தெற்கு தேய்கிறது வடக்கு வளர்கிறது
நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு மாதுளை மரத்தடியில் தொடங்கப்பட்ட ஓர் அரபி மதரசா இன்று வானளாவ வளர்ந்தோங்கி நிற்கிறது. அதுதான் இந்தியாவின் வடக்கே அமைந்துள்ள தாருல் உலூம் தேவ்பந்த் அரபுப் பல்கலைக்கழகம். கிட்டத்தட்ட அதே பருவத்தில் ஒரு திண்ணையில் தொடங்கப்பட்ட ஓர் அரபி மதரசா நாள்தோறும் தேய்பிறைபோல் தேய்ந்து வருகிறது. இது தென்னிந்தியாவில் அமைந்துள்ள அல் பாக்கியாத்துஸ்ஸாலிஹாத் அரபுக் கல்லூரி. வட இந்தியாவில் ஓர் அரபி மதரசா மவ்லவி முஹம்மது காசிம் ஸாஹிப் என்பவரால் தொடங்கப்பட்டது. அது நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து, இன்று பல்வேறு பாடப்பிரிவுகளையும் பற்பல கட்டடங்களையும் உள்ளடக்கி, கல்வித்துறையில் பெருவளர்ச்சி பெற்று மாபெரும் பல்கலைக்கழகமாகத் திகழ்ந்துகொண்டிருக்கிறது. அதன் பெயரைச் சொன்னால் உலகின் எந்த மூலையில் உள்ளோரும் அதனை அறிவர். அன்று சொற்ப மாணவர்களால் தொடங்கப்பட்ட தேவ்பந்த் மதரசாவில் இன்று ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். மார்க்கக் கல்வியைத் தேடி உலகின் பல பகுதிகளிலிருந்து மாணவர்கள் சாரைசாரையாக வருகின்றனர். இந்தியாவின், கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களிலிருந்தும் மாணவர்கள் அங்கு பயின்றுதொண்டிருக்கின்றனர். இங்கு பட்டம்பெற்று வெளிவந்துள்ள மாணவர்கள் தரணியெங்கும் நிறைந்துள்ளனர். தென்னிந்தியாவில், பாக்கியாத் அரபு மதரசா மவ்லவி ஷாஹ் அப்துல் வஹ்ஹாப் ஸாஹிப் என்பவரால் தொடங்கப்பட்டது. சொற்ப மாணவர்களால் தொடங்கப்பட்ட இந்த மதரசா கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சியடைந்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்ற அரபுக் கல்லூரியாக உருவானது.
தென்னிந்திய மாநிலங்களிலிருந்து மாணவர்கள் பலர் பயின்று வந்தனர். இங்கிருந்து பட்டம்பெற்று வெளிவந்துள்ள மாணவர்கள் உலகின் பல பாகங்களில் பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றி வந்தாலும் இன்றைய சூழ்நிலையில் இக்கல்லூரியின் வளர்ச்சி குன்றத் தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது. மாணவர்களின் வருகை மிகவும் குறைந்துவருகிறது. இது ஏன்? எந்த ஒரு கட்டடமும் இன்றி ஒரு மாதுளை மரத்தின்கீழ் தொடங்கப்பட்ட தேவ்பந்த் கலாசாலைக்கு இன்று பற்பல கட்டடங்களும் மாணவர் விடுதிகளும் உள்ளன. பல்கலையின் வளாகத்திற்குள்ளேயே இரண்டு மஸ்ஜிதுகளும் உள்ளன. விசாலமான பாட அறைகளும் நிறைந்துள்ளன. அதே காலத்தில் தொடங்கப்பட்ட பாக்கியாத் பாடசாலைக்கு மிகப்பெரும் கட்டடங்கள் சில இருந்தாலும் அதன் நிர்வாகத்தின்கீழ் ஒரு மஸ்ஜித் கிடையாது. தேவ்பந்த் கலாசாலையில் அறுபதுக்கும் மேற்பட்ட தலைசிறந்த பேராசிரியர்களும் இருபதுக்கும் மேற்பட்ட ஊழியர்களும் செவ்வனே சேவையாற்றி வருகின்றனர். அங்குள்ள பேராசிரியர்களின் சிறப்பென்னவென்றால், அவர்களில் பலர், தம் துறைசார்ந்த மற்றும் சாராத ஒன்றுக்கும் மேற்பட்ட நூற்கள் எழுதியிருக்கின்றனர். அவர்களின் மிகுந்த அனுபவத்தாலும் தேர்ந்த கல்வியாலும் சிறந்த மாணவர்களை அவர்கள் உருவாக்க முடிகிறது. பாக்கியாத் பாடசாலையில் ஆசிரியராகச் சேருவதற்கு பல கட்டுப்பாடுகளும் நிபந்தனைகளும் இருந்தன. இக்கல்லூரியில் ஆசிரியராகச் சேர்பவர் வயதில் மூத்தவராகவும் அவர் இக்கல்லூரியில் பயின்றவராகவும் இருக்க வேண்டுமென்பது அந்நிபந்தனைகளில் சில. ஆனால், இன்று எல்லாக் கட்டுப்பாடுகளும் முறியடிக்கப்பட்டுவிட்டன. இக்கல்லூரியில் நீண்ட காலம் பேராசிரியர்களாகப் பணியாற்றி, கல்வியில் தேர்ச்சியும் புலமையும் பெற்ற பலர் ஒவ்வோர் ஆண்டும் நீக்கப்பட்டுக்கொண்டே வருகின்றனர். அவர்களுக்குப பதிலாக, இன்று அக்கல்லூரியில் பட்டம் பெறாதவர்களும், ஏற்கனவே ஆசிரியப் பணிபுரிந்த அனுபவம் இல்லாதவர்களும் இளவயதுடையோரும் பேராசிரியர்களாகச் சேர்க்கப்படுகின்றனர். அனுபவக்குறைவும் கல்வியில் முதிர்ச்சியின்மையும் கொண்ட ஆசிரியர்களால் திறமைமிக்க மாணாக்கர்களை உருவாக்க முடியாது என்பது பேரறிஞர்களின் கூற்றாகும். ஆரம்ப வகுப்புகள், குர்ஆன் மனனப் பிரிவு, மவ்லவிப் பிரிவு, ஹதீஸ் கலை, தஃப்சீர் கலை, அரபுமொழிக் கலை(அதீபு) மற்றும் சட்ட வல்லுநர் பிரிவு (இஃப்தா) என பல்வேறு கலைப்பிரிவுகள் அங்கு உள்ளன. அத்துடன் மாணவர்களுக்குத் தொழில் நுட்பப் பயிற்சியும் கணினிப் பயிற்சியும் அளிக்கப்படுகின்றன. மேலும் சுதந்திரப் போராட்டக் காலத்தில் ஹறாம்-தடை என அறிவிக்கப்பட்ட ஆங்கில மொழியும் காலத்தின் கட்டாயம் கருதி அங்கு பயிற்றுவிக்கப்படுகின்றது. பாக்கியாத் கல்லூரியில் குர்ஆன் மனனப் பிரிவு, ஆரம்ப வகுப்புகள், மவ்லவிப் பிரிவு, பட்ட மேற்படிப்பு இவையே உள்ளன. இவை தொடக்கக் காலத்தில் தொடங்கப்பட்டவையே ஆகும். காலத்திற்கேற்ற கணினிக் கல்வியோ ஆங்கிலக் கல்வியோ பயிற்றுவிக்கப்படுவதில்லை. மட்டுமின்றி, சென்னைப் பல்கலைக் கழகத்தின் மூலம் நடத்தப்படுகின்ற ‘அஃப்ழலுல் உலமா’ எனும் அரபி இளநிலைப் பட்டத்திற்கு நிகரான தேர்வை ஏற்கனவே பயின்ற மாணவர்கள் எழுதிவந்தனர். தற்போது, மாணவர்கள் அத்தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளனர். மேலும் சென்னைப் பல்கலைக் கழக செனட் உறுப்பினர் பதவியும் இக்கல்லூரியின் கல்விக்குழுவால் துறக்கப்பட்டுள்ளது. தாருல் உலூம் பல்கலையிலிருந்து ‘அத்-தாயீ’ எனும் அரபுமொழி மாத இதழும் உர்தூவில் ஒரு மாத இதழும் வெளிவருகின்றன. ஆனால், பாக்கியாத் கல்லூரியிலிருந்து எந்த மாத இதழும் வெளிவருவதில்லை. தமிழ் மக்களின் பயனுக்காக அண்மைக் காலமாக குர்ஆன் விளக்கவுரை-ஜவாஹிருல் குர்ஆன் ஆண்டுக்கு ஒரு முறை வெளியிடப்படுகிறது. தாருல் உலூமில் விசாலமான நூலகம் உள்ளது. புத்தகக் கடல் என்று எண்ணுமளவிற்கு அதில் நூற்கள் நிறைந்துள்ளன. மாணவர்கள் சுவாசிப்பதைப் போல் வாசிக்க அனுமதியும் வழங்கப்படுகிறது. தகுதியான எல்லா மணவர்களுக்கும் மாதந்தோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. படித்துப் பட்டம் பெறும்போது பட்டத்துடன் பிறப்புச் சான்றிதழ், நன்னடத்தைச் சான்றிதழ், அயல்நாடு சென்று மேற்படிப்பைத் தொடர குடியேற்றச் சான்றிதழ் போன்ற பல சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன. அவை அரபியிலும் ஆங்கிலத்திலும் வழங்கப்படுவதால் மணவர்கள் மிகுந்த பயனடைகின்றனர். ஆனால் பாக்கியாத் கல்லூரியில் பட்டம் பெறக்கூடிய மாணவர்களுக்கு சனது (பட்டம்) மட்டுமே வழங்கப்படுகிறது. அது அரபு மொழியில் மட்டும் உள்ளதால் மற்றவர்களுக்கு அது புரிவதில்லை. அதனால் அவர்கள் பணியில் சேரும்போது யாரும் அதைக் கேட்பதுமில்லை. வடக்கே அமைந்துள்ள அரபுப் பல்கலைக் கழகம் நாளுக்கு நாள் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்க, தெற்கே அமைந்துள்ள தாய்க்கல்லூரியாம் அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபுப் கல்லூரி நாளுக்கு நாள் தொய்வடையக் காரணமென்ன? தென்னக ஆலிம்களா? அல்லது மார்க்கக் கல்வி பற்றிய ஆர்வமே இல்லாத பொதுமக்களா? அல்லது ஆலிம்களுள் சிலரின் பிற்போக்குச் சிந்தனையா? யார் காரணம் என்பதைக் கண்டறிந்து அதனைச் சரிசெய்ய நல்லுள்ளம் கொண்டோர் முயல வேண்டும். தென்னிந்தியாவின் தாய்க்கல்லூரி இனி அசுர வளர்ச்சியடைந்து நவீன தொழில் நுட்பக் கல்வி மற்றும் கணினிக்கல்வியின் துணையுடன் கல்விப் புரட்சி செய்ய நாம் யாவரும் இறைவனிடம் கையேந்துவோம்!
18 12 2008 அன்று பதிவு செய்யப்பட்டது.
1 கருத்து:
மார்க்கத்திற்கு முரணான அனாச்சாரங்களுக்குக் குடை பிடிப்பதைக் குறித்து நீங்கள் எதுவும் எழுதவில்லையே. வடக்கு போன்று தெற்கில் உள்ள மக்கள் ஆலிம்கள் சொல்வதைக் கண்ணையடைத்துக் கொண்டு பின்பற்றிச் செல்ல தயாராக இல்லாததும் ஒரு காரணம் என்பதைக் குறித்து எதுவுமே கூறவில்லையே.
மார்க்கக்கல்வி என்பது உலகக்கல்வியோடு இணைத்துப் போதிக்கப்பட வேண்டும். இரண்டையு7ம் வெவ்வேறாக்கி, மார்க்கத்தில் இல்லாத அனாச்சாரங்கள், மூடபழக்கவழக்கங்களை நியாயப்படுத்தும் ஆலிம்களை உருவாக்கி விடுவதை எத்தனை நாட்களுக்குத் தான் மக்கள் பொறுத்துக் கொள்வர்?
காலத்தோடு தென்னக மக்களும் நல்ல சிந்தனைத் தெளிவைப் பெற்றுள்ளனர் என்பதை பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் நிர்வாகிகள் புரிந்துக் கொண்டு, அதற்குத் தகுந்தது போன்று பாடதிட்டத்தையும் நிர்வாகத்தையும் மாற்றியமைத்தால் தென்னகத்திலிருந்தும் ஒரு அரபி பல்கலை கழகம்..... இறைவன் உதவியால் விரைவாக எதிர்பார்க்கலாம். இல்லையேல்......!
கருத்துரையிடுக