வெள்ளி, 30 டிசம்பர், 2016

விரைவில் வெளிவருகிறது...




இனிய திசைகள் ​டிசம்பர்​'2016 இதழ்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.வப.)
இறையருள் நம் அனைவர்மீதும் பொலிவதாக...​
இனிய திசைகள் 
​டிசம்பர்​
'2016 இதழைப் படிக்க அட்டைப் படத்தின்மீது “CLICK" செய்க....
 
​  ​
தங்கள் வசதிக்காக PDF இணைப்பும் உள்ளது. 
 
​  ​
அன்புகூர்ந்து இனிய திசைகளைப்
​ ​
படித்தும் தங்கள் உற்றார், உற
​வினர்கள்​   
    மற்றும் 
நண்பர்கள் ​குழாத்திற்கு அனுப்பிப் பரப்பியும்
​ 
​    
தங்களது மேலான சிந்தனைகளைத்
​ ​
தெரிவித்தும் உதவுக....
நன்றி,
வஸ்ஸலாம்,

Inline image 1
Attachments area

வெள்ளி, 23 டிசம்பர், 2016

நபிகளார் நவின்ற நான்குகள் (தொடர்-9)


முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி எம்.ஏ., எம்.ஃபில்., பிஎச்.டி.

நான்கு நபர்களை மாண்பும் வல்லமையுமிக்க அல்லாஹ் வெறுக்கின்றான். (அவர்கள் வருமாறு:) அதிகமாகச் சத்தியம் செய்து விற்பனை செய்பவர்; பெருமையடிக்கும் ஏழை; விபச்சாரம் புரியும் முதியவர்; அநீதி செய்யும் தலைவர்என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (நூல்: நஸாயீ: 2529) இதை அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பொதுவாக ஒருவர் வியாபாரத்தில் ஈடுபடும்போது பொய் பேசுவது தவிர்க்க முடியாதது. அத்தகைய சூழல்தான் இன்றைய கலிகாலத்தில் நிலவுகிறது. ஆனால் அவ்வாறு பொய் சொல்லி வியாபாரம் மேற்கொள்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டுமென இஸ்லாமிய மார்க்கச் சட்டம் வலியுறுத்திக் கூறுகிறது. தவறான முறையில் உழைத்த சம்பாத்தியம் நன்மை பயக்காது. எனவேதான் இஸ்லாம் முறைதவறிய சம்பாத்தியத்தைத் தடைசெய்கிறது.
அக்கால அரபியர்கள் அடிக்கடி சத்தியம் செய்வது அவர்களின் பழக்கம். அதனால்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதிகமாகச் சத்தியம் செய்து விற்பனை செய்பவனை அல்லாஹ் வெறுப்பதாகக் கூறியுள்ளார்கள்.  அடிக்கடி சத்தியம் செய்து பொருளை விற்பனை செய்வதன் மூலம் அவர் பல தடவை பொய்ச்சத்தியம் செய்ய வேண்டியிருக்கும். அதற்கெல்லாம் அல்லாஹ்வுடைய தண்டனையைப் பெற்றுத்தானே ஆக வேண்டும்?

வியாபாரத்தில் பொய்யைத் தவிர்க்க முடியாது. எனவேதான் ஒரு கவிஞன் சொன்னான்: அவன் கடையைத் திறந்தான், திறந்தவுடன் முதன் முதலாக உண்மையை விற்றான்.ஆம். இதுதான் இன்றைய நிலை. மூன்றுகள் எனும் தொடரில் நான் ஏற்கெனவே எழுதிய ஒரு நபிமொழி, பொய்ச்சத்தியம் செய்து தன் பொருளை வியாபாரம் செய்பவனை அல்லாஹ் மறுமை நாளில் பார்க்க மாட்டான். (திர்மிதீ: 1132)

ஆகவே எவரெல்லாம் விற்பனை செய்வதில் ஈடுபட்டுள்ளாரோ அவரெல்லாம் பொய் பேசி வியாபாரம் செய்வதை முற்றிலுமாகத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். இல்லையேல் நாளை மறுமையில் இழிவடைய நேரிடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

பெருமை என்பது யாருக்கும் கூடாது. அதிலும் குறிப்பாக ஏழைக்குப் பெருமை அறவே கூடாது. ஏனென்றால்  பெருமை என்பது எனது மேலாடை; கண்ணியம் என்பது எனது கீழாடை. அவ்விரண்டில் ஒன்றை எவர் என்னிலிருந்து கழற்ற முற்படுகின்றாரோ அவரை நான் நரகத்தில் போட்டு (வேதனை செய்து) விடுவேன்என்று மகத்துவமும் வல்லமையும் கொண்ட அல்லாஹ் கூறியதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (நூல்: அபூதாவூத்: 3567)

பெருமை குறித்து அல்லாஹ் திருக்குர்ஆனின் பல்வேறு இடங்களில் எச்சரிக்கை செய்துள்ளான். பூமியில் பெருமையாக நடக்காதே. நிச்சயமாகக் கர்வம்கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.  (31: 18)  பூமியில் (பெருமையுடன்) கர்வம்கொண்டு நடக்க வேண்டாம். ஏனென்றால், நிச்சயமாகப் பூமியைப் பிளந்து விடவோ மலையின் உச்சியை அடைந்து விடவோ உங்களால் முடியாது.” (17: 37) அதேநேரத்தில் ஒரு செல்வந்தன் தன்னுடைய பணத்திமிரால் பெருமை கொண்டான் என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்கிறது என்று சொல்லலாம்.  ஒன்றுமே இல்லாத ஓர் ஏழை பெருமை கொள்ள என்ன இருக்கிறது? அல்லாஹ்வுக்கு முன்னால் பணிந்து மண்டியிட்டு அல்லவா இருக்க வேண்டும்? அவன் பெருமை கொள்ளலாமா?

பெருமை என்பது பல வழிகளில் ஏற்படலாம். செல்வத்தால் பெருமையடிக்கலாம். கல்வியால் பெருமையடிக்கலாம். அல்லாஹ்விடம் எனக்கு எந்தத் தேவையும் இல்லை என்று அவனிடம் எதையும் கேட்காமல் இருக்கலாம். அதுவும் பெருமைதான்.

உங்கள் இறைவன் கூறுகின்றான்: "நீங்கள் (உங்களுக்கு வேண்டியவை அனைத்தையும்) என்னிடமே கேளுங்கள். நான் உங்களுடைய பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொள்வேன். என்னை வழிபடாமல் பெருமையடிக்கின்றவர்கள் நிச்சயமாகச் சிறுமைப்பட்டவர்களாக நரகம் புகுவார்கள். (40: 60) ஆகவே  பெருமையடித்தல் முற்றிலுமாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. அது எவ்வகைப் பெருமையாக இருப்பினும் சரியே! 

விபச்சாரம் ஒரு மானக்கேடான செயல்என்று திருக்குர்ஆன் கூறுகிறது. அதை நெருங்கவும் வேண்டாம்என அது எச்சரிக்கை விடுக்கிறது. அந்த எச்சரிக்கையையெல்லாம் மறந்துவிட்டு, இன்றைய கலியுகத்தில் சிலர் தவறான பாதையை நோக்கிச் சென்றுகொண்டுதான் இருக்கின்றார்கள். ஓர் இளைஞன் திருமணம் செய்வதற்கு முன்பே விபச்சாரம் செய்துவிட்டால் அவனுக்கு நூறு கசையடி தண்டனையாகக் கொடுக்க வேண்டும். திருமணம் செய்தபின் அவன் விபச்சாரம் செய்துவிட்டால் கல்லால் எறிந்து கொலை செய்ய வேண்டும். இதுவே இஸ்லாமியச் சட்டம். இஸ்லாம் வகுத்துள்ள வரைமுறையை மீறிச் செல்பவருக்குக் கடுமையான தண்டனை உண்டு என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம்.

ஓர் இளைஞன், கட்டுப்படுத்த முடியாத தன் உணர்ச்சிகளின் உந்துதலால் ஏதோ ஒரு தடவை தவறு செய்துவிடலாம்.  அதனை அறிவு ஏற்றுக்கொள்ளும். ஆனால் எல்லாம் அடங்கி, உணர்ச்சிகள் முடங்கிப்போன ஒரு முதியவர் எவ்வாறு விபச்சாரம் செய்யலாம்? உணர்ச்சிகள் யாவும்  தன் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு முதியவர் விபச்சாரம் செய்கின்றார் என்றால், அவருக்கு இறைவனைப் பற்றிய அச்சம் அறவே இல்லை என்றுதான் பொருள். அத்தகையவருக்குக் கேடுதான் என்பதைவிட வேறென்ன சொல்ல முடியும்

இன்றைய கலியுகத்தில் வயதில் மூத்தவரும் இளஞ்சிறுமிகளை வன்புணர்வு செய்துவிடுகின்ற செய்திகளை நாளிதழ்களில் படிக்க நேரிடும்போது, நமது மனம் மிகுந்த வேதனைக்குள்ளாகிறது. எனவே இத்தகைய இழிநிகழ்வுகள் எதுவும் இஸ்லாமிய வட்டத்திற்குள் வாழ்வோருக்கு நடந்துவிடக் கூடாது என்பதற்காகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு முன்னெச்சரிக்கை செய்துள்ளார்கள். அந்த அறிவுரையைப் பின்பற்றி வாழ்வதை  ஒரு நற்பேறாகக் கருத வேண்டும்.
ஒருவர் மற்றொருவருக்கு அநீதி இழைப்பது மிகப்பெரும் குற்றமாகும். சாதாரணமாக வாழ்கின்ற ஒருவன் மற்றொருவனுக்கு அநீதியிழைக்க ஏதோ ஒரு காரணம் இருக்கும். அல்லது அது தவறுதலாகக்கூட நேர்ந்திருக்கலாம். ஆனால் தலைவனாக உள்ள ஒருவன் மற்றொருவனுக்கு அநீதியிழைக்கின்றானென்றால் அதற்கு எந்தச் சாக்குப்போக்கும் கூற முடியாது. தலைமைப் பொறுப்பில் உள்ளவன் பிறருக்கு அஞ்ச வேண்டிய தேவையில்லை; யாரேனும் தன்னை அச்சுறுத்துவார் என்ற அச்சமும் இல்லை. யாருக்கும் பணிந்து செல்ல வேண்டுமென்ற நிர்ப்பந்தமும் இல்லை. 

அவ்வாறிருக்க அவன் மற்றவனுக்கு அநியாயம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? அதனால்தான் அல்லாஹ் அவனை வெறுக்கின்றான். அவனுக்கு மறுமையில் கடுமையான தண்டனை கொடுப்பான் என்பதில் ஐயமில்லை. அநியாயம் செய்யப்பட்டவன் செய்யும் பிரார்த்தனைக்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையுமில்லை. அது நேரடியாக அங்கீகரிக்கப்படும்என்பதைத் தலைவனாக உள்ளவன் உணர்ந்து செயல்பட வேண்டும்.

ஆக, பொய்ச்சத்தியம் செய்தல், பெருமையடித்தல், விபச்சாரம் செய்தல், அநியாயம் செய்தல் முதலிய பாவங்களில் நாம் சிக்கிவிடாமல் நம்மை அல்லாஹ் பாதுகாப்பானாக.
                        -இன் ஷாஅல்லாஹ் தொடரும்

=============================================================





செவ்வாய், 20 டிசம்பர், 2016

அநியாயக்காரர்களுக்கெதிராகப் பிரார்த்தனை செய்வோம்!


- முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

உலகெங்கும் முஸ்லிம்களுக்கெதிரான போக்கு அதிகரித்து வருவதைக் கண்டு மனம் வெதும்பாமல் இருக்க முடியவில்லை. முஸ்லிம்களுக்கெதிரான எதிரிகளின் சூழ்ச்சியும் வஞ்சமும்  நாளுக்கு நாள்  மிகுதியாகிக் கொண்டே வருவதை ஊடகங்கள் வாயிலாக உணர்ந்து வருகிறோம். ஆனால் முஸ்லிம்களோ, எல்லாவற்றையும் அல்லாஹ் பார்த்துக்கொள்வான் என்று மேம்போக்கான மனநிலையிலேயே இருந்து வருகின்றனர்.

குறிப்பாக இந்தியாவில் முஸ்லிம்களுக்கெதிராக மத்திய, மாநில அரசுகள் செய்யக்கூடிய அநியாயமும் சூழ்ச்சியும் அளவில் அடங்காது. மாட்டுக்கறி உண்ணக்கூடாது, மாட்டை அறுக்கக்கூடாது எனத் தொடங்கி பொது சிவில் சட்டம் கொண்டுவருதல், கூம்பு வடிவிலான ஒலிபெருக்கியை அகற்றுதல் உள்ளிட்டவை வரை ஒவ்வொன்றாக  வந்துகொண்டுதான் இருக்கின்றன.

முஸ்லிம்கள் தொடர்பான என்னென்ன வரலாற்று அடையாளங்கள் எஞ்சியிருக்கின்றனவோ அவற்றை நீக்குவது, திப்பு சுல்தான், அவுரங்கசீப் முதலான முஸ்லிம் மன்னர்களின் வரலாற்றை மாற்றுவது, அவர்கள் செய்த தொண்டுகளையெல்லாம் சதித்திட்டங்களாகத் திரித்துச் செய்தி வெளியிடுவது, பாடப்புத்தகங்களில் வரலாற்றை மாற்றி எழுதுவது உள்ளிட்ட எத்தனையோ அநியாயங்களை மத்திய அரசு செய்து வருகிறது.

அரசுக்கு அப்பாற்பட்டு, திரைப்பட இயக்குநர்கள் முஸ்லிம்களுக்கெதிரான திரைப்படங்களை உருவாக்கி, அவற்றின் மூலம் முஸ்லிம்களைத் தவறான பிம்பத்தில் மக்களுக்குக் காட்டுவது, அனைத்துக் குண்டுவெடிப்புகளுக்கும் முஸ்லிம்கள்தாம் காரணம் என்ற தவறான தோற்றத்தையும்  எதிரான கருத்துருவையும் மக்கள் மனங்களில் பதியவைப்பது உள்ளிட்ட தீச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்தகைய  திரைப்படங்களின் மாயப்பிம்பத்தால் ஈர்க்கப்பட்ட முஸ்லிமல்லாத மக்கள் முஸ்லிம்களுக்கு வீடு வாடகைக்கு விட மறுத்தல், அவர்களோடு கொடுக்கல் வாங்கலில் கடுகடுப்பாக நடந்துகொள்ளுதல், இணக்கமாகப் பழகாதிருத்தல், அவர்களை ஏளனமாகக் கருதுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதை நாம் காணமுடிகிறது; அனுபவிக்க நேரிடுகிறது.

கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் பின்தங்கியுள்ள நாம் பல்வேறு இன்னல்களுக்கும் தொல்லைகளுக்கும் ஆளாக நேரிடுகிறது. அது மட்டுமின்றி எவ்வளவோ படித்தும் உரிய வேலை வாய்ப்பை "முஸ்லிம்' என்ற காரணத்தால் இழக்க நேரிடுகிறது. அத்தோடு காவல்துறையின் அட்டூழியங்களும் அதிகரித்துள்ளன. அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை ஆங்காங்கே கைது செய்து  விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று சிறைச்சாலைக்குள் தள்ளுவது, அவர்களின் வாழ்க்கையைச் சிறைக்குள்ளேயே பல்லாண்டு காலம் முடக்கிப்போடுவது, அதன்மூலம் முஸ்லிம் பெண்களின் வாழ்க்கையைச் சீரழிப்பது உள்ளிட்ட கொடுமைகளும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

திரைப்படங்களின் தவறான பிம்பத்தால் முஸ்லிம்கள்தாம் தீவிரவாதிகள் என்ற பொய்யான கருத்துருவை உண்டாக்கியபின், ஆங்காங்கே உள்ள அரபு மத்ரஸாக்களுக்குள் புகுந்து சோதனையிடுவது, அங்குள்ள மாணவர்களை விசாரிப்பது, அவர்களுக்கான செலவீனங்கள் குறித்துத் துருவித் துருவி ஆராய்வது உள்ளிட்ட வன்கொடுமைகளும் ஒருபுறம் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

முஸ்லிம் பெண்கள் அணிகின்ற பர்தாவைப் பயன்படுத்தித் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவதைப் போன்ற காட்சிகளைத் திரைப்படங்களின்மூலம் மக்கள் மனங்களில் பதிவுசெய்துஅதன்மூலம் கண்ணியமான அந்த ஆடைக்கு இழுக்கை ஏற்படுத்தி, அதை அணிந்து வருகின்ற முஸ்லிம் பெண்களைச் சோதனைக்கு உள்ளாக்குவது, பள்ளி, கல்லூரிகளில் முஸ்லிம் பெண்களுக்குப் பர்தாவைத் தடை செய்வது உள்ளிட்ட அட்டூழியங்களும் மற்றொரு புறம் நடந்தேறுகின்றன.

புதிதாக வழிபாட்டுத்தலங்கள் கட்டுவதற்குத் தடைவிதித்தல், அல்லது அதற்கு ஆயிரம் கட்டுப்பாடுகளை விதித்தல், ஏற்கெனவே இருக்கின்ற பள்ளிவாசல்களில் வேண்டுமென்றே பிரச்சனைகளை ஏற்படுத்துதல், முஸ்லிம்களின் வழிபாடுகளுக்கு இடையூறு செய்தல் உள்ளிட்ட பல்வேறு தொல்லைகளையும் துன்பங்களையும் கொடுத்துக்கொண்டிருக்கின்றனர். முஸ்லிம்களின் அடக்கத்தலங்களை ஆக்கிரமித்துக்கொண்டு அங்கு சிலைகளை வைத்து வழிபடத் தொடங்குதல் உள்ளிட்டவையும் அரங்கேறுகின்றன. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்போது, வேண்டுமென்றே முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழ்கின்ற பாதை வழியாகச் சென்று, அப்பாதையிலுள்ள வழிபாட்டுத்தளங்களுக்கும் வணிகத் தளங்களுக்கும்  சேதத்தை விளைவிப்பது உள்ளிட்ட கொடூரங்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

மற்ற நாடுகளோடு இணக்கமான உறவை மேற்கொள்கின்ற அரசு, முஸ்லிம் அண்டை நாடான பாகிஸ்தானோடு தீராப் பகையை வளர்த்துக்கொள்கிறது. அதேநேரத்தில் அண்டை நாடான சீனா அருணாச்சலப் பிரதேசத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமித்துவிட்டதையும் கண்டுகொள்வதில்லை. இலங்கை இராணுவம் தமிழக மீனவர்களுக்கெதிராக எத்தனையோ முறை வன்முறையில் ஈடுபட்டுள்ளது. மீனவர்களைக் கைது செய்துள்ளது. அவர்களின் படகுகளைச் சேதப்படுத்தியுள்ளது.  அவர்களைக் கொன்றுள்ளது. அதனையெல்லாம் கண்டிக்காமலும் எதிர்த்துக் கேட்காமலும் விட்டுவிடுகிறது இந்திய அரசு. இதன்மூலம் இந்த அரசு முஸ்லிம்களுக்கெதிரான போக்கை மட்டுமே பிரதானமாக விரும்புகிறது என்பது வெட்ட வெளிச்சமாகிறது.

இப்படி அங்கிங்கெனாதபடி திரும்பும் திக்கெங்கும் முஸ்லிம்களுக்கெதிரான விரோதப்போக்கை மத்திய, மாநில அரசுகளும், முஸ்லிம்களைத் தவறாகப் புரிந்துகொண்டோரும் மேற்கொள்வது நாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததில்லை. சமயச் சார்பற்ற ஜனநாயக நாட்டில் குறிப்பிட்ட ஓர் இனத்தாரை மட்டும் புறக்கணிப்பது, அவர்களை நசுக்குவது, திட்டமிட்டுத் தாக்குவது, வீண் பழி சுமத்திச் சிறையில் அடைப்பது உள்ளிட்ட அவர்களுக்கெதிரான போக்கைக் கடைப்பிடிப்பது நாட்டின் வளர்ச்சிக்கு மிகப் பெரும் ஆபத்தை உண்டாக்கும் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

இத்தனை தொல்லைகளையும் சகித்துக்கொண்டு வாழ்ந்து வருகின்ற முஸ்லிம்கள், இந்துக்களுக்கு ஒரு பிரச்சனையென்றால் அவர்கள்தாம் முதலில் நிற்கின்றார்கள். கடந்த டிசம்பர் (2015) மாதம் கடுமையான மழை பொழிந்து, சென்னை உள்ளிட்ட நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியபோது அதில் பாதிக்கப்பட்ட இந்து மக்களுக்கு ஓடோடிச் சென்று உதவி செய்தவர்கள், உணவு வழங்கியவர்கள் முஸ்லிம்கள் ஆவர். என்னதான் நாம் ஓடோடிச் சென்று உதவி செய்தாலும் அதுவெல்லாம் ஊடகக் கண்களுக்குத் தெரியாது. அவர்களைப் பற்றிய தவறான செய்தி இருந்தால் மட்டும் முதல் பக்கத்தில் வெளியிடுவார்கள். நல்ல செய்திகளை இருட்டடிப்புச் செய்வார்கள். இதுவே அவர்களுக்கு எழுதப்படாத விதியாக உள்ளது.

இத்தகைய நெருக்கடியான சூழலிலும் ஓர் அச்சமான நிலையிலும் வாழ்ந்து வருகின்ற முஸ்லிம்கள் பின்வரும் நபிமொழிகளைக் கூர்ந்து கவனிப்பதும் அதன்படிச் செயல்படுவதும் காலத்தின் கட்டாயமாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பிரார்த்தனைகளுக்குப் பதிலளிக்கப்படுகின்றது. அவற்றில் சந்தேகமில்லை. அநியாயம் செய்யப்பட்டவரின் பிரார்த்தனை, ஒரு பயணியின் பிரார்த்தனை, ஒரு தந்தை தன் மகனுக்குச் செய்யும் பிரார்த்தனை.  இதை அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (நூல்: இப்னுமாஜா: 3852)

"எவர் தமக்கு அநியாயம் செய்தவருக்கு எதிராகப் பிரார்த்தனை செய்கிறாரோ அவர் (தம் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படுவதன்மூலம்) வெற்றிபெற்றுவிட்டார்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதீ: 3475)

முஸ்லிம்கள் அனைவரும் அனுதினமும் ஐவேளைத் தொழுகையைப் பேணித் தொழுது இந்த அநியாயக்காரர்களுக்கெதிராகப் பிரார்த்தனை செய்தால், திண்ணமாக உயர்ந்தோன் அல்லாஹ் அவர்களைப் பார்த்துக்கொள்வான். நிச்சயமாக அல்லாஹ் அநியாயம் செய்யப்பட்டோரின் பிரார்த்தனையை அங்கீகரித்துக்கொள்வான். இந்த அநியாயக்காரர்களை அடியோடு அழிப்பான், அல்லது அவர்களின் உள்ளங்களை இஸ்லாத்திற்குச் சாதகமாகப் புரட்டிப்போடுவான்.

நபி (ஸல்) அவர்கள் தொழுதுகொண்டிருந்தபோது, இறைச்சிக்காக அறுக்கப்பட்ட ஒட்டகக் கருவைச் சுற்றியிருந்த சவ்வுகளை அள்ளிக்கொண்டு வந்து அவர்களின் முதுகில் போடச்செய்து, அதைப் பார்த்து ஏளனமாகச் சிரித்துக்கொண்டிருந்த குறைஷியருக்கு எதிராக, "இறைவா! குறைஷிகளை நீ கவனித்துக் கொள்!'' என்று மூன்று முறை பிரார்த்தனை செய்தார்கள்.... பிறகு நபி (ஸல்) அவர்கள் (அங்கிருந்தோரின்) பெயர்களைக் குறிப்பிட்டு, "இறைவா! அபூஜஹ்லை நீ கவனித்துக்கொள்வாயாக! உத்பா பின்  ரபீஆ, வலீத் பின் உத்பா, உமய்யா பின் கலஃப், உக்பா பின் அபீமுஐத் ஆகியோரைக் கவனித்துக்கொள்வாயாக!'' என்று (அறுவரின் பெயர் குறிப்பிட்டுப்) பிரார்த்தனை செய்தார்கள். (நூல்: புகாரீ: 240)

நபி (ஸல்) அவர்களின் பிரார்த்தனை ஏற்கப்பட்டதால், அவர்கள் அனைவரும் பத்ருப் போரில் கொல்லப்பட்டு மாண்டு ஒழிந்தார்கள் என்பது வரலாறு. சிறுபான்மை மக்களாக உள்ள நாம் செய்ய வேண்டியதும் இதைத்தானே தவிர, புரட்சி எனும் பெயரில் பொங்கி எழுவதும், கிளர்ச்சி என்ற பெயரில் கிளர்ந்தெழுவதும் நம்மை நாமே அழித்துக்கொள்வதற்குச் சமமாகும். தொடர்ந்து ஏகன் அல்லாஹ்விடம் கையேந்திக் கொண்டிருந்தால் திண்ணமாக இந்த நெருக்கடி நிலை தலைகீழாக மாறும் என்பதில் ஐயமில்லை. ஏனென்றால் மனமுருகிச் செய்யும் பிரார்த்தனைக்கு நிகராக வலுவான எந்த ஆயுதமும் இல்லை என்பதை உணர்ந்து செயல்பட முற்படுவோம். 

=========================