-முனைவர் மௌலவி நூ.
அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
மனித இனத்தைப் படைத்த
இறைவன் மனிதன் உண்டு வாழத் தேவையான உணவுப் பொருள்களையும், அவனுக்கு நோய் ஏற்பட்டால் நிவாரணம் பெற்றுக்கொள்ளத்
தேவையான மூலிகைகளையும் படைத்துள்ளான். ஒவ்வொரு கணப்பொழுதும் மனிதனுக்குத் தேவையான உணவுப்
பொருள்களை உற்பத்தி செய்துகொண்டே இருக்கிறான். எல்லாமே அபரிமிதமாகக் கிடைத்துக்கொண்டிருக்கின்றன.
இறைவனின் நிர்வாகத்தில் எந்தக் குறைபாடும் இல்லை.
இறைவனுக்குப் போட்டியாக
மனிதன் மாறத் தொடங்கியபோதுதான் அவனுக்கான அழிவும் தொடங்கியது. இறைவனின் மூலப் படைப்பில்
மாற்றம் செய்து, இயற்கையைவிட மேலாகத்
தான் விரும்பும் விதத்தில் பயிர்களும் பழங்களும் அபரிமிதமாக உற்பத்தியாக வேண்டும் என்று
எண்ணத் தொடங்கியதன் விளைவாக, விதைகளின் மரபணுவை
மாற்றியமைக்கத் திட்டமிட்டான். அப்பயிர்கள் அவன் விரும்பியவாறு வளரத் தொடங்கின. ஆனால்
அத்தோடு பல கேடுகளையும் அள்ளிக்கொண்டு வந்தன.
உண்மையில் மரபணு மாற்றம்
என்பது என்ன? இறைவன் இயல்பாகப்
படைத்திருக்கின்ற டிஎன்ஏ மூலக்கூறை மாற்றி அமைப்பதுதான். அதாவது ஒரு விதைக்குள் எவ்வளவு
சத்து, எவ்வளவு நோய் எதிர்ப்பாற்றல்
என இறைவன் நிர்ணயித்துள்ளானோ அதை மிகைப்படுத்துவதுதான் மரபணு மாற்றம். ஒன்றை மற்றொன்று உண்டு வாழ்வதுதான் இயல்பான உணவுச்
சுழற்சி முறை. பயிரைத் தின்ன புழுக்களும் பூச்சிகளும் வயல்வெளிக்கு வரத்தான் செய்யும்.
அவற்றை வரவிடாமல் தடுப்பதற்காக அதனுள் நுண்ணுயிர்களைக் கொல்லும் நோய் எதிர்ப்பாற்றல்
உட்செலுத்தப்படுவதால் அந்த விதையின் மூலம் விளைகின்ற பயிர் தன்னைத்தானே பூச்சிகளிலிருந்தும்
புழுக்களிலிருந்தும் தற்காத்துக்கொள்கிறது. இதனால் விவசாயிக்கு இலாபம்தானே என்று கேட்கலாம்.
அப்படியல்ல. அந்த நோய் எதிர்ப்பாற்றலின் காரணமாகப் பல்வேறு பக்க விளைவுகளும் உண்டாகின்றன.
அதாவது அந்த எதிர்ப்பாற்றல் காரணமாகப் பயிர்களுக்கு நன்மை பயக்கும் ஏனைய நுண்ணுயிர்களும்
அழிந்து விடுகின்றன. அத்தோடு அடுத்தடுத்து பயிரிட இயலாதவாறு மண் தனது ஆற்றலை இழந்துவிடுகிறது.
கத்தரிக்காய்,
வாழைப்பழம், நெல், பயறுகள் தொடங்கி, பல்வேறு காய்கறிகள்,
பழங்கள், பயிர்கள் ஆகியவற்றிலும் மரபணுவை மாற்றியமைத்து விளைச்சலை
அமோகமாகப் பெருக்கிக்கொண்டிருக்கின்றார்கள். இயற்கையான பழங்களும் காய்கறிகளும் குறிப்பிட்ட
நாள்களுக்குப்பின் அழுகிவிடும். ஆனால் மரபணு மாற்றப்பட்ட பழங்களும் காய்கறிகளும் நீண்ட
நாள்கள் வரை கெடாமல் இருக்கும். பெருமுதலாளிகள் தம் வியாபாரத்தின் இலாபத்தைப் பெருக்கிக்கொள்வதைத்
தவிர மக்கள் நலன் அறவே இதில் கிடையாது.
மரபணு மாற்றப்பட்ட
எத்தனையோ காய்கறிகளையும் பழங்களையும் நாம் அன்றாடம் உண்டுகொண்டிருக்கிறோம். அவையெல்லாம்
நம் உடல் நலத்திற்குக் கேடானவை என்பதை விளங்காமல் வாங்கிக்கொண்டிருக்கிறோம். முடிவில்
ஏதேனும் நோய் ஏற்பட்ட பிறகு இந்நோய் நமக்கு எப்படி ஏற்பட்டது எனத் தெரியாமல் கண்கலங்குகிறோம்.
நமது பாரம்பரியமான
உணவு வகைகளைப் புறந்தள்ளிவிட்டு, நவீனக் கலாச்சாரத்தோடு
ஒன்றிப்போன நம் மக்கள், தொலைக்காட்சி விளம்பரங்களால்
ஈர்க்கப்பட்டதால் விளம்பரப்படுத்தப்படுகின்ற புதிய புதிய உணவுப் பொருள்களையும் சமையல்
பொருள்களையும் வாங்கிப் பயன்படுத்துகின்றனர். அவற்றால் ஏற்படுகின்ற பின்விளைவுகளை உணர்வதில்லை.
மக்கள் சாப்பிடுகின்ற
காய்கறிகள், பழங்களோடு விட்டுவிடாமல்
கோழி, ஆடு, மாடு என உயிரினங்களிலும் மரபணு மாற்றத்தைக் கொண்டு
வந்துவிட்டார்கள். பொதுவாக, பிராய்லர் கோழி என
அறியப்படுகின்ற பண்ணை வளர்ப்புக் கோழிகள், இறைச்சிக்காகவே வளர்க்கப்படுகின்றன. அவை ஆணும் அல்லாத பெண்ணும் அல்லாத உயிரினமாகும்.
"நிச்சயமாக நான் அவர்களை
வழிகெடுப்பேன். அவர்களுக்கு வீண் நம்பிக்கைகளை உண்டு பண்ணி (பிசாசுகளுக்காகப் பிரார்த்தனை
செய்து விடப்பட்ட) ஆடு, மாடுகளின் காதுகளை அறுத்து விடும்படியும் அவர்களை ஏவுவேன்.
அல்லாஹ்வின் படைப்பினங்(களின் தோற்றங்)களை மாற்றும் படியாகவும் நிச்சயமாக நான் அவர்களை
ஏவுவேன்'' (என்று கூறினான்.)
ஆகவே, எவன் அல்லாஹ்வையன்றி (இத்தகைய)
ஷைத்தானை (தனக்கு)ப் பாதுகாவலனாக எடுத்துக் கொள்கின்றானோ அவன் நிச்சயமாக பகிரங்கமான
இழப்பையே அடைந்துவிடுவான். (4: 119)
இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளபடி,
மனிதன் தன் தேவைக்கேற்பவும்
அவசரத்திற்கேற்பவும் இயற்கையான படைப்பைச் செயற்கையாக உண்டுபண்ண நினைத்து, உருவாக்கியதே பிராய்லர் கோழிகள். அவை ஆணும் அல்லாத
பெண்ணும் அல்லாத உயிரினம் ஆகும். இது போன்ற பிராய்லர் கோழிகளை அதிகம் சாப்பிடும் ஆண்களும்
பெண்களும் பாதிக்கப்படுகின்றார்கள். ஆண்களுக்கு விந்தணு பாதிப்பும் பெண்களுக்கு கருவில்
உள்ள சினைமுட்டையில் பாதிப்பும் ஏற்படுகின்றது. இதனால்தான் இன்றைய இளம் தம்பதிகள் பலர்,
இயல்பாகக் குழந்தை பெற்றுக்கொள்ள
முடியாமல் "கரு உருவாக்க மையங்களை'
(ஃபெர்டிலைஷன் சென்டர்) நாடுகின்றார்கள்.
மிக அழகிய படைப்பாளனாகிய
அல்லாஹ் அருள்வளமிக்கவன் ஆவான். (23: 14) அல்லாஹ் ஓர் அழகிய படைப்பாளன். அவன் எதையெதை யார் யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும்
என்பதை அளந்தே படைத்து வைத்துள்ளான். அதை மனிதன் மாற்ற நினைத்தால் அதன்மூலம் நன்மைகள்
பெருகுவதைப்போல் காணப்பட்டு, தீமைகள் பெருகி நிற்கும்
என்பதே நிதர்சன உண்மையாகும்.
மரபணு மாற்றப்பட்ட
விதையால் உருவான பழங்களாலும் காய்கறிகளாலும் மண்ணுக்கே கேடு எனும்போது மனித உடலுக்குக்
கேடு ஏற்படாமலா இருக்கும். இன்றைய நவீன உலகில் பரவலாகக் காணப்படும் நோய்கள் பலவும்
மரபணு மாற்றப்பட்ட உணவு வகைகளால் ஏற்படுபவையே என்றால் மிகையில்லை. எனவே அத்தகைய உணவுகளை
நாம் முற்றிலும் தவிர்த்து வாழ்வதே நம் ஆரோக்கியத்தைப் பேண நாம் மேற்கொள்ளும் வழிமுறையாகும்.
==================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக