு நன்னெறிகளைப் போதித்து, அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார். (62: 2) 


அல்லாஹ் அருளிய அறவுரைகளை அறியா மக்களுக்குப் போதிப்பதற்காகவும் ஞானங்களைக் கற்பிக்கவும் நல்லொழுக்கங்களை எடுத்துக்கூறி அவற்றைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தவுமே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அனுப்பப்பட்டார்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான். அந்த அடிப்படையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம் தோழர்களுக்கு இஸ்லாமிய மார்க்க அறிவையும் வாழ்வியல் ஒழுக்கத்தையும் செவ்வனே கற்பித்துக்கொண்டே இருந்தார்கள். அவற்றை அவர்கள்தம் தோழர்கள் அப்படியே பின்பற்றி ஒழுகினார்கள்.  


அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளார்கள்: ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம்முடைய (மனைவியர் ஒருவரின்) ஓர் அறையிலிருந்து வெளியே புறப்பட்டு மஸ்ஜிதுக்குள் நுழைந்தார்கள். அங்கே வட்டமாக அமர்ந்திருந்த இரண்டு வகைக் குழுவினரைக் கண்டார்கள். ஒரு குழுவினர், குர்ஆனை ஓதிக்கொண்டும் அல்லாஹ்விடம் (துஆ) பிரார்த்தனை செய்துகொண்டும் இருந்தார்கள். மற்றொரு குழுவினர், கல்வியைக் கற்றுக்கொள்கின்றார்கள். அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கின்றார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், அனைவரும் நன்மையில் உள்ளார்கள். இவர்களோ குர்ஆனை ஓதுகிறார்கள். அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கின்றார்கள். அவன் நாடினால் அவர்களுக்குக் கொடுப்பான்; அவன் நாடினால் அவர்களுக்குக் கொடுக்காமல் தடுத்துக்கொள்வான். (ஆனால்) இவர்களோ கற்றுக்கொள்கின்றார்கள்; கற்றுக்கொடுக்கின்றார்கள். நான் அனுப்பப்பட்டதே ஆசிரியராகத்தான் என்று கூறிவிட்டு, அவர்களோடு அமர்ந்துகொண்டார்கள். (இப்னுமாஜா: 229)   


“நான் ஆசிரியராகத்தான் அனுப்பப்பட்டுள்ளேன்” எனும் வாக்கியம் நன்கு கவனிக்கத்தக்கது. ஓர் ஆசிரியர் தம் மாணவர்களின் முன்னேற்றத்தை மட்டுமே விரும்புவார். அத்தகைய விருப்பத்தைத்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கொண்டிருந்தார்கள். எல்லோரும் இறைநம்பிக்கைகொண்டு  சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டும் என்று விரும்பினார்கள். அவர்கள் அனைவரும் இறைநம்பிக்கை கொள்ள வேண்டும் என்பதற்காக அல்லும் பகலும் உழைத்தார்கள். இறைநம்பிக்கை கொள்ளாதோர் குறித்துக் கவலைப் பட்டார்கள். அதனால்தான் அல்லாஹ் கூறுகின்றான்: “(நபியே!) இவ்வேதத்தை அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லையென்றால், அவர்களின் போக்கிற்காக நீங்கள் கடும் துக்கப்பட்டு உம்மை நீரே மாய்த்துக்கொள்வீர் போலும்?”  (18: 6) அந்த அளவிற்குத் தம் சமுதாய மக்கள்மீது கவலைகொண்டிருந்தார்கள்.


சிறுவர்களுக்குக் கற்பித்தல்: சிறுபிராயத்தில் எவற்றையெல்லாம் கற்பிக்கின்றோமோ அவை அவர்களின் மனதில் ஆழமாகப் பதிந்துபோய்விடுகின்றன. அவர்கள் வளர்ந்து பெரியவர்களானதும் அவையே அவர்களின் வாழ்க்கைக்கான வழிகாட்டியாக இருக்கும். எனவே நல்ல நல்ல கருத்துகளையும் நல்லொழுக்கங்களையும் சிறுபிராயத்திலேயே அவர்களின் மனத்தில் விதைத்துவிட வேண்டும். அதுதான் பெற்றோரும் ஆசிரியரும் செய்ய வேண்டிய பெரும் கடமையாகும். அந்த அடிப்படையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சிறுவர்களுக்கு இஸ்லாமியக் கொள்கையையும் நல்லொழுக்கங்களையும் போதித்துள்ளார்கள்.

 

இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: நான் ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின்னால் (வாகனத்தில் அமர்ந்து) இருந்தேன். அப்போது அவர்கள், “சிறுவனே! நான் உனக்குச் சில விஷயங்களைக் கற்றுத் தருகிறேன். (அவற்றை நீ நினைவில் வைத்துக்கொள்.) நீ அல்லாஹ்(வின் உத்தர)வைப் பேணிக்காத்திடு! அவன் உன்னைப் பேணிக்காப்பான். நீ அல்லாஹ்வை (அவனுடைய கடமைகளைப் பேணி நடந்துகொள்! அவனை உனக்கு முன்பாக நீ காண்பாய். நீ யாசித்தால் அல்லாஹ்விடமே யாசிப்பாயாக! உதவி கோரினால் அல்லாஹ்விடமே உதவி கோருவாயாக.


அறிந்துகொள்! உனக்கு ஏதேனும் நன்மை செய்ய ஒட்டுமொத்தச் சமுதாயமும் ஒன்றுசேர்ந்தாலும் உனக்கென அல்லாஹ் எதை எழுதிவிட்டானோ அதைத் தவிர வேறெந்த நன்மையையும் அவர்களால் உனக்குச் செய்ய இயலாது (அவ்வாறே,) உனக்கு ஏதேனும் தீங்கிழைக்க அவர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டாலும் உனக்கெதிராக அல்லாஹ் எதை எழுதிவிட்டானோ அதைத் தவிர வேறெந்தத் தீங்கும் அவர்களால் உனக்கு இழைத்திட இயலாது. (விதி எழுதிய) பேனாக்கள் உயர்த்தப்பட்டுவிட்டன, (விதி எழுதப் பெற்ற) ஏடுகள் உலர்ந்துவிட்டன” என்று கூறினார்கள். (திர்மிதீ: 2440)


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வளர்ப்பு மகனாகிய உமர் பின் அபீஸலமா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மடியில் (பொறுப்பில்) வளர்ந்துவந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை) என் கை உணவுத் தட்டில் (இங்கும் அங்குமாக) அலைந்து கொண்டிருந்தது. அப்போது அல்லாஹ்வின்  தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்னிடம், “சிறுவனே! அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் வலக் கரத்தால் சாப்பிடு. உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருந்து எடுத்துச் சாப்பிடு!” என்று சொன்னார்கள். அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது. (புகாரீ: 5376)


இவ்வாறு ஒருவருக்கு இறைநம்பிக்கையைக் கற்பித்தார்கள்; மற்றொருவருக்கு உண்ணும் ஒழுக்கத்தைக் கற்பித்தார்கள்; வேறொருவருக்குக் குடும்பத்தில் மனைவியிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று கற்பித்தார்கள். மற்றொருவருக்கு ஆன்மிகத்தில் எவ்வாறு ஈடுபட வேண்டும் என்று கற்பித்தார்கள். இன்னொருவருக்கு வியாபாரம் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதைக் கற்பித்தார்கள். ஆக ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் கல்வியைப் போதித்துக்கொண்டே இருந்தார்கள். 


தொண்டு செய்யக் கற்பித்தல்: வெறுமனே ஆன்மிகத்தை மட்டும் அண்ணல் நபியவர்கள் போதிக்கவில்லை. மாறாக ஆன்மிகத்தோடு சமுதாயத் தொண்டுகளை மேற்கொள்ளவும் கற்பித்தார்கள்; சுற்றுச்சூழலைக் காக்கும் விதத்தில் என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் கற்பித்தார்கள். அந்த வகையில் அபூபர்ஸா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்ற ஒரு செய்தி கூர்ந்து கவனிக்கத்தக்கது. நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், “நான் பயன்பெறும் வகையிலான ஒன்றை எனக்குக் கற்றுத்தாருங்கள்” என்று கேட்டேன். அப்போது அவர்கள், “முஸ்லிம்களின் பாதையிலிருந்து அவர்களுக்குத் தொல்லை தருபவற்றை அகற்று” என்று கூறினார்கள். (முஸ்லிம்: 2618) 


அங்கு முஸ்லிம்கள் மட்டுமே அதிகமாக இருந்ததால், ‘முஸ்லிம்கள்’ என்று கூறியுள்ளார்கள். பொதுவாக மக்களுக்குத் தொல்லை தருபவற்றைச் சாலையிலிருந்து அகற்றுவது எவ்வளவு பெரிய சமுதாயத் தொண்டு என்பதை மற்றொரு நபிமொழி நமக்கு உணர்த்துகிறது. “நான் சொர்க்கத்தில் உலாவுகின்ற ஒரு மனிதரைக் கண்டேன். அவர் (சொர்க்கத்தில் நுழையக் காரணமென்னவென்றால்) சாலை நடுவே மக்களுக்குத்  தொல்லை விளைவித்துக்கொண்டிருந்த மரத்தை வெட்டி (அகற்றி)னார்” (முஸ்லிம்: 1914) என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.

    

மக்கள் நடமாடும் பாதையில் அவர்களுக்குத் தொல்லை தருகிற விதத்தில் முளைத்திருக்கின்ற மரத்தையோ பிறவற்றையோ அகற்றுவது ஒருவர் சொர்க்கத்திற்குச் செல்லக் காரணமாகிறது என்றால் அது எவ்வளவு பெரிய சமுதாயத்  தொண்டு என்பதை உணர்ந்துகொள்ளலாம். ஆக இவ்வாறு மக்களுக்குப் பயன்படுகிற எதைச் செய்தாலும் அவருக்கு அது நன்மையாக அமையும் என்பதைக் கற்பித்துச் சென்றுள்ளார்கள். 


சில நேரங்களில் நபியவர்கள் தம் தோழர்களைப் பார்த்து, நான் உங்களுக்குக் கற்றுத் தரட்டுமா? நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று கேட்டு, தம் தோழர்களுக்குக் கற்பித்தார்கள். சிலவேளைகளில், ‘நீங்கள் என்னிடம் கேட்க மாட்டீர்களா’ என்று கேட்டு, கற்பித்துள்ளார்கள். வேறு சில நேரங்களில், நபித்தோழர்களே முன்வந்து தமக்குத் தேவையானதைக் கற்றுத்தருமாறு கேட்டு, கற்றுக்கொண்டுள்ளார்கள். பெண்கள், பெரியவர்கள், சிறுவர்கள், இளைஞர்கள் என் அனைவருக்கும் கற்பித்தார்கள். 


வார்த்தைகளை மாற்றக்கூடாது: ஆசிரியரான அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கற்பித்ததை நாம் அப்படியே  பயன்படுத்த வேண்டுமே தவிர, ஒரு வார்த்தையைக் கூட மாற்றக்கூடாது. நபியவர்கள் கற்றுத்தந்த  வார்த்தைகளில் கூடுதல், குறைவு செய்வதோ நம் விருப்பத்திற்கேற்ப வார்த்தைகளையோ வாக்கியங்களையோ சேர்த்துக்கொள்வதோ கூடாது. அதற்கான சான்றாகப் பின்வரும் நபிமொழி அமைந்துள்ளது.


தம்மிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக பராஉ பின் ஆஸிப் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது: “நீ உன் படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்காக உளூ செய்வது போன்று உளூ செய்துகொள். பிறகு உன் வலப் பாகத்தின் மீது சாய்ந்து படுத்துக்கொள். பிறகு ‘அல்லாஹும்ம அஸ்லம்து நஃப்ஸீ இலைக, வ ஃபவ்வள்த்து அம்ரீ இலைக,  வ அல்ஜஃத்து ழஹ்ரீ இலைக, ரஃக்பதன் வரஹ்பதன் இலைக, லா மல்ஜஅ வலா மன்ஜா மின்க இல்லா இலைக, ஆமன்த்து பி கிதாபிகல்லதீ அன்ஸல்த்த வ நபிய்யிகல்லதீ அர்ஸல்த்த’ (இறைவா! உன்னிடம் நான் என்னை ஒப்படைத்துவிட்டேன். எனது காரியத்தை உன் பொறுப்பில் விட்டுவிட்டேன். என் முதுகை உன்னளவில் சார்ந்திருக்கச் செய்தேன். உன் மீதுள்ள ஆவலிலும் அச்சத்திலும்தான் (இவற்றை நான் செய்தேன்). உன்னை விட்டுத் தப்பிச் செல்லவும் உன்னை விட்டு ஒதுங்கிவிடவும் உன்னிடம் தவிர வேறு போக்கிடமில்லை. நீ இறக்கியருளிய உனது வேதத்தை நான் நம்பினேன். நீ அனுப்பிய உன் ‘நபி’யை நான் நம்பினேன்’) என்று பிரார்த்தனை செய்துகொள்! (இவ்வாறு நீ பிரார்த்தனை செய்துவிட்டு உறங்கி) அந்த இரவில் நீ இறந்துவிட்டால் நீ இயற்கை நெறியில் (இஸ்லாத்தின் தூய வழியில்) ஆகிவிடுவாய். இந்தப் பிரார்த்தனையை உன் (இரவின்) கடைசிப் பேச்சாக ஆக்கிக்கொள்!”


இந்நபிமொழியின் அறிவிப்பாளரான பராஉ ரளியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள்: நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இந்தப் பிரார்த்தனையைத் திரும்ப ஓதிக் காண்பித்தேன். ‘நீ இறக்கியருளிய உனது வேதத்தை நான் நம்பினேன்’ என்ற இடத்தை அடைந்ததும் (‘உன் நபியை’ என்பதற்குப் பதிலாக) ‘உன் ரசூலை’ என்று (மாற்றிச்) சொல்லிவிட்டேன். (உடனே) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “இல்லை. (அவ்வாறு சொல்லாதே!) ‘நீ அனுப்பிய உன் நபியை நம்பினேன்’ என்று சொல்” என (எனக்குத் திருத்தி)ச் சொன்னார்கள். (புகாரீ: 247)


ஆக ஆசிரியராக அனுப்பப்பட்ட அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எல்லோருக்கும் செவ்வனே கற்பித்தார்கள்; அன்போடும் பண்போடும் போதித்தார்கள். அல்லாஹ்வின்  தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் போதித்தவற்றைக் கூடுதல் குறைவின்றி நம்மால் இயன்ற அளவிற்குப் பின்பற்றுவதே நம் ஒவ்வொருவர்மீதும் கடமையாகும். எனவே அவர்களின் போதனைகளை நாம் அனைவரும் பின்பற்றி, அதன்படி வாழ்ந்து ஈருலகிலும் வெற்றிபெறும் நல்வாய்ப்பை நல்லோன் அல்லாஹ் நமக்கு நல்குவானாக.

========================

செவ்வாய், 24 செப்டம்பர், 2024

செயற்கை நுண்ணறிவை (AI) ஒழுங்குபடுத்துவது ஒரு சவால்

 


மென்பொருள்களுக்கான ஒரு சட்டத்தின் தேவை அல்லது செயற்கை நுண்ணறிவை (AI) ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு நடுத்தரப் பாதையைக் கண்டறிவது ஏஐ (AI) என்பதற்கே அப்பாற்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்தியாவில், இப்போது அனைவரின் பார்வையும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் மீது (Ministry of Electronics and Information Technology -MeitY) உள்ளது. மார்ச் 2024இல் ஏஐ மற்றும் ஜெனரேட்டிவ் ஏஐ தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கான ஆலோசனையை Meity திருத்தியதால், ஏஐ மற்றும் டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்தும் நிறுவனங்களின் மீது அதைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் பொறுப்பை அது மாற்றியது. டிசம்பர் 2023 இல் கட்டாயப்படுத்தப்பட்ட இத்தகைய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்குமுன் அரசாங்கத்தின் முன்அனுமதி தேவை என்ற விதி அகற்றப்பட்டது.

 

ஆகஸ்ட் தொடக்கத்தில், தேவைப்பட்டால், ஏஐ மீது அரசாங்கம் சட்டம் இயற்றும், அது தீங்கு விளைவிக்காமல் இருப்பதை உறுதி செய்யும் என்று Meity கூறியது. வேகமாக வளர்ந்து வரும் ஒரு துறையைத் தக்கவைத்து அதற்குப் பதிலளிக்க முயற்சிக்கும் அரசாங்கத்தின் அறிகுறிகள் இவை, மேலும் வேலைகளை உருவாக்குவதாக உறுதியளிக்கின்றன. வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக உறுதியளிக்கும் துறையை, அது தொடங்குவதற்கு முன், அதைக் கட்டுக்குள் வைக்க அரசாங்கம் விரும்பவில்லை என்பது தெளிவாகிறது. அதே நேரத்தில், அது பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். உதாரணமாக, 'ஸ்டேட் ஆஃப் டேட்டா சயின்ஸ் & ஏஐ ஸ்கில்ஸ் இன் இந்தியா' குறித்த நாஸ்காமின் அறிக்கையின்படி, ஏஐ மற்றும் டேட்டா சயின்ஸ் நிபுணர்களுக்கான தேவை 4.20 இலட்சம் நிபுணர்களில் இருந்து (ஆகஸ்ட் 2022 வரை) 2024இல் ஒரு மில்லியனுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

 

 

ஏஐ தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கான விரிவான மற்றும் குறியிடப்பட்ட விதிகளும் ஒழுங்குமுறைகளும் விரைவில் தேவைப்படும், இவை விரைவாக வழக்கற்றுப் போய்விடாமல் இருப்பதை உறுதிசெய்வதற்கான கூடுதல் சவாலுடன். ஏஐ -இல் உள்ள எந்த ஒழுங்குமுறைக் கட்டமைப்பும் நெறிமுறைப் பயன்பாடு, வெளிப்படைத்தன்மை, தனியுரிமைப் பாதுகாப்பு, சார்பு (தவறான அல்லது தவறான தரவு), பாதுகாப்பு. பாகுபாடுகளைச் சுற்றியுள்ள இடர் குறைப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டும். கூடுதல் சிக்கலாக, ஏஐ தொழில்நுட்பம் பொருளாதாரத்தின் கிட்டத்தட்ட அனைத்துத் துறைகளையும் வாழ்க்கையையும் பாதிக்கிறது, எனவே இந்த எப்பகுதியிலிருந்தும் ஒழுங்குமுறை உருவாகலாம்.

 

இந்தியாவில், தற்போது, ​​ஏஐ-யை வெளிப்படையாகக் கட்டுப்படுத்துகிற சட்டமியற்றும் கட்டமைப்பு இல்லை. தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000க்கு மாற்றாக இருக்கும் டிஜிட்டல் இந்தியா மசோதாவில் அரசாங்கம் இதைச் சேர்க்கலாம் என்றாலும், அது எப்படி உருவாகும் என்பது யாருக்கும் உறுதியாகத் தெரியவில்லை.

 

 

ஐடி (IT)  புரட்சியைவிட இந்தியாவில் ஏஐ புரட்சி பெரிதாக இருக்கும் என Meity எதிர்பார்க்கிறது; மேலும் இந்தியாவை ஓர் உலகளாவிய ஏஐ வல்லரசாக மாற்றும் என்று நம்புகிறது. பொறுப்பான ஏஐ வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் இது வெளியிட்டுள்ளது. ஆனால் இந்தியாவின் வளர்ந்து வரும் டிஜிட்டல் நிலப்பரப்பை நிர்வகிக்க இவை போதுமா?

 

ஏஐ ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படும் தொலைநோக்குத் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, அவசர நடவடிக்கை முக்கியமாக இருக்கும். தொழில்துறையினர் மட்டுமின்றிச் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும், குறிப்பாக மாணவர்கள், ஆசிரியர்கள், சட்ட வல்லுநர்கள் மற்றும் நுகர்வோர் அமைப்புகளுடன் பரவலான ஆலோசனைகள் இருக்க வேண்டும். உலக நாடுகளுடன் இணைந்து செயல்பட இந்தியா முயற்சித்துள்ளது என்கிறது. 2024ஆம் ஆண்டிற்கான செயற்கை நுண்ணறிவுக்கான உலகளாவிய கூட்டாண்மையின் (GPAI) உச்சிமாநாட்டை             

 

 

 

2023 டிசம்பரில் இந்தியா நடத்தியது. அனைத்து 29 உறுப்பு நாடுகளும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான ஏஐ-யை நோக்கிச் செயல்படவும், தவறான தகவல், வேலையின்மை, வெளிப்படைத்தன்மை, நேர்மை மற்றும் அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கும் GPAI 'பிரகடனத்தை' ஏற்றுக்கொண்டன.

 

 

இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்:

சில ஆண்டுகளுக்கு முன்பு, தொலைத்தொடர்புத் துறையில் ஏஐ-யைப் பொறுப்பாக ஏற்றுக்கொள்வதற்கு ஜூலை 2023 இல் வெளியிடப்பட்ட இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) பரிந்துரைகள் உட்பட பல்வேறு தொடக்க நடவடிக்கைகள் இந்தக் களத்தில் எடுக்கப்பட்டன. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வழிகாட்டுதல்களை வெளியிட்டது, அதே நேரத்தில் அரசாங்கம் ஏஐ உள்ளிட்ட தொழில்நுட்பத்தைக் கற்பித்தலுடன் ஒருங்கிணைப்பதற்கு வசதியாக தேசியக் கல்வித் தொழில்நுட்ப மன்றத்தையும் நிறுவியது. உண்மையில், இந்திய ரிசர்வ் வங்கி. இந்தியத் தரநிலைகள் பணியகம் ஆகியவை ஏஐ மற்றும் இயந்திரக் கற்றல் தொழில்நுட்பங்களுக்கான விதிகளையும்  தரங்களையும் வடிவமைப்பதில் வேலை செய்கின்றன.

 

டிஜிட்டல் நிலப்பரப்பை ஒழுங்குபடுத்துவதற்கு இந்திய அதிகாரிகள் பல வழிகளைக் கையாள்வதில்கூட, அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஓர் அணுகுமுறை இல்லை. உலக அளவில், நாடுகள் பலவற்றை ஏற்றுக்கொண்டன. ஏஐ ஒழுங்குமுறைக்கான அணுகுமுறைகள். புதுமை. பாதுகாப்பு ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்தி, ஏஐ அபாயங்களை நிர்வகிக்கவும், தனியுரிமையைப் பாதுகாக்கவும், சமபங்குகளை முன்னேற்றவும் நிர்வாக உத்தரவுகளை நிர்வாகம் வழங்குவதன் மூலம், அமெரிக்கா ஒரு சமநிலையான அணுகுமுறையை எடுத்துள்ளது. மறுபுறம், ஏஐ சட்டத்தின் அறிமுகத்துடன் EU- ஐ ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு விரிவான அணுகுமுறையையும் எடுத்துள்ளது. சீனாவின் ஏஐ விதிமுறைகள் கடுமையானவை, இதில் நெறிமுறைகள் வழிகாட்டுதல்களும் தரவுப் பாதுகாப்புச் சட்டங்களும் உள்ளன.

 

இந்தியா-ஏஐ என்பது ஏஐ இன்னோவேஷன் சுற்றுச்சூழல் அமைப்பை ஊக்குவிப்பதற்காக. தேசிய அளவிலான பற்பல முன்முயற்சிகளை ஒன்றிணைக்க MeitY இன் ஒருங்கிணைந்த  திட்டமாகும். அக்டோபர் 2023இல் வெளியிடப்பட்ட இந்தியா-ஏஐ அறிக்கையின் முதல் பதிப்பு, 2035ஆம் ஆண்டுக்குள் இந்தியப் பொருளாதாரத்தில் 967 பில்லியன் டாலர்களைச் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கம் திறன் அடிப்படையிலான பயிற்சி மற்றும் டிஜிட்டல் நிலப்பரப்பை அதிகரிக்கவும் கற்றலை எளிதாக்குவதற்கும் முக்கியத்துவம் அளிக்கிறது, இது ஒரு சாதகமான ஒழுங்குமுறையாகும். ஏஐ  தலைமையிலான கருவிகள் காசோலைகள் மற்றும் நிலுவைகள் மூலம் நிர்வகிக்கப்படும் தொழில்துறையின் ஒழுங்கான வளர்ச்சியை உறுதிசெய்ய கட்டமைப்பு அவசியம்.

 

---------------------------------

 

ஆங்கிலம்: சதீஷ் சந்திரா, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மற்றும் இந்தியச் சட்ட ஆணையத்தின் முன்னாள் இயக்குநர் (கூடுதல் சட்ட அதிகாரி)

 

தமிழில்: முனைவர் நூ. அப்துல் ஹாதி பாகவி



சுட்டு விரல் இணையத்தளத்தில் இக்கட்டுரையைப் படிக்கலாம்.



திங்கள், 16 செப்டம்பர், 2024

உரிமையைப் பறிக்காதீர்!


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இமாம் மதீனா பள்ளிவாசல், பட்டினம்பாக்கம் சென்னை-28   

 

மனிதர்கள் அமைதியாக வாழ ஒரே வழி ஒவ்வொருவரும் தத்தம் கடமையைப் புரிந்து, அதைச் சரியாகச் செய்வதும் பிறரின் உரிமைகளைப் பறிக்காமல் இருப்பதுமே ஆகும்.  ஆனால்  பெரும்பாலான மனிதர்கள் அவ்வாறு வாழ்வதில்லை என்பதால்தான் மனிதர்களின் நிம்மதியும் அமைதியும் குலைகின்றன. மனிதர்கள் தத்தம் பொறுப்பை உணர்ந்து கடமையாற்றுவதும் பிறரின் உரிமையைப் பேணி நடப்பதும் அரிதிலும் அரிதாகவே நடைபெறுகிறது. அதனால்தான் ஒவ்வொரு நாளும் மனிதர்கள் பல்வேறு சிக்கல்களைச் சந்திக்கின்றார்கள்.

 

ஒருவன் மற்றொருவனை அநியாயமாகக் கொலை செய்கிறான்; திருமணமாகி வாழ்ந்து, பிள்ளைகளைப் பெற்றெடுத்து, அதன்பின் அந்த மனைவியை எக்காரணமுமின்றி மணவிலக்குச் செய்துவிடுகிறான்; கணவனின் உரிமையைச் சரியாக வழங்காமல் அவனோடு மல்லுக்கு நிற்கிறாள்; அண்டைவீட்டார் நிலத்தை அநியாயமாக ஆக்கிரமித்துக்கொள்கிறான்; தாய்-தந்தையை மதிக்காமல் வீட்டை விட்டுத் துரத்துகிறான்; அண்ணன் தன் தம்பிக்குச் சேர வேண்டிய சொத்தைக் கொடுக்காமல் ஏமாற்றிவிடுகிறான். இப்படி எல்லாத் தளங்களிலும் எல்லை மீறலும் உரிமை மீறலும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அதனால்தான் மனித சமுதாயம் ஒவ்வொரு நாளும் நிம்மதியற்ற வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

 

மனைவி தன் கணவனின் உரிமையைப் பறித்தல்: ஒரு கணவனுக்கு அவனுடைய மனைவி வழங்க வேண்டிய உரிமைகளுள் மிக முக்கியமானது, அவனது பாலியல் தேவையை நிறைவேற்றுவதாகும். அவன் விரும்பும் நேரத்தில்  அவனுக்கு உடன்படுவது மனைவியின் கடமையாகும். அதை அவளிடமிருந்து பெற்றுக்கொள்வது கணவனின் உரிமையாகும். ஷரீஅத் ரீதியான காரணங்களான மாதவிடாய் உதிரப்போக்கு, பிள்ளைப்பேறு உதிரப்போக்கு, நோய்வாய்ப்பட்டிருத்தல் ஆகியவை உள்ள நேரத்தில் தவிர மற்ற நாள்களில் கணவனுக்கு அவனுடைய விருப்பத்திற்கேற்றவாறு இணங்குவது மனைவியின் கடமையாகும்.

 

இது குறித்து அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ள செய்தி: ஒருவர் தம் மனைவியைப் படுக்கைக்கு அழைத்து, அவள் (அவருக்கு உடன்பட) மறுத்துவிட, அதன் விளைவாக அவர் இரவைக் கோபத்துடன் கழித்தாரென்றால் அவளை, காலை விடியும் வரை வானவர்கள் சபித்துக் கொண்டேயிருக்கின்றனர். (புகாரீ: 3237)

 

கணவன் தன் மனைவியின் உரிமையைப் பறித்தல்: ஒரு கணவன் தன்னை நம்பி வந்துள்ள மனைவிக்கு உரிய முறையில் உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றை வழங்குவது கடமையாகும். உரிய முறையில் உணவுக்குப் பணம் கொடுக்கவில்லையானால், அவனுடைய சட்டைப்பையிலிருந்து மனைவி தானாகவே எடுத்துக்கொள்ள அனுமதியுண்டு. அது அவளது உரிமையாகும்.

 

மேலும் கணவன் அவளோடு நல்லமுறையில் வாழவேண்டும்; அவளுடைய பாலியல் தேவையை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் அவளை நல்லமுறையில் பிரித்து, விட்டுவிட வேண்டும். அவ்வாறு செய்துவிட்டால் அவள் மற்றொரு திருமணம் முடித்துக்கொண்டு நல்ல முறையில் வாழ்க்கையைத் தொடர்வாள். ஆண்கள் சிலர்  தம் ஆண்மைக்குறைபாடு காரணமாகத் தம் மனைவியோடு நல்ல முறையில் வாழாமல், அதேநேரத்தில் அவளை மணவிலக்குச் செய்து, மற்றொரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வாய்ப்பும் கொடுக்காமல், வெறுமனே ஊரார் பார்வைக்குக் கணவன்-மனைவியாக வாழ்ந்துகொண்டிருப்பார்கள். இத்தகைய கணவர்கள் தம் மனைவியின் உரிமையைப் பறிக்கின்றார்கள் என்பதே உண்மை.

 

அத்தகையோரை அல்லாஹ் கண்டிக்கின்றான்:  (உங்கள்) மனைவிகளை நீங்கள் (மீட்டிக்கொள்ளும் வகையிலான) தலாக் கூறி, அவர்கள் தங்கள் (இத்தாவின்) தவணையிலிருந்தால் (அத்தவணை முடிவதற்குள்) அவர்களை முறைப்படி (மனைவிகளாகவே) நிறுத்தி வைத்துக் கொள்ளுங்கள். அல்லது (இத்தாவின் தவணையை முடித்துக் கொண்டபின்) முறைப்படி விட்டுவிடுங்கள். ஆனால், நீங்கள் அநியாயமாகத் துன்புறுத்துவதற்காக அவர்களைத் தடுத்து வைத்துக் கொள்ளாதீர்கள். இவ்விதம் எவரேனும் செய்தால் நிச்சயமாக அவர் தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டவராவார்...(2: 231)

 

தந்தை தம் பிள்ளைகளின் உரிமையைப் பறித்தல்: பெற்றெடுத்த பிள்ளைக்கு நல்ல பெயர் சூட்டுதல், நல்லொழுக்கம் போதித்தல், நற்கல்வியை வழங்குதல், உரிய பருவத்தில் திருமணம் செய்துவைத்தல் ஆகியவை ஒரு தந்தையின் கடமையாகும். இவை ஒரு தந்தையிடமிருந்து கிடைக்க வேண்டிய பிள்ளைகளுக்கான உரிமைகளாகும். பெற்றோர் சிலர் தம் பிள்ளைகளுக்கு உயர் கல்வி வரை வழங்குகின்றார்கள். ஆனால் இஸ்லாமிய நற்போதனைகளையும் நல்லொழுக்கத்தையும் போதிக்க மறந்துவிடுகின்றார்கள். ஒவ்வொரு பள்ளிவாசலிலும் நடைபெறுகின்ற மக்தப்-பாலர் வகுப்பிற்கு அழைத்துச் சென்று, அமர வைக்கத் தவறிவிடுகின்றார்கள். இத்தகைய சூழலில் வளர்கின்ற பிள்ளை, நாளை தன் பெற்றோரையே எதிர்த்துப் பேசுகின்றவனாகவும் மரியாதையின்றி நடத்துபவனாகவும் மாறிவிடுகின்றான். அதற்கான காரணம் அந்தப் பெற்றோரே ஆவர். எனவே பெற்றோர் பிள்ளைகளின் உரிமைகளைச் சரியாக வழங்கினால் அவர்களும் தம் பெற்றோருக்கான கடமையைச் சரியாகச் செய்வார்கள்.

 

ஒரு தந்தை தன் பிள்ளைக்கு நல்லொழுக்கத்தைவிடச் சிறந்த வெகுமதியை வழங்குவதில்லைஎன்று  அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (திர்மிதீ: 1952) ஆக நல்லொழுக்கம்தான் ஒரு தந்தை தன் பிள்ளைக்கு வழங்குகின்ற மிகப் பெரும் வெகுமதியாகும். எனவே அதற்குத்தான் ஒவ்வொரு  பெற்றோரும் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

 

மேலும் ஒருவர் தம் பிள்ளைக்குப் பருவ வயதடைந்ததும் திருமணம் செய்துவைக்காவிட்டால், அதனால் அந்த மகள் அல்லது மகன் தவறிழைத்துவிட்டால், அந்தப் பாவம் அவனுடைய தந்தையையே சாரும். எனவே அதில் கூடுதல் கவனம் செலுத்துவது பெற்றோரின் கடமையாகும். இன்றைய பெற்றோர் தம் பிள்ளைகளின் உரிமைகளைச் செவ்வனே வழங்கும்போது, நாளை அந்தப் பிள்ளைகள் தம் தந்தைக்கு வழங்க வேண்டிய உரிமைகளைச் சிறப்பாக வழங்குவார்கள்.

 

பிள்ளைகள் தம் பெற்றோரின் உரிமையைப் பறித்தல்: பெற்றோரின் உயர்வையும் சிறப்பையும் எல்லோரும் அறிவார்கள். இருப்பினும் இன்றைய செயற்கை நுண்ணறிவுக் காலத்தில் பிள்ளைகள் தம் பெற்றோரின் மதிப்பையும் கண்ணியத்தையும் உணராமல் இருக்கின்றார்கள். அவர்களுடைய கண்ணியத்தையும் உயர்வையும் உணர வேண்டுமெனில் திருக்குர்ஆன் வசனங்களைப் படிக்க வேண்டும். அல்லாஹ் தன் அடியார்களிடம் பேசும்போது, தனக்கு நன்றி செலுத்தியபின், பெற்றோருக்கு நன்றி செலுத்துமாறு கூறுகின்றான்: (நபியே!) உங்கள் இறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வழிபடக் கூடாதென்றும், தாய் தந்தைக்கு நன்றி செலுத்துமாறும் கட்டளையிட்டிருக்கிறான். (17: 23)

 

மற்றொரு வசனத்தில் கூறுகின்றான்: தனது தாய் தந்தைக்கு நன்றி செலுத்துமாறு மனிதனுக்கு நாம் நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய் துன்பத்தின் மேல் துன்பத்தை அனுபவித்து(க் கர்ப்பத்தில்) அவனைச் சுமந்து கொண்டலைந்தாள். (பிறந்த) பிறகு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரே அவனுக்குப் பால் மறக்கடித்தாள். ஆகவே, நீ எனக்கு நன்றி செலுத்து; உன்னுடைய தாய் தந்தைக்கும் நன்றி செலுத்து. முடிவில் நீ நம்மிடமே வந்து சேர வேண்டியதிருக்கின்றது. (31: 14) ஆகவே தாய்-தந்தையின் கண்ணியத்தைக் காக்க வேண்டும். அவர்களை மரியாதையாக நடத்த வேண்டும். ஒருவேளை அவர்கள் இறந்துபோய்விட்டால், அவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

 

இன்றைய இளைஞர்கள் தம் பெற்றோரின் மதிப்பையும் கண்ணியத்தையும் உணராமல் அவர்களைக் கேவலப்படுத்துகின்றார்கள். இழிவுபடுத்துகின்றார்கள். மனைவியின் அழகில் மதிமயங்கி, பெற்றோரை உதாசீனப்படுத்துகின்றார்கள். ஒரு பெற்றோருக்கு மூன்று பிள்ளைகள் இருந்தால், இங்கு ஒரு மாதம், அங்கு ஒரு மாதம் என்று அவர்கள் தம் பெற்றோரை அலைய விடுகின்றார்கள். செலவுக்குப் பணம் கொடுக்காமல் அவர்களையே கேட்க வைக்கின்றார்கள். தம் பெற்றோர் செலவுக்குப் பணம் கேட்கும்போது பிள்ளைகள் சிலர் கொடுக்க மறுக்கின்றார்கள். ஆனால் பெற்றோர் தம் பிள்ளைகளிடம் கேட்காமலேயே செலவுக்குப் பணம் எடுத்துக்கொள்ள முழு உரிமையுண்டு என்பதை இன்றைய இளைஞர்கள் அறியாதிருக்கின்றார்கள்.

 

ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது: அல்லாஹ்வின் தூதரே! திண்ணமாக எனக்குப் பொருட்செல்வமும் குழந்தையும் உள்ளன. என்னுடைய தந்தை என்னுடைய பொருளை எடுத்துக்கொள்ள நாடுகிறார்என்று ஒருவர் (புகார்) கூறினார். அதற்கவர்கள், “நீயும் உன்னுடைய பொருளும் உன்னுடைய தந்தைக்குத்தான்என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (இப்னுமாஜா: 2282) இவ்வாறு ஒரு தந்தைக்குத் தன் மகனிடம் பற்பல உரிமைகள் உள்ளன. அந்த உரிமைகளையெல்லாம் மகன் பறித்துக்கொள்வதால் தந்தையும் தாயும் சிரமத்திற்குள்ளாகின்றார்கள். சிலர் தம்மைப் பெற்றெடுத்த பெற்றோரை அடிக்கின்றார்கள்; திட்டுகின்றார்கள். வேறு சிலர் சொத்துக்காகத் தந்தையை அல்லது தாயைக் கொலை செய்யத் துணிந்துவிடுகின்றார்கள். இவை அனைத்தும் இஸ்லாம் குறித்த அறியாமையால்தான் நடைபெறுகின்றன.


ஒரு முதலாளி தன் தொழிலாளியின் உரிமையைப் பறித்தல்: இது இன்று நேற்றின்றி எப்போதும் உள்ள நடைமுறைதான். ஒரு முதலாளி தன் தொழிலாளிக்குக் கொடுக்க வேண்டிய உரிமையைக் கொடுப்பதில்லை. ஊதியத்தில் ஏமாற்றம் செய்தல், விடுமுறை கொடுக்காதிருத்தல், ஊக்கத்தொகை வழங்காதிருத்தல், மருத்துவ உதவி வழங்காதிருத்தல், உள்ளிட்ட எத்தனையோ வரம்புமீறல்கள் பல்லாண்டுகளாக நீடித்து வருகின்றன. முதலாளிகள் சிலர் குறிப்பிட்ட வேலை நேரத்தைத் தாண்டியும் நீண்ட நேரம் வேலை வாங்கிக்கொள்கின்றார்கள். ஆனால் அதற்கு ஊக்கத்தொகை வழங்காமல், அதே சம்பளத்தையே வழங்குகின்றார்கள்.

 

அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர்; ஊழியர்களுமாவர். அல்லாஹ்தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின்கீழ் கொண்டுவந்தான். எனவே தம் சகோதரரைத் தமது அதிகாரத்தில் வைத்திருப்பவர் தாம் உண்பதிலிருந்து அவருக்கு உண்ணத் தரட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கு உடுத்தத் தரட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய வேலைப் பளுவை  அவர்கள் மீது சுமத்தாதீர்கள். அப்படி (அவர்களின் சக்திக்கு மீறிய) பணியில் அவர்களை நீங்கள்  ஈடுபடுத்தினால் (அதைச் செய்வதில்) அவர்களுக்கு நீங்கள் உதவுங்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூதர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள். (புகாரீ: 30)

 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்டத் திருத்தம் ஏப்ரல் 2023ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ம.தி.மு.க., வி.சி.க. உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தன. இருந்தபோதிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. பின்னர் பல்வேறு கட்சிகளின் எதிர்ப்பால் அந்தச் சட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை. ஆக தொழிலாளிகளின் உரிமையைப் பறிக்கும் விஷயத்தில், அரசே முன்நிற்பதைக் கண்டு வியப்படைகிறோம்.

 

ஆக ஒவ்வொருவரும் அவரவர் தளத்தில் மற்றவரின் உரிமைகளைப் பறித்துக்கொண்டிருக்கின்றார்கள் என்பது நிதர்சன உண்மையாகும். ஆட்சியாளர்கள் மக்களின் உரிமைகளைச் செவ்வனே நிறைவேற்றாமல், அவர்களின் உரிமையைப் பறித்து விடுகின்றார்கள். இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களை மாற்ற முனைதல், வக்ஃபு வாரியச் சட்டங்களை மாற்ற முனைதல், ஊடகங்களுக்குக் கட்டுப்பாடு விதித்துக் கருத்துச் சுதந்திரத்தைப் பறித்தல், முஸ்லிம் இளைஞர்களைச் சட்ட விரோதமாகக் கைது செய்து நீண்ட காலத்திற்குச் சிறையில் அடைத்தல், வாக்குரிமையைப் பறிக்க முனைதல், ஊழல் பிரச்சனைகளை மறைக்க மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துதல், பொருளாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்துதல் உள்ளிட்ட ஏராளமான உரிமைமீறலில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

 

சிறுபான்மையரின் உரிமைகளைப் பெரும்பான்மையர் பறித்தல், ஏழைகளின் உரிமைகளைப் பெருமுதலாளிகள் பறித்தல் என ஒவ்வொரு தளத்திலும் உரிமைமீறல் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இனிவரும் காலங்களிலாவது ஒவ்வொருவரும் தத்தம் கடமைகளைச் செய்வதோடு பிறரின் உரிமைகளைப் பறிக்காமல் வாழ இறைவன் அருள்புரிவானாக.

===================