ஜாமிஆ அல்பாகியாத்துஸ் ஸாலிஹாத் நூற்றைம்பதாம் ஆண்டு நிறைவு விழா மாநாட்டுச் சிறப்பு மலரில் இடம்பெற்றுள்ள என்னுடைய கட்டுரை.
-மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி, எம்.ஏ., எம்.ஃபில்., (பிஎச்.டி.)
(மொழிபெயர்ப்பாளர், பத்திரிகையாளர்)
-----------------------------------------------------------------------------------------
இன்று வட்டியின் கோரப்பிடியில் சிக்குண்டு தவிப்போர் பலர். தம் அவசர உதவிக்காக என்று கூறி, அறவே சிந்திக்காமல் அவசரமாக வாங்கிய கடனை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்த முடியாமல், வாங்கிய கடனுக்கு வட்டி கட்டி, வட்டிக்கு வட்டி கட்டி நொந்து போவோர் பலர் நமக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். தெரியாமல் வாங்கிவிட்டு, இப்போது வட்டி கட்ட முடியாமல் சிரமப்படுகிறேன். இதிலிருந்து சீக்கிரம் மீள வேண்டுமே என்று மனதுக்குள் சஞ்சலத்தோடு வாழ்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அழகிய கடன் என்பதை அறவே மறந்துவிட்டார்கள் செல்வந்தர்கள். அதனால்தான் வட்டிக்குக் கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு முஸ்லிம்கள் ஆளாகின்றார்கள்.
மற்றொரு புறத்தில், நாங்களெல்லாம் வட்டியிலிருந்து தப்பித்துக்கொண்டோம் என்று நிம்மதிப் பெருமூச்சு விடுபவர்கள் தங்களுக்குத் தெரியாமலேயே வட்டி எனும் தீமைக்குள் மூழ்கிக் கிடக்கின்றார்கள். உண்மையில், அதுவெல்லாம் வட்டிதான் என்று அவர்களுக்குத் தெரியாது. தம்மையும் அறியாமல் வட்டி எனும் தீமைக்குள் மூழ்கிக் கிடக்கின்றார்கள். இன்னும் சிலர், வட்டிக்கு வேறு பெயர்களை இட்டுக்கொண்டு அதை முழு மனதோடு அனுபவித்துக்கொண்டிருக்கின்றார்கள். இத்தகைய நிலைகளில் வாழ்வோருக்குக் கீழ்க்கண்ட விளக்கம் ஒரு தெளிவைத் தரும் என்று நம்பலாம்.
முஸ்லிம்கள் அனைவரையும் வட்டி எனும் தீமைக்குள் கொண்டுவர யூதச் சமுதாயம் சூழ்ச்சி செய்தது; செய்துகொண்டிருக்கிறது. அதன் விளைவாக, நம்முள் பலர் தம்மை அறியாமலே அதனுள் நுழைந்துவிட்டார்கள். அது வட்டி என்று தெரியாமல் அதை வாங்கிக்கொண்டிருக்கின்றார்கள். அல்லது கொடுத்துக்கொண்டிருக்கின்றார்கள். வேறு சிலர் காலத்திற்கேற்ற மார்க்கத் தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் வட்டி சார்ந்த சில நடைமுறைச் செயல்பாடுகளைச் செல்லத்தக்கனவாக அறிவித்துள்ளனர். அது சமுதாய மக்களுக்குச் சாதகமாகப் போய்விட்டதால் ‘உறுத்தல்’ இல்லாமல் உளப்பூர்வமாக அது சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்கள்.
வங்கிக் கணக்கு
வங்கி என்பதே ஒரு வட்டி நிறுவனம்தான். அங்கு முதலீட்டாளர்களுக்கு வட்டி கொடுப்பதும் கடன் பெற்றோரிடமிருந்து வட்டி வாங்குவதும்தான் அதன் முக்கியத்தொழில். எனினும் காலத்தின் கட்டாயத்தையும் அரசாங்க நிர்ப்பந்தத்தையும் கருதியே வங்கிக் கணக்கைத் தொடங்குகிறோம். அதாவது ஒருவருக்கு வங்கிக்கணக்கு இருந்தால்தான் வரைவோலை, காசோலை உள்ளிட்டவற்றை மாற்றுவது எளிதாகும். அது மட்டுமின்றி ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் நாம் பிறருக்குக் கொடுத்தால், அதைப் பணமாகக் கொடுக்கக்கூடாது. காசோலையாகவோ, வரைவோலையாகவோதான் கொடுக்க வேண்டும். இது போன்ற காரணங்களுக்காக வங்கியில் கணக்கு வைத்துக்கொள்வது கூடும். எனினும் அங்கு வழங்கப்படுகின்ற வட்டியை நாம் உண்ணக்கூடாது. அதேநேரத்தில் அதை அங்கேயே விட்டுவிட வேண்டிய அவசியம் இல்லை. அதை வாங்கி, வாழ்க்கையின் அடிமட்டத்தில் வாழ்ந்துகொண்டிருப்போருக்கு வழங்கிவிடலாம். இதுவே தொடக்கக்காலத்தில் வழங்கப்பட்ட மார்க்கத்தீர்ப்பு. இதன்படிதான் பலரும் செயல்பட்டுவருகின்றார்கள். இன்றைக்கு, படித்த மேதாவிகள் சிலர், நாம் வாழும் இந்தியா தாருல் ஹர்பு என்றும் அதனால் அங்கிருந்து பெறுகின்ற எதுவும் வட்டியாகாது என்றும் கூறுகின்றனர். மற்றொரு புறம், மெத்தப்படித்த மேதாவிகள் சிலர், நாம் அதை வாங்கினாலே நம் பெயரில் பாவம் எழுதப்பட்டுவிடும். எனவே அதை வாங்காமல் வங்கியிலேயே விட்டுவிட வேண்டும் என்று உளறுகின்றனர். ஆக, வங்கியில் கிடைக்கும் உபரிப்பணம் நமக்கு வழங்கப்படுகின்ற வட்டிதான் என்பதில் ஐயமில்லை.
கடன் அட்டை (Credit Card)
நம்முள் பலரின் சட்டைப் பைக்குள் அடக்கத்தோடு இருக்கின்ற அட்டைகளுள் ஒன்றுதான் கடன் அட்டை-கிரடிட் கார்டு. ஒருவர் தம் வங்கிக் கணக்கில் பணம் இல்லாவிட்டாலும், தாம் விரும்பும் பொருளைக் கடையில் வாங்கிக்கொள்ளலாம். வாங்கிய பின்னர், அக்கடையில் தம் கடன் அட்டையை நீட்டினால் போதும். அவருடைய கடன் அட்டை எண் குறிக்கப்பட்டு, அவர் செலுத்த வேண்டிய தொகை ‘பற்று’ வைத்துக்கொள்ளப்படும். குறிப்பிட்ட நாள்களுக்குள் அவர் அந்தத் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டால் நல்லது. இல்லையேல் அவர் வாங்கிய பொருளுக்குரிய தொகைக்கு வட்டி நிர்ணயிக்கப்பட்டுவிடும். இதை ஒரு வட்டியாகவே முஸ்லிம்கள் பலர் கருதுவதில்லை.
காலக்கெடு முடிவதற்குள் பணத்தை அடைத்து விடுவோம் என்றால் கடன் அட்டையைப் பயன்படுத்துவதில் என்ன தவறு என்று சிலர் கேட்கிறார்கள். காலக்கெடுவுக்குள் பணத்தைச் செலுத்தி விட்டால் வட்டி வராது என்பது உண்மைதான். ஆனால், கடன் அட்டையைப் பயன்படுத்தக்கூடாது என்பதற்குக் காரணம், வட்டி செலுத்த வேண்டியுள்ளது என்பதால் மட்டுமல்ல. வட்டி செலுத்தாமல் காலக்கெடுவுக்குள் பணத்தைச் செலுத்திக்கொண்டே வருவதாக இருந்தாலும்கூட இது தடுக்கப்பட்டதுதான். இதற்குக் காரணம், இஸ்லாம் கடன் வாங்குவதை மிகவும் கடுமையான முறையில் பார்க்கிறது. மிக நெருக்கடியான நிலை இருந்தாலே தவிர, நாம் கடன் வாங்கக் கூடாது. அப்படியே கடன் வாங்கி விட்டால் அதைத் திருப்பிச் செலுத்துவதில் நாம் மிகுந்த முனைப்புக் காட்ட வேண்டும்.
சலமா பின் அல்அக்வஉ (ரளி அவர்கள் கூறியுள்ளதாவது: இறுதித் தொழுகை நடத்துவதற்காக ஒரு பிரேதம் (ஜனாஸா) கொண்டுவரப்பட்டது. "இவருக்குக் கடன் உண்டா?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள் "இல்லை' என்றுரைத்தனர். அதனால் அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டுவரப்பட்டது. அப்போது, "இவர்மீது கடன் இருக்கிறா?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள் "ஆம்' என்றுரைத்தனர். நபி (ஸல்) அவர்கள், "அப்படியென்றால் உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்திக்கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். அப்போது அபூகத்தாதா (ரளி அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இவரது கடனுக்கு நான் பொறுப்பு'' என்று கூறியதும், அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். (புகாரீ: 2295)
அதாவது, கடனாளியாக நாம் மரணித்தால், நமது கடனைத் தள்ளுபடி செய்து நம்மை மன்னிப்பதற்குக் கடன் தந்தவர் தயாராகவில்லை என்றால் நாளை மறுமையில், நமது நல்லறங்கள் அனைத்தையும் கடன் கொடுத்தவருக்கே கொடுத்துவிட வேண்டிய துர்பாக்கியமான நிலைக்கு நாம் தள்ளப்படுவோம்.!
இதுவெல்லாம், உயிர் போகிற அவசரத்திற்குக் கடன் வாங்குவோரின் நிலை பற்றிய செய்திகள். ஆனால் இன்றைக்குக் கடன் அட்டை மூலம் உயிர் போகின்ற அவசரங்களுக்கா கடன் பெறுகிறார்கள்? இல்லவே இல்லை. கோடீஸ்வரனும்கூட கடன் அட்டையைப் பயன்படுத்துகிறான். தனது சட்டைப்பைக்குள் பணத்தை வைத்திருப்பவன்கூட, அதைக் கொடுத்துப் பொருளை வாங்காமல், நமக்குத்தான் இந்த அட்டை இருக்கிறதே என்று எண்ணி, அதனைக் காட்டிப் பொருட்களை வாங்கிச் செல்கிறான்.
ஏழைகள் கடனை வாங்கித் திருப்பிச் செலுத்தாமல் இறந்தால் அவர்களையே அல்லாஹ் மன்னிக்க மாட்டான் எனும் போது, செல்வந்தர்கள் இந்த விஷயத்தில் எந்த அளவிற்கு அச்சத்துடன் செயல்பட வேண்டும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: செல்வந்தர்கள், தாம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் தவணை கேட்டு இழுத்தடிப்பது அநியாயமாகும். (புகாரீ: 2287)
மற்றொரு காரணமும் உள்ளது. கடன் அட்டையைப் பெறுவதற்கு நாம் நிரப்பிக் கொடுக்கும் விண்ணப்பப் படிவத்தில், "உரிய காலத்திற்குள் பணத்தைச் செலுத்தாவிட்டால், அதற்கான வட்டியைச் செலுத்த சம்மதிக்கிறேன்'' என்ற நிபந்தனையும் உள்ளது. அதற்கு இசைந்துதான் ஒவ்வொருவரும் கையொப்பமிடுகிறார். எனவே ஒருவர் வட்டி கொடுக்க மனப்பூர்வமாக ஒத்துக்கொள்கிறார் என்றுதான் பொருள். அது எப்படிக் கூடும்? ஆக, எது குறித்து இஸ்லாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கும்படி நம்மை ஏவுகிறதோ, அதை மிகச் சாதாரணமானதாகவும், எந்த முக்கியத்துவமும் அற்றதாகவும் ஆக்கும் மாபாதகச் செயலைச் செய்யும்படி இந்தக் கடன் அட்டை மோகம் நம்மைத் தூண்டுகிறது. எனவே இதிலிருந்து தவிர்ந்துகொள்வதே உறுதியான இறைநம்பிக்கையுள்ள முஸ்லிம்களின் அடையாளமாகும்.
அடைமானம் (Mortgage)
வாங்குகிற கடனைத் திருப்பிச் செலுத்திவிடுவேன். அதற்கு இப்பொருள் உத்திரவாதம் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் விலைமதிப்புள்ள ஒரு பொருளைக் கொடுத்துவிட்டுக் கடனைப் பெற்றுக்கொள்வதே அடைமானம் ஆகும். இவ்வாறு கடன் பெறுவது மார்க்கத்தில் செல்லும். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே செய்துள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு யூதரிடம் உணவுப்பொருளைக் கடனாக வாங்கினார்கள். (அதற்காகத்) தமது இரும்புக் கவசத்தை அந்த யூதரிடம் அடைமானம் வைத்தார்கள் என ஆயிஷா (ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (நூல்: புகாரீ-2252)
கடன் பெற்றவர் அக்கடனை உரிய காலத்தில் திருப்பிக் கொடுத்துவிட்டுத் தம்முடைய அடைமானப் பொருளை மீட்டிக்கொள்ளலாம். ஆக, இது ஒரு சாதாரண கடனைப் போன்றுதான் கருதப்படுகிறது. ஆனால் இன்றைய காலத்தில் நடைபெறுகின்ற அடைமானம் அவ்வாறு இல்லை. அது மட்டுமின்றி, பயன்பாட்டுப் பொருள்களை அடைமானப் பொருளாக யாரும் பெறுவதில்லை. தங்கம், வீட்டுப்பத்திரம், நிலப்பத்திரம் போன்றவற்றைத்தான் பெறுகிறார்கள். வாங்கிய கடனைக் குறிப்பிட்ட தவணைக் காலத்தில் செலுத்திவிட்டாலும் அதற்கு வட்டி கட்ட வேண்டும் என்பதுதான் இன்றைய நடைமுறை. முஸ்-ம்கள் பலர் தம் தங்க நகைகளை அடைமானம் வைத்து, அதற்குரிய வட்டியைக் கொடுத்துக்கொண்டிருக்கின்றார்கள் என்பதே நிதர்சன உண்மை. இது இஸ்லாமிய மார்க்கத்தில் முற்றிலும் தடைசெய்யப்பட்டதாகும்.
வங்கிக்கடன் (Loan)
இன்றைக்குப் பலர் வீடு கட்ட, கார் வாங்க, கல்வி பயில என அனைத்துக்கும் வங்கியை நாட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எதற்கெடுத்தாலும் கடன் வாங்கத் துணிந்துவிடுகின்றனர். நம்மால் அதைத் திருப்பிச் செலுத்த முடியுமா என்றெல்லாம் சற்றும் சிந்திப்பதில்லை. இவ்வாறு கடன்பெறுவதை அனைவரும் மிகச் சாதாரணமாகச் செய்துவருகின்றனர். ஆனால் அவ்வாறு வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்த வேண்டுமே, அது இஸ்லாமிய மார்க்கத்தில் தடைசெய்யப்பட்டுள்ளதே என்ற விழிப்புணர்வு இல்லை.
ஜாபிர் (ரளி அவர்கள் கூறியுள்ளதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வட்டி வாங்குபவரையும் வட்டி கொடுப்பவரையும், அதற்குக் கணக்கு எழுதுபவரையும் அதன் இரண்டு சாட்சிகளையும் சபித்தார்கள். மேலும், "இவர்கள் அனைவரும் (பாவத்தில்) சமமானவர்கள் ஆவர்'' என்று கூறினார்கள். (நூல்: முஸ்லிம்- 3258)
வட்டிகொடுப்பவரையும் நபியவர்கள் சபித்துள்ளதால் வட்டிக்குக் கடன் வாங்கி, அதற்கு வட்டி செலுத்துவதை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை என்பதை இந்த ஹதீஸ் மூலம் விளங்கிக்கொள்ளலாம். ஆகவே வங்கியிலிருந்தோ பிறரிடமிருந்தோ வட்டிக்குக் கடன் வாங்குவது முற்றிலும் தடைசெய்யப்பட்டது என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். மேலும், வங்கியில் வட்டிக்கணக்கு எழுதும் பணியில் ஈடுபடுவோரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சாபத்திற்கு உரியவர்களே என்பதில் சிறிதும் ஐயமில்லை.
ஏலச்சீட்டு
ஒருவருக்கு ஒரு இலட்சம் தேவைப்படுகிறது என்றால் அவர் கடன் பெறுவதற்காக ஏலச்சீட்டை நாடுகிறார். உதாரணமாக, பத்துப் பேர் ஒன்றுகூடி, ஏலச்சீட்டு நடத்துபவரிடம், ஒவ்வொருவரும் பத்தாயிரம் ரூபாய் கொடுக்கவேண்டும். இப்போது ஒரு இலட்சம் சேர்ந்துவிட்டது. இந்தப் பத்துப் பேரில் யாருக்கு அதைக் கொடுப்பது? ஆகவே மிகக் குறைவாக யார் கேட்கின்றாரோ அவருக்கு அந்த ஒரு இலட்சத்தை ஏலம் நடத்துபவர் வழங்குவார். அதாவது, ஒரு இலட்சத்தை 95 ஆயிரமாக அதைவிடக் குறைவாக 90 ஆயிரமாக யார் கேட்கின்றாரோ அவருக்கு வழங்கப்படும். ஆனால் அவர் திருப்பிச் செலுத்தும்போது ஒரு இலட்சம் கட்ட வேண்டும். ஆக, ஒரு இலட்சத்தில் ஐந்தாயிரமோ, பத்தாயிரமோ வட்டியாகும். அடுத்த மாதம் அவர் பத்தாயிரம் செலுத்துவார். ஆனால் அவருக்கு இரண்டாம் தடவை பணம் கிடைக்காது. மற்ற ஒன்பது பேரில் யார் குறைவாகக் கேட்கின்றாரோ அவருக்கு வழங்கப்படும். இப்படியே ஒவ்வொரு தடவையும் ஏலம் நடைபெறும்.
இப்படி, வட்டிக்குக் கடன் கொடுப்பதற்குப் பற்பல குறுக்கு வழிகளைக் கண்டுபிடித்துள்ளனர். அவ்வளவே. ஆக, மொத்தத்தில் பணம் தொடர்பாக எந்தக் கொடுக்கல் வாங்க-லும் வட்டியே பிரதானமாக இருந்துவருகிறது. எனவே இதி-ருந்து தவிர்ந்துகொள்வதே இறைத்தண்டனையிலிருந்து நம்மைக் காக்கும். இல்லையேல் இறைவனின் கோபத்திற்கும் சினத்திற்கும் ஆளாக நேரிடும் என்பதைக் கவனத்தில் கொள்வோம்.
ஒத்திக்கு விடுதல் (Lease)
நீங்க வாடகைக்கு இருக்கீங்களா? அல்லது லீசுக்கு இருக்கீங்களா? என்று கேட்பது நம்மவர்களின் வழக்கம். ஒருவர் ஐந்து இலட்சத்தைப் பெற்றுக்கொண்டு, குறிப்பிட்ட இத்தனை ஆண்டுகளுக்கு இந்த வீட்டை ஒத்திக்கு விடுகிறேன் என்று எழுதிக்கொடுத்துவிடுவார். பணத்தைக் கொடுத்தவர் அந்த வீட்டில் இருந்துகொள்வார். வாடகை கொடுக்கமாட்டார். பணத்தை வாங்கியவர் அதைத் தம் தேவைக்குப் பயன்படுத்திக்கொள்வார். குறிப்பிட்ட ஆண்டுகள் முடிவடைந்து, அப்பணத்தை அப்படியே திருப்பிக்கொடுத்தபின், ஒத்திக்கு இருந்தவர் வீட்டைக் காலி செய்துவிடுவார். இது இன்றைய நவீன கால நடைமுறை. வீடு, கடை, நிறுவனம் என்று எல்லாவற்றிலும் இது தொடர்கிறது. மேலோட்டமாகப் பார்த்தால் இதில் என்ன தவறு இருக்கிறது, இதில் எங்கே வட்டி இருக்கிறது என்று கேட்கத் தோன்றும். ஆனால் இது வட்டிதான்.
ஐந்து இலட்சத்திற்குப் பிடிமானமாக வழங்கப்பட்டதுதான் அந்த வீடு. அந்த வீடு நம்முடைய பாதுகாப்பில் இருக்கலாமே தவிர, அதைப் பயன்படுத்தக்கூடாது. அதில் நாமே இருந்துகொண்டால், அதற்கான வாடகையைச் செலுத்திவிட வேண்டும். அல்லது பிறருக்கு அதை வாடகைக்கு விட்டு, அந்தப் பணத்தை வீட்டு உரிமையாளரிடம் கொடுத்துவிட வேண்டும். அல்லது பிடிமானமாக வீட்டுப் பத்திரத்தை வாங்கி வைத்துக்கொள்ளலாம். ஆக, பிடிமானமாக வழங்கப்பட்ட பொருளைப் பயன்படுத்துவது இஸ்லாமிய மார்க்கத்தில் தடைசெய்யப்பட்டதாகும். இதை அறியாத பலர், இன்றைக்கு மிகச் சாதாரணமாக ஒத்திக்குவிடப்பட்ட வீடுகளில் வசித்துவருகின்றனர். மார்க்க அறிஞர்கள் சிலர், இது கூடும் என்று கூறவும் செய்கின்றனர். இது வட்டிதான் என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை. ஆகவே இதிலிருந்து நாம் தவிர்ந்துகொள்ள வேண்டும்.
ஆயுள் காப்பீடு (Life insurance)
ஒருவர் இருபது ஆண்டுகளுக்காக இருபது இலட்சத்திற்குத் தம் ஆயுளைக் காப்பீடு செய்கிறார் என்றால், அதற்கேற்ப அவர் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையைக் காப்பீட்டுத் தொகையாகச் செலுத்திவர வேண்டும். இவ்வாறே இருபது ஆண்டுகளுக்குக் காப்பீட்டுத் தொகையை அவர் செலுத்திவர வேண்டும். இருபது ஆண்டுகளுக்குள் அவர் இறந்துவிட்டால், ஆயுள் காப்பீட்டு நிறுவனம் அவருடைய குடும்பத்தாருக்கு இருபது இலட்சத்தை வழங்கும். அவர் அந்த இருபது ஆண்டுகளுக்குள் மரணிக்காவிட்டால், அவருக்கு இருபது இலட்சத்தையும் போனஸ் என்று உபரியான பணத்தையும் அந்நிறுவனம் கொடுக்கும். அந்த போனஸ்தான் வட்டி. வட்டிக்கு மறுபெயர்தான் போனஸ். ஆக, இது கூடாது என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. இன்றைக்கு முஸ்லிம்கள் பலர் இந்த உண்மை புரியாமல் இதில் சேர்ந்து வருகின்றனர். இதுவும் வட்டிதான் என்பதை அவர்கள் உணர்வது அவசியமாகும்.
பங்குச் சந்தை (Share market)
தனி நபரோ, குறிப்பிட்ட சிலரோ சேர்ந்து பெரிய தொழிற்சாலைகளை நிறுவமுடியாத பட்சத்தில் பொதுமக்களின் உதவியை நாடவேண்டியது ஏற்படும். உதாரணமாக, ரூ. 10 கோடியில் ஒரு தொழில் தொடங்க வேண்டிய சூழ்நிலையில் ஒரு நிறுவனரிடம் 3 கோடி மட்டுமே உள்ளதென்றால், அரசு அனுமதியுடன் பொதுமக்களையும் அதில் கூட்டுச் சேர்ந்து கொள்ளுமாறு அறிவிக்கப்படும். ஒரு பங்கின் முகமதிப்பு ரூ. 1000 என்று நிறுவனம் விளம்பரம் செய்யும். முதலீட்டாளர்கள் பங்குகளைப் பெறுவதற்காக நிறுவனத்திடம் முதலீட்டைக் கொடுப்பார்கள். அதற்குப் பதிலாக நிறுவனம் ஒரு சான்றிதழைக் கொடுக்கும். அதற்கு பங்குப் பத்திரம் என்று பெயர். ஒவ்வோர் ஆண்டும் நிறுவனத்திற்குக் கிடைத்த இலாபத்தைக் கணக்கிட்டு அதில் ஒரு தொகையை நிறுவனத்திற்கு ஒதுக்கிவிட்டு, மீதியைப் பங்குதாரர்களுக்கு அவர்களின் பங்குக் கணக்குப்படி பங்குவைத்து ஈவுத்தொகை கொடுக்கப்படும். இப்புதிய முறை 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றியது.
நிறுவனத்திடமிருந்து பங்குகளைப் பெற்ற ஒருவர் மீண்டும் அவற்றை நிறுவனத்திடம் திருப்பிக்கொடுக்க முடியாது. எனவே பங்குதாரர் வரிசையிலிருந்து விலகிக்கொள்ள விரும்புபவர்களின் பங்கை வாங்கி, பங்குதாரராக விரும்புபவர்களுக்கு விற்றுவிடுவதற்காக உருவாக்கப்பட்டதே பங்குச் சந்தை. இங்கு பங்கு விற்பனை நடைபெறும். விலை ஏறும், இறங்கும். சிலசமயம் பங்கின் விலை முகமதிப்பைவிடக் குறையலாம்.
இஸ்லாமியப் பார்வையில் இது கூட்டு வியாபாரத்தின்கீழ் வருகிறது. ஆனால் இஸ்லாமியக் கூட்டு வணிகத்தில், எத்தனை பேர் கூட்டாளி, அவர் யார் யார் என்று வெளிப்படையாகத் தெரியும். இலாபத்திலும் நட்டத்திலும் கூட்டாளியாக இருப்பார்கள். ஆனால் நடைமுறையில் உள்ள நிறுவனங்களின் நிலை அவ்வாறு இல்லை. பங்குதாரர்கள் தம் பங்குகளை நினைத்த நேரத்தில் பங்குச் சந்தையில் மற்றவருக்கு விற்றுவிடுவதால் இதில் யார் யார் கூட்டு வைத்துள்ளனர் என்பதே நிறுவனத்திற்குத் தெரியாது. ஏனென்றால் இன்றைக்குப் பங்குதாரராக இருப்பவர் நாளைக்கு அதை வேறொருவருக்கு விற்றுவிட வாய்ப்புண்டு. எனவே இது கூட்டு வணிகத்தின்கீழ் வருமா என்பதே ஐயத்திற்குரியதாகும்.
இது கூடும் என்றால் அதற்கான நிபந்தனைகள்: 1. ஒருவர் பங்கு வாங்கியுள்ள நிறுவனம் ஹராமான தொழில்களைச் செய்யாமல் இருக்க வேண்டும். 2. வட்டிக்குக் கடன் வாங்காமல் இருக்க வேண்டும். 3. அந்த நிறுவனம் தன் இருப்புத் தொகையை வங்கியில் வைக்காமல் இருக்க வேண்டும்.
முதலாம் நிபந்தனைப்படி அந்த நிறுவனம் செய்கின்ற தொழில் ஹலாலானதா? ஹராமானதா? என்பதே பெரும்பாலான பங்குதாரர்களுக்குத் தெரியாது. அது ஹலாலான தொழிலைத்தான் செய்கிறது என்றே வைத்துக்கொண்டாலும், வங்கியில் வட்டிக்குக் கடன் பெறாமல் எந்த நிறுவனமும் தொழில் தொடங்க முடியாது. எனவே அது வங்கியில் வாங்கிய கடனுக்கு ஆண்டுதோறும் வட்டி கட்ட வேண்டியது ஏற்படும். அந்த வட்டியைப் பங்குதாரரும் மனதார ஏற்றுக்கொண்டதைப்போன்றுதான் ஆகும். மூன்றாவது நிபந்தனைப்படி, எந்த நிறுவனமும் வங்கிக் கணக்கு இல்லாமலும், தன் இருப்பை வங்கியில் செலுத்தாமலும் இருப்பதில்லை. வங்கியில் இருப்பு வைக்கும்போது அதற்கான வட்டியையும் வங்கி வழங்கும். அதுவும் அந்நிறுவனத்தின் இலாபத்தில் கணக்கிடப்பட்டு, பங்குதாரருக்குப் பிரித்துக் கொடுக்கப்படும். ஆக, வட்டியையும் சேர்த்துத்தான் பங்குதாரர் பெறுகிறார். ஆகவே, வட்டியை நீக்கிவிட்டு, எந்தத் தொழிலையும் நாம் பிரித்துப் பார்க்க முடியாது. எனவே இதைவிட்டு நீங்கிக்கொள்வதே உண்மையான இறைநம்பிக்கையாளர்களுக்கு உகந்ததாகும்.
ஆக, வட்டி என்பது மனிதனின் அன்றாட வாழ்க்கையில் இரண்டறக் கலந்துவிட்டது. அதைப் பற்றிய விளக்கம் தெரிந்ததும் அதி-ருந்து சட்டென விலகிக்கொள்ள வேண்டும். இல்லையேல் அல்லாஹ்வுடன் நாம் போர் செய்யத் தயாராகிவிட்டோம் என்று பொருள். அல்லாஹ் திருமறைக்குர்ஆனில் கூறுகின்றான்: இறைநம்பிக்கைகொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய மீதவட்டியை விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்விடமும், அவனுடைய தூதரிடமும் போர்ப் பிரகடனத்தை உறுதி செய்து கொள்ளுங்கள். (2: 278-279)
வட்டியை மிகச் சாதாரண பாவமாகக் கருதிக்கொண்டு இன்று நம்முள் பலர் அதை வாங்கிக்கொண்டும் கொடுத்துக்கொண்டும் இருக்கின்றனர். சிலர் வங்கியில் ஐந்து அல்லது பத்து ஆண்டுகளுக்குக் குறிப்பிட்ட தொகையை நிரந்தர வைப்புத்தொகையாக வைத்துவிடுகின்றனர். பத்து ஆண்டுகளுக்குப்பிறகு இரட்டை மடங்காகக் கிடைக்கும் என்று கூறுகின்றனர். இதுவும் வட்டிதானே? பணத்திற்குப் பணமோ தங்கத்திற்குத் தங்கமோ கூடுதலாகப் பெற்றால் அதுவே வட்டி என்பதை நீங்கள் எளிதில் புரிந்துகொள்ளலாம். இதேமுறையை நீங்கள் மற்றவற்றோடு ஒப்பிட்டுப் பார்த்து, அதில் வட்டி இருக்கிறதா, இல்லையா என்பதைப் புரிந்துகொண்டு விழிப்புணர்வு அடையலாம். சில்லறைத் தட்டுப்பாட்டைப் பயன்படுத்திச் சிலர் தொண்ணூற்றைந்து ரூபாய் சில்லறையைக் கொடுத்துவிட்டு நூறு ரூபாயைப் பெற்றுக்கொள்கின்றனர். இதில் அதிகமாகப் பெறப்பட்ட ஐந்து ரூபாய் வட்டியாகும் என்பதை நீங்கள் எளிதில் புரிந்துகொள்ளலாம்.
வட்டியைப் பற்றி நன்றாக அறிந்தும் அதிலிருந்து விலகிக்கொள்ள வில்லையானால் அவர்களுக்கு நிரந்தர நரகம் என்று உயர்ந்தோன் அல்லாஹ் எச்சரிக்கை விடுக்கின்றான்: வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். வியாபாரம் வட்டியைப் போன்றதே என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்துவிட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்தபின் விலகிக் கொள்பவருக்கு முன்சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள்; அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (2: 275)
எனவே வட்டியின் பன்முகங்கள் நம்முடைய அன்றாட வாழ்க்கையின் கொடுக்கல் வாங்கல்களில் விரவிக்கிடக்கின்றன. அது எங்கெங்கே எவ்வாறு, என்னென்ன பெயரில் உலா வருகின்றது என்பதை மிகுந்த கவனத்துடன் கண்காணித்து, அதிலிருந்து விலகிக்கொள்வது இறைநம்பிக்கைகொண்டு, அல்லாஹ்வுக்கு அஞ்சி வாழ்கின்ற ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கடமையாகும்.
========================