-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
இந்திய அளவில் முஸ்லிம்கள் ஆங்காங்கே துன்புறுத்தப்படுவதும் நொண்டிக் காரணங்கள் சொல்லிக் கொல்லப்படுவதும் பொய்க் காரணங்களைக் கூறி சிறைப்படுத்துவதும் தொடர்ந்து நடைபெற்று வருவதை நாம் ஊடகங்கள்மூலம் அறிந்துவருகிறோம். முஸ்லிம் சமுதாயத்தை மட்டும் குறி வைத்து, புதிய புதிய சட்டங்கள் இயற்றப்படுகின்றன; அவர்களுக்கான உரிமைகள் பறிக்கப்படுகின்றன; பொருளாதார ரீதியில் நசுக்கப்படுகிறார்கள்; நிமிர்ந்து வாழ முடியாதபடி ஒடுக்கப்படுகின்றார்கள்.
ஒருபுறம் அகண்ட பாரதம் என்ற முழக்கத்தோடு வலுக்கட்டாயமாக இந்திய எல்லை விரிவுபடுத்தப்படுகின்றது. மறுபக்கம் இந்தியக் குடிமக்களாக இதுவரை வாழ்ந்தோரை, நீங்களெல்லாம் இந்தியக் குடிமக்கள் பட்டியலில் இடம்பெறவில்லையெனக் கூறி நாடோடிகளாக்கத் திட்டமிடப்படுகிறது. இருபக்கமும் முஸ்லிம்களே பாதிக்கப்படுகிறார்கள். இன்று 19 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் சொந்த நாட்டில் இந்தியக் குடிமக்கள் என்ற உரிமையை இழந்துவாடுகின்றார்கள். ஒவ்வொரு நாளும் தம்மை இந்தியக் குடிமகன் என்று நிரூபிக்கப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். உணவோ உறக்கமோ இல்லை. இந்திய நாட்டின் குடியரசு முன்னாள் தலைவர் ஃபக்ருத்தீன் அலீ அஹ்மது அவர்களின் குடும்பத்தார் இந்தியக் குடிமக்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள் என்றால் இது அநியாயத்தின் உச்சக்கட்டம் இல்லாமல் வேறென்ன?
தேசியப் புலனாய்வு முகமை என்ற பெயரில் ஒரு பாதுகாப்பு அமைப்பு. முஸ்லிம் இளைஞர்களைக் கைது செய்வதுதான் அதன் பிரதானப் பணி. ஆங்காங்கே எதையாவது பொய்க் காரணத்தைக் கூறி கைது செய்து சிறையிலடைக்கிறார்கள். முஸ்லிம்களின் பொருளாதாரம் நசுக்கப்படுகிறது. நம் சகோதரிகள் வன்புணர்வு செய்யப்படுகின்றார்கள். நாள்தோறும் இந்திய நாட்டின் ஏதாவது ஒரு மூலையிலிருந்து முஸ்லிம்களுக்கான அநீதி அரங்கேறிக்கொண்டே இருக்கிறது. இவ்வளவு செய்திகளைப் பார்த்தும் கேட்டும் நம் உள்ளம் கசிந்திருக்கிறதா? நம் சகோதர சகோதரிகளுக்காக நாம் நம்மைப் படைத்த இறைவனிடம் மனமுருகிக் கையேந்தி இருக்கின்றோமா? அதிகாலைத் தூக்கத்திலிருந்து எழுந்து வந்து, அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்திருக்கின்றோமா?
முஸ்லிம் இளைஞர்கள் கழுத்தறுக்கப்பட்டுக் கொல்லப்படுவதை எதிரிகளே படம் பிடித்து அனுப்புகின்றார்கள். அதை நாம் பிறருக்குப் பகிர்ந்துகொண்டும் பரப்பிக்கொண்டும் இருக்கின்றோம். இதுதான் நாம் அவர்களுக்குச் செய்யும் கைம்மாறா? இதுதான் நம் சகோதர உணர்வா? நாம் நம்முடைய வரலாற்றைப் புரட்டிப் பார்க்க வேண்டாமா?
ஆயிரம் பேர் ஆயுதங்களோடும் கொலைவெறியோடும் தாக்க வந்த நேரத்தில், முந்நூற்றுப் பதிமூன்றுபேர் கொண்ட சிறுபடையினர் அல்லாஹ்வின் உதவியோடு எதிரிகளை வெற்றிகொண்டார்கள் அல்லவா? அல்லாஹ்வின் உதவி அவர்களுக்குக் கிடைத்ததற்கான காரணமென்ன? அவர்களின் அசைக்க முடியாத இறைநம்பிக்கைதானே? அத்தகைய இறைநம்பிக்கை தற்போது நம் உள்ளத்தில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
அல்லாஹ்வின் உதவி யாருக்குக் கிடைக்கும்? அவனை நம்பியோருக்குக் கிடைக்கும். அவனை நம்பியோர் யார்? அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கைகொண்டு, அவர்களின் கட்டளைகளை அன்றாடம் பின்பற்றி நடப்பதுதான் இறைநம்பிக்கை. அத்தகைய இறைநம்பிக்கையாளர்களே உயர்வானவர்கள் என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்.
நீங்கள் தளர்ந்து விடாதீர்கள். கவலைப்படாதீர்கள். நீங்கள் (உண்மையில்) இறைநம்பிக்கையாளர்களாக இருந்தால் நீங்களே மேலானவர்கள். (3: 139)
இறைநம்பிக்கையாளர்களே
மேலானவர்கள் என்று அல்லாஹ் கூறுவது உண்மையானால் நாம் இன்று நெருக்கடியான
வாழ்க்கையை எதிர்கொள்வதேன்?
ஏனென்றால் நாம் முஸ்லிம்களாக இருக்கின்றோமே தவிர, முஃமின்களாக இல்லை.
ஆம்,
இறைக்கட்டளைகளைச் செவ்வனே நிறைவேற்றினால்-ஒவ்வொரு நாளும்
ஐவேளைத் தொழுகையை நிறைவேற்றினால்,
செல்வர்கள் ஒவ்வோராண்டும் உரிய முறையில் கணக்கிட்டு
ஜகாத்தைக் கொடுத்தால்-வாழ்வியல்
நெருக்கடியும் பொருளாதார நெருக்கடியும் அகன்றுவிடும் என்பதில் ஐயமுண்டோ?
அல்லாஹ்வுக்குப் பிடித்தவாறு அவனுக்குப் பணிந்து வாழத் தொடங்கிவிட்டால், அவனுக்கு மட்டும் அஞ்சி வாழத் தொடங்கிவிட்டால், வேறு யாருக்கும் நாம் அஞ்சத் தேவையில்லை. அத்தகையோருக்கு நிம்மதியான வாழ்க்கையை இவ்வுலகிலும் மறுமையிலும் தருவதாக வாக்களித்துள்ளான். இதோ அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்!
ஆணாயினும், பெண்ணாயினும் நம்பிக்கை கொண்டு நற்செயல்களை எவர் செய்தாலும் நிச்சயமாக நாம் அவர்களை (இம்மையில்) நல்ல வாழ்க்கையாக வாழச் செய்வோம். மேலும் (மறுமையிலோ) அவர்கள் செய்து கொண்டிருந்ததைவிட மிக்க அழகான கூலியையே நிச்சயமாக நாம் அவர்களுக்குக் கொடுப்போம். (16: 97)
நம்பிக்கை கொள்வதோடு நல்லறங்களும் செய்து வர வேண்டுமென்பதே
இறைக்கட்டளை. அதை நாம் செவ்வனே செய்யத் தொடங்கிவிட்டால் நம் நிலை மாறி, இதைவிட
மேன்மையடையும். நம் அனைவரின் கைகளும் அதிகாலை நேரத்தில் அல்லாஹ்வின் சமூகத்தில்
உயர்ந்தால்,
அநியாயக்காரர்களுக்கெதிராகக் கோரிக்கை வைத்தால், கருணையாளன் அல்லாஹ்
அதை ஏற்காமல் இருப்பானா?
நாம் அனைவரும் ஐவேளை தொழுகத் தொடங்கிவிட்டால், அதற்கடுத்த நிலையைப் பற்றி யோசிக்கலாம். ஒவ்வொரு மஹல்லாவிலும் இமாம்-முத்தவல்லி இருவர் கூட்டணியில் அந்தந்த மஹல்லா மக்களின் குறைகளைக் களைந்து அவர்களின் நல்வாழ்வுக்கு உதவ வேண்டும். 5 முதல் 10 மஹல்லாக்கள் ஒருங்கிணைந்து ஷரீஅத் தீர்ப்பாயம் உருவாக்கி அதன்மூலம் திருமணம், தலாக் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கான தீர்வை நமக்குள்ளே தேடிக்கொள்ள வழிவகை செய்ய வேண்டும். இவையெல்லாம் சீராக நடைபெற வேண்டுமெனில் நாம் ஒவ்வொரு வேளை தொழுகைக்கும் பள்ளியில் ஒன்றுகூட வேண்டும். குறிப்பாக பஜ்ர் நேரத்தில் மஹல்லா பள்ளிவாசலில் நடைபெறும் ஜமாஅத் தொழுகையில் கலந்துகொள்ள வேண்டும்.
அநியாயக்கார ஆட்சி தொடராமல் முடங்க வேண்டுமென்றால் நம் கைகள் ஒவ்வொரு நாளும் அதிகாலை நேரத்தில் அல்லாஹ்வின் சந்நிதானத்தில் உயர வேண்டும். தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கும் இத்தருணத்திலும் அல்லாஹ்வை அஞ்சியவாறே அவனை வழிபடச் செல்லாமல் போய்விட்டால் எதிரிகளுக்கு அஞ்சி அஞ்சியே வாழ வேண்டிய நிர்ப்பந்த நிலை ஏற்பட்டுவிடும். இந்நிலையிலிருந்து நாம் விடுதலை பெற வேண்டும். அச்சமும் பயமுமின்றி நிம்மதியாய் இந்நிலத்தில் வாழ இறைவன் கட்டளைகளை இனிதே, இன்றே பின்பற்றி, ஒவ்வொருவரும் பள்ளிவாசலை நோக்கி விரைவோம். இதோ! இறைவன் நம் அருகில் இருக்கிறான். தொல்லைகளையும் துன்பங்களையும் நம்மீது சாட்டிய இறைவன் அவற்றை நீக்கக் காத்திருக்கிறான். அவற்றை நீக்குமாறு நாம் அவனிடம் கேட்கத் தயாரா என்பதுதான் இன்று நம்முன் உள்ள ஒரே கேள்வி.
============================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக