-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
----------------------------
"இறைவா! இயலாமை, சோம்பல் ஆகியவற்றிலிருந்து நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்'' (புகாரீ: 2823) என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிரார்த்தனை செய்துள்ளார்கள். ஓர் ஆணுக்குச் சோம்பல் வந்துவிட்டால் அவனது உழைப்பு முடங்கிப்போய்விடும். ஒரு பெண்ணுக்குச் சோம்பல் வந்துவிட்டால் அக்குடும்பமே செயலற்றுப்போய்விடும். சோம்பலின் கிளைதான் இயலாமை. சோம்பலால் இயலாமை ஏற்படுகிறது. இயலாமை காரணமாக இயங்காமல் இருப்பதால் சோம்பல் ஏற்படுகிறது. ஆக சோம்பலும் இயலாமையும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்.
ஆண்கள் சிலர் தம் சோம்பலால் சரியாக உழைக்காமல், தம் குடும்பத்தைக் கவனிக்காமல் இருப்பார்கள். சிலர் தம் மாமனார் வீட்டில் சாப்பிட்டுக்கொண்டு, ஊர்சுற்றித் திரிவார்கள். இத்தகையோர் தம் சுயமரியாதை குறித்துச் சிறிதும் கவலைப்பட மாட்டார்கள்; சாடைமாடையாகத் திட்டினாலும் குத்திப் பேசினாலும் கண்டுகொள்ள மாட்டார்கள்.
இவர்களைப்போல் சுயமரியாதையின்றி வாழ நினைக்காமல் கண்ணியத்தோடும் மரியாதையோடும் வாழ நினைப்போர், சோம்பல் எனும் தீய குணத்திலிருந்து விடுபட வேண்டும்; அதற்காக இறைவனிடம் நாள்தோறும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
சோம்பலின் முதற்புள்ளி, அதிகாலை துயிலெழுந்து, பள்ளிவாசல் சென்று, கூட்டுத் தொழுகையை நிறைவேற்றாமையிலிருந்து தொடங்குகிறது. ஷைத்தான் ஒவ்வொரு மனிதனுக்கும் இரவில் மூன்று முடிச்சுகள் போடுவதாக ஒரு நபிமொழி கூறுகிறது.
நீங்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது உங்கள் தலையின் பின்பக்கத்தில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போட்டு விடுகிறான். ஒவ்வொரு முடிச்சிலும், இன்னும் உனக்கு நீண்ட இரவு (ஓய்வெடுப்பதற்காக எஞ்சி) இருக்கின்றது. ஆகவே, நீ தூங்கிக் கொண்டேயிரு என்று போதித்து (அவனை விழிக்க விடாமல் உறங்க வைத்து) விடுகின்றான். அவர் (அவனது போதனையைக் கேட்காமல் அதிகாலையில்) கண் விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்ந்து விடுகின்றது. அவர் உளூச் செய்தால் மற்றொரு முடிச்சு அவிழ்ந்து விடுகின்றது. அவர் (தஹஜ்ஜுத் அல்லது ஃபஜ்ர்) தொழுதுவிட்டால் முடிச்சுகள் முழுவதுமாக அவிழ்ந்து விடுகின்றன. அவர் சுறுசுறுப்புடனும் உற்சாகமான மனநிலையுடனும் காலைப் பொழுதை அடைவார். இல்லையென்றால் மந்தமான மனநிலையுடனும் சோம்பலுடனும் காலைப் பொழுதை அடைவார் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (நூல்கள்: புகாரீ: 3029, முஸ்லிம்: 1295)
அதிகாலை துயிலெழுந்து தொழுகாமல் தாமதமாக எழுந்தால் அவனுடைய மனத்தில் ஒருவிதச் சோம்பலும் சுறுசுறுப்பின்மையும் கூடாரமிட்டு அமர்ந்துவிடுகின்றன. பின்னர் அதுவே அவனுடைய வழக்கமாகிவிடுவதால் நாளடைவில் அவனுடைய மனத்தில் அவை குடிகொண்டுவிடுகின்றன.
அதேநேரத்தில் வைகறை துயிலெழுந்து பள்ளிக்கு விரைந்து சென்று, கூட்டுத் தொழுகையில் கலந்துகொண்டு புத்துணர்வோடு இல்லம் திரும்புகிற ஒருவரைச் சோம்பேறி என யாரும் சொல்ல முடியாது. அவர் நிச்சயம் சுறுசுறுப்பாக இயங்குவார். தம் கடமைகளைச் செவ்வனே செய்வதோடு, உழைத்துச் சம்பாதித்து, தாமும் உண்டு தம் குடும்ப உறுப்பினர்களையும் காப்பார். அத்தகைய சிறந்த மனிதராக வாழ சோம்பல் எனும் கெட்ட பழக்கத்தை உடனடியாகக் கைவிட்டுவிட வேண்டும்.
அதிகாலைத் தொழுகையை நிறைவேற்றாத காரணத்தால் உண்டாகிற சோம்பல், அவன் எவ்வளவுதான் குளித்தாலும் முழுகினாலும் அவனது மனத்திலிருந்து அகலுவதில்லை. அவன் செல்லுமிடங்களெல்லாம் அந்தச் சோம்பல் அவனைச் செவ்வனே இயங்கவிடாமல் தடுத்துவிடுகின்றது. உழைக்கவே சென்றாலும் எதுவும் கைகூடாமல் போய்விடுகின்றது. அவனோ அதிர்ஷ்டம் இல்லையென்பான்; எல்லாம் விதி என்பான். எப்போதும் அங்கலாய்த்தவாறே காணப்படுவான். இது எதனால் ஏற்பட்டது எனச் சிந்தித்துணரவே மாட்டான்.
ஒருவனின் சோம்பல் அவனது உழைப்பைத் தடுக்கிறது; தூக்கத்தை மிகைக்கச் செய்கிறது; இலவச இணைப்புகளாக நோய்களை உண்டுபண்ணிவிடுகின்றது. ஒரு மாணவனின் சோம்பல் அவனது படிப்பைக் கெடுத்துவிடுகின்றது. ஓர் இளைஞனின் சோம்பல் அவனது முன்னேற்றத்தைத் தடுத்துவிடுகின்றது. ஓர் ஆடவனின் சோம்பல் அவனது வாழ்க்கையைச் சீரழித்துவிடுகின்றது. ஒரு வியாபாரியின் சோம்பல் அவனது தொழிலைச் சிதைத்து, நட்டத்தை ஏற்படுத்திவிடுகின்றது. ஒரு தொழிலாளியின் சோம்பல் அவனது தொழிலை முடக்கிவிடுகின்றது. ஓர் உழைப்பாளியின் சோம்பல் அவனது உழைப்பைச் சுரண்டிவிடுகின்றது. ஓடியாடி விளையாட வேண்டிய ஒரு பிள்ளையின் சோம்பல் அவனது சுறுசுறுப்பை இழக்கச் செய்துவிடுகின்றது.
இன்றைய குடும்பப் பெண்களிடம் சோம்பல் மிகுந்து காணப்படுகிறது. சோம்பல் மிகுந்த பெண்கள் தம் வீட்டில் சமைப்பதற்குப் பதிலாக உணவகங்களில் தேவையான உணவுகளை வாங்கிக்கொள்கிறார்கள். சிலர் வீட்டில் சமைப்பதையே விட்டுவிடுகின்றார்கள். சிலர் இப்படியும் அப்படியும் செய்துகொள்கிறார்கள். அதாவது அவ்வப்போது உணவகங்களில் உணவை வாங்கிக்கொள்கிறார்கள். அவ்வப்போது வீட்டிலும் சமைத்துக்கொள்கிறார்கள். அவ்வாறு வீட்டில் சமைக்கும் உணவுகளின் மூலப்பொருள் கடைகளில் ஆயத்த நிலையில் (ரெடிமேட்) விற்கப்படுவதாக இருக்கும்.
அதாவது வீட்டில் அரிசியும் உளுந்தும் ஊறவைத்து, மாவரைத்துப் பக்குவப்படுத்தி தோசை, இட்லி என மனமகிழ்வோடு செய்து தம் குடும்ப உறுப்பினர்களுக்குப் பரிமாறுவது அக்காலப் பெண்களின் பழக்கம். இன்றும் இத்தகைய பெண்கள் இருக்கவே செய்கிறார்கள். ஆனால் இக்காலப் பெண்கள் பலர் ஒரு வாரத்திற்குத் தேவையான மாவை ஒரே நாளில் அரைத்து, குளிர்பதனப் பெட்டியில் வைத்துக்கொண்டு, அவ்வப்போது தேவைக்கேற்பப் பயன்படுத்தி வருகின்றார்கள்.
வேறு சிலர், வீட்டில் மாவரைக்கும் இயந்திரத்தை ஓரங்கட்டிவிட்டு, நாள்தோறும் தமக்குத் தேவையான மாவை, ஆயத்தநிலையில் விற்கும் கடைகளிலிருந்து வாங்கிக் கொள்கிறார்கள். சிலர் அதை மொத்தமாக வாங்கி, குளிர்பதனப் பெட்டியில் வைத்துக்கொண்டு, சிறிது சிறிதாக ஒரு வாரம் அல்லது பத்து நாள்கள் வரை பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
இவ்வாறு பயன்படுத்தப்படுகிற மாவு தனது ஆற்றலை இழந்துவிடுவதோடு, சிலவேளை நஞ்சாகவும் மாறிவிடுகின்றது. இத்தகைய மாவை உண்டு, அண்மையில் ஒரு குடும்பத்திலுள்ள நான்கு உறுப்பினர்களும் இறந்துவிட்ட செய்தியை நாளிதழில் நாம் படிக்க நேர்ந்தது. ஒரு நாள் அரைக்கின்ற மாவை மறுநாள் அல்லது அதற்கடுத்த நாள் வரை வைத்துக்கொள்ளலாம். மூன்றாம் நாளில் அது நன்றாகப் புளித்துப் போய்விடும். அதிலிருந்து துர்நாற்றம் வெளிப்படத் தொடங்கிவிடும். அதை குளிர்பதனப் பெட்டி மறைத்துவிடுவதால் அதன் கெடுதி தெரியாமல் மக்கள் பயன்படுத்திவருகின்றனர். இது சோம்பலின் உச்சமாகும்.
இதனால் நாளடைவில் நம் உடலின் ஆரோக்கியம் கெட்டு, பல்வேறு உபாதைகளுக்கும் நோய்களுக்கும் ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்வோம்.
குடும்பப் பெண்டிரின் சோம்பல் அவர்கள்தம் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தைக் கெடுத்து, பல்வேறு நோய்களுக்கு ஆளாக நேரிடுவதோடு, சிலவேளை உயிரை மாய்த்துவிடுகிற ஆபத்தும் இருக்கிறது என்பதை அவர்கள் உணர வேண்டும். எஞ்சிய துவையல், குழம்பு உள்ளிட்ட உணவுப் பொருள்களைக் குளிர்பதனப் பெட்டியில் வைத்து, மறுநாள் அல்லது இரண்டு நாள்கள் கழித்து, அதை எடுத்துச் சூடுபண்ணாமல் அப்படியே உண்ணக் கொடுப்பது மிகவும் ஆபத்தானது. முற்காலங்களில் ஒரு நாள் செய்த குழம்பை இரண்டு நாள்கள்கூட வைத்திருப்பார்கள். ஆனால் அதை அவ்வப்போது சூடுபடுத்திக்கொள்வார்கள்.
அதனால் அது கெட்டுப்போகாமல் இருக்கும். ஆனால் தற்காலத்தில் குளிர்பதனப் பெட்டியில் வைத்து, மறுநாள் எடுத்து, அதைச் சூடுபடுத்தாமல் அப்படியே சிலர் பரிமாறுகின்றனர். இதனால் அவர்களும் நோய்வாய்ப்பட்டு, தம் குடும்ப உறுப்பினர்களும் நோய்வாய்ப்படக் காரணமாக இருக்கின்றார்கள்.
ஆரோக்கியம் இறைவன் நமக்கு வழங்கிய ஓர் அருட்கொடை. அதைப் பாதுகாத்துக்கொள்வது நமது கடமையாகும். மாறாக அதைக் கெடுத்துக்கொள்ளும் விதமாக நாம் நடந்துகொள்ளக்கூடாது. "பிறகு அந்நாளில் (உங்களுக்கு வழங்கப்பட்ட) அருட்கொடை குறித்து நீங்கள் நிச்சயமாக விசாரிக்கப்படுவீர்கள்'' (102: 8) என்று அல்லாஹ் கூறுகின்றான்.
இங்கு கூறப்பட்டுள்ள "அருட்கொடை' என்பதற்கு "ஆரோக்கியம்' என்று திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
கிராமங்களைவிட நகரங்களில்தான் இந்நிலை மிகுந்து காணப்படுகிறது. இந்நிலையைக் குடும்பப் பெண்கள் மாற்றிக்கொள்ளவில்லையெனில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மருத்துவமனையில் குடும்பம் நடத்த வேண்டிய நிலை ஏற்படலாம்.
ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், சிறுவர்-சிறுமியர் உள்ளிட்ட பல்வேறு வயதுக்காரர்களும் சோம்பல் எனும் கெட்ட பழக்கத்தால் தமது ஆரோக்கியத்தை இழந்துவருகின்றார்கள். எப்போது பார்த்தாலும் நாற்காலியில் அமர்ந்துகொண்டே இருப்பதும் பல்வேறு நோய்கள் ஏற்படக் காரணமாக அமைந்துள்ளது. அதனால் கால்கள் நடக்க மறந்துவிடுகின்றன. பின்னர் சிறிதளவு தூரம் நடந்தாலும் கால்கள் நடக்க மறுக்கின்றன. நாளடைவில் கால்வலியும் மிகுதியாகி மூட்டுவலியும் சேர்ந்துகொண்டு அவர்களைப் பாடாய்ப்படுத்தும். இதுவே பெரும்பாலோரின் இன்றைய நிலை.
ஆக சோம்பலே எல்லா நோய்களுக்கும் அடிப்படைக் காரணமாக உள்ளது என்றால் அது மிகையில்லை. எனவே நாம் அனைவரும் சோம்பலைத் தவிர்த்து, அதற்கு எதிரான குணமாகிய சுறுசுறுப்பைக் கடைப்பிடிப்போம். எப்போதும் ஒரு துள்ளல் நிலையில் துரிதமாகச் செயல்பட நம்மை நாம் தயார் செய்துகொள்வோம். அதுவே நாம் இறுதி வரை ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும்.
================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக