செவ்வாய், 18 செப்டம்பர், 2012

இனிய திசைகள் - 2012 செப்டம்பர்

இனிய திசைகள் 
செப்டம்பர் மாத இதழைப் படிக்க.

ஒன்றுக்கு மேற்பட்ட ஹஜ் செய்யலாமா?


ஒன்றுக்கு மேற்பட்ட ஹஜ் செய்யலாமா?
                                       -மௌலவி, நூ. அப்துல் ஹாதி பாகவி, எம்.ஏ., எம்.ஃபில்.,

லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் எனும் இருபத்து நான்கு அரபி எழுத்துகளைக்கொண்ட திருவாசகத்தைக் கூறிய ஒவ்வொருவரும் ஐவேளைத் தொழுகையை அன்றாடம் நிறைவேற்றுவது கடமையாகும்; அதன்பின் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும் செல்வந்தர்கள் ஆண்டுக்கொரு தடவை ஸகாத் வழங்குவதும் கடமையாகும்; அதற்குப்பின் செல்வந்தர்கள் தம் ஆயுளில் ஒரு தடவை ஹஜ் செய்வது கடமை. மேற்கண்ட கடமைகளுள் தொழுகை நாள்தோறும் ஐவேளைக் கடமை; நோன்பு நோற்பது ரமளான் மாதத்தில் மட்டும் கடமை; ஸகாத் வழங்குவது ஆண்டுக்கொரு முறை கடமை; அதுபோல் ஹஜ் செய்வது ஆயுளில் ஒரு முறை கடமை.

கடமைக்கு அப்பாற்பட்டு, ஏகத்துவக் கலிமாவை எத்தனை தடவை வேண்டுமானாலும் கூறலாம்; எத்தனை ரக்அத்துகள் வேண்டுமானாலும் தொழுகலாம்; எத்தனை நாள்கள் வேண்டுமானாலும் நோன்பு நோற்கலாம்; எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் தர்மமாக வழங்கலாம்; எத்தனை தடவை வேண்டுமானாலும் ஹஜ் செய்யலாம். இதற்கு இஸ்லாத்தில் எவ்விதத் தடையுமில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

கடமையை நிறைவேற்றுவது வேறு; கடமைக்கு அப்பாற்பட்டு இறைவனுக்காக மனமுவந்து, தாமே விருப்பப்பட்டுச் செய்வது வேறு. இன்றைக்கு, செல்வந்தர்கள் பலர் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை மக்கா மாநகர் சென்று, கஅபாவைத் தரிசித்து, அதனை வலம் வந்து-இறையருளைப் பெற முனைகின்றனர். இத்தகையோரை விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர் சிலர். அடிக்கடி மக்காவுக்குச் சென்று அதற்காகப் பணத்தைச் செலவிடுவதற்குப் பதிலாக, சமுதாயச் சேவைகள் எவ்வளவோ இருக்கின்றன; அவற்றிற்கு அதைச் செலவு செய்யலாமே? என்று வினவுகின்றனர். அவர்களுடைய உள்நோக்கம் ஒரு வகையில் உண்மையென்றாலும், அதில் பொதிந்துள்ள கருத்து முற்றிலும் தவறாகும்.

சமுதாயச் சேவைகளுக்காகப் பணத்தைக் கேட்பதில் தவறேதும் இல்லை. ஆனால் அதேநேரத்தில்  அவர்கள் மனத்தூய்மையுடனும் இறையச்சத்துடனும் இறைக்காதலுடனும் அடுத்தடுத்து செய்து வருகின்ற ஹஜ்ஜைத் தடைசெய்வதும் விமர்சனம் செய்வதும் முறையாகாது. செல்வந்தர்கள் பலர் மீண்டும் மீண்டும் ஹஜ் செய்கிறார்கள். உண்மைதான். ஆனால் அவர்கள் சமுதாயத்திற்கு எதுவுமே செய்யவில்லை என்று கூறுவது தவறான கருத்தாகும். பள்ளிவாசல்களுக்காகவும், மத்ரசாக்களுக்காகவும், சமுதாய மேம்பாட்டிற்காகவும், ஏழைகளின் நலன்களைக் கருதியும் அவர்கள் தம் அறக்கொடைகளை வழங்கிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். செல்வந்தர்களின் அறக்கொடையால்தான் பல்வேறு பள்ளிவாசல்கள் மினாராவைப்போல் உயர்ந்து நிற்கின்றன; அரபிக்கல்லூரிகள் உயிரோட்டம் பெற்று விளங்குகின்றன; ஆங்காங்கே பைத்துல்மால்கள்- பொதுநிதியங்கள் செயல்படுகின்றன; தொண்டு நிறுவனங்கள் மூலம் சேவைகள் தொடர்கின்றன. இப்படிப் பல்வேறு கோணத்தில் செல்வந்தர்களின் நன்கொடைகளும், தர்மங்களும், ஸகாத்களும் இஸ்லாமிய மக்களின் நலனுக்காகவும் மேம்பாட்டிற்காகவும் உதவுகின்றன என்பது நிதர்சன உண்மை.

ஒருவன் தனக்குப் பிடித்த இஸ்லாமியப் பாடலை ஒன்றுக்கு மேற்பட்ட தடவை கேட்டு இன்புறுகின்றான்; பிடித்த நூலை ஒன்றுக்கு மேற்பட்ட தடவை படித்துச் சுவைக்கின்றான்; பிடித்த காட்சியை ஒன்றுக்கு மேற்பட்ட தடவை கண்டு மகிழ்கிறான்; மனதுக்குப் பிடித்த பொருளை  ஒன்றுக்கு மேற்பட்டு இரண்டு, மூன்று, நான்கு என வாங்குகிறான்; பிடித்த உணவை மீண்டும் மீண்டும் உண்டுமகிழ்கிறான். இவையெல்லாம் உலக இன்பங்கள். இவற்றையே மனிதன் ஒன்றுக்கு மேற்பட்டு ஆசைப்படும்போது, உலகையே படைத்த இறைவனின் திருஆலயமான கஅபாவை ஒன்றுக்கு மேற்பட்ட தடவை காண விரும்புவது எப்படிக் குற்றமாகும்? அதிலும் இறைக்காதலர்கள் எத்தனை தடவை அதைக் கண்டாலும் திருப்தியடைய மாட்டார்கள். அப்படியிருக்கும்போது அவர்களை விமர்சனம் செய்வது எவ்வகையில் நியாயமாகும்?

செல்வந்தர்களே, இந்த நற்செயலுக்குத் தாருங்கள்என்று ஒரு குறிப்பிட்ட சமுதாயச் சேவைக்காக அவர்களிடம் நிதி கேட்பது குற்றமாகாது.  அதற்கு மாறாகஒரு நற்செயலை அழித்துத்தான் மற்றொரு செயலைச் செய்ய வேண்டும் என்றில்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். கஅபா எனும் இறையாலயம் கட்டப்பட்டது முதல் இன்று வரை அதை ஒன்றுக்கு மேற்பட்ட தடவை கண்டு மகிழ்ந்தவர்கள்தாம் அதிகம் எனக் கூறலாம். அதை மீண்டும் மீண்டும் கண்டு இன்புறுவதே இறைக்காதலர்களின் தீர்க்க முடியாத ஆசை. இறைக்காதலால் உந்தப்பட்டவர்கள் அது எவ்வளவு தொலைவானாலும் கவலைப்படுவதில்லை; அதற்கு எவ்வளவு பணம் செலவானாலும் வருத்தப்படுவதில்லை. அதற்காக எவ்வளவு தொல்லைகளையும் துன்பங்களையும் சுகமாகச் சகித்து, தம் கடும் உழைப்பால் ஈட்டிய பணத்தைச் செலவழித்து இறையன்பையும் இறைதிருப்தியையும் பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில்தான் அவர்கள் மீண்டும் மீண்டும் செல்கிறார்கள். அவர்களுக்கு இறையன்பு மட்டும்தான் நோக்கமே தவிர உலகியல் சார்ந்த பெயரும் புகழும் இல்லை.

நஜ்த்வாழ் மக்களுள் ஒருவர் தலைவிரி கோலத்துடன் (பயணம் முடித்த கையோடு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். (தூரத்தி-ருந்து) ஒலித்த அவரது குரல் கேட்டதே தவிர அவர் என்ன சொல்கிறார் என்பதை எங்களால் விளங்க முடியவில்லை. அவர் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு) அருகில் வந்ததும் இஸ்லாத்தைப் பற்றிக் கேட்டார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பகலிலும் இரவிலும் ஐந்து தொழுகைகள்எனக் கூறினார்கள். அவர், “இவற்றைத் தவிர வேறு (தொழுகைகள்) ஏதாவது என்மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?” என்று வினவ, “இல்லை. நீயாக விரும்பித் தொழும் (கூடுதலான) தொழுகையைத் தவிர”  என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள். மேலும் ரமளான் மாதம் நோன்பு நோற்க வேண்டும் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர், “இதைத் தவிர வேறு (நோன்பு) ஏதாவது என்மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?” என்று வினவ, “இல்லை. நீயாக விரும்பி நோற்கும் (கூடுதலான) நோன்பைத் தவிர”  என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஸகாத் பற்றியும் அவருக்கு எடுத்துரைத்தார்கள். அவர், “இதைத் தவிர வேறு (தர்மம்) ஏதாவது என்மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?” என்று வினவ, “இல்லை. நீயாக விரும்பிச் செய்யும் (கூடுதலான) தர்மத்தைத் தவிர”  என்று விடையளித்தார்கள்.    அம்மனிதர், “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இதற்குமேல் அதிகமாகச் செய்யவுமாட்டேன்; இதைக் குறைக்கவுமாட்டேன்என்று கூறியவாறு திரும்பிச் சென்றுவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர் உண்மையாகவே (இதைக்) கூறியிருந்தால், அவர் வெற்றியடைந்துவிட்டார்”  என்று கூறினார்கள். (நூல்: புகாரீ-46)

மேற்கண்ட இந்த நபிமொழி மூலம், ஒருவர் தம் கடமையை மட்டும் செய்வதுடனே உபரியாகவும், கூடுதலாகவும் தாமே முன்வந்து அச்செயல்களைச் செய்வதற்கு எந்தத் தடையுமில்லை என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.

கடமையான வழிபாடுகளோடு உபரியான வழிபாடுகளால்தாம் நாம் அல்லாஹ்வை நெருங்க முடியும் என்பதைப் பின்வரும் நபிமொழி நமக்கு உணர்த்துகிறது. எவன் என் நேசரைப் பகைத்துக்கொண்டானோ அவனுடன் நான் போர்ப் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றைவிட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான வழிபாடுகளால் என் பக்கம் நெருங்கி வந்துகொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நான் நேசிப்பேன்...என அல்லாஹ் கூறியதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ-6502)

ஹம்மாம் பின் யஹ்யா (ரஹ்) கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் நான்கு உம்ராக்களையும் துல்கஅதா மாதத்திலேயே செய்தார்கள். ஹஜ்ஜுடன் செய்த உம்ராவைத் தவிர! அவை, ஹுதைபியாவிலிருந்து (அவர்கள் தடுக்கப்பட்டபோது) செய்யச் சென்ற உம்ரா; அதற்கடுத்த ஆண்டின் உம்ரா; ஹுனைன் போரில் கிடைத்த செல்வங்களைப் பங்கிட்ட இடமான ஜிஇர்ரானாவிலிருந்து செய்த உம்ரா; ஹஜ்ஜுடன் செய்த உம்ரா ஆகியவை ஆகும். (நூல்: புகாரீ-1780)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை உம்ரா செய்துள்ளார்கள் என்பதே, அவர்கள் இறையாலயத்தைத் தரிசிக்க எவ்வளவு ஆவல் கொண்டிருந்தார்கள் என்பதைக் காட்டப் போதுமானதாகும். கடமையைத் தவிர உபரியாகச் செய்கின்ற வழிபாடுகளே நாம் உள்ளார்ந்த முறையில் செய்யும் வழிபாடுகளாகும் என்பதில் யாருக்கும் ஐயமில்லை.

ஆகவே மக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை செய்யும் ஹஜ்ஜும் உம்ராவும் அவர்கள் அந்த இறையாலயத்தின்மீது கொண்டுள்ள அன்பையும் காதலையும் காட்டுகிறதே தவிர பகட்டுக்காகவோ புகழுக்காகவோ இல்லை என்பதை விமர்சனம் செய்வோர் தம் மனத்தில் பதியவைத்துக்கொள்ள வேண்டும். ஆகவே நாம் மீண்டும் மீண்டும் அந்த இறையாலயத்தைக் கண்டு தரிசிக்கின்ற நற்பேற்றை அல்லாஹ் நம் யாவருக்கும் வழங்குவானாக!





வாசகர் கடிதம் 


தினமணி நாளிதழில் எழுதிய வாசகர் கடிதம்

08 09 2012 அன்று தினமணி நாளிதழில்  முனைவர் ஹாஜாகனி எழுதியிருந்த கட்டுரைக்கு நான் எழுதிய வாசகர் கடிதம்.


சனி, 8 செப்டம்பர், 2012

தமிழக வரலாற்றில் முதன் முறையாக...



ஜமாஅத்துல் உலமா சபை தொடங்கப்பட்டு 62 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் இதுவரை ஆலிம்கள் எதற்காகவும் ஒன்றிணைந்து வீதியில் களமிறங்கிப் போராடியதில்லை. ஆனால் இன்று (08.09.2012) அவர்கள் களமிறங்கி ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள் என்றால் அது மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. ஆம்! சென்னை-மீஞ்சூர் கவுண்டர் பாளையத்தில் இமாமாகப் பணியாற்றி வந்த அப்துர் ரவூப் நூரி என்பவரை முன்விரோதம் காரணமாக, அப்பள்ளியில் நிர்வாகத்திலுள்ள ஹயாத் பாஷா என்பவர் கூலிப்படையை ஏவிவிட்டு, அவர்மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளார். பத்து நாள்களுக்குப் பிறகுதான் காவல்துறை கொலையாளியைக் கைது செய்துள்ளது.  இன்னும் கூலிப்படையினர் கைது செய்யப்படவில்லை. அதை எதிர்த்தும், தாக்குதலுக்குள்ளானவருக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரியும்  தமிழக அரசின் கவனத்தை ஈர்க்குமுகமாக, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சென்னை மாநகர உலமாக்களால் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை எதிரே உள்ள மெமோரியல் ஹால் முன்பாக காலை 9: 40 மணிக்குத் தொடங்கிய ஆர்ப்பாட்டம், காவல்துறை ஆணையரின் வேண்டுகோளுக்கிணங்க 10: 30 மணிக்கு முடித்துக்கொள்ளப்பட்டது. அதில் சென்னை மாநகர ஆலிம்களைத் தவிர முக்கியப் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர். அதில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளையும் முழக்கங்களையும் காணொளியில் காணலாம்.











செய்தி: மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி