சனி, 19 டிசம்பர், 2009

இஸ்லாமியப் புத்தாண்டு

ஒவ்வொரு சமயத்தாரும் ஆண்டின் தொடக்கத்தைக் குறிப்பதற்கு தமக்கென ஒரு கணக்கு வைத்துள்ளனர். அந்த வகையில் முஸ்லிம்களும் தமக்கென ஒரு கணக்கு வைத்துள்ளனர். அது ஹிஜ்ரீ ஆண்டாகும்.

முஹம்மது (ஸல்) அவர்கள் தம் தாயகத்தைத் துறந்து மதீனா நகரம் சென்றார்கள். அந்தப் பயணம் 'ஹிஜ்ரத்' என்று அழைக்கப்படுகிறது. நபியவர்கள் தம் தாயகத்தைத் துறந்து மதீனா சென்றடைந்த நாளிலிருந்து இக்கணக்கு தொடங்குவதால் இது 'ஹிஜ்ரீ' ஆண்டு எனப்படுகிறது.

ஆனால், இதற்குப் பதினேழு ஆண்டுகளுக்குப்பின் இரண்டாம் கலீஃபா உமர் (ரழி) அவர்கள் தம் ஆட்சிக் காலத்தின்போது நபியவர்கள் மதீனா வந்து சேர்ந்த இரபீஉல் அவ்வல் மாதத்திலிருந்து ஹிஜ்ரீ ஆண்டு கணக்கிடப்படாது. மாறாக, முஹர்ரம் மாதத்திலிருந்துதான் கணக்கிடப்பட வேண்டும் என்று ஒழுங்கு செய்தார்கள். அந்த முறைப்படியே தற்போது ஹிஜ்ரீ ஆண்டு கணக்கிடப்படுகின்றது. இதன் அடிப்படையில் இஸ்லாமிய ஆண்டு முஹர்ரம் மாதத்தில் தொடங்கி துல்ஹஜ்ஜு மாதத்தில் நிறைவடைகிறது.

இந்தியாவில் இன்று (19-12-2009) இஸ்லாமிய ஆண்டின் 1431ஆம் ஆண்டு தொடங்குகின்றது. விண்ணையும் மண்ணையும் படைத்தபோதே ஓர் ஆண்டுக்கு பன்னிரண்டு மாதங்கள் என அல்லாஹ் நிர்ணயித்துவிட்டான்.


அது பற்றி அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறியுள்ளான்: "வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதல்-அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளவாறு அல்லாஹ்விடம் திண்ணமாக மாதங்களின் எண்ணிக்கையானது (ஓராண்டுக்குப்) பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றுள் நான்கு (துல்கஅதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம் மற்றும் ரஜப்) மாதங்கள் கண்ணியமானவையாகும்." (09: 36)

இந்த வசனத்தில், 'அவற்றுள் நான்கு மாதங்கள் கண்ணியமானவை' என்று கூறப்பட்டுள்ளது. ஏனென்றால், அக்காலத்தில் அரபியர்கள் தொடர்ந்து தங்களுக்குள் போர் செய்துகொண்டிருந்தனர். எனவே, அவர்கள் அதை நிறுத்தி அந்நான்கு மாதங்கள் அமைதியாக வாழ வேண்டும் என்பதற்காகவே இறைவன் அவ்வாறு கூறியுள்ளான்.

ஹிஜ்ரீ ஆண்டின் முதல் மாதம் முஹர்ரம். இதில் உள்ள பத்தாம் நாள் 'ஆஷூரா' என அழைக்கப்படுகிறது. இந்நாளில் மகிழ்ச்சியான மற்றும் சோகமான பல்வேறு நிகழ்வுகள் நடந்துள்ளதாக இஸ்லாமிய வரலாறு கூறுகின்றது. அதன் அடிப்படையில், இந்நாள் முஸ்லிம்களிடம் ஒரு புனித நாளாகக் கருதப்படுகிறது.

நபியவர்கள் மதீனா வந்து சேர்ந்த சமயத்தில் அங்கிருந்த மக்களின் நிலையைக் கண்டார்கள். அவர்களுள் யூதர்கள் 'ஆஷூரா' நாளில் நோன்பு நோற்பதைக் கண்டு, "நீங்கள் நோன்பு நோற்கின்ற இந்த நாளின் சிறப்பென்ன?" என்று அவர்களிடம் வினவினார்கள். "இது ஒரு மகத்தான நாள். இதில்தான் இறைவன் மூசா நபியையும் அவருடைய சமுதாயத்தையும் காப்பாற்றி ஃபிர்அவ்னையும் அவனுடைய படையினரையும் (கடலில்) மூழ்கடித்தான். எனவே, அதற்காக மூசா நபி தம் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு அந்நாளில் நோன்பு நோற்றார். ஆக வே, நாங்கள் அந்நாளில் நோன்பு நோற்கின்றோம்" என்று விடையளித்தார்கள்.

இதனைக் கேட்ட நபியவர்கள் மூசாவைப் பின்பற்றுவதற்கு உங்களைவிட நாங்களே மிகத் தகுதியானவர்கள் என்று கூறியதோடு அந்நாளில் தாமும் நோன்பு நோற்றார்கள். தம் தோழர்களையும் நோன்பு நோற்கும்படி கட்டளையிட்டார்கள். (நூற்கள்: புகாரீ, முஸ்லிம்)

மேலும், நபியவர்கள் கூறினார்கள்: "ஆஷூரா நாளில் நோன்பு நோற்றுக்கொள்ளுங்கள். அதில் யூதர்களுக்கு மாறுசெய்யுங்கள். எனவே, அந்நாளுக்கு முன்போ பின்போ ஒரு நாள் நோன்பு நோற்றுக்கொள்ளுங்கள்." (நூல்: அஹ்மது)

ஆஷூரா நாளின் சிறப்புக்குக் காரணம், நான்காம் கலீஃபா அலீ (ரழி) அவர்களின் மகன் ஹுசைன் (ரழி) அவர்கள் கர்பலா போர்க்களத்தில் கொல்லப்பட்டதுதான் என்று சிலர் கூறுவர். இது தவறாகும். ஏனெனில், இதன் சிறப்பு அவர்கள் பிறப்பதற்கு முன்பிருந்தே இருக்கின்றது. ஆனால், ஹுசைன் (ரழி) அவர்களின் வீரமரணத்திற்கு, சிறப்புக்குரிய இந்த நாளை இறைவன் தேர்ந்தெடுத்தான் என்பதுதான் உண்மை.

மேலும், இந்த நாளைத் துக்க நாளாகக் கருதுவது, இம்மாதத்தில் பத்து நாட்கள் வரை கருப்பு ஆடைகள் அணிவது, தமக்குத்தாமே உடலைக் கீறிக் கிழித்துக்கொண்டு இரத்தம் சிந்துவது, தீ மிதிப்பது போன்றவை இஸ்லாமிற்கு முரணான செயல்களாகும். இஸ்லாமிய மார்க்கத்தையும் அதன் வரலாற்றையும் சரியாக விளங்காதவர்கள்தாம் இவ்வாறு செய்துகொண்டிருப்பார்கள்.

எனவே, அறிவுக்குப் பொருந்தாத செயல்களைவிட்டு நீங்கி, முஹம்மது நபியவர்கள் நமக்குக் காட்டித் தந்த வழிகாட்டுதல்களின்படி இப்புத்தாண்டு முதல் நம் வாழ்வை அமைத்துக்கொள்ள முனைவோம். மேலும், நாம் நம்முடைய பிறப்பு, திருமணம், இறப்பு மற்றும் அன்றாட வாழ்வில் ஹிஜ்ரீ தேதியைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டால் இஸ்லாமிய வரலாற்றை எளிதாக விளங்கிக்கொள்ளலாம். அத்தோடு பிறை சார்ந்த குழப்பமும் நீங்கிவிடும்.

நம்முடைய இம்மையும் மறுமையும் சிறப்பாக அமைய அல்லாஹ் அருள்புரிவானாக!

அனைவருக்கும் என் இதயங்கனிந்த இஸ்லாமியப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை: