சனி, 22 ஜூலை, 2017

இணைக்கப்பட்ட மின்கம்பிகளாக இருப்போம்!


உ.பி., உத்தரகாண்ட் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் பாக ஆட்சி அமைத்துள்ளதோடு தற்போது பாக ஆதரவு பெற்ற குடியரசுத் தலைவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் முஸ்லிம்கள் ஓர் அச்சநிலையில் வாழ்வதாகச் செய்திகள் பரவி வருகின்றன; பரப்பப்படுகின்றன. ஆனால் முஸ்லிம்கள் அச்சப்படத் தேவையில்லை. பிரித்தாளும் சூழ்ச்சியால் ஆட்சியைப் பிடித்தவர்களுக்கு எதிராக அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்வான் என்பதை முஸ்லிம்களாகிய நாம் மறந்துவிட வேண்டாம்.

நம்முள் பலர் அல்லாஹ்வை உரிய முறையில் நினைவுகூராமல் மறந்துவிட்டதன் காரணமாக இது நமக்கொரு சோதனையாக இருக்கலாம். மக்கள் அநியாயம் செய்யும்போது அநீதியான ஆட்சியாளர்களால் அல்லாஹ் நம்மைச் சோதிப்பான். அதேநேரத்தில் அச்சோதனையிலிருந்து மீள்வதற்கான வழியையும் அவன் சொல்லித் தந்துள்ளான்.

முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ்வை மனத்தில்கொண்டு எந்நேரமும் அவனை நினைத்துக்கொண்டே இருந்தால் நம்மை எதிர்க்கவோ அச்சுறுத்தவோ யாராலும் முடியாது. நாம் அல்லாஹ்வுடன் தொடர்புகொண்டோராக இருக்கும்போது மின்சாரத்துடன் இணைக்கப்பட்ட மின்கம்பிகளாக மாறிவிடுகின்றோம். எனவே மின்சாரத்தில் இணைக்கப்பட்ட கம்பிகளாக உள்ள நம்மை எதிரிகள் தீண்டுவதற்கு அஞ்சுவார்கள். அத்தகைய அச்சத்தை அவர்களின் உள்ளத்தில் அல்லாஹ் போட்டுவிடுவான்.

“அவர்களுடைய பசிக்கு உணவளித்து (கொலை, களவு முதலிய கொடிய) பயத்திலிருந்து அவர்களுக்கு அபயமளித்த (கஅபா எனும்) இவ்வீட்டின் இறைவனையே அவர்கள்  வணங்கட்டும்”  (106: 3-4) என்று அல்லாஹ் கூறுகின்றான். நாம் அல்லாஹ்வுடன் தொடர்புடைய நல்லடியார்களாக இருக்கும் வரை அவன் நம்மைப் பசியிலிருந்தும் பயத்திலிருந்தும் பாதுகாத்துக்கொண்டே இருப்பான்.

எதிரிகளெல்லாம் ஒன்றுசேர்ந்து ஒரு பெரும் படையினராக நமக்குக் காட்சியளிக்கலாம். ஆனால் அவர்களின் உள்ளங்களில் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தித் தனித்தனியாகப் பிரித்துவிடும் பேராற்றலுடையவன்தான் உயர்ந்தோன் அல்லாஹ். அது குறித்துத் திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுவது நமக்கு ஆறுதலாக இருக்கிறது. “அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டிருப்பதாக நீங்கள் எண்ணுகின்றீர்கள். (அன்று!) அவர்களுடைய உள்ளங்கள் (கருத்து வேறுபாடுகளால்) சிதறிக்கிடக்கின்றன.” (59: 14) இதை  நினைவில் கொண்டு அச்சமற்று வாழ்வோம். நடப்பவை யாவும் நலமாகவே அமையும் என நம்புவோம். அல்லாஹ்வைத் தொழுது அவனிடமே உதவி தேடுவோம். பசியோ பட்டினியோ பயமோ எதுவும் நம்மை அண்டாமல் பாதுகாப்பவன் அந்த அல்லாஹ் ஒருவனே என்பதை நினைவில் நிறுத்தி நிம்மதியாக வாழ்வோம்.

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி

கருத்துகள் இல்லை: