ஞாயிறு, 21 மே, 2023

வார்த்தைகளை எதிர்கொள்வோம்!

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி. 


 மனிதர்கள் பேசுகின்ற வார்த்தைகள் சில வன்மையாகவும் கடினமாகவும் இருக்கலாம்; சில மென்மையாகவும் இனிமையாகவும் இருக்கலாம்; சில உள்நோக்கம் கொண்டவையாக இருக்கலாம்; சில வெளிப்படையானவையாக இருக்கலாம்; சில நன்னோக்கம் கொண்டவையாக இருக்கலாம்; சில தீய எண்ணம் கொண்டவையாக இருக்கலாம். அவர்கள் எப்படிப் பேசினாலும் அவற்றை எதிர்கொள்கிற திறனும் ஆற்றலும் நம்முள் ஒவ்வொருவருக்கும் வேண்டும்.

 ஒருவர் பேசுகிற வார்த்தைகளைத் தவறாகப் புரிந்துகொண்டால் அவர்மீது நமக்குக் கோபம் ஏற்படும். அதேநேரத்தில் ஒருவர்மீது நமக்கு உயர்வான மதிப்பு இருந்தால், அவர் பேசுகின்ற வார்த்தைகள் நமக்குத் தவறான புரிதலை ஏற்படுத்தாது. மாறாக ஒருவர்மீது நமக்கு மதிப்பு இல்லாமல் வெறுப்பு உள்ளபோது அவர் பேசுகிற வார்த்தைகள் யாவும் நமக்குத் தவறான புரிதலையே தரும். 


 இதற்குச் சான்றாக மாமியார்-மருமகள் சண்டையைச் சொல்லலாம். மாமியார்மீது ஒருவிதமான வெறுப்பு பெரும்பாலான மருமகள்களுக்கு உண்டு. எனவே அவர் நன்னோக்கத்தில் எதையாவது சொன்னாலும் அதைக்கூடத் தவறாகப் புரிந்துகொண்டு அந்த மருமகள் அவரோடு சண்டைபோடுவாள். “என்னங்க! உங்க அம்மா எப்பப் பார்த்தாலும் எதையாவது சொல்லிக்கொண்டே இருக்குறாங்க. என்னால சமாளிக்க முடியல” என்று தன் கணவரிடம் புகார் செய்வாள். இதை ஆண்கள் பலர் எதிர்கொண்டிருக்கலாம். 


 வெள்ளிக்கிழமை உரை நிகழ்த்தி, தொழுதுவிட்டு வெளியே வந்தபோது ஒருவர், “ஹஜ்ரத்! அந்த விஷயத்தையும் சொல்வீங்கன்னு நெனச்சேன். ஆனா நீங்க சொல்லல” என்று ஒரு செய்தியைச் சொன்னார். அதற்கு நான், “உங்க மனசுல உள்ளது எனக்கெப்படி பாய் தெரியும்? நீங்க ஏற்கெனவே என்னிடம் சொல்லியிருந்தா நான் அதைச் சேர்த்துச் சொல்லியிருப்பேன்” என்றேன். அவ்வளவுதான். நான் அவ்வாறு சொன்னதை எதிர்பார்க்காத அவர், என்மீது கோபித்துக்கொண்டார். அத்தோடு அவர் என்னிடம் பேசவே இல்லை. பிறகு நானே அவரை எதிர்கொண்டு, ஸலாம் சொல்லி, தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள முயன்றேன். இருப்பினும் அவர் பழைய நிலைக்குத் திரும்பவில்லை. 


 தராவீஹ் தொழுகையின் இரண்டாம் நாள், “என்ன பாய், ஹாஃபிழ் சாஹிபுக்கு நீங்க பால் ஏற்பாடு செய்யக்கூடாதா? என்று பள்ளி நிர்வாகி ஒருவரிடம் கேட்டேன். அவ்வளவுதான். அவர் உடனே என்னிடம் கோபித்துக்கொண்டு, “நாலு பேருக்கு முன்னால இப்டி என்னிடம் நீங்க கேட்டுட்டீங்களே. எனக்கு அவமானமாப் போச்சு” என்றார். அன்று முதல் அவர் என்னைக் கண்டால் விலகியே செல்கிறார். 


 தம்பதியர் இருவர், இருவருமே மறுமணத் தம்பதியர். பழைய வாழ்க்கை பற்றிப் பேசக்கூடாது என்பதே இருவருக்கிடையே ஒப்பந்தம். கணவருக்கு உடல்நிலை சரியில்லை. எனவே அவரை நலம் விசாரிக்க அப்பெண்ணுடைய முன்னாள் மாமனார் வந்துள்ளார். அவர் நலம் விசாரித்துவிட்டுச் சென்றபின், “உன்னை உன்னுடைய முன்னாள் கணவரோடு சேர்த்துப் பார்த்தால் எப்படி இருக்கும்” என்று அப்பெண்ணின் கணவர் விளையாட்டுத்தனமாகச் சொல்லியுள்ளார். உடனே அப்பெண் கோபித்துக்கொண்டு அந்நிலையிலேயே தன் கணவரை விட்டுவிட்டுத் தன் அம்மா வீட்டிற்குச் சென்றுவிட்டாள். இப்போது அவரைக் கவனிக்க ஆளில்லாமல், தனியே தவிக்கிறார். 


 முதல் நிகழ்வில், “உங்க மனசுல உள்ளது எனக்கெப்படி பாய் தெரியும்?” என்ற கேள்விக்கு, “ஆமா ஹஜ்ரத்! உண்மைதான்” என்று பதிலுரைத்துவிட்டு இனிதே விடைபெற்றுச் சென்றிருக்கலாம். அதை விட்டுவிட்டு, வார்த்தைகளை எதிர்கொள்ளத் திராணி இல்லாமல், தக்க பதிலுரை கொடுக்கத் தெரியாமல் கோபித்துக்கொள்வதில் பொருளில்லை. 


 இரண்டாவது நிகழ்வில், ஹாஃபிழ் ஸாஹிபுக்குப் பால் ஏற்பாடு செய்வது நிர்வாகத்தினர் வேலை. அது குறித்துக் கேட்கும்போது, “மற்ற நிர்வாகிகளிடம் அல்லது மூத்த நிர்வாகிகளிடம் கேளுங்க” என்று சொல்லிவிட்டு அமைதியாகச் சென்றிருக்கலாம். மாறாக தம்மை அவமானப்படுத்தியதாகத் தவறாக எண்ணிக்கொண்டார். அதற்கான காரணம், ‘நீங்க’ என்ற வார்த்தையை, அவரைத் தனிப்பட்ட முறையில் ஏற்பாடு செய்யச் சொன்னதாக எண்ணிக்கொண்டு, “தம்மை அவமானப்படுத்தியதாகக் கருதிக்கொண்டார். இவ்வாறு தவறாக எண்ணிக்கொண்டு, இமாமிடமே பேசாமல் ஒதுங்கிச் செல்வது முறையா? கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் விலகிச் சென்றால், இப்படி எத்தனை பேரிடம் கோபித்துக்கொள்வீர்கள்? எல்லோரிடமும் கோபித்துக்கொண்டால் யாரிடம் இணங்கி வாழ்வீர்கள்? 


 மூன்றாவது நிகழ்வில் “உன்னை உன்னுடைய முன்னாள் கணவரோடு சேர்த்துப் பார்த்தால் எப்படி இருக்கும்” என்று சொன்ன கணவரிடம், “உங்க மனைவியை மற்றோர் ஆணுடன் வைத்துப் பார்க்க வேண்டும் என்று சொல்கிறீர்களே, உங்களுக்கு அசிங்கமா தோணலையா?” என்று எதிர்கேள்வி கேட்டுவிட்டு, அந்த இடத்தை விட்டு விலகிச் சென்றிருக்கலாம். அதை விட்டுவிட்டு, நோய்வாய்ப்பட்டுப் படுத்திருக்கிற கணவனை நிர்க்கதியாய் விட்டுச் செல்வது எவ்வகையில் நியாயம்? வார்த்தைக்கு வார்த்தைதான் பதிலே தவிர, வாழ்க்கையை முறித்துக்கொள்ளும் விதமாக விலகிச் செல்வது அன்று. 


 தற்கால மனிதர்களின் உள்ளங்கள் மிக மிகச் சுருங்கிவிட்டன. எதையும் துணிவோடு எதிர்கொள்ளும் திராணி இல்லை; எதையும் தாங்கிக்கொள்ளும் ஆற்றல் இல்லை; சகித்துக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லை. சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் கோபித்துக்கொள்வது, வீட்டைவிட்டுச் செல்வது, வாழ்க்கையை முறித்துக்கொள்வது, உயிரை மாய்த்துக்கொள்வது என எல்லாவற்றிற்கும் அவசரப்படுகின்றார்கள். ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் அவர்கள்தம் தோழர்கள் சோதனைக்கு மேல் சோதனையை அனுபவித்தார்கள்; துன்பத்திற்கு மேல் துன்பத்தை எதிர்கொண்டார்கள். இருப்பினும் எந்நிலையிலும் மனந்தளராமல் துணிவோடு நின்றார்கள். ஒரு போருக்குப்பின் மறு போருக்குப் புறப்பட நபியவர்கள் கட்டளையிட்டபோதும் தயங்காது முன்வந்தார்கள். அத்தகைய தீரமிக்கோராகவும் சிக்கல்களை எதிர்கொள்வோராகவும் இருக்க வேண்டும். 


கடினமான அல்லது நெருக்கடியான நேரங்களில் நிதானமாக முடிவெடுப்பதுதான் ஓர் ஆணின் ஆளுமையை வெளிப்படுத்திக் காட்டும். மாறாக சின்னச் சின்ன விஷயங்களுக்காகக் கோபித்துக்கொள்வதோ உணர்ச்சிவசப்படுவதோ நம் பலவீனத்தைப் பறைசாற்றுவதாகவே அமையும்.

 பலமான இறைநம்பிக்கையாளர், பலவீனமான இறைநம்பிக்கையாளரைவிடச் சிறந்தவரும் அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானவரும் ஆவார். ஆயினும், அனைவரிடமும் நன்மை உள்ளது. உனக்குப் பயனளிப்பதையே நீ ஆசைப்படு; இறைவனிடம் உதவிதேடு; நீ தளர்ந்துவிடாதே; உனக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது, ‘நான் (இப்படிச்) செய்திருந்தால் அப்படி அப்படி ஆயிருக்குமே!’ என்று (அங்கலாய்த்துக்) கூறாதே... என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (முஸ்லிம்: 5178)

 இன்றைய பதின்பருவச் சிறார்கள், சிறுமிகள் சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் உணர்ச்சிவசப்படுகின்றார்கள். எதிர்பார்த்தது உடனடியாகக் கிடைக்கவில்லையானால் கோபித்துக் கொள்கிறார்கள்; பெற்றோரிடம் சண்டைபோடுகின்றார்கள். சிலர் தம் வீட்டைவிட்டுச் சென்றுவிடுகின்றார்கள். வேறு சிலர் தம் உயிரை மாய்த்துக்கொள்கின்றார்கள். 

சான்றாக, பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகளில் தாம் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காததால் உயிரை மாய்த்துக்கொண்டோரின் செய்தியை ஒவ்வோர் ஆண்டும் செய்தித் தாள்களில் படித்து வருகின்றோம்; நீட் நுழைவுத் தேர்வில் தோற்றதால் உயிரை மாய்த்துக்கொண்டோர் குறித்த செய்தியையும் படிக்க நேரிடுகிறது. வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால், விரும்பிய வாழ்க்கை கிடைக்காததால், காதலித்த பெண் மணந்துகொள்ள மறுத்ததால், வட்டித் தொல்லையால், வாழ்க்கையின் நெருக்கடிகளால், ஆசிரியர் திட்டியதால், பெற்றோர் திட்டியதால், வேலை கிடைக்காததால், கணவன் குடித்துவிட்டு வந்ததால் எனப் பல்வேறு சூழ்நிலைகளில் இளஞ்சிறார்கள், இளம்பெண்கள், ஆண்கள், பெண்கள் எனப் பலரும் தற்கொலை செய்துகொள்வதை நாளிதழ்களில் செய்தியாகப் படித்துக்கொண்டிருக்கிறோம். 


இந்தத் தலைமுறையினருள் பெரும்பாலோர் வாழ்க்கையின் நெருக்கடிகளை எதிர்கொள்ளத் திராணியற்றவர்களாக இருக்கின்றார்கள். ஆகவே நாம் நம் அன்றாட வாழ்வில் சந்திக்கின்ற நெருக்கடிகளையும் சிக்கல்களையும் எதிர்கொண்டு வாழப் பழகுவோம். அத்தோடு நெருக்கடியான நேரங்களில் எப்படி அதை எதிர்கொள்ள வேண்டும் என்பதை நம் பிள்ளைகளுக்குக் கற்பிக்க வேண்டும். அதுவே இன்றையப் பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு வழங்க வேண்டிய மிக முக்கியமான அறிவுரையாகும். அந்தப் பயிற்சியே நாம் அவர்களுக்கு வழங்கும் உயிர்காக்கும் பரிசாகும். 
 ===========================

கருத்துகள் இல்லை: