வியாழன், 17 மார்ச், 2016

பூபாள இராகங்கள் (நூல் மதிப்புரை)



நூல் மதிப்புரைக்கு வந்திருந்த "பூபாள இராகங்கள்'' எனும் கவிதைத் தொகுப்பு நூலை எடுத்தபோது அதன் முகப்பு அட்டை கண்ணைக் கவர்ந்தது. அதைப் புரட்டியபோது ஒவ்வொரு கவிதையின் கருவிற்கும் ஏற்றாற்போல் அதனைப் பிரதிபலிக்கும் விதத்தில் ஒவ்வொரு படமும் இடம்பெற்றிருந்தது. கவிதையைப் படித்தவுடன் கவிதையின் கருவும் படமும் மனதில் அப்படியே ஒட்டிக்கொள்கின்றன. எளிய, இனிய நடையில் கவிதைகள் அமைந்துள்ளன. கவிதை என்றாலே கடினமாக இருக்கும்; படித்தோர்தாம் புரிந்துகொள்ள முடியும் என்ற நிலையிலிருந்து மாறி, பாமரர் படித்தாலும் புரிந்துகொள்ளும் வகையிலான எளிய நடை. தேவையான இடங்களில் ஆங்காங்கே உவமை. 15 ஆண்டுகளாக அவ்வப்போது எழுதிய கவிதைகளை ஒருங்கிணைத்திருப்பதாக இந்நூலின் முன்னுரை கூறுகிறது. கவிதை எழுதுவதையே தொழிலாகக் கொள்ளாமல் அவ்வப்போது மனதில் உதிப்பதைக் கவிதையாகத் தீட்டுவதில்தான் சமூக உணர்வு மேலிடும். அந்த உணர்வின் வெளிப்பாட்டை "பூபாள இராகங்கள்''  எனும் இந்நூலில் காணமுடிகிறது.

மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவியின் முதலாம் கவிதைத் தொகுப்பு இனிதே அமைந்துள்ளது. அவரின் கவிதைகளுக்கு, நடைவண்டியைப் பிடித்துக்கொண்டு நடக்கப் பழகும் ஒரு குழந்தையை அருகிலிருந்து ஆர்வமூட்டுவதைப்போல், தமிழறிஞர்கள் முனைவர் சேமுமு. முகமதலி, முனைவர் ஹ.மு. நத்தர்சா, முனைவர் ஜெ. ஹாஜாகனி ஆகியோர் வாழ்த்துரை வழங்கி ஊக்கப்படுத்தியிருப்பது இந்நூலுக்கு அணிசேர்க்கிறது. இந்நூலை அனைவரும் வாங்கிப் படித்து இரசிக்கும் வகையில் இதன் விலையை மிகவும் குறைவாக அமைத்துள்ளார். நூலை வாங்கிப் படித்து, கவிஞரை நீங்களும் ஊக்கப்படுத்தலாமே!

நூல்: பூபாள இராகங்கள் (கவிதை) 

ஆசிரியர்: மௌலவி முனைவர் நூ. அப்துல் ஹாதி பாகவி

பக்கங்கள்: 150

விலை: ரூ. 100/-

வெளியீடு:
ஆயிஷா இஸ்லாமியப் பதிப்பகம்
224/733 முதல் தளம், டி.எச். சாலை,
புதுவண்ணை, சென்னை-600081
தொடர்புக்கு: 94443 54429   

=========================================



வேலையை விட்டுவிட்டாள்...! (சிறுகதை)

-நூ. அப்துல் ஹாதி பாகவி

ஆயிஷா-அன்வர் தம்பதியருக்கு எழில் கொஞ்சும் சென்னை மாநகரில் உற்றாரும் உறவினரும் பெற்றோரும் மற்றோரும் கூடி நின்று முகமலர்ந்து அன்போடு வாழ்த்த, இனிதே திருமணம் நடைபெற்றது. நண்பர்களும் தோழிகளும் அன்பின் அடையாளமாய்ப் பரிசுப் பொருள்களை வழங்கி மனதார வாழ்த்துத் தெரிவித்துவிட்டுச் சென்றனர்.

புதுமணத் தம்பதிகள் ஆயிஷாவும் அன்வரும் பொருத்தமான ஜோடி என வாழ்த்தாத நெஞ்சமில்லை. வாழ்த்துச் சொல்லும் நண்பர்களுக்குப் பஞ்சமில்லை. ஒரு வார காலம் உருண்டோடியதே தெரியவில்லை. பேருவகையோடும் பெரு மகிழ்ச்சியோடும் பொழுது கழிந்தது.  விடுப்பு நாள்கள் விரைவில் கரைந்தன. அலுவலகத்தில் இதற்குமேல் விடுப்புக்கு அனுமதியில்லை. இரண்டு நாள்களுக்கு முன்பே மேலாளர், ஆயிஷாவுக்குச் செல்பேசியில் அழைப்பு விடுத்திருந்தார்.  அன்று திங்கள்கிழமை. வேக வேகமாகத் துயிலெழுந்து அதிகாலைத் தொழுகையை வழமைபோல் இருவரும் நிறைவேற்றினர். பின்னர், தன் அன்பான மனைவி ஆயிஷா சமைத்த சிற்றுண்டியை அன்வர் மனதார ருசித்துச் சாப்பிட்டான். இருவரும் ஒன்றாக அலுவலகம் செல்லத் தயாராயினர்.

திருமணத்திற்குப் பிறகும் அலுவலகப் பணியைத் தொடரப்போவதாகத் திருமணத்திற்கு முன்பே மாப்பிள்ளையிடம் பெண்வீட்டின் சார்பாக ஒப்பந்தம் போடப்பட்டுவிட்டது. அந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டுதான் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டான் அன்வர். 

அன்வர் தன் அலுவலகத்திற்குச் செல்லும் வழியில்தான் ஆயிஷா செல்லும் அலுவலகம் இருந்தது. இது நாள் வரை தன்னுடைய பைக்கின் பின்னால் அமர யாருமின்றித் தனியாகச் சென்றான். தனியாகச் செல்லும்போது வழியில் யாருக்கேனும் லிஃப்ட் கொடுப்பது அவனது வழக்கம். இன்று முதல் அவனுடைய பைக்கின் பின் இருக்கையில் அமர அவனுடைய நெஞ்சில் நிறைந்த மனைவி ஆயிஷா வந்துவிட்டாள். மனைவியோடு பேசிக்கொண்டே சென்ற அன்வர், பிரதானச் சாலையில் மிகப் பிரம்மாண்டமாக வான்முட்டி நிற்கும் ஒரு கட்டடத்தின்முன் தன் வண்டியை நிறுத்த, ஆயிஷா இறங்கிக்கொண்டாள்.

தன் கண்ணில் நிறைந்த கணவர் அன்வருக்கு அன்போடு சலாம் உரைத்து, அவன் புறப்படும் வேளையில், ஃபீ அமானில்லாஹ் (அல்லாஹ்வின் பாதுகாப்பில் செல்வீர்) என்று கூறிப் புன்னகையோடு அனுப்பி வைத்தாள் ஆயிஷா. இருவரும் பிரிய மனமின்றிப் பிரிந்து சென்றனர்.

அன்வர்-ஆயிஷா இருவரும் நன்கு படித்தவர்கள்; இஸ்லாமிய நெறியையும் பண்பாட்டையும் அறிந்தவர்கள்; ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பதும் பொறுத்துக்கொள்வதும் இருவரின் இயற்பண்பாகும். ஒருவர் மற்றவருக்குத் துணையாகவும் தூணாகவும் இருந்தனர். காண்போர் பார்த்து வியக்கும் அளவிற்கு அவர்களின் அன்னியோன்னியம் இருந்தது.

காலம் உருண்டோடியது. இரண்டு பிள்ளைகளுக்குத் தாயானாள் ஆயிஷா. அலுவலகத்தில் வழங்கப்பட்ட ஆறு மாத விடுப்புக் காலத்தில் தன் பிள்ளைகளுக்குத் தாய்ப்பாலூட்டிப் பேணி வளர்த்தாள். தான் விரும்பிய பள்ளிக்கூடத்தில் சேர்த்தாள். மாலையில் தன் அலுவலகத்திலிருந்து திரும்பி வந்ததும், பிள்ளைகளைக் கவனித்துக் கொள்வதும் அவர்களுடன் பொழுதைக் கழிப்பதும்  அவளின் இயல்பாக மாறிப்போனது.

திடீரென ஒரு நாள் அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு புயல் வந்தது. அது அவர்களின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டுவிட்டது. ஆம்! ஆயிஷாவுக்கு வேறோர் அலுவலகத்தில் பணி மாற்றம். அன்வர்-ஆயிஷா இருவரும் தம் அலுவலகம் செல்லும்போது ஒரே பைக்கில் ஒட்டி உறவாடிச் செல்வது வழக்கம். இனி அந்த இனிமையான பொழுது அவர்களுக்குக் கிட்டாது. அன்வரின் அலுவலகம் ஒரு திசையிலும் ஆயிஷாவின் அலுவலகம் எதிர்திசையிலும் இருந்தன.

அதிகாலையில் எழுந்து தொழுதுவிட்டு, வேகமாகச் சமைத்து, அதை உணவுப் பெட்டிக்குள் வைத்து, பிள்ளைகளுக்கும் கணவருக்கும் கொடுத்தனுப்பிவிட்டு, தனக்கும் உணவை எடுத்துக்கொண்டு அலுவலகப் பேருந்தில் ஏறி, அலுவலகம் செல்லத் தொடங்கினாள். அன்வர் தன் அலுவலகம் செல்லும்வேளையில் தன் பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்தில் விட்டுச் செல்வது வாடிக்கையானது.

அலுவலகப் பணி முடிந்து, அன்வர் வீட்டிற்கு வந்து, தன் பிள்ளைகளைக் கவனித்துக் கொள்ளலானான்.  வீட்டுப் பாடங்களை எழுத வைத்து, அவர்களுடைய பாடங்களைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான். இடையிடையே கடிகாரத்தை நோட்டமிட்டு, வாசலைப் பார்த்துக் கொண்டிருந்தான். இரவு மணி எட்டை எட்டியது. அப்போதுதான் ஆயிஷா வீடு வந்து சேர்ந்தாள்.  மிகவும் களைப்பாக இருந்தாள்.

ஆயிஷா! ஏன் இவ்வளவு நேரமாச்சு? என்னாச்சு? என்று அன்போடு கேட்டான் அன்வர்.

எல்லாம் போக்குவரத்து நெரிசல்தான் என்று ஒற்றை வரியில் வெற்று வார்த்தையாய் விடை பகன்றாள் ஆயிஷா.

காலம் வேகமாகச் சுழல, அன்வர்-ஆயிஷா தம்பதியருக்குத் திருமணமாகிப் பத்து வருடங்கள்  கரைந்துவிட்டன. இப்போதெல்லாம் ஆயிஷா வீட்டிற்குத் தாமதமாக வருவதால், வந்து சமைக்க இயலாது போய்விட்டது. எனவே அவள் வரும்போது இரவுணவை உணவகத்திலேயே வாங்கி வந்துவிடுகின்றாள். காலையில் மிகவும் துரிதமாக அலுவலகம் செல்ல வேண்டி இருப்பதால் காலையிலும் உணவு சமைக்க முடிவதில்லை. காலையில் ஒரு சிற்றுண்டிக் கடையில் உணவை வாங்கி, அன்வர் தன் பிள்ளைகளுக்குக் கொடுத்துவிடுகின்றான். ஆயிஷாவும் அன்வரும் தத்தம் அலுவலகத்தில் அமைந்துள்ள கேண்டீனில் பகலுணவை முடித்துக் கொள்கின்றார்கள். இரவில்  வீடு திரும்பும்வேளையில் ஏதாவது ஓர் உணவகத்தில் தன் வீட்டிற்குத் தேவையான உணவை ஆயிஷா வாங்கி வந்துவிடுகின்றாள்.

ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஆட்டிறைச்சி வாங்கி, தன் வீட்டிலேயே சமைக்கத் தொடங்கினாள் ஆயிஷா. அன்று ஒரு நாள் மட்டும்தான் அனைவருக்கும் வீட்டு உணவு. அன்வர் படித்தவன்; இஸ்லாமிய நெறிமுறைகளையும் அறிந்தவன். எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக்கொண்டான்.
 
அன்றொரு நாள் அன்வரின் சின்னம்மா சித்தீக்கா வந்திருந்தாள். இருவருக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. நீ இன்றைக்கு லீவு போடு என்று ஆயிஷாவிடம் சொல்ல, இன்றைக்கு ஆஃபீசில் ஒரு முக்கியமான வேலை இருக்கு. நீங்களே லீவு போட்டு, உங்க சின்னம்மாவோட பேசிக்கொண்டிருங்கள் என்று கூறினாள். இருவருக்கும் விடுப்பு எடுக்க முடியாத நிலை. தேவையான பொருள்களை வாங்கிக் கொடுத்துவிட்டு, சமைத்துண்ணுமாறு சொல்லிவிட்டு இருவரும் தத்தம் அலுவலகம் சென்றுவிட்டனர். சித்தீக்கா வெறுமையாய் உணர்ந்தாள். இத்தனை ஆண்டுகள் கழித்து வந்துள்ள எனக்கு இதுதான் இவர்கள் கொடுக்கும் மரியாதையா என்று நினைத்தவளாய் மறுநாளே புறப்பட்டுவிட்டாள். நீண்ட காலத்திற்குப் பிறகு சின்னம்மா தன் வீட்டிற்கு வந்தும் அவரைச் சரியாகக் கவனித்துக்கொள்ள முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் அன்வர் தன் மனைவி ஆயிஷாவைச் சற்றுக் கடுமையாகப் பேசிவிட்டான். அதைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆயிஷா சற்று நிதானம் தடுமாறி, தன் அன்பிற்குரிய கணவனை எதிர்த்துப் பேசி, அவனது சினத்தைத் தூண்டிவிட்டாள். ஆனாலும் அது அவளுடைய மனதை உறுத்திக்கொண்டே இருந்தது. என்ன இருந்தாலும், நான் அவரை அப்படிப் பேசியிருக்கக்கூடாது என்று கருதினாள். "சொர்க்கமும் நரகமும் கணவனின் காலடியில்'' என்று தன் தாய் சொல்லிக் கொடுத்த நபிமொழி நினைவுக்கு வந்து, அவளை மீண்டும் மீண்டும் வருத்தியது.  நீண்ட நேரமாகியும் கண்ணில் உறக்கமில்லை; மனதில் நிம்மதி இல்லை.

இதுபோன்ற சோகமான நேரங்களில் அவள் தன் உற்ற நண்பனாகக் கருதுவது, திருக்குர்ஆனைத்தான். அவளுடைய சோர்வுக்கும் சோகத்திற்கும் மருந்தூட்டும் விதமாக அமைவது அதுவே. எனவே பட்டென எழுந்து, அங்கத்தூய்மை செய்துகொண்டு திருக்குர்ஆனை எடுத்து ஓதத் தொடங்கினாள். அந்நிசா எனும் அத்தியாயத்தை ஓதிக்கொண்டே வந்தபோதுதான் அந்த  இறைவசனத்தைப் படித்தாள். அதுவே அவளின் வாழ்க்கையை மாற்றிப்போட்டது.

(ஆண், பெண் இருபாலாரில்) ஆண் பாலாரை(ப் பெண்பாலாரைவிட) அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருப்பதுடன் (ஆண்பாலார்) தங்கள் பொருள்களை(ப் பெண் பாலாருக்கு)ச் செலவு செய்வதனாலும் ஆண்கள்தாம் பெண்களை நிர்வகிக்கக் கூடியவர்களாக இருக்கின்றனர். ஆகவே, நல்லொழுக்கம் உள்ள பெண்கள் (அல்லாஹ்வுக்கும் தங்கள் கணவனுக்கும்)  பணிந்தே நடப்பார்கள். (தங்கள் கணவன்) மறைவாக உள்ள சமயத்தில் அல்லாஹ்வின் பாதுகாப்பைக் கொண்டு (தங்களையும் கணவனின் மற்ற பொருள்களையும்) பேணிக்காத்துக் கொள்வார்கள். (4: 34)

இந்த இறைவசனம் அவளது சிந்தனையைத் தூண்டியது. மீண்டும் மீண்டும் அந்த வசனம் குறித்துச் சிந்தித்தாள். மீண்டும் அதைப் படித்தாள். தான் இவ்வளவு நாள் வாழ்க்கையை இழந்துவிட்டதாக உணர்ந்தாள். தன் பிள்ளைகள் தாய்ப்பாசத்திற்காக ஏங்குவதையும் தன் கணவன் மனைவியின் உபசரிப்பிற்காகவும் அன்பான வார்த்தைகளுக்காகவும் ஏங்குவதையும் உணர்ந்தாள். பணிக்குச் செல்வதால் நல்லதொரு தாயாக, நல்லதொரு மனைவியாக தன்னால் இருக்க முடியவில்லையே என எண்ணி எண்ணிக் குமைந்தாள். வாழ்க்கையை இழந்து எதையோ தேடிக்கொண்டிருப்பதை விளங்கினாள். தீர்க்கமாக முடிவு செய்துகொண்டு உறங்கினாள். நிம்மதியான உறக்கம் அவளின் கண்களைத் தழுவியது.

அதிகாலை எழுந்து தொழுதுவிட்டு, தன் பிள்ளைகளுக்கும் கணவருக்கும் சமைக்கத் தொடங்கினாள். அக்காட்சியைக் கண்ட அன்வருக்கு ஆச்சரியம்.

என்ன ஆயிஷா, சமைக்கத் தொடங்கிவிட்டாய். அலுவலகம் செல்லவில்லையா? என்று அக்கறையோடு கேட்டான்.

நான் வேலையை விட்டுவிடுவதாக முடிவு செய்துவிட்டேன். இனி நான் வீட்டில் இருந்துகொண்டு உங்களையும் பிள்ளைகளையும் கவனித்துக்கொள்ளப் போகிறேன் என்று தீர்மானமாகக் கூறினாள் ஆயிஷா.

ஆயிஷாவின் தீர்க்கமான முடிவைக் கேட்ட அன்வர் மகிழ்ச்சியில், அல்ஹம்து லில்லாஹ் அலா குல்லி ஹால் என்று கூறினான்.

அன்வர் தன் வீட்டிலேயே தன் மனைவி சமைத்த சிற்றுண்டியை வயிறார, மனதார உண்டுவிட்டு, தன் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு தன் அலுவலகத்தை நோக்கிச் சென்றான்.
அதற்குள் ஆயிஷா வீட்டு வேலைகளையெல்லாம் முடித்துக்கொண்டு தன் பிள்ளைகளையும் கணவரையும் அன்போடு வரவேற்கத் தயாரானாள். அன்வர் தன் அலுவலகப் பணியை முடித்துக்கொண்டு பிள்ளைகளை அழைத்துக்கொண்டு, தன் வருகைக்காக ஆவலோடு காத்திருக்கும் மனைவியைக் காண மகிழ்ச்சியோடு தன் இல்லம் நோக்கி விரைந்தான். 

 ====================






ஞாயிறு, 13 மார்ச், 2016

"பூபாள இராகங்கள்" கவிதைத் தொகுப்பு நூல்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

என்னுடைய "பூபாள இராகங்கள்" கவிதைத் தொகுப்பு நூல் வெளிவந்துவிட்டது என்ற செய்தியைத் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

சிறந்த கவிதைகளை மட்டும் பதிவுசெய்துள்ளேன். ஒவ்வொன்றும் ஒரு கருத்தை வலியுறுத்துவதாக அமைந்துள்ளமை கண்டு படைத்தோன் அல்லாஹ்வுக்கு நன்றிசெலுத்துகிறேன்.

இந்நூலைப் பார்வையிட்டு ஆங்காங்கே கண்ட பிழைகளைத் திருத்திக் கொடுத்ததோடு, இந்நூல் சிறக்கும் வகையில் நல்லதொரு நடுநிலையான மதிப்புரையை வழங்கிய முனைவர் சேமுமு.முகமதலி அவர்களுக்கும், இந்நூலுக்கு அணிந்துரை வழங்கி அணிசேர்த்த புதுக்கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர், முனைவர் ஹ.மு.நத்தர்சா அவர்களுக்கும், வாழ்த்துரை வழங்கிய  காயிதே மில்லத் கல்லூரி, தமிழ்த்துறைத் தலைவர், முனைவர் ஹாஜாகனி அவர்களுக்கும் என் இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

இக்கவி நூல் திக்கெங்கும் பரவி, தமிழ்த் தாகம் உள்ளோரின் தாகத்தைத் தீர்க்கும் வண்ணம் அமைய வேண்டுமென்ற தீராத ஆவலுடன் தூயோன் அல்லாஹ்விடம் இரு கைகளுயர்த்திப் பிரார்த்தனை செய்கிறேன்.

                     அன்புடன்
கவிஞர்
                     நூ.அப்துல் ஹாதி பாகவி

இந்நூல் கிடைக்கும் இடங்கள்:

சலாமத் புக் ஹவுஸ், மண்ணடி : 044 4216 7320

பஷாரத் பப்ளிகேஷன், மண்ணடி: 97899 99256

த்ரீஎம் பப்ளிஷர், அங்கப்பன் தெரு, மண்ணடி: 98842 83949/ 984000 4168/ 98403 61227

ரஹ்மத் ஆங்கில நூல் நிலையம், மயிலாப்பூர், சென்னை: 9940 059400 

==============
பக்கங்கள்: 152
விலை: 100/-
வெளியீடு: ஆயிஷா இஸ்லாமியப் பதிப்பகம்
224/ 733 முதல் தளம், டி எச் சாலை,
புதுவண்ணாரப்பேட்டை. சென்னை 81


  


என் தந்தையின் வஃபாத் செய்தி




நம் மனாரில் நபிகளார் நவின்ற நான்குகள் எனும் தொடர் கட்டுரை எழுதி வருகின்ற முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி அவர்களின் தந்தை சே. நூர்முஹம்மது இராவுத்தர் (வயது: 88) கும்பகோணத்தை அடுத்த சுவாமி மலை எனும் ஊரில் 11. 02. 2016 (02. 05. 1437) வியாழன் மாலை 5.40 மணிக்கு வஃபாத் ஆகிவிட்டார். அன்னாரின் ஜனாஸா வெள்ளிக்கிழமை முற்பகல் 12 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்னாரின் மஃக்ஃபிரத்திற்காக துஆச் செய்வோம். 
=================

நபிகளார் நவின்ற நான்குகள் (தொடர்-4)


முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி எம்.ஏ., எம்.ஃபில்., பிஎச்.டி.

நான்கு விஷயங்கள் இறைத்தூதர்களின் வழிமுறைகளுள் உள்ளவையாகும்.  1. நாணம் கொள்ளுதல், 2. நறுமணம் பூசுதல், 3. பல் துலக்குதல், 4. மணமுடித்தல் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதீ: 1000)

இந்நபிமொழியில் கூறப்பட்டுள்ள நாணம் கொள்ளுதல், நறுமணம் பூசுதல், பல் துலக்குதல், மணமுடித்தல் ஆகிய நான்கு வழிமுறைகளும் ஒவ்வோர் இறைத்தூதரையும் அலங்கரித்துள்ளன. இந்நான்கு செயல்பாடுகளுக்குள் உடல் சார்ந்த, உள்ளம் சார்ந்த, உணர்வு சார்ந்த அனைத்தும் உள்ளன. நாணுதல் பெண்ணுக்கே உரிய உயர்பண்பாக நாம் கருதியுள்ளோம். ஆனால் அது இருபாலருக்கும் உரிய நற்பண்பு என்பதை நாம் உணர்வதில்லை. ஒவ்வொரு செயலையும் நிதானத்துடனும் கவனத்தோடும் செய்ய வேண்டும் என்பதற்காகவே அப்பண்பு இறைத்தூதர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. மற்றவர்களைவிட அவர்கள் தனித்துவம் பெற்றுத் திகழ வேண்டும் என்பது இறைவனின் எண்ணம். எனவேதான் அவர்களுக்கு உயர் பண்பான நாணத்தை வழங்கியிருந்தான். அது மட்டுமின்றி, “அது எப்போதும் நன்மையையே கொண்டுவரும்என்பது நபி (ஸல்) அவர்களின் பொன்னான வாக்காகும்.

நாணம் கொள்ளுதல் இறைநம்பிக்கையின் ஒரு பகுதி என்பதைப் பின்வரும் நபிமொழி மூலம் அறிகிறோம்.  இறைநம்பிக்கை (ஈமான்) அறுபதுக்கும் அதிகமான கிளைகளைக் கொண்டதாகும். நாணமும் இறைநம்பிக்கையின் ஒரு கிளையேஎன நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்: புகாரீ: 9) மேலும் வெட்கப்பட்டுச் சிலவற்றைச் செய்யாமல் விட்டுவிடுதல், சிலவற்றைக் கேட்காமல் விட்டுவிடுதல், சிலவற்றைப் பேசாமல் விட்டுவிடுதல் உள்ளிட்டவை சிலரிடம் இருக்கலாம். இது ஒரு குறையில்லை. மாறாக, இது ஒரு நிறையே ஆகும்.

மிகுந்த வெட்க சுபாவம் கொண்ட தம் சகோதரரைக் கண்டித்து, அறிவுரை கூறிய ஒரு தோழரை நபி (ஸல்) அவர்கள், அவரை விட்டுவிடுமாறு பணிக்கின்றார்கள். அது குறித்த நபிமொழியைக் காண்போம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்ஸாரிகளுள் ஒருவரைக் கடந்து சென்றார்கள். அவர் வெட்கப்படுவது குறித்து(க் கண்டித்து)த் தம் சகோதரருக்கு அறிவுரை கூறிக்கொண்டிருந்தார். (இதைக் கண்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரை(க் கண்டிக்காதீர்கள்;) விட்டுவிடுங்கள். ஏனெனில் வெட்கமும் இறைநம்பிக்கையின் ஓர் அம்சமே'' என்று கூறினார்கள். (நூல்: புகாரீ: 24) ஆக வெட்கப்படுவது இறைநம்பிக்கையின் ஒரு பகுதி என்பதை அறிந்து நாம் மகிழ்ச்சியடையலாம். வெட்கம் உள்ள நாம் நம்முடைய இறைநம்பிக்கையை அறிந்துகொள்ளலாம் அல்லவா?

நபி (ஸல்) அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணைவிட அதிக வெட்கமுடையவர்களாயிருந்தனர்”  (நூல்: புகாரீ: 3562) என அபூசயீத் அல்குத்ரீ (ரளி) அவர்கள் கூறுகின்ற நபிமொழி கவனிக்கத்தக்கதாகும். கன்னிப் பெண்ணோடு சேர்ந்தே இருப்பது வெட்கம் ஆகும். ஆனால் அதைவிட அதிக வெட்கமுடையவர்களாக நபியவர்கள் இருந்துள்ளார்கள். அதேநேரத்தில் அதை இக்காலக் கன்னிப் பெண்களோடு ஒப்பிட்டுப் பார்க்கலாகாது. முகநூலில் தம் முகம் வர வேண்டும். அதற்கு நூற்றுக்கணக்கான விருப்பம் (லைக்) பதிவிடப்பட வேண்டும் என்று எண்ணுகிற கன்னியர் வாழும் காலமிது; வெட்கம் கிலோ என்ன விலை? எனக் கேட்கின்ற பருவ மங்கையர் வாழும் கணினிக் காலமிது. எனவே நபி (ஸல்) அவர்களின் வெட்கமும் நாணமும் முற்காலக் கன்னியரின் நாணத்தைவிட அதிகமானது எனப் பகுத்தறிதல் வேண்டும்.
முற்கால நபிமார்களின் ஏட்டில் இருந்த ஒரு வாசகம், “நீ வெட்கப்படவில்லையானால் விரும்பியதைச் செய்துகொள்என்பதாகும். (அபூதாவூத்: 4164) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆகவே வெட்கம் தொன்றுதொட்டு வருகின்ற ஓர் உன்னதமான பண்பாகும். அது அனைவரும் அவசியம் பேண வேண்டிய பண்பாகும்.

வெட்கம் இல்லையேல் எதையும் செய்யலாம். இன்றைய ஆடவர்-பெண்டிர்  இருபாலரிடமும் வெட்கம் தொலைந்து போய்விட்டது. அதனால்தான் அவர்கள் எதைச் செய்தாலும் வெட்கப்படுவதில்லை; எதைச் செய்யவும்  வெட்கப்படுவதில்லை. வெட்கங்கெட்ட செயலையும் செய்துவிட்டு, அதைத் துணிவோடு பிறர் முன்னிலையில் சொல்லவும் முற்படுகின்றார்கள். மறைமுகமாகச் செய்ய வேண்டியவற்றைப் பகிரங்கமாகப் பலர் முன்னிலையில் செய்கின்றார்கள். தன் மனைவிக்கு உணவூட்டுவதைக்கூடப் படமெடுத்து முகநூலில் பதிவிட்டு மகிழ்கின்றார்கள்.  திருமணத்தில் படமெடுத்து, பதிவு செய்து, எல்லோருக்கும் காணொலியாகக் காட்டி இன்புறுகின்றார்கள்; ‘இதுதான் என் திருமண ஆல்பம்எனக் காட்டுவதில் பெருமிதம் அடைகின்றார்கள். இதுதான் இன்றைய நிலை. இதனால் நாம் இறைநம்பிக்கையின் ஒரு பகுதியை இழந்து வருகிறோம் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. 

ஆக, இறைத்தூதர்களின் நற்பண்புகளுக்கு ஒளியூட்டும் விதமாகவும் அழகு சேர்க்கும் விதமாகவும் இருந்த நாணம்  நமக்கும் அழகு சேர்க்கும் அணிகலனாகும் என்பதில் ஐயமில்லை. எனவே நாணம் கொள்ளுதல் எனும் பண்பை நாமும் நம் அன்றாட வாழ்வில் கடைப்பிடிப்போம்.
இரண்டாவது, நறுமணம் பூசுதல் இறைத்தூதர்களின் வழிமுறைகளுள் ஒன்றாகும். “(என்னுடைய மனைவியரான) பெண்களும் நறுமணமும் எனக்கு விருப்பத்திற்குரியவையாக ஆக்கப்பட்டுள்ளன” (நூல்: நசாயீ: 3879) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் நறுமணம் பூசிக்கொள்வதை விரும்பினார்கள். நறுமணத்தைப் பூசிக்கொள்ளும்போது சோர்ந்து போயுள்ள உணர்வுகள் புத்தெழுச்சி பெற்று விரைவாகச் செயல்படத் தொடங்குகின்றன; மூளை நரம்புகள் சுறுசுறுப்படைகின்றன; மனம் மகிழ்ச்சியடைகிறது.

நறுமணம் பூசிக்கொண்டு பணியாற்றுபவர்கள், எட்டு மணி நேரத்தில் செய்யக்கூடிய பணியை ஆறு மணி நேரத்தில் செய்து முடிப்பார்கள். அதற்குக் காரணம், நறுமணம் பூசியதால் ஏற்பட்ட அவர்களின் சுறுசுறுப்பான  செயல்பாடுகள்தாம். எனவே இறைத்தூதர்களின் வழிமுறையான இப்பழக்கத்தை நாம் ஒவ்வொருவரும் நம் அன்றாட வாழ்வில் கடைப்பிடிப்போம். பெண்களைப் பொறுத்த வரை, திருமணமான பெண்கள் தம் கணவனைக் கவர்வதற்காக வீட்டில் இருக்கும்போது மட்டும் பூசிக்கொள்ளலாம். வெளியில் செல்லும்வேளையில் முற்றிலும் அதைத் தவிர்த்துவிட வேண்டும். ஏனைய பெண்கள் நறுமணம் பூசக் கூடாது என்பது மார்க்கச் சட்டமாகும்.  ஆனால் மார்க்கச் சட்டத்தை மீறிபெண்கள் பலர்  வெளியே புறப்படும்போது மல்லிகைப் பூச்சூடி, ஒப்பனை செய்து கொண்டு, செல்வதைக் காண முடிகிறது. இதை அவர்கள் முற்றிலும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
மூன்றாவது, பல் துலக்குதல் இறைத்தூதர்களின் வழிமுறைகளுள் ஒன்றாகும். இதை ஒவ்வொருவரும் பின்பற்றி வருவதால் இதன் முக்கியத்துவம் நமக்கு நன்றாகவே தெரியும். பல் துலக்குதல் வாய்க்குத் தூய்மையானது; இறைவனுக்கு விருப்பமானது” (நூல்: நசாயீ: 5) என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் வீட்டிற்குள் நுழைந்ததும் பல்துலக்கத் தொடங்கிவிடுவார்கள்” (முஸ்லிம்: 372) என்பதும், “என் சமுதாயத்திற்குச் சிரமத்தை ஏற்படுத்திவிடுவேனோ என்றில்லையானால் ஒவ்வொரு தொழுகைக்கும் பல்துலக்குமாறு நான் அவர்களுக்குக் கட்டளையிட்டிருப்பேன்” (புகாரீ: 887) என்ற நபிகளாரின் கூற்றும் பல்துலக்குவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கின்றன. 

ஆலும் வேலும் பல்லுக்குறுதிஎனும் முதுமொழி பல்துலக்கப் பயன்படுத்த வேண்டிய குச்சியைப் பற்றிப் பேசுகிறது. எத்தனையோ பற்பசைகள் வந்தாலும் நபிகளார் பயன்படுத்திய அராக்மரக்குச்சி,, ஆலமரக்குச்சி,, வேப்ப மரக்குச்சி ஆகியவை மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளன; அவை பற்களை உறுதிப்படுத்த உதவுகின்றன; பக்க விளைவுகளை ஏற்படுத்துவதில்லை என உறுதியாகக் கூறலாம். ஆகவே இந்த மூன்றாவது வழிமுறையையும் நாம் நம் அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும்.

நான்காவது, மணமுடித்தல் இறைத்தூதர்களின் வழிமுறைகளுள் ஒன்றாகும். ஈசா நபியைத் தவிர எல்லா இறைத்தூதர்களும் திருமணம் செய்துள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் பலதார மணம் புரிந்ததோடு, “திருமணம் எனது வழிமுறைஎனவும் கூறியுள்ளார்கள். விருப்பமும் வசதியும் உள்ளோர் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்துகொள்ளவும் திருக்குர்ஆன் அனுமதியளிக்கிறது. ஆணும் பெண்ணும் திருமணத்தைத் தத்தம் உணர்வுகளுக்கான வடிகாலாக ஆக்கிக்கொள்வதோடு சந்ததியைப் பல்கிப் பெருகச் செய்கின்றார்கள். அதுவே திருமணத்தின் தலையாய நோக்கமாகும். தாமும் இன்புற்று, அந்த இன்பத்தில் விளைந்த சந்ததிகளைப் பேணிக் காத்து, வளர்த்து ஆளாக்குவதில்தான் குடும்ப வாழ்க்கை பின்னிக்கிடக்கிறது. ஆகவே இந்த நான்காவது வழிமுறையைப் பின்பற்றுவது முற்றிலும் அவசியமாகும். ஆக இறைத்தூதர்களின் மேற்கண்ட நான்கு வழிமுறைகளையும் நாம் ஒவ்வொருவரும் பின்பற்றி, ஈருலகிலும் ஈடேற்றம் பெற உயர்ந்தோன் அல்லாஹ் அருள்புரிவானாக!

=====================