ஞாயிறு, 21 ஜனவரி, 2018

மொழிபெயர்ப்பாளர் உரை! (சுனனுன் நஸாயீ மூன்றாம் பாகம்)

   
 20-01-2018 அன்று மாலை கவிக்கோ அரங்கில் மூன்று நூல்கள் வெளியிடப்பட்டன. அவற்றுள் ஒன்றான சுனனுன் நஸாயீ மூன்றாம் பாகத்தை நான் தமிழாக்கம் செய்துள்ளேன். (அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்)

அந்நூலில் நான் பதிவு செய்துள்ள மொழிபெயர்ப்பாளர் உரை
---------------------------------------------------------------------------------------------------------------- 


எழுதுகோலால் எழுதக் கற்பித்த ஏக இறைவனுக்கே எல்லாப் புகழும். ஏகனின் இறுதித் தூதராய் இவ்வவனியில் தோன்றி எல்லா மக்களுக்கும் ஏகத்துவக்கொள்கையை ஏகமாய் எடுத்துரைத்த ஏந்தல் நபி (ஸல்) அவர்கள்மீதும் அவர்கள்தம் பரிசுத்தக் குடும்பத்தார், உற்ற தோழர்கள் அனைவர்மீதும் இறையருளும் கருணையும் பொழிவதாக!

வரலாற்று நூலையும் வேறு சில நூல்களையும் தமிழாக்கம் செய்துவந்த நான் முதன் முதலாகத் தமிழாக்கம் செய்த நபிமொழித் தொகுப்பு நூல் இப்னுமாஜா ஆகும். அதனைத் தொடர்ந்து நான்  சுனனுன் நஸாயீ எனும் இந்நூலைத் தமிழாக்கம் செய்யத் தொடங்கினேன். இந்நூலை நான் தாருல் உலூம் தேவ்பந்தில் பயின்றுள்ளேன். அங்கு இந்நூல் தவ்ரத்துல் ஹதீஸ் எனும் மேற்படிப்புப் பாடத்திட்டத்தில் உள்ளது. அப்பிரிவில் பயிற்றுவிக்கப்படுகின்ற பத்து ஹதீஸ் நூல்களுள் இதுவும் ஒன்று.

சுனனுன் நஸாயீ எனும் நபிமொழித் தொகுப்பைக் கோவை செய்த இமாம் அவர்களின் இயற்பெயர் அஹ்மது பின் ஷுஐப் ஆகும். இவரது குறிப்புப்பெயர் அபூஅப்திர் ரஹ்மான் ஆகும். இவர்  நஸா எனும் ஊரில் பிறந்ததால் அந்த ஊரோடு இணைக்கப்பட்டு "சுனனுன் நஸாயீ" எனும் பெயரில் இந்நூல் அறியப்படுகிறது.  இவர் ஹிஜ்ரீ 215-இல் பிறந்து, ஹிஜ்ரீ 303-ஆம் ஆண்டு இறந்தார்.



இதில் அகில உலக எண்ணியல் கணக்குப்படி 5662 நபிமொழிகள் உள்ளன. அந்த எண்ணைத்தான் இந்நூலில் பயன்படுத்தியுள்ளோம். இதில் புகாரீ, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா ஆகிய நூல்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள நபிமொழிகளும் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன. அவற்றுள் சில அந்நூல்களுள் இடம்பெற்ற அதே வார்த்தைகளைக் கொண்டவையாகவும் வேறு சில நபிமொழிகள் சிற்சில வார்த்தை மாற்றங்களுடனும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. ஆகவே புகாரீ, முஸ்லிம் ஆகிய நூல்களுள் வார்த்தை மாற்றமின்றிப் பதிவுசெய்யப்பட்டுள்ள நபிமொழிகளுக்கான தமிழாக்கத்தை ஏற்கெனவே ரஹ்மத் பதிப்பகம் வெளியிட்டுள்ள புகாரீ, முஸ்லிம் தமிழாக்க நூல்களில் உள்ளதை அப்படியே எடுத்துப் பயன்படுத்தியுள்ளேன். மேலும் இப்னுமாஜா நூலில் இடம்பெற்றுள்ள நபிமொழிகள் சில இதில் இடம்பெற்றுள்ளன. அந்த நபிமொழிகளை ஏற்கெனவே நானே தமிழாக்கம் செய்துள்ளதால் அவற்றை அந்நூலிலிருந்து அப்படியே எடுத்துப் பயன்படுத்தியுள்ளேன். அவை தவிர மற்ற நபிமொழிகளையே நான் இந்நூலில் புதிதாகத் தமிழாக்கம் செய்துள்ளேன் என்பதைத் திறந்த மனத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

நஸாயீ எனும் இந்நூலை ஏன் படிக்க வேண்டும்? மற்ற நபிமொழித் தொகுப்பு நூல்களுள் உள்ள நபிமொழிகள்தாமே இதில் இடம்பெற்றுள்ளன? என்று கேட்போர் இருக்கலாம். புகாரீ, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா ஆகிய நூல்களுள் இடம்பெறாத நபிமொழிகளும் இந்த நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளன என்பதை அவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். அது தவிர, மற்ற நூல்களுள் இல்லாத கூடுதல் தகவல்களும் இதில் இடம்பெற்றுள்ளன என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். எனவே இந்நூலைப் படிக்கின்றபோது, மற்ற நூல்களில் கிடைக்காத கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்வதோடு மேற்கண்ட நூல்களுள் உள்ள தகவல்களையும் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.   

 

நீண்ட காலமாகத் தமிழில் தலைகாட்டாத அரபி நூல்களெல்லாம் ஒவ்வொன்றாகத் தமிழில் வெளிவருவது தமிழறிந்த மக்கள் யாவருக்கும் உயர்ந்தோன் அல்லாஹ் அறிவூற்றைத் திறந்துவிடத் தொடங்கிவிட்டான் என்பதையே காட்டுகின்றது. ஞான மழை பொழியும்போது அதைப் பிடித்துப் பத்திரப்படுத்திக்கொள்வது அறிவாளிகளின் அடிப்படைப் பண்பாகும். அரபி மூலத்தோடு இணைந்த இது போன்ற தமிழாக்க நூல்களை வாங்கி வைத்துக்கொண்டு வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் வாசித்துப் பயன்பெறுவது வாசகர்களின் வழக்கமாக மாற வேண்டும். கோடைக்கால வெப்பத்தில் வாடியவன் தண்ணீர்மீது கொள்ளும் மோகத்தைப்போல அறிவுத்தாகம் கொண்டு இந்நூலை வாசிக்கும்போது அளவிலா நற்கருத்துகளைத் தேனாகச் சுவைக்கலாம்.

ஒரு செடியை நட்டு, அதன் வளர்ச்சியை நாடி அவ்வப்போது தண்ணீர் விட்டு, உரமிட்டு வளர்த்து அதைப் பெருமரமாக உருவாக்குவதைப்போல ரஹ்மத் பதிப்பகம் எனும் நிறுவனத்தைத் தொடங்கி அதைச் சிறுகச் சிறுக வளர்த்துப் பெருமரமாக்கும் முயற்சியில் ஈடுபட்டார் தமிழார்வலர் முஸ்தஃபா அவர்கள். இன்று அது ஆல்போல் தழைத்து தன்னிலிருந்து நூல்கள் எனும் கனிகளைத் தந்துகொண்டிருக்கிறது. அவர்தம் பணிகள் யாவும் பரந்துவிரிந்துள்ள இப்பாரெங்கும் பரவி, மக்கள் யாவரும் பயன்பெற ஏகன் அல்லாஹ் அருள்புரிவானாக. அவர் எண்ணிய பணிகளையெல்லாம் செய்து முடிக்கும் வரை அவரது ஆயுளை நீட்டிப்பானாக.

ஏகன் அல்லாஹ் அடியேனுக்கும் இந்நூல் நேர்த்தியாக வெளிவர உறுதுணையாகப் பணியாற்றிய அத்தனை பேருக்கும் ஈருலகப் பயன்களை வழங்குவதோடு தொடர்ந்து இதுபோன்ற பயனுள்ள பணிகளைச் செய்யும் நற்பேற்றை நல்குவானாக.

அன்புடன்
முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
சென்னை 68








கருத்துகள் இல்லை: