திங்கள், 16 ஏப்ரல், 2012

உற்சாகம்! (சிறுகதை)


-பாகவியார் 


அடியே ஆயிஷா, என்னடி வேலயப் பாக்காம இப்டி வந்து உக்காந்துட்டே? ஒன்னோட புருஷன் சாப்பாட்டுக்கு வந்துருவான். சீக்கிரம் போயிச் சோறாக்குடி-மைமூனா தன் மருமகளை ஏவினாள்.

இப்பத்தானே மாமி வீடெல்லாம் கூட்டிக் கழுவுனேன். சற்றுப் பொறுங்க மாமி. உடம்பெல்லாம் அலுப்பா இருக்கு. கொஞ்ச நேரம் இளைப்பாறிட்டு செய்யிறேன் என்று மறுமொழி கூறினாள்.

என்னடி நீ ஊர் ஒலகத்துல செய்யாத வேலையச் செய்துட்டே. ஒரே அலுப்பா இருக்குதோ? வீட்டைக் கூட்டிக் கழுவிவிடுறது ஒரு பெரிய வேலையா? நானும்தான் காலையிலிருந்து வேலை செய்யிறேன். களைச்சா போயிட்டேன்? நீ என்னடான்னா ஒன்னு ரெண்டு வேலையச் செய்ததும் களைச்சுப் போறியே? என்று கடினமொழி கூறினாள் மைமூனா.

அதைக் கேட்டு யோசித்துக்கொண்டிருந்த ஆயிஷாவைப் பார்த்து, என்னடி ஆழ்ந்த யோசனை? எதிர்வீட்டு ஃபாத்திமாவைப் பாரு. அவளுக்கும் ஒன்னோட ஒத்த வயசுதான். என்னென்ன வேலை பாக்குறா. காலைல எழுந்ததுலேர்ந்து ராத்திரி படுக்குற வரைக்கும் வேலை பாத்துக்கிட்டுதான் இருக்கா. அவ என்னைக்காவது இப்படிக் களைப்பா உக்காந்து இருப்பாளா?-மாமி கேட்டாள்.

இச்செய்தி ஆயிஷாவுக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. அதை ஆயிஷாவே நேரடியாகப் பார்த்திருக்கிறாள். ஃபாத்திமா தொடர்ந்து வேலை செய்துகொண்டுதான் இருக்கிறாள். ஆனால் ஒரு நாள்கூட களைப்பாக உக்கார்ந்ததில்லை. இதைப் பற்றி ஆயிஷாவிடமே கேட்டுவிட வேண்டும் என்று முடிவுசெய்துகொண்டாள்.

மாலைப் பொழுதில் அஸ்ர் தொழுதுவிட்டு, எதிர்வீட்டு ஃபாத்திமாவைச் சந்திக்கச் சென்றாள் ஆயிஷா. வா, ஆயிஷா! தொழுதுட்டியா? இன்னைக்கி என்ன சோறு? என்ன சால்னா? என்று அடுக்கடுக்காய் கேள்விகளை அள்ளி வீசினாள் ஃபாத்திமா.

எல்லாவற்றிற்கும் பதில் சொல்லிவிட்டு, ஏக்கா! நான் ஒங்களிடம் ஒன்னு கேக்கலாமா? என்று பூடகமாகத் தொடங்கினாள்.

ஒன்னு என்ன, ஒன்பது கேளு. நான் பதில் சொல்றேன் என்று தாராளமாகக் கேட்க அனுமதித்தாள் ஃபாத்திமா.

நாங்களெல்லாம் ஒன்னு, ரெண்டு வேலையச் செய்தாலே களைப்படஞ்சி போறோம். ஆனா, நீங்க மட்டும் நாள் பூரா வேலை செய்தாலும் களைப்பே அடையறதில்லையே? அது எப்படிக்கா ஒங்களால மட்டும் முடியுது? அதன் இரகசியம் என்னன்னு சொன்னா நானும் அதைத் தெரிஞ்சுக்குவேன் இல்லையா? என்று பட படவெனக் கேட்டாள்.

ஆயிஷா, ஒனக்கு விசயமே தெரியாதா? ஒரு தடவை ஃபாத்திமா நாயகி தம்மோட தந்தையான முஹம்மது நபியிடம் போனாங்க. அப்ப, நபிகளாரிடம் போரில் கிடைத்த அடிமைகள் இருந்தாங்க. அதுல ஒரு அடிமைய வாங்கிட்டு வரலாம்னு போனாங்க. அந்த நேரம் பாத்து வீட்ல முஹம்மது நபி இல்லை. வந்த விசயத்த ஆயிஷா நாயகியிடம் சொல்லிட்டுவீட்டுக்குத் திரும்பி வந்துட்டாங்க.

நபிகளார் வீட்டுக்கு வந்தபோது, அவங்களோட மகள் ஃபாத்திமா வந்துட்டுப் போன விசயத்தச் சொன்னாங்க. உடனே ரசூலுல்லாஹ் தம்மோட மகள் வீட்டுக்குப் போனாங்க. அந்த நேரம் பாத்து, ஃபாத்திமா நாயகியும் அலீயாரும் தூங்குறதுக்காகத் தயாராகிக் கொண்டிருந்தாங்க. அந்த நேரத்துல அவங்க ரெண்டு பேருக்கும் இடையிலே நபிகள் நாயகம் உக்காந்துகிட்டாங்க.

மகளே! நான் ஒரு விசயத்தச் சொல்றேன். அதை நீ ஓதிக்கொண்டால் அது ஓர் அடிமையைவிடச் சிறந்தது என்று சொன்னாங்க. அது என்ன அல்லாஹ்வின் தூதரே! என்று ஆவலாக் கேட்டாங்க. நீ தூங்குமுன் 33 தடவை சுப்ஹானல்லாஹ், 33 தடவை அல்ஹம்து லில்லாஹ், 34 தடவை அல்லாஹு அக்பர் ஓதிக்கொள் என்று சொன்னாங்க.

அன்று முதல் அந்த திக்ரை ஃபாத்திமா நாயகி தவறாம ஓதி வந்தாங்க. அதைத்தான் நானும் கடைப்பிடிக்கிறேன்.

அது மட்டுமில்ல ஆயிஷா, நான் வேலை செய்யும் போதே சுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், அல்லாஹு அக்பர் போன்ற திக்ருகளை செய்துகொண்டே என்னோட வேலைகளச் செய்யறதால எனக்கு எந்த அலுப்பும் தெரியிறதில்ல. களைப்பும் ஏற்படுறதில்ல என்று சொல்லி முடித்தாள் ஃபாத்திமா.

அட, ரொம்ப எளிதாவும் சுருக்கமாவும் இருக்கே. இத ஓத எனக்கென்ன சிரமம்? இனி நானும் உங்க வழிய, இல்ல இல்ல, அன்னை ஃபாத்திமா நாயகி வழியக் கடைப்புடிக்கிறேன் என்று உற்சாகத்துடன் புறப்பட்டாள் ஆயிஷா.
------------------------------------