செவ்வாய், 30 நவம்பர், 2010

இப்ராஹீம் நபியின் வரலாறு (தொடர் 14)

இஸ்மாயீலை அறுக்க ஆணை


அல்லாஹ் கூறியுள்ள, பின்னர், (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய வயதை அடைந்தபோது என்ற வசனம் குறிப்பிடத்தக்கது. அதாவது அவர் வாலிபராகி, தந்தையைப் போல் நற்செயல்களில் ஈடுபட முற்பட்டபோது அல்லாஹ் இவ்வாறு ஆணையிட்டான். முஜாஹித் (ரஹ்) கூறியுள்ளார்: அந்த வசனத்தின் விளக்கம், அவர் வாலிபராகி பயணம் செய்தார்; அவருடைய தந்தை செய்கின்ற முயற்சி, நற்செயல் போன்றவற்றை அவரும் செய்ய இயன்றபோது, அல்லாஹ் இவ்வாறு ஆணையிட்டான் என்பதாகும். இவ்வாறு அவர் வாலிபராக ஆனபோது, இப்ராஹீம் தமது கனவில், அவருடைய மகனை (அல்லாஹ்வுக்காக) அறுக்குமாறு ஏவப்பட்டார்.
இப்னு அப்பாஸ் (ரளி) அறிவித்துள்ள `மர்ஃபூஉ’ ஆன ஹதீஸில் வருகிறது: நபிமார்களின் கனவு வேத அறிவிப்பு (வஹீ)தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: தப்ரானீ)1

தன்னுடைய நண்பரான இப்ராஹீமின் முதுமைப் பருவத்தில், அவரோ தளர்ந்து போய்விட்ட நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட அவருடைய அன்புக்குரிய குழந்தையை அறுக்க அல்லாஹ் உத்தரவிட்டது, இறைச்சோதனையாகும். இப்ராஹீம் (அலை) அவர்கள், தம்முடைய மகனையும் தம்முடைய மனைவியையும் யாருமில்லா வறண்ட நிலத்தில், புற்பூண்டுகளோ மனிதர்களோ எந்த விவசாயமோ விளைச்சலோ இல்லாத பள்ளத்தாக்கில் விட்டுவிடுமாறு கட்டளையிடப்பட்டார். எனவே, அவர் அல்லாஹ் தமக்கு இட்ட கட்டளைக்குப் பணிந்தார். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து அவன் மீதே உறுதிகொண்டு அவ்விருவரையும் பாலைவனத்தில் விட்டுவிட்டார். ஆனால், அல்லாஹ் அவ்விருவருக்கும் மகிழ்ச்சியையும் உணவிற்கான வழியையும் அமைத்துக்கொடுத்தான். அவ்விருவரும் எதிர்பாராவிதத்தில் அவர்களுக்கு அவன் உணவு வழங்கி னான்.
இவை அனைத்துக்கும் பிறகு, அல்லாஹ் அவருடைய குழந்தையை அறுக்கக் கட்டளையிட்டான். அல்லாஹ்வுடைய கட்டளையை அவர் நிறைவேற்ற இது ஒரு தனிப்பட்ட பெரும் சோதனையாகும். அந்த இஸ்மாயீல்தான் ஒரே குழந்தை; அவரைத் தவிர அவருக்கு வேறு குழந்தை ஏதும் இல்லை. இருப்பினும், அவர் தம் இறைவனுடைய கட்டளைக்குப் பணிந்தார்; எனவே, தம்முடைய இறைவனின் கட்டளையை நிறைவேற்ற விரைந்தார்.
பின்னர், அவரைக் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று நிர்ப்பந்தித்து அறுப்பதைவிட அவரது சுயவிருப்பத்துடனும் மனநிறைவுடனும் எளிய முறையில் அச்செயலை நிறைவேற்றுவதற்காகவே அவ்விசயத்தைத் தம் மகனிடம் சொன்னார். என்னருமை மகனே! திண்ணமாக நான் உன்னை அறுத்துப் பலியிடுவதாகக் கனவுகண்டேன். இதைப் பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக! (37: 102) என்று கூறினார்.

பொறுமைமிக்க அந்தச் சிற்றிளைஞர், தம் தந்தை இப்ராஹீமுக்கு நன்மை செய்ய விரைந்தார். அவர் தம் தந்தையிடம் கூறினார்: என்னருமைத் தந்தையே! நீர் ஏவப்பட்டபடியே செய்வீர். அல்லாஹ் நாடினால்- என்னை நீர் பொறுமையாளர்களுள் உள்ளவராகவே காண்பீர். (37: 102) அவருடைய இந்த பதில் மிக நேர்மையானதாகும். தம் தந்தைக்கும் அடியார்களின் இறைவனுக்கும் அவருடைய பணிவின் வெளிப்பாடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்: அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, அவர் (இப்ராஹீம்) அவரை (இஸ்மாயீலைப்) பலியிட முகங்குப்புறக் கிடத்திய போது...(37: 103) அதாவது அவர்கள் இருவரும் அல்லாஹ்வின் கட்டளையை ஏற்றுக்கொண்டு, அதன்மீதே அவ்விருவரும் உறுதிகொண்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது இந்த வாக்கியத்தில் வார்த்தைகள் முன்-பின் ஆக்கப்பட்டுள்ளன. அவரை அவர் முகங்குப்புற கிடத்தினார் என்பதன் பொருள், அவர் அவருடைய முகத்தைக் கீழே வைத்தார் என்பதாகும். மற்றொரு கருத்து, அவர் அவருடைய முகத்தைப் பார்க்காமல் இருப்பதற்காக, அவருடைய பிடரியிலிருந்து அறுக்க நாடினார் என்றும் கூறப்பட்டுள்ளது. இதையே இப்னு அப்பாஸ் (ரளி), முஜாஹித், சயீத் பின் ஜுபைர், கத்தாதா, ளஹ்ஹாக் (ரஹ்-அலைஹிம்) போன்றோர் கூறியுள்ளனர்.

மாறாக, அறுக்கப்படுகின்ற பிராணிகள் எவ்வாறு படுக்கவைக்கப்படுகின்றனவோ அவ்வாறே அவர் தம் மகனைப் படுக்கவைத்தார். அவருடைய நெற்றியின் ஓரம் நிலத்தில் ஒட்டியவாறு இருந்தது என்றும் கூறப்பட்டுள்ளது. `வஅஸ்லமா என்பதன் பொருள், இப்ராஹீம் பிஸ்மில்லாஹ் கூறி, தக்பீர் கூறினார். அந்தச் சிறுவர், மரணத்திற்கான `ஷஹாதத் கலிமாவைக் கூறினார் என்பதாகும். அவர் தம் மகனின் கழுத்தில் கத்தியைச் செலுத்தினார். ஆனால், அக்கத்தி அவரைச் சிறிதளவும் அறுக்கவில்லை என்று சுத்தீ (ரஹ்) மற்றும் வேறு சிலர் கூறியுள்ளனர். அவருடைய கழுத்திற்கும் அக்கத்திக்கும் இடையே (இறைவனால்) செம்புத்தகடு வைக்கப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது. அல்லாஹ்வே நன்கறிபவன்.

அல்லாஹ்வின் பலிப்பொருள் அவர் தம் மகனின் கழுத்தில் கத்தியை வைத்து அறுத்தபோது, அவர் அல்லாஹ்வால் அழைக்கப்பட்டார். நாம் அவரை இப்ராஹீமே! என்று அழைத்தோம். திண்ணமாக, நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்திவிட்டீர். (37: 104) அதாவது உம்முடைய இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதில் எவ்வளவு துரிதமானவராக இருக்கிறீர்; எப்படி அவனுக்கு வழிப்படுகிறீர் என்று உம்மை நாம் சோதித்ததில் நீர் வெற்றிபெற்றுவிட்டீர். உம் உடலை நெருப்புக்கு வழங்கிடத் துணிந்ததைப்போல், உம்முடைய பொருளை விருந்தினருக்குச் செலவழிக்கத் துணிந்ததைப்போல், இப்போது உம் மகனையே இறைவனுக்காகப் பலியிடத் துணிந்துவிட்டீர். இதனால்தான், அல்லாஹ் கூறுகின்றான்: நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ்சோதனையாகும். (37: 106)

 அதாவது தெளிவான, வெளிப்படையான சோதனையாகும். நாம் ஒரு மகத்தான பலியைக்கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம் என்று அல்லாஹ் கூறுகின்றான். அதாவது, அவருடைய மகனை அறுப்பதற்குப் பகரமாக அவருக்கு எது இலகுவாக இருக்குமோ அதை நாம் அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்தோம். அது வெண்மையான, நல்ல பார்வையுடைய, கொம்புகள் உடைய ஓர் ஆடு. அந்த ஆடு, மக்காவின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு மலை அருகில், ஒரு மரத்தில் கட்டப்பட்டிருந்ததைக் கண்டார் என்பதே பெரும்பான்மையோரின் பிரபலமான கருத்தாகும்.

அது சொர்க்கத்தில் நாற்பது ஆண்டுகள் மேய்ந்து கொண்டிருந்த ஓர் ஆடு என்று இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் கூறியதாக அஸ்ஸவ்ரீ (ரஹ்) அறிவித்துள்ளார். சயீத் பின் ஜுபைர் (ரஹ்) கூறியுள்ளார்: மக்காவின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு மலை பிளக்கின்றவரை சொர்க்கத்தில் அது மேய்ந்து கொண்டிருந்தது; அதன்மீது சிவப்பு உரோமம் இருந்தது. மேலும் இப்னு அப்பாஸ் (ரளி) கூறியுள்ளார்கள்: அவரிடம் மக்காவின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு மலையிலிருந்து ஓர் ஆடு இறங்கியது; அது கண்களையுடையது; கொம்புகள் உடையது; அந்த ஆடு சப்தமிடக்கூடியது; அதை அவர் அறுத்தார். ஆதமுடைய மகன் (ஹாபீல்) அல்லாஹ்வுக்காக அர்ப்பணம் செய்து, அவரிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆடுதான் அது. (நூல்: இப்னு அபீஹாத்திம்)

அந்த ஆட்டை அவர் மினாவில் அறுத்தார் என்று முஜாஹித் (ரஹ்) கூறியுள்ளார். மகாமே இப்ராஹீம் என்ற இடத்தில் அறுத்தார் என்று உபைத் பின் உமைர் (ரஹ்) கூறியுள்ளார். அந்த ஆடு ஓராண்டு பூர்த்தியான குட்டியாக இருந்தது என்று இப்னு அப்பாஸ் (ரளி) கூறியுள்ளார்கள். ஓராண்டுக்குள் உள்ள அதே வகையான ஒரு குட்டி என்று ஹசன் அல்பஸ் ரீ (ரஹ்) கூறியுள்ளார். இவ்விரண்டும் சரியாக இருக்கலாம் என்று சொல்ல முடியாது.
பின்னர், இது பற்றிக் கூறப்பட்டுள்ள பல செய்திகள் கட்டுக்கதைகளாகும். இது பற்றித் தேவையான தகவல்கள் நமக்கு திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளன. நிச்சயமாக அல்லாஹ் அவருக்குப் பகரமாக மிகப்பெரும் பலிப்பிராணியைக் கொடுத்தான். அது ஒரு பெரிய ஆடாகவே இருந்தது என்று நபிமொழிகள் மூலம் நாம் அறிகிறோம்.

அஹ்மத் (ரஹ்) கூறியுள்ளார்: பனூசுலைம் குலத்திலிருந்து ஒரு பெண் என்னிடம்-எங்கள் குடும்பத்தினர் அவளை வளர்த்தார்கள்- இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உஸ்மான் பின் தல்ஹா (ரளி) அவர்களின் வீட்டுக்கு ஆள் அனுப்பினார்கள் என்று கூறினாள். மற்றோர் அறிவிப்பில் அஹ்மத் (ரஹ்) கூறியுள்ளார்: அப்பெண் உஸ்மான் (ரளி) அவர்களிடம், உம்மை ஏன் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அழைத்தார்கள்? என்று கேட்டாள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், இறையாலயத்தில் (கஅபா) நுழைந்தபோது நான் ஆட்டின் இரண்டு கொம்புகளைப் பார்த்தேன். அவ்விரண்டையும் மறைத்துவைக்குமாறு உம்மிடம் நான் சொல்ல மறந்துவிட்டேன். எனவே, நீர் அவ்விரண்டையும் மறைத்துவைப்பீராக! ஏனென்றால், தொழுபவரைத் திசைதிருப்பக்கூடிய எப்பொருளும் கஅபாவில் இருக்கக்கூடாது என்று என்னிடம் கூறினார்கள் என்று பதிலளித்தார். இதை ஸஃபிய்யா பின்த் ஷைபா அறிவித்துள்ளார். (நூல்: முஸ்னத் அஹ்மத்)

சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) கூறியுள்ளார்: ஆட்டின் இரண்டு கொம்புகள் அந்த இறையாலயத்தில் (கஅபா) மாட்டப்பட்டே இருந்தன. அந்த இறையில்லம் எரிந்துபோனபோது அவையும் எரிந்துவிட்டன.2

----------------அடிக்குறிப்புகள்------------------------


1.  இதே ஹதீஸை உபைத் பின் உமைர் (ரளி) அவர்களும் அறிவித்துள்ளார்.

2.  இஸ்மாயீல் (அலை) அவர்களுக்குப் பகரமாக வந்த ஆட்டை இப்ராஹீம் (அலை) அறுத்தார். அந்தக் காலத்தில் அவர்களின் மார்க்கப்படி அறுக்கப்பட்ட இறைச்சியை யாரும் சாப்பிடக்கூடாது. மாறாக, அதைக் குறிப்பிட்ட இடத்தில் வைத்துவிட வேண்டும். வானத்திலிருந்து ஒரு நெருப்பு இறங்கி அதைச் சாப்பிட்டுவிடும். அதுபோன்று இப்ராஹீம் (அலை) அறுத்த ஆட்டின் தலையைத் தவிர, மற்ற எல்லா பாகங்களும் குறிப்பிட்ட இடத்தில் வைக்கப்பட்டன. வானிலிருந்து நெருப்பு வந்து அதைச் சாப்பிட்டுவிட்டது. தலை மட்டும் கஅபாவின் சுவரில் மாட்டப்பட்டிருந்தது. முஹம்மத் (ஸல்) அவர்களின் காலம் வரை அவ்வாறே இருந்தது. முஹம்மத் (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு பல ஆண்டுகளுக்குப் பின் ஒரு முறை கஅபாவில் நெருப்புப் பிடித்துக்கொண்டது. அப்போது கஅபா எரிந்து கரிந்தபோது அந்த ஆட்டுத்தலையும் எரிந்து சாம்பலாகி விட்டது.




அரபி:           அல்பிதாயா வந்நிஹாயா (இமாம் இப்னு கஸீர்- ரஹ்) 
தமிழாக்கம்: நூ. அப்துல் ஹாதி பாகவி M.A., M.Phil.

சனி, 20 நவம்பர், 2010

புதன், 10 நவம்பர், 2010

இப்ராஹீம் நபியின் வரலாறு (தொடர் 13)



கஅபாவை நிர்மாணித்தல்


பின்னர், அவர் தம் குடும்பத்தினரைச் சந்திக்காமல் நீண்ட காலம் வரை தங்கிவிட்டார். அதன் பிறகு ஒரு தடவை அவர்களிடம் வந்தார். அப்போது, இஸ்மாயீல் (அலை) அவர்கள் ஸம்ஸம் ஊற்று அருகே இருந்த அடர்ந்த நிழல் தரக்கூடிய மரத்தின்கீழ் தம்முடைய அம்பைத் தீட்டிக்கொண்டிருந்தார். அவர் தம்முடைய தந்தையைக் கண்டவுடன் அவரை நோக்கி எழுந்துசென்று வரவேற்றார். பின்னர், தந்தையும் மகனும் ஒருவருக்கொருவர் அன்பைப் பரிமாறிக்கொண்டனர். அதன் பின்னர், இஸ்மாயீலே! திண்ணமாக அல்லாஹ் எனக்கு ஒரு பணியை ஏவியுள்ளான் என்று கூறினார். (அப்படியா யின்)உம்முடைய இறைவன் ஏவிய விசயத்தைச் செய்து முடிப்பீர்! என்று மகன் கூறினார். நீர் எனக்கு ஓர் உதவிசெய்வீரா? என்று அவர் தம் மகனிடம் கேட்டார். நான் உமக்கு உதவிசெய்வேன் என்று மகன் கூறினார். திண்ணமாக அல்லாஹ், இங்கு ஓர் இறையில்லத்தைக் கட்டுமாறு என்னை ஏவியுள்ளான் என்று கூறிவிட்டு, அதனைச் சுற்றியிருந்த உயர்ந்த ஓரிடத்தைச் சுட்டிக்காட்டினார்.
அதன் பிறகு, அவ்விருவரும் இறையாலயத்திற்கான அடித்தளத்தை நிறுவினர். இஸ்மாயீல் நபி கற்களை எடுத்துவர, அவருடைய தந்தை இப்ராஹீம் நபி கட்டடத்தைக் கட்டினார். இறுதியில், கட்டடம் உயர்ந்துவிட்டது. (மகாமு இப்ராஹீம் எனும்) அந்தக் கல்லைக்கொண்டு வந்து, அவருக்காக வைத்தார். அவர் அதன் மீது ஏறி நின்றுகொண்டு கட்டடத்தைக் கட்டினார். இஸ்மாயீல் அவருக்கு உதவியாகக் கற்களை எடுத்துக்கொடுத்தார். அப்போது அவ்விருவரும் கூறினர்: எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக்கொள்வாயாக! திண்ணமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய். (2: 127)


அவ்விருவரும் அதைக் கட்டத் தொடங்கி, அதைச் சுற்றிவந்தபோது அவ்விருவரும் கூறினார்கள்: எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக! திண்ணமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய் (2: 127) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


இப்ராஹீமுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் இடையே நடைபெற்ற நிகழ்வுகளெல்லாம் நடந்து முடிந்தன. அதன் பின்னர், அவர் தம் மகன் இஸ்மாயீலையும் இஸ்மாயீலின் தாயையும் (ஒரு வெட்டவெளியை நோக்கி) அழைத்துச் சென்றார். அவர்களிடம் ஒரு குடுவை இருந்தது. அதில் தண்ணீர் இருந்தது. அதன்பின் நடந்த நிகழ்ச்சிகளை அப்படியே இப்னு அப்பாஸ் (ரளி) கூறியுள்ளார்கள். (நூல்: புகாரீ)1


விருத்தசேதனம் செய்தல்


தவ்ராத் வேதத்தையுடையவர்கள் கூறியுள்ளனர்: நிச்சயமாக அல்லாஹ், இப்ராஹீமிடம் தம் மகன் இஸ்மாயீலுக்கும் அவருடன் இருந்த எல்லா அடிமைகளுக்கும் மற்றவர்களுக்கும் விருத்தசேதனம் செய்யுமாறு ஏவினான். எனவே, அவர் அவர்களுக்கு விருத்தசேதனம் செய்தார். இது அவருடைய 99 ஆம் வயது முடிவுற்றபின் நிகழ்ந்ததாகும். அந்நேரத்தில் இஸ்மாயீல் நபியின் வயது 13 ஆகும். இது, அவருடைய குடும்பத்தினர் அல்லாஹ்வுக்குப் பணிந்தவர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் செய்த செயலாகும். இதை அவர் கடமை என்ற அடிப்படையில்தான் செய்தார். இதனால்தான் அறிஞர்கள், இது ஆண்கள் மீது கடமை (வாஜிபு) என்று கூறியுள்ளனர். இது பற்றி விளக்கமாக அதற்குரிய இடத்தில் பின்னர் கூறப்படும். இப்ராஹீம் (அலை) அவர்கள் தம் எண்பதாம் வயதில் கட்டைகளைச் செதுக்கக்கூடிய கருவியால் (கதூம்-வாய்ச்சி) விருத்தசேதனம் செய்துகொண்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரளி) அறிவித்துள்ளார்கள். (நூல்: புகாரீ)2


சில அறிவிப்புகளில் பின்வருகின்ற வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன: இப்ராஹீம் (அலை) அவர்கள் தம் எண்பதாம் வயதுக்குப் பிறகு விருத்தசேதனம் செய்துகொண்டார். அவர் கட்டைகளைச் செதுக்கக்கூடிய கருவியால் (கதூம்-வாய்ச்சியால்) விருத்தசேதனம் செய்துகொண்டார். (நூல்: முஸ்னத் அஹ்மத்) இங்கு இடம்பெற்றுள்ள `கதூம் எனும் சொல் ஒரு கருவியின் பெயரைக் குறிக்கிறது. அது ஓர் இடத்தின் பெயர் என்றும் கூறப்படுகிறது. மேற்கண்ட நபிமொழியில் இடம்பெற்றுள்ள `எண்பது வயது எனும் வார்த்தை அதைவிட அதிக வயது என்பதற்கு முரண் இல்லை. அல்லாஹ்வே நன்கறிந்தவன். அவருடைய மரணம் குறித்த நபிமொழியில் இது பற்றிய விளக்கத்தைக் காணலாம். இப்ராஹீம் நபி, தம்முடைய நூற்று இருபதாம் வயதில் விருத்தசேதனம் செய்துகொண்டார். அதன் பிறகு அவர் எண்பது ஆண்டுகள் வாழ்ந்தார் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரளி) அறிவித்துள்ளார்கள். (நூல்: இப்னு ஹிப்பான்)


அறுக்கப்பட்டவர் இஸ்மாயீல் நபியா?


அறுக்கப்பட்டவர் இஸ்மாயீல் நபிதான் என்ற வரலாறு மேலே எவ்விடத்திலும் கூறப்படவில்லை. அதேநேரத்தில் இப்ராஹீம் நபி தம் மகனார் இஸ்மாயீலைத் தேடி மூன்று தடவைதான் சென்றதாகக் கூறப்பட்டுள்ளது. அவற்றுள் முதலாவது தடவை, ஹாஜிருடைய மரணத்திற்குப் பிறகு இஸ்மாயீல் நபி திருமணம் செய்துகொண்ட பின்னர் சந்திக்க வந்தார். இந்த இடைப்பட்ட காலத்தில், இஸ்மாயீல் நபியின் குழந்தைப் பருவம் முதல் அவருடைய வாலிபப் பருவம் வரை அவர்களுடைய (மனைவி, மகன்) நிலையைப் பற்றித் தெரிந்துகொள்ளாமலே, அவர்களைச் சந்திக்காமலே எப்படி அவர் விட்டிருப்பார்? அவருக்கு நிலம் (எளிதில் பயணம் செய்யத்தக்க வகையில்) சுருக்கப்பட்டிருந்தது என்றும் கூறப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, அவர் அவர்களைச் சந்திக்கச் சென்றால், புராக் வாகனத்தில்தான் பயணம் செய்வார் என்றும் கூறப்பட்டுள்ளது. அப்படியிருக்கும்போது, அவருடைய மகனும் மனைவியும் உச்சக்கட்டத் தேவையில் இருந்தநிலையில் அவர்களின் வாழ்க்கை நிலையைப் பற்றித் தெரிந்துகொள்ளாமல் அவர் எப்படிப் பின்தங்கியிருப்பார்? மேற்கண்ட தகவல்களை வைத்துக்கொண்டு இப்ராஹீம் நபி பற்றி இவை போன்ற கேள்விகளை கேட்கத் தோன்றுகிறது.
ஆகவே, மேற்கண்ட தகவல்களுள் சில கட்டுக்கதைகளும் மர்ஃபூஉ ஹதீஸ்களோடு வேறு சில வார்த்தைகளைச் சேர்த்து அலங்கரிக்கப்பட்டவையுமே ஆகும். அதில் அறுக்கப்பட்டவரின் வரலாறு கூறப்படவில்லை. ஆனால், அஸ்ஸாஃப்ஃபாத் அத்தியாயத்தில் உள்ளபடி, அறுக்கப்பட்டவர் இஸ்மாயீல் நபிதான் என்பதற்கு நாம் ஆதாரம் காட்டியிருக்கிறோம். இது மிகவும் சரியான வரலாறு ஆகும். (நூல்: தஃப்சீர் இப்னு கஸீர்) 


அறுக்கப்பட்டவரின் வரலாறு


* மேலும், அவர் கூறினார்: திண்ணமாக நான் என்னுடைய இறைவனிடம் செல்பவன்; அவன் எனக்கு நல்வழியைக் காண்பிப்பான். என்னுடைய இறைவா! நீ எனக்கு நல்லோர்களிலிருந்து (ஒரு சந்ததியை) அளிப்பாயாக! (என்று பிரார்த்தனை செய்தார்). எனவே, நாம் அவருக்கு சகிப்புத் தன்மையுடைய (இஸ்மாயீல் எனும்) ஒரு மகனைக் கொண்டு நற்செய்தி கூறினோம்.


பின், (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய வயதை அடைந்தபோது அவர், என்னருமை மகனே! நான் உன்னை திண்ணமாக அறுத்துப் பலியிடுவதாகக் கனவுகண்டேன். இதைப் பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக! என்று கூறினார். (அதற்கு மகன்) கூறினார்: என்னருமைத் தந்தையே! நீர் ஏவப்பட்டபடியே செய்வீர். அல்லாஹ் நாடினால்- என்னை நீர் பொறுமையாளர்களுள் உள்ளவராகவே காண்பீர். ஆகவே அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, அவர் (இப்ராஹீம்) அவரை (இஸ்மாயீலைப்) பலியிட முகங்குப்புறக் கிடத்தியபோது, நாம் அவரை இப்ராஹீமே! என்று அழைத்தோம்.


திண்ணமாக, நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்திவிட்டீர்; நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலிகொடுக்கிறோம். இது தெளிவான ஒரு பெருஞ்சோதனையாகும். ஆயினும், நாம் ஒரு மகத்தான பலியைக்கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம். இன்னும், அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு நினைவூட்டுதலை) விட்டுவைத்தோம். இப்ராஹீம் மீது சாந்தி உண்டாவதாக! இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலிகொடுக்கிறோம். நிச்சயமாக அவர் இறைநம்பிக்கையாளர்களான நம் அடியார்களுள் உள்ளவர். நல்லோர்களிலுள்ள நபியாக இஸ்ஹாக்கை அவருக்கு (மகனாகத் தருவதாக) நாம் நற்செய்தி கூறினோம்.


நாம் அவர்மீதும், இஸ்ஹாக் மீதும் பாக்கியங்கள் பொழிந்தோம். மேலும், அவ்விருவருடைய சந்ததியருள் நன்மை செய்பவர்களும் இருக்கின்றார்கள்; தமக்குத்தாமே பகிரங்கமாக அநியாயம் செய்துகொள்வோரும் இருக்கின்றனர். (37: 99-113)


இப்ராஹீம் நபியின் பிரார்த்தனை


இப்ராஹீம் (அலை) அவர்கள் தம்முடைய நாட்டைவிட்டுத் துறந்து சென்றபோது, அவர் தம் இறைவனிடம், தமக்கு ஒரு நல்ல குழந்தையை வழங்குமாறு பிரார்த்தனை செய்தார் என்று அல்லாஹ் கூறுகின்றான். எனவே, அவர் பிரார்த்தனை செய்த தற்கு இணங்க, பொறுமைமிக்க ஆண் குழந்தையைத் தருவதாக அவன் அவருக்கு நற்செய்தி கூறினான். அவர்தாம் இமாயீல் ஆவார். ஏனெனில், இப்ராஹீம் நபியின் எண்பத்து ஆறாம் அகவையில் பிறந்த முதல் குழந்தையே இமாயீல் (அலை) அவர்கள்தாம். மார்க்க அறிஞர்கள் மத்தியில் இதில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. ஏனெனில் அவர்தாம் இப்ராஹீம் நபியின் முதற் குழந்தை.




----------------அடிக்குறிப்பு------------------------


1) மேற்கண்ட ஹதீஸ்கள் இப்னு அப்பாஸ் (ரளி) அவர்களின் கருத்துகளாகும். அவற்றுள் சில மர்ஃபூஉ நிலையில் உள்ளன. மேலும், அவற்றுள் சில `ஹரீப் தரத்தில் உள்ளன. இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் கூறியவற்றுள் சில இஸ்ராயீலிய்யா-கட்டுக்கதைகளைச் சார்ந்தவை ஆகும். அதில் ஒன்று, (இப்ராஹீம் நபி இறையாலயத்தைக் கட்டிய)அப்போது இஸ்மாயீல் பால்குடிப் பாலகராக இருந்தார் என்பது ஆகும்.


2 ) அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவித்துள்ள இதே நபிமொழி `முஸ்லிம் நூலிலும் இடம்பெற்றுள்ளது.



அரபி:           அல்பிதாயா வந்நிஹாயா (இமாம் இப்னு கஸீர்- ரஹ்) 
தமிழாக்கம்: நூ. அப்துல் ஹாதி பாகவி M.A., M.Phil.

செவ்வாய், 2 நவம்பர், 2010

தினமணி ஆசிரியருக்குக் கடிதம்

ஆர். நடராஜ் எழுதியிருந்த `விழலுக்கு நீர் பாய்ச்ச மாட்டோம் எனும் கட்டுரை படித்தேன். இலஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம் என்று பொது அறிவிப்புச் செய்துவிட்டதாலோ `வாங்காதீர்கள்! கொடுக்காதீர்கள்! என்று வெறுமனே பரப்புரை செய்துகொண்டிருப்பதாலோ இதற்கு நிரந்தரத் தீர்வு கண்டுவிட முடியாது. பொதுவாக, ஒரு பிரச்சினையின் ஆணிவேரைக் கண்டுபிடித்து அதை முற்றிலும் களைவதுதான் அதற்குரிய தீர்வாகும். இலஞ்சத்தின் ஆணிவேர் `செய்யும் வேலைக்கு அதிகபட்சப் பிரதிபலனை எதிர்பார்ப்பதுதான்.
அரசு அலுவலகங்களில் ஒரே வகையான வேலைக்குப் பல ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அச்சமயத்தில் அவர்களுள் பலர் அலட்சியப்போக்கோடு செயல்படுகிறார்கள். அத்தகைய அலுவலகங்களில் `அவர் பார்த்துக்கொள்வார் என்ற பொறுப்பற்ற தன்மை சிலருக்கு உண்டு. `அவர் கையொப்பம் இட்டால்தான் அது முடியும் எனும் வகையான பணியிலுள்ள ஊழியர்களும் உள்ளனர். இவர்களிடம்தான் இலஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. இதைத் தடுக்க, அனைத்து அலுவலகங்களிலும் `டோக்கன் முறையைச் செயல்படுத்தலாம்.  யார் யார் எத்தனை வாடிக்கையாளர்களை, நுகர்வோர்களைச் சந்தித்துள்ளனர் என்பதற்கான கணக்கீடுதான் அந்த டோக்கன். அவற்றின் எண்ணிக்கைக்கேற்ப ஆண்டின் இறுதியில் அவர்களுக்கு `போனஸ்  வழங்கலாம். பொதுவாக வழங்கப்படுகின்ற போனசை இரத்துச் செய்து விட்டுப் பொதுமக்களுக்குப் பணிபுரிந்த டோக்கன் எண்ணிக்கை அடிப்படையில் `புள்ளிகள் வழங்கப்பட்டு அதற்கேற்ப போனஸ்   வழங்கலாம். இதனால் முந்திவந்தவர்கள், பிந்தி வந்தவர்கள் என்று நுகர்வோரிடையே சண்டை ஏற்படாது. அரசு ஊழியர்களும் தம் எதிர்காலப் பிரதிபலனை மனதிற்கொண்டு மகிழ்ச்சியுடன் பணிபுரிவர். இது நடைமுறைப்படுத்தப்பட்டால் இலஞ்சம் தானாகவே விடைபெற்றுக்கொள்ளும்.
-நூ. அப்துல் ஹாதி பாகவி,