இன்றைக்கு (28/10/2011) என்னுடைய பேராசிரியர் மௌலவி பீ.எஸ். பீ.ஜைனுல் ஆபிதீன் பாகவி அவர்கள் நுங்கம்பாக்கம் ஜும்ஆ மஸ்ஜிதில் ஆற்றிய உரையின் சுருக்கம்:
மனிதர்கள் தத்தம் அறிவுக்கேற்பச் செயல்படுவது மார்க்கம் இல்லை. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எதைக் கட்டளையிட்டிருக்கிறார்களோ அதை அப்படியே ஏற்றுச் செயல்படுவதே மார்க்கம் ஆகும்.
ஒருவர் தொழுகாமல் பல இலட்சம் தர்மம் செய்தாலும் கடமையான இரண்டு ரக்அத்தின் நன்மையை அதில் பெற்றுக்கொள்ளவே முடியாது.
ஒருவர் கடமையான நோன்பு நோற்காமல், பிறகு ஆயிரம் நாள் நோன்பு நோற்றாலும் அதற்கு ஈடாகாது.
அதுபோல் குர்பானி நாளில் குர்பானி கொடுக்காமல் அதற்குப் பகரமாக பல்லாயிரம் ரூபாயை ஏழைகளுக்குத் தானமாக வழங்கினாலும் அந்தத் தியாகத்தின் நன்மையை அடைய முடியாது.
எனவே சில அறிவிலிகள் கூறுவதைப்போல் நீங்கள் செயல்படக்கூடாது. பக்ரீத் பெருநாளில் ஒரேநேரத்தில் பல்லாயிரம் ஆடு, மாடுகள் அறுக்கப் படுகின்றன. அதற்குப் பதிலாக அதைப் பணமாக ஏழைகளுக்குக் கொடுத்தால் அவர்கள் பயன்பெறுவார்களே. இது கேட்க நன்றாக இருக்கலாம். ஆனால் ஆட்டை அறுத்து அதில் வெளிப்படுகின்ற தியாகம் மற்ற எதிலும் நாம் பெறவே முடியாது.
ஒவ்வொரு வணக்கத்திலும் ஒரு தத்துவம் உள்ளது. அதை அந்தந்த வணக்கத்தில்தான் பெறமுடியும்.
தொழுகையில் நாம் நம்முடைய அடிமைத்தனத்தை அல்லாஹ்வுக்குச் சமர்ப்பிக்கிறோம்.
நோன்பில் நம்முடைய பொறுமையை, சகிப்புத்தன்மையை வெளிப்படுத்துகிறோம்.
ஸகாத் - கொடுக்கும் தன்மையை நம்மில் வளர்க்கிறது.
ஹஜ்- விட்டுக்கொடுப்பதை வளர்க்கிறது.
இப்படி ஒவ்வொன்றும் ஒரு தத்துவத்தைக் கூறுகிறது.
எனவே நாம் இந்த பக்ரீத் பெருநாளில் ஆடு, மாடுகளை அறுத்துப் பலியிட்டு அல்லாஹ்விடம் முழுமையான நற்கூலியைப் பெறுவோம்.
கேட்டவர்: மாணவர் நூ. அப்துல் ஹாதி பாகவி