-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி. இமாம் மதீனா பள்ளிவாசல்,
பட்டினம்பாக்கம் சென்னை-28 ----------------------------------------- மக்கள்
அனைவரும் அணியணியாக நிற்க, ஒரே இறைவனை ஒரே திசை நோக்கி ஒரே நேரத்தில் ஒன்றாகத்
தொழச் செய்கின்ற பணிதான் ‘இமாமத்’ பணி ஆகும். ஒரு பகுதியில் (மஹல்லா) வாழ்கின்ற
மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்த ஒரே சமுதாயமாக வாழ்வதற்கான முன்னோடிதான்
கூட்டுத்தொழுகை. அந்தக் கூட்டுத் தொழுகையை ஒவ்வொரு நாளும் முன்னின்று
நடத்துபவர்தாம் இமாம். தொழுகை கடமையாக்கப்பட்டது முதல் தம் வாழ்நாளின் இறுதி வரை
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இமாமாக இருந்து மக்களுக்குத் தொழுகை
நடத்தியுள்ளார்கள். நபியவர்களைப் பின்பற்றி அதே பணியை நான்கு கலீஃபாக்கள் செவ்வனே
செய்திருக்கின்றார்கள். அதன்பின் வந்தவர்கள் அதே வழியைப் பின்பற்றி இமாமாக
இருந்துள்ளார்கள். அதுவே இன்று வரை உலகின் எல்லாப் பகுதிகளிலும் தொடர்கிறது. நன்மை
தீமைகளில் பங்குண்டு: ஒருவர் ஒரு பகுதியில் இமாமாகப் பணியாற்றுகிறார் என்றால்
அப்பகுதி மக்களின் நன்மை தீமைகளில் அவருக்குப் பங்குண்டு. எனவே அவர்களின்
நன்மைக்கும் கல்வி வளர்ச்சிக்கும் அவர் காரணமாக இருக்க வேண்டும். தீமைகளைக்
குறைக்கவும் அவற்றை முற்றிலும் அழிக்கவும் பாடுபட வேண்டும். அப்பகுதிவாழ்
பிள்ளைகளுக்குத் திருக்குர்ஆனைக் கற்பிப்பதும் மக்களுக்கு நல்வழி காட்டுவதும் அங்கு
வேரோடிக் கிடக்கின்ற தீமைகளைக் களைவதும் அவர் பொறுப்பே ஆகும். இவற்றுக்கெல்லாம்
பொறுப்பேற்காமல் ஒருவர் பத்தாண்டுகள், இருபதாண்டுகள் என ஆண்டுக் கணக்கில் ஒரே
பள்ளிவாசலில் இமாமாக இருந்து எந்தப் பயனும் இல்லை. ஒருவர் ஒரு பள்ளிவாசலில்
பத்தாண்டுகள் தொடர் சேவையாற்றுவது மிகுந்த பாராட்டுக்குரியது. சிலர் இருபத்தைந்து
ஆண்டுகள், சிலர் முப்பது ஆண்டுகள், சிலர் நாற்பது ஆண்டுகள், மிகச் சிலர் ஐம்பது
ஆண்டுகள் ஒரே பள்ளிவாசலில் பணியாற்றி வருகின்றார்கள். இது மிகப்பெரும் சாதனை என்றே
கூற வேண்டும். ஏனெனில் ஒருவர் ஓரிடத்தில் தொடர்ந்து பணியாற்றும்போது பல்வேறு
சிரமங்களையும் எதிர்வினைகளையும் எதிர்கொள்ள வேண்டி வரும். அவற்றையெல்லாம்
எதிர்கொண்டு, தம் பொறுமை எனும் நற்குணத்தால் சகித்து, அங்கு நீடிப்பது உண்மையில்
பாராட்டுக்குரியதே ஆகும். மக்கள் மனங்களில் இடம்பெற: ஒரு மஹல்லாவாழ் மக்கள்
மனங்களில் ஓர் இமாம் இடம்பெறவேண்டுமெனில் குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளாவது தொடர்ந்து
அங்கு பணியாற்றியிருக்க வேண்டும். அதன்பிறகுதான் அவரைப் பற்றிய நன்மதிப்பு
அவர்களின் மனங்களில் பதியும். அவரைப் பற்றிய நன்மதிப்பு மக்கள் மனங்களில் பதிந்த
பிறகுதான் அவர் சொல்வதை வேதவாக்காக ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு வருவார்கள். ஆக
மக்கள் மனங்களில் இடம்பெறாமல் ஓரிரு ஆண்டுகளிலேயே, நாம் சொல்வதை மக்கள் கேட்டு
நடக்க வேண்டும் என எதிர்பார்ப்பது சாத்தியமற்றதாகும். பாராட்டு விழா தேவையா: ஒரே
பள்ளிவாசலில் இருபது ஆண்டுகள் பணியாற்றியோருக்குப் பாராட்டு விழா நடத்தும்போது
அதை விமர்சனம் செய்பவர்கள் சொல்லக்கூடிய செய்தி என்னவெனில், “நிர்வாகிகளுக்கு
எதிராக எதுவும் பேசாமல் அவர்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டிக்கொண்டு இருப்பது ஒரு
சாதனையா? இதற்கெல்லாம் ஒரு பாராட்டு விழாவா? என்பதுதான். அவர்கள்
சொல்வதைப்போன்று, எல்லா இமாம்களும் நிர்வாகிகள் சொல்வதற்கெல்லாம்
தலையாட்டிக்கொண்டு இருப்பதில்லை. வாய்ப்புக் கிடைக்கும்போது பதில் கொடுக்கத்தான்
செய்கின்றார்கள்; மக்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டத்தான் செய்கின்றார்கள். என்ன
ஒரு வித்தியாசம், மற்றவர்கள் வன்மையாகச் செய்வதை இவர்கள் நளினமாகச் செய்வார்கள்.
அவ்வளவுதான். ஆக ஒருவர் நீண்ட காலம் ஒரு மஹல்லாவில் இருந்து பணியாற்றுகிறார்
என்றால் அவர் பாராட்டுக்குரியவர் என்பதில் ஐயமில்லை. அவர் ஏற்றுக்கொண்ட
பொறுப்பைச் செவ்வனே செய்வதற்காகத் தம்மை அம்மக்களின் மனோநிலைக்கேற்பத்
தகவமைத்துக்கொள்கிறார். அத்தகைய திறன் இல்லாதவர்களே கூடுவிட்டுக் கூடு மாறுவதைப்
போல் இங்குமங்கும் மாறிக்கொண்டே இருக்கின்றார்கள். அல்லது நிர்வாகிகளோ மக்களோ
செய்துவருகின்ற குற்றங்களை வன்மையாகச் சுட்டிக்காட்டுவதால் நீக்கப்படுகின்றார்கள்.
அதனால் அந்த இமாம்கள்மீது எந்தக் குற்றமுமில்லை. ஏனெனில் எல்லோருடைய இயல்பும் ஒரே
விதமானது இல்லை. எனினும் பொறுமை காத்து ஒரே இடத்தில் பல்லாண்டுகள் பணியாற்றுவோர்
பாராட்டுக்குரியோர் என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை. ஓர் இமாம் ஒரு
மஹல்லாவிற்கு வந்தபோது இருந்த நிலை இருபத்தைந்து, முப்பது ஆண்டுகளுக்குப் பின்
முற்றிலும் மாறிப்போய்விடுகிறது. அங்கு குர்ஆன் ஓதத் தெரியாமல் இருந்த
பிள்ளைகளுக்குத் திருக்குர்ஆனை ஓதக் கற்றுக்கொடுக்கின்றார்; அத்தோடு இஸ்லாமிய
மார்க்கம் குறித்தும் அதன் சட்டதிட்டங்கள் குறித்தும் கற்றுக்கொடுக்கின்றார்;
வாரந்தோறும் பெண்களுக்குச் சிறப்புச் சொற்பொழிவாற்றுகின்றார்; வாரந்தோறும்
திருக்குர்ஆன் விரிவுரை நடத்துகின்றார். ஆக இவ்வாறு பற்பல சேவைகளைச் செய்கிறார்.
முன்னோடி இமாமின் சேவைகள்: உலகில் ஆங்காங்கே இமாம்களாகப் பலர்
பணியாற்றிக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் முன்னோடி இமாம்களாகச் சிலரே
மிளிர்கின்றார்கள். அவர்கள் தம் இடைவிடாத உழைப்பால் இமாம்கள் மத்தியில் தனித்துக்
காணப்படுகின்றார்கள். அத்தகையோரின் சேவைகள் என்னென்ன என்று நாம் அறியும்போது
வியப்படையாமல் இருக்க முடியவில்லை. திருக்குர்ஆனைக் கற்பித்தல், திருக்குர்ஆன்
விரிவுரை செய்தல், பெண்களுக்கான வாராந்திரச் சொற்பொழிவு, ஏழைகளுக்கும்
கடனாளிகளுக்கும் உதவுவதற்காக பைத்துல் மால், எல்லோரும் படிக்கும் விதத்தில்
நூலகம், பள்ளியிலேயே ஹிஃப்ழ் மத்ரஸா, புதிதாக இஸ்லாத்தைத் தழுவி வருவோருக்கான
பயிலகம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளைச் செய்துவருகின்றார்கள். இவைபோன்ற சேவைகளைச்
செய்வோரே முன்னோடி இமாமாக மிளிர முடியும். இத்தகைய சேவைகள் செய்வதற்கான
நல்வாய்ப்பு ஓர் இமாமுக்குக் கிடைப்பதால்தான் அவர் மற்றவர்களைவிட இறைவனிடம்
மதிப்புமிக்கவராகத் திகழ்கிறார். அதனால்தான் நபியவர்களிடம் ஒருவர் வந்து, “நான்
தொடர்ந்து செயல்படும் விதத்தில் எதையேனும் நற்செயலை எனக்கு அறிவியுங்கள்” என்று
கேட்டபோது “உம் சமுதாய மக்களுக்கு இமாமாக ஆகிவிடுவீர்” என்று பதிலளித்தார்கள். இது
குறித்த முழுமையான நபிமொழி இதோ: ஒருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம்
வந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் (தொடர்ந்து) செயல்படும் விதத்தில் எதையேனும் ஒரு
(நற்)செயலை எனக்கு அறிவியுங்கள் என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், “உம் சமுதாய
மக்களுக்கு இமாமாக ஆகிவிடுவீர். அதற்கு இயலாவிட்டால் அவர்களுடைய (தொழுகைக்கு
அழைக்கின்ற) முஅத்தினாக ஆகிவிடுவீர்” என்று கூறினார்கள். அதற்கு அவர், “அதுவும்
என்னால் இயலாவிட்டால்?” என்று கேட்டார். “நீர் (தொழுகைக்கான) முதல் வரிசையில்
நின்றுகொள்வீர்” என்று கூறினார்கள். (முஸன்னஃப் இப்னு அபீஷைபா: 3810) இமாமாகப்
பணியாற்றுவது கேவலமா: இமாமாக இருந்து பணியாற்றுவதை இமாம்கள் சிலரே கேவலமாகவும்
மிகச் சாதாரணமாகவும் கருதுகின்றனர். அதற்கான காரணம், அவர்கள் பெறும் குறைவான
ஊதியம்தான். குறைவான ஊதியம் வழங்கப்பெற்றாலும் அதில் பெருகி வருகின்ற அபிவிருத்தியை
(பரக்கத்தை)ப் பார்க்க வேண்டும். மற்றவர்களுக்குக் கிடைக்காத அபிவிருத்தி இறை
உவப்பைப்பெறும் நோக்கில் பணியாற்றுகின்ற ஆலிம்களுக்குக் கிடைப்பதை எண்ணிப் பார்க்க
வேண்டும். எத்தனையோ இமாம்கள் குறைவான ஊதியத்தில்தான் நிம்மதியாக வாழ்ந்துவிட்டுச்
சென்றுள்ளார்கள். ஆக இமாம்களின் ஊதியத்தில் நிறைவான அபிவிருத்தி உள்ளது என்பது
மறுக்க முடியாத உண்மை. எனவே இமாமாகப் பணியாற்றுவதை யாரும் அற்பமாகக் கருதக்கூடாது.
பின்வரும் நபிமொழி இறைப்பணியாற்றுகிற இமாம்களையும் முஅத்தின்களையும்
ஊக்கப்படுத்துமுகமாக அமைந்துள்ளது. அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு
அறிவித்துள்ளதாவது: மறுமை நாளில் (விசாரணை நடைபெற்று முடியும் வரை) மூவர் கஸ்தூரிக்
குவியல் மீது (மகிழ்ச்சியுடன்) இருப்பார்கள். முந்தையவர்களும் பிந்தையவர்களும்
அவர்களைக் கண்டு பொறாமை கொள்வார்கள். 1. ஒவ்வொரு பகலிலும் இரவிலும் ஐவேளைத்
தொழுகைக்காக மக்களுக்குத் தொழுகை அறிவிப்புச் செய்தவர் (முஅத்தின்) 2. மக்களின்
திருப்தியைப் பெற்ற நிலையில் அவர்களுக்குத் தலைமை ஏற்றுத் தொழுவித்தவர் (இமாம்) 3.
அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமையையும் தம் உரிமையாளருக்குச் செய்ய வேண்டிய
கடமையையும் நிறைவேற்றிய அடிமை” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
கூறினார்கள். (நூல்: திர்மிதீ: 2489) ஓர் இமாமுக்கு இவ்வளவு பெரிய சிறப்பு
இருக்கும்போது, நாம் ஏன் இவ்வுலக அற்பப் பொருளுக்காக இமாமத் பணியை விட்டுவிட்டு
வேறு பணிக்குச் செல்ல வேண்டும்? அல்லது மனக்கசப்புடனே பணியாற்ற வேண்டும்? அல்லது
என் மகனை ஆலிமாக உருவாக்க மாட்டேன் என்று சபதம் ஏற்கவேண்டும்? அவரவர்க்கு
விதிக்கப்பட்ட வாழ்வாதாரம் அவரவர்க்குத் திண்ணமாகக் கிடைத்தே தீரும். எனவே நாம்
நமது வாழ்வாதாரத்தைப் பற்றிக் கவலைப்படக்கூடாது. நாம் இமாமாக ஆக்கப்பட்டது குறித்து
மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்ள வேண்டும். மக்களின் சூழ்நிலையை அறிந்து
செயல்படுவோம்: ஒருவர் இமாமாக இருந்து மக்களுக்குத் தொழுகை நடத்தும்போது மக்களின்
சூழ்நிலை அறிந்து அதற்கேற்பத் தொழுகை நடத்த வேண்டும். எல்லா நேரங்களிலும் ஒரே
மாதிரி தொழுவிக்கக் கூடாது. காலச் சூழலுக்கேற்ப அவ்வப்போது சிற்சில மாற்றங்களைச்
செய்துகொள்ள வேண்டும். அதிகாலைத் தொழுகையில் திருக்குர்ஆன் ஓதலை இயன்ற அளவு
நீட்டிக்கலாம். அதாவது தற்காலத்தில் பத்து நிமிடங்கள் என்பதே நீண்ட நேரம்தான். மற்ற
நேரத் தொழுகைகளை எட்டு அல்லது ஒன்பது நிமிடங்களில் முடித்துக்கொண்டால் நல்லது.
தொழுதுகொண்டிருக்கும்போது திடீரென மின்தடை ஏற்பட்டுவிட்டது என்றால், அந்த
நேரத்தில் இயன்ற அளவு சுருக்கி, விரைவாகத் தொழுகையை முடித்துக்கொள்ள வேண்டும்.
அதுதான் சூழ்நிலை அறிந்து நடந்துகொள்ளல் ஆகும். இது ஒவ்வோர் இமாமுக்கும் பொதுவான
அறிவுரையாகும். பின்வரும் நபிமொழி இமாம்களுக்கு வழிகாட்டுகிறது. அனஸ் பின் மாலிக்
ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைவிட மிகச்
சுருக்கமாகவும் (அதே சமயம் எதுவும் விடுபடாமல்) நிறைவாகவும் தொழுவிக்கக்கூடிய வேறு
எந்த இமாமுக்குப் பின்னாலும் நான் தொழுததில்லை. (பின்னால் தொழும் பெண்களின்)
குழந்தை அழுவதை அவர்கள் கேட்க நேர்ந்தால் அக்குழந்தையின் தாயாருக்குச் சஞ்சலம்
ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தால் தொழுகையைச் சுருக்கமாகவே முடித்துக்
கொள்வார்கள். (புகாரீ: 708) இமாம் நன்மையை ஏவுபவர்: ஒருவர் ஒரு பகுதியில் இமாமாக
இருந்துகொண்டு அப்பகுதியிலுள்ள மக்களை அல்லாஹ்வை நோக்கி அழைக்கிறார்; நன்மையைச்
செய்யுமாறு மக்களைத் தூண்டுகிறார்; படிக்கத் தூண்டுகிறார். தான தர்மங்கள்
செய்யுமாறு மக்களுக்கு ஆர்வமூட்டுகிறார். ஆக அவருடைய செயல்கள் அனைத்தும் மக்களை
நன்மை செய்யத் தூண்டுவதே ஆகும். ஆகவே அவர் பின்வரும் இறைவசனத்தின்படி நன்மை
வழங்கப்படுவார் என்பதில் சிறிதும் ஐயமில்லை. எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை)
அழைத்து(த் தாமும்) நற்செயல்களைச் செய்து “நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்கு முற்றிலும்
வழிப்பட்டவர்களுள் ஒருவன்'' என்றும் கூறுகின்றாரோ, அவரைவிட அழகான வார்த்தை
கூறுபவர் யார்? (41: 33) சுன்னத் தொழுகையைப் பள்ளிவாசலில் தொழுவோம்: நபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மிகுதியான நேரங்களில் சுன்னத் தொழுகையை வீட்டில்
தொழுதுவிட்டுப் பள்ளிவாசலுக்கு வருகிற வழக்கத்தைக் கொண்டிருந்தாலும்,
தற்காலத்தில் இமாமாக உள்ள ஒருவர் சுன்னத் தொழுகைகளைப் பள்ளிவாசலில் தொழுவதே சாலச்
சிறந்தது. ஏனெனில் மக்கள் இமாமைப் பார்த்து, அவர் செய்வதைப் போன்றே செய்பவர்கள்.
எனவே முன்சுன்னத் தொழுகையையும் பின்சுன்னத் தொழுகையையும் பள்ளிவாசலில் தொழுதால்,
அதைப் பார்க்கின்ற மக்களும் இமாமைப் போலவே தொழுவார்கள். இல்லையேல் இமாமே
தொழவில்லை; நாம் ஏன் தொழவேண்டும் என்ற அசட்டை மக்களுக்கு ஏற்பட்டுவிடும். அதற்கு
நாம் ஒருபோதும் வழிவகுக்கக்கூடாது. நேரத்தைப் பேணுவோம்: இமாமாக இருப்போர்
நேரத்தைப் பேணுவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கடைசி நேரத்தில் பள்ளியை
நோக்கி விரைவதைவிடப் பத்து நிமிடங்களுக்கு முன்னரே பள்ளிக்குள் சென்று முன்சுன்னத்
தொழுதுவிட்டு, அப்போதைய ஃபர்ள் தொழுகையில் ஓத வேண்டிய பகுதியை ஒரு பார்வை
பார்த்துவிட்டுத் தொழுவித்தால் குர்ஆன் ஓதுவதில் ஒரு தெளிவு கிடைக்கும். பத்து
நிமிடங்களுக்கு முன்னரே பள்ளிக்குள் சென்றுவிடுவதால் சுன்னத்தைத் தவறவிடாமல்
தொழுகலாம்; மனஓர்மையுடனும் மனஅமைதியுடனும் தொழுகலாம். உரிய நேரத்தில் தொழுகையை
நிறைவேற்ற வேண்டிய அவசியத்தைப் பின்வரும் நபிமொழி நமக்குச் சுட்டிக் காட்டுகிறது.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதைத் தாம் செவியுற்றதாக உக்பா
பின் ஆமிர் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளார்கள்: யார் மக்களுக்கு இமாமத்
செய்தாரோ, அதை உரிய நேரத்தில் செய்தாரோ அது அவருக்கும் (அவருடன் தொழுத)
அவர்களுக்கும் நன்மையாகும். அதில் (இமாமத்) யார் குறைபாடு செய்தாரோ அது அவருக்குப்
பாவமாகும். அவர்களுக்கு எந்தப் பாவமும் இல்லை. (அபூதாவூத்: 580) பிறர் கையை
எதிர்பார்க்காதிருப்போம்: முன்னோடி இமாமாகத் திகழ இமாம்கள் செய்ய வேண்டிய மிக
முக்கியமான ஒன்று, பிறர் கையை எதிர்பார்க்கும் பழக்கத்தைக் கைவிட்டு, தாமே
உழைத்துப் பொருளீட்டக் கற்றுக்கொள்ள வேண்டும். ஏதேனும் தொழில் செய்து, சுய
சம்பாத்தியத்தை மேற்கொள்ள வேண்டும். இதனால் பிறரிடமிருந்து எதிர்பார்க்கும் எண்ணம்
நமக்கு ஏற்படாது. ஃபஜ்ர் தொழுகை முதல் லுஹ்ர் வரை நீண்ட நேரம் உண்டு. அந்த
நேரத்தைப் பயனுள்ள வழியில் பயன்படுத்திக்கொண்டால் நாமே நமக்குத் தேவையான
பொருளாதாரத்தை ஈட்டிக்கொள்ளலாம். காலப் போக்கில் நாம் பிறருக்கு ஸகாத்
கொடுக்கும் நிலைக்கு உயர்ந்துவிடலாம். ஆம், உழைப்பில் அத்தகைய அபிவிருத்தி உள்ளது
என்பது உண்மை. உங்களுக்கு எதில் ஆர்வம் உள்ளதோ அதில் ஈடுபடுங்கள்; அத்தொழிலைக்
கற்றுக்கொண்டு பொருளீட்டுங்கள். சுயதொழில் செய்வோம்: இருபத்தொன்றாம்
நூற்றாண்டில் வாழும் நாம், தற்காலத்தோடு இயைந்த நவீனச் சாதனங்கள் தொடர்பான
தொழில்களைக் கற்றுக்கொள்ளலாம். அதில்தான் நாம் விரைவில் வெற்றி காண முடியும்.
கணினித் தட்டச்சு (டைப்பிங்), கணினி வரைகலை (டிசைனிங்), புத்தக வடிவமைப்பு (புக்
லே-அவுட்), கைப்பேசி பழுது பார்த்தல் (ரிப்பேரிங்), அரபு நூல்களைத் தமிழாக்கம்
செய்தல் (ட்ரான்ஸ்லேஷன்) உள்ளிட்ட எத்தனையோ தொழில்கள் உள்ளன. அவற்றுள்
உங்களுக்குப் பிடித்த ஏதேனும் தொழிலைக் கற்றுக்கொண்டு உங்கள் வாழ்க்கையை
நிம்மதியாகக் கழிக்கலாம். ஆக நாம் ஒரு முன்னோடி இமாமாகத் திகழ வேண்டுமெனில்
அதற்காக ஒவ்வொரு நாளும் நாம் நம்முடைய நேரத்தைப் பயனுள்ள வழிகளில் கழிக்க
வேண்டும். அது அந்த மஹல்லா மக்களின் கல்வி வளர்ச்சிக்கும் பொருளாதாரப்
பெருக்கத்திற்கும் காரணமாக அமைய வேண்டும். அங்கு வாழ்கின்ற ஒவ்வொருவருக்கும் நாம்
எந்த வகையிலாவது பயனுள்ளவராக இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் அங்கு இமாமாகப்
பணியாற்றுவதன் பொறுப்பை முற்றிலும் நிறைவேற்றியவராக ஆக முடியும். மேலும் நம்மைப்
பார்த்து, இந்த இமாமைப்போல் என் மகனை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் மக்கள்
மனங்களில் ஏற்பட வேண்டும். அதில்தான் ஒரு முன்னோடி இமாமின் வெற்றி அடங்கியுள்ளது.
இறுதியாக நபிமொழியொன்றை நாம் நினைவில் கொள்வோம்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளார்கள்: இமாம்
பொறுப்பாளி; முஅத்தின் நம்பிக்கைக்குரியவர். இறைவா! இமாம்களுக்கு
நல்வழிகாட்டுவாயாக! முஅத்தின்களை மன்னிப்பாயாக! (அபூதாவூத்: 517) இமாம்களாக உள்ள
நாமே இச்சமுதாய மக்களுக்கான பொறுப்பாளி. எனவேதான் இமாம்களுக்கு மிகப்பெரிய மதிப்பு
அல்லாஹ்விடம் உள்ளது. ஆதலால் நாம் நம்முடைய பொறுப்பைச் சரியாக நிறைவேற்றினோமா
என்பதை நம்முள் ஒவ்வொருவரும் கேட்டுக்கொள்ள வேண்டும். இதுவரை நாம் செய்து வந்த
சேவைகளைவிட, இன்னும் பற்பல சேவைகளைச் செய்ய முயலவேண்டும். இச்சமுதாயத்திற்கு
உயர்வான சேவைகளைச் செய்யவும் சமுதாயத்தின் முன்னோடி இமாமாகத் திகழவும் உயர்ந்தோன்
அல்லாஹ் நமக்கு அருள்புரிவானாக.
=====================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக