வெள்ளி, 25 மே, 2018

வெயிலை வெறுக்காதீர்!


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

நாம் வானத்தையும்  பூமியையும் அவற்றுக்கிடையே உள்ளவற்றையும் விளையாட்டாகப் படைக்கவில்லை. (21: 16) இந்த வசனத்தின் அடிப்படையில் அல்லாஹ் எதையும் வீணாகப் படைக்கவில்லை. அதனால் அவன் வெயிலையும் வீணாகப் படைக்கவில்லை. அதில் மனிதர்களுக்குப் பலவிதமான நன்மைகள் உள்ளன என்பதை இன்றைய ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.

கோடைக்காலம் வந்துவிட்டாலே நிறையப் பேருக்கு அதன்மீது ஒரு வெறுப்பு வந்துவிடுகிறது. சுட்டெரிக்கும் வெயிலில் அலுவலகம் செல்ல வேண்டுமே, வியாபாரம் செய்ய வேண்டுமே, வெளியில் செல்ல வேண்டுமே என்று ஒவ்வொருவரும் அதை நினைத்து வருந்துகின்றனர். வெளியில் செல்ல அஞ்சுகின்றனர். ஆனால் வெயில் உடலுக்கு நல்லது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? சுட்டெரிக்கும் வெயிலில்தான் உயிர்ச்சத்து டி (விட்டமின் டி) உள்ளது. ஒருவர் நீண்ட நேரம் வெயிலில் சென்று வருவதால் அல்லது வெயில் படுமாறு நிற்பதால் அவருடைய தோல் அதிலுள்ள உயிர்ச்சத்தான டி-யை கிரகித்துக்கொள்கிறது. இதனால் தோல் நோய் உள்ளிட்டவை அவருக்கு ஏற்படுவதில்லை.

ஓர் ஊரில் ஒரு முட்டாள் அரசன் இருந்தான். இந்தச் சூரியன் என்ன இவ்வளவு கடுமையாகச் சுட்டெரிக்கிறது? அதைப் பிடித்து வாருங்கள் என்று தம் பணியாள்களிடம் கூற, அவனுடைய பணியாள்கள் காலை முதல் மாலை வரை ஓடினர். அது மாலையில் மறைந்துபோய்விட்டது. மறுநாளும் காலை முதல் மாலை வரை அதனைத் துரத்திக்கொண்டே ஓடினர். அது மாலையில் மறைந்துபோய்விட்டது. இவ்வாறு ஒரு மாதமாக ஓடியும் அவர்களால் அதைப் பிடிக்கமுடியவில்லை. ஆனால் அவர்களுள் சிலருக்கு இருந்துவந்த தோல் நோய் முற்றிலும் குணமாகிவிட்டதைக் கண்டார்கள். ஆம்! சூரிய வெப்பத்தால் தோல் நோய் குணமாகின்றது. உடலின் கழிவுகள் வியர்வை மூலம் வெளியேற்றப்படுவதால் தோல்நோய் குணமடைகின்றது. 

வெயில் காலத்தில் சிறுநீரகத்திற்கு ஓய்வு கிடைக்கிறது. ஆம்! கோடை வெயிலால் உடலின் குளிர்ச்சி குறைந்து தாகம் ஏற்படுகிறது. அதனால் நாம் மிகுதியாகத் தண்ணீர் அருந்துகிறோம். ஆனால் நாம் எவ்வளவுதான் தண்ணீர் அருந்தினாலும் மிகக் குறைவாகத்தான் சிறுநீர் வெளியேறும். பெரும்பாலான நீர் நம்முடைய நுண்ணிய வியர்வைத் துளைகள்மூலம் வியர்வையாக வெளியேறிவிடும். இதனால் நம்முடைய சிறுநீரகத்திற்கு வேலைப்பளு மிச்சம். ஆகவே அதற்குக் கோடைக்காலத்தில் ஓய்வு கிடைக்கிறது.

காய்கள் பழுக்க வெயில் தேவை. பெரும்பாலான காய்கள் சூரிய வெப்பத்தால்தான் கனிகின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்த வரை, முக்கனிகளான மா, பலா, வாழை ஆகியவை சூரிய வெப்பத்தால் கனிகின்றன. பேரீச்ச மரங்கள் பயிரிடப்பட்டுள்ள அரபு நாடுகளில் சில குறிப்பிட்ட நாள்கள் வெயில் மிகவும் உச்சத்தில் சுட்டெரிக்கும். அதில்தான் பேரீச்சம் பழங்கள் கனியும்.

புவியிலுள்ள நீர் சூரிய வெப்பத்தால் உறிஞ்சப்பட்டு, அது மீண்டும் நமக்கு மழையாகப் பொழிவது இந்த வெயிலால்தான். அது மட்டுமின்றி, புவியில் ஆங்காங்கே ஓடுகின்ற கழிவுநீர்களை வற்றச் செய்து, வீணாகக் கொட்டப்படுகின்ற எண்ணற்ற கழிவுப் பொருள்களை அழிப்பதற்கும் சூரிய வெப்பம் பயன்படுகிறது.

உப்பளத்தில் பாத்தி பாத்தியாகக் கட்டிவைக்கப்பட்டுள்ள நீர் வற்றி உப்பு கிடைக்கிறது. செங்கல்கள் காய்ந்து வீடு கட்ட உதவுகின்றன. பெய்கின்ற மழைநீர் காய்ந்து வற்றவும் நீர் ஆவியாகி மீண்டும் மழையாகப் பெய்யவும் வெயில் பயன்படுகின்றது. மேலும் வெயில் காலத்தில்தான் தாவரங்கள், செடிகொடிகள் நன்கு செழித்து வளர்கின்றன. தாவரங்கள் சூரிய ஒளியின்மூலம் கிடைக்கின்ற ஸ்டார்ச்சை உணவாகக் கிரகித்துக்கொள்கின்றன. சூரிய ஒளியால் பயிர்கள் செழித்து வளர்கின்றன.

சூரிய சக்தியை ஈர்ப்பதன்மூலம் நம் உணவுத் தேவையைக் குறைக்க முடியும். காலை இளவெயில் நேரத்தில் சூரியனைத்  தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருப்பதால் நம் உடலுக்குத் தேவையான ஆற்றலை அது ஈர்த்துக்கொள்கிறது. தொடக்கத்தில் 5 முதல் 10 நிமிடங்கள் வரை இப்பயிற்சியை மேற்கொள்ளலாம். பின்னர் படிப்படியாக உயர்த்தி, 40 நிமிடங்கள் வரை பார்க்கத் தொடங்கினால் உணவின் தேவையே ஏற்படாது. இப்படியும் சித்தர்கள் சிலர் வாழ்ந்திருக்கின்றார்கள்.

இப்பொழுது சூரிய வெப்பத்தை வைத்து எண்ணற்ற கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்துள்ளார்கள். சோலார் அடுப்பு, சோலார் வாட்டர் ஹீட்டர், சோலார் லைட், சோலார் வாகனங்கள் உள்ளிட்ட எத்தனையோ கண்டுபிடிப்புகள் வந்துள்ளன. தற்காலத்தில் பல கிராமங்களில் சோலார் மின்சாரம் தயாரிக்கப்பட்டு, அதன்மூலம் விளக்குகளை எரியச் செய்கின்றனர். எதிர் காலத்தில் சூரிய ஆற்றலால் இயங்கக்கூடிய வாகனங்கள்தாம் சாலைகளில் ஓடும். அந்த அளவிற்குக் கண்டுபிடிப்புகள் மிகுந்துள்ளன. இவையெல்லாம் நாம் சாதாரணமாக வெறுக்கின்ற வெயிலின் மூலம்தான் சாத்தியமாகியுள்ளன என்று நினைக்கின்றபோது அதன்மீது ஒரு மதிப்பு ஏற்படுகிறதல்லவா! ஆக வெயிலும் ஓர் அருட்கொடையே என்பதை நாம் உணரலாம்.

அதேநேரத்தில் மிகுதியான வெயிலின் கெடுதிகளிலிருந்து தற்காத்துக்கொள்வதற்கான வழிமுறைகளையும் நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் காணமுடிகின்றது. ஒருவர் தாடி வளர்ப்பது அவரின் முகத்தைக் கம்பீரமான தோற்றத்தில் காட்டுவதோடு மிகுதியான வெயிலின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. நேரடியான சூரிய ஒளியால் முகத்தின் தாடைப் பகுதி பாதிக்கப்படுவதிலிருந்து தாடி பாதுகாக்கிறது. உடலின் எல்லாப் பாகங்களிலும் ஒரேவிதமான தோல் கிடையாது. சில பகுதிகளில் மிருதுவாகவும் சில பகுதிகளில் தடிமனாகவும் உள்ளது. அந்த வகையில் முகத்தில் மிருதுவான தோல்தான் உள்ளது. சூரிய வெப்பம் அதனைத் தாக்கி அதனால் பல்வலி உள்ளிட்ட தொல்லைகள் தாடி இல்லாதோருக்கு ஏற்படலாம். ஆனால் தாடி உள்ளோருக்கு அத்தகைய பாதிப்புகள் ஏற்படுவதில்லை. அந்த அடிப்படையில்தான், “மீசையைக் கத்தரியுங்கள்; தாடியை வளருங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதீ: 2687)

சூரிய வெப்பம் மிகுதியாக மனித உடலுக்குள் புகுந்துவிடாமல் இருப்பதற்கான வழிகாட்டல் என்ற அடிப்படையில், வெண்மையான ஆடையை அணியுமாறு நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.

“நீங்கள் வெண்ணிற ஆடை அணியுங்கள். ஏனெனில் அது தூய்மையானதும் அருமையானதும் ஆகும். உங்களுள் இறந்துவிட்டவருக்கு வெண்ணிறத்திலேயே சவக்கோடி (கஃபன்) அணிவியுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதீ: 2734) வெண்மையான ஆடை சூரிய வெப்பத்தை எதிர்த்துப் போராடுகிறது; அதை வெளியே தள்ளிவிடுகிறது. உடலின் உள்ளே சூரிய வெப்பம் ஊடுருவுவதைத் தடுத்துவிடுவதால் உடல் மிகுதியான சூட்டை அடையப்பெறாமல் நடுநிலையோடு இருக்கிறது.

இவ்வாறு பற்பல நன்மைகளைச்  சூரிய  வெப்பம் கொண்டுள்ளதால் அல்லாஹ் எதையும் வீணாகப் படைக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ளலாம். அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்: அவர்கள் நின்ற நிலையிலும் அமர்ந்த நிலையிலும் ஒருக்களித்துப் படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைவுகூர்வார்கள். வானங்களும் பூமியும் படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப்பார்கள். (இறுதியில்) எங்கள் இறைவா! இவற்றை நீ வீணாகப் படைக்கவில்லை; நீ தூயவன்; நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!,,. என்று கூறுவார்கள். (3: 191)  ஆக ஒவ்வொன்றும் ஓர் அருட்கொடை. அந்த ஓர் அருட்கொடைக்குள் ஓராயிரம் நன்மைகள் உள்ளதை ஆய்வாளர்கள் கண்டறிந்து இன்றும் வியப்படைகின்றார்கள். ஆகவே நாம் வெயிலை வெறுக்காமல் அதை அனுபவிக்கப் பழகுவோம்!