புதன், 11 மே, 2016

நீங்காத நிகழ்வு

என் மகன் அஹ்மது அப்ஷர். ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். நன்றாகப் படிப்பவன். ஒரு நாள் நான் ஒரு புதிய செல்போன் வாங்கினேன். என்னுடைய பழைய செல்போனை என் மனைவிக்குக் கொடுத்துவிட்டு, மனைவியின்  பழைய செல்போனில் ஒரு பழைய சிம்கார்டு போட்டு, அதை என்ன செய்யலாம் என்று யோசித்தபோது என் மகன், அதை எனக்குத் தந்துவிடுங்கள் என்று கேட்டான்.
நான் அதை அவனுக்குக் கொடுத்துவிட்டு, அவனுடைய செல்போன் எண்ணை அவனிடம் தெரிவித்தேன். பிறகு, "அப்ஷர், இதுதான் இனி உன்னுடைய நம்பர். உன் வகுப்பிலுள்ள உன் நண்பர்கள் எல்லோருக்கும் இந்த நம்பரைக் கொடுத்து, இனி உனக்கு இந்த நம்பருக்கு போன் செய்யச் சொல்லு'' என்றேன்.

அதைக் கேட்டுக்கொண்டிருந்த என் மனைவி, "அப்படியெல்லாம் செய்யக்கூடாது. யாருக்கும் உன் நம்பரைக் கொடுக்கக்கூடாது'' என்று குறுக்கிட்டுப் பேசினாள்.

"நான் எது செய்தாலும் குறுக்கிட்டுப் பேசுவதே உன் வாடிக்கையாய்ப் போச்சு. இப்போது நான் நல்ல விஷயம்தானே செய்திருக்கேன். இதையும் நீ தடுக்கிறீயே?'' என்று சப்தமிட்டேன்.

அதற்கு அவள் சொன்னது என் மனதைத் தொட்டது.
"இல்லைங்க. அவன் படிக்கிற வகுப்பில் எத்தனையோ ஏழைப் பசங்க படிக்கிறாங்க. அவர்களிடம் நம்ம பையன் மட்டும்  செல்போன் நம்பர் கொடுத்தா, நமக்கு ஒரு செல்போன் இல்லையே! என்ற ஏக்கம் அவர்களின் மனதில் ஏற்படும் இல்லையா? நம்மோட வசதியைப் பார்த்து பிறர் ஏங்கும் விதத்துல நடந்துக்குறது சரியில்லைங்க. அதனாலதாங்க நான் வேண்டாம்னு சொன்னேன்'' என்றாள்.
-நூ. அப்துல் ஹாதி பாகவி

கருத்துகள் இல்லை: