புதன், 19 அக்டோபர், 2016

நபிகளார் நவின்ற நான்குகள் (தொடர்-8)


முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி எம்.ஏ., எம்.ஃபில்., பிஎச்.டி.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமுதாயத்தாரிடையே நிலவுகின்ற நான்கு நடைமுறைகள் அறியாமைக் கால வழக்கங்களாகும். (பெரும்பாலான) மக்கள் அவற்றைக் கைவிடமாட்டார்கள். (அவையாவன:) 1. குலப்பெருமை பாராட்டுதல், 2. (அடுத்தவரின்) பாரம்பரியத்தைக் குறைகூறுதல், 3. கிரகங்களால் மழை பொழியும் என எதிர்பார்த்தல், 4. ஒப்பாரிவைத்து அழுதல். (நூல்: முஸ்லிம்: 1700) இதை அபூமாலிக் கஅப் பின் ஆஸிம் அல்அஷ்அரீ (ரளி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அறியாமைக் காலச் செயல்பாடுகளாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுக் கூறியுள்ளவை இன்று வரை சமுதாய மக்களிடம் எஞ்சியிருக்கத்தான் செய்கின்றன. அந்தப் பழக்கத்தால் மக்கள் இன்றும் பாதிப்புக்கு உள்ளாகின்றார்கள் என்பதே உண்மை.
குலப்பெருமை பாராட்டுதல் எனும் போக்கு முஸ்லிம்களிடம் இன்றும் புரையோடிப்போய்க் கிடக்கிறது. முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழ்கின்ற குறிப்பிட்ட சில ஊர்களில், அவர்கள் தமக்குள்ளேயே பெண்கொடுத்தல், பெண் எடுத்தல் உள்ளிட்டவற்றைச் செய்துகொள்கின்றார்கள். அடுத்த ஊர்க்காரர்களுக்கு அறவே பெண்கொடுக்க மாட்டார்கள்.  வெளியூரிலிருந்து வந்து அங்கேயே நீண்ட காலம் குடியிருந்தாலும் அவர்களுக்குக்கூடப் பெண் கொடுக்க மாட்டார்கள். தாங்கள் மட்டுமே உயர்குலத்தவராகவும் உயர்குடி மக்களாகவும் கருதிக்கொள்கின்ற அறியாமக்கள் இன்றும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றார்கள்.
நாங்கள் சையது வமிசம்’, நாங்கள் ஷேகுவமிசம் என்று கூறிக்கொண்டு குலப்பெருமையடிப்பவர்களும் இருக்கின்றார்கள். இப்படி எந்த வமிசத்திற்கும் எந்த உயர்மதிப்பும் கிடையாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே கூறியுள்ளார்கள். ஆக, இஸ்லாமிய மார்க்கத்தைப் பொறுத்த வரை குலப்பெருமை அறவே கூடாது.
அடுத்தவரின் பாரம்பரியத்தைக் குறை கூறுதல் எனும் போக்கு ஆங்காங்கே காணப்படுகிறது. நம்முடைய குடும்பத்திற்கென ஒரு பாரம்பரியம் இருக்கு. அதனால நாம் அவங்க குடும்பத்துல பெண் எடுக்கக் கூடாதுஎன்று பேசும் பெண்களும் ஆண்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். மேலும் அவரவர் செய்யும் தொழிலை  வைத்து, அவரவர் குடும்பத்தை மதிப்பிடுவதும் நடைமுறையில் இருக்கத்தான் செய்கிறது. சில விஜயங்களை வெளிப்படையாகச் சொல்லாமல் அந்தரங்கமாகவே வைத்துக்கொண்டு, பெண் கொடுக்க மறுப்பதற்கான காரணம் உயர்குலம், உயர்குடி என்றும் தாழ்நிலை மனிதர்கள் என்றும் பாகுபடுத்துவதுதான். இந்தப் பாகுபாடு மறையுமா?
முஸ்லிம்கள் அல்லாதோர் கிரகங்களின் ஓட்டத்தாலும் அவற்றில் ஏற்படுகின்ற மாற்றத்தாலும்தான் மழைபொழிகிறது என்று கூறுவதைக் காண்கிறோம். அறிவியல் வளர்ச்சியடைந்த இக்காலத்தில், அறிவியல்அறிஞர்கள் வேறொரு கோணத்தில் ஆய்வுசெய்து, “காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஏற்பட்டிருப்பதால் இன்று மழைபொழியலாம்என்று கூறுகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக அல்லாஹ் நாடினால்தான் மழைபொழியும் என்பதே ஒரு முஸ்லிமின் இறைநம்பிக்கையாகும். அதற்கப்பால் மனிதன் எது சொன்னாலும் அதுவெல்லாம் பொய்த்துப்போக நூறு சதவிகித வாய்ப்புண்டு. மழை பொழியப் போவதைப்போன்ற சூழல் ஏற்பட்டும் எத்தனையோ தடவை மழை பெய்யாமல் போனதை நாம் பார்த்திருக்கிறோம். அதுபோலவே மழைபெய்யும் எந்த அறிகுறியும் தென்படாமலேயே திடீரென மழை பொழிந்ததையும் நாம் எத்தனையோ தடவை கண்ணாறக் கண்டு அனுபவித்திருக்கிறோம். ஆக மழைபொழிதல், பொழியாமல் இருத்தல் எதுவும் அல்லாஹ்வின் விருப்பத்திற்கேற்ப நடைபெறுகின்ற செயலாகும்.  அதில் மனிதர்கள் தம் குற்றறிவால் கூறுவதெல்லாம் குலைந்துபோய்விடும்.
பொழிகின்ற மழைநீரில் எவ்வளவு மனிதனுக்குரியது; எவ்வளவு நிலத்திற்குரியது; எவ்வளவு கடலில் கலக்க வேண்டியது என்ற கணக்கை அல்லாஹ்வே நிர்ணயிக்கின்றான். அதன்படியே செயலாற்றுகின்றான். அல்லாஹ்வின் திட்டத்திற்கு எதிராக மனிதனின் எண்ணமும் செயலும் ஒருபோதும் நடந்தேறப் போவதில்லை என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.
நான்காவது அறியாமைக்காலச் செயலாக ஒப்பாரி வைத்து அழுதல்என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுக் கூறியுள்ளார்கள். பிறந்த ஒவ்வொரு மனிதனும் இறந்தே ஆக வேண்டும் என்ற நியதியை அல்லாஹ் விதித்துள்ளான். இதை மனித சமுதாயமும் ஏற்றுக்கொண்டுதான் உள்ளது. ஆனாலும் இறந்தவரின் அருமை பெருமைகளைச் சொல்லிச் சொல்லி ஒப்பாரி வைத்து அழும் பழக்கம் அறியா மக்களிடம் அண்டிக்கொண்டிருக்கிறது. இறந்தவனை நினைத்து அழுகவும் ஒப்பாரி வைத்து ஓலமிடவும் பெண்கள் நியமிக்கப்படுகின்றார்கள். அவர்கள் இறந்தவனின் முன்னிலையில் அமர்ந்துகொண்டு ஒப்பாரி வைத்து ஓலமிட்டு அழுவார்கள். அதாவது அழுவதைப் போன்று நடிப்பார்கள். அழுது முடிந்ததும் அதற்கான தொகையும் கொடுக்கப்படும். இந்த அறியாமைச் செயல்பாடு இன்றும் எத்தனையோ கிராமங்களில் நடைமுறையில் உள்ளது.
ஆனால் முஸ்லிம்கள், இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டுவிட்டதால் அதுபோன்ற செயல்பாடுகளிலிருந்து தவிர்ந்து வாழ்கின்றார்கள். இருப்பினும் யாரேனும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பின்பும் இதுபோன்ற அறியாமைக்காலச் செயலைத் தெரியாமல் செய்துவந்தால், அவள் தன் மரணத்திற்குமுன்பே அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அச்செயலிலிருந்து மீள வேண்டும். இல்லையேல் மறுமை நாளில் தாரால் ஆன நீளங்கியும் சொறிசிரங்குச் சட்டையும் அணிந்தவளாக அவள் நிறுத்தப்படுவாள்” (நூல்: முஸ்லிம்: 1700) என்று மேற்கண்ட நபிமொழியின் தொடரில் இடம்பெற்றுள்ளது. எனவே மேற்கண்ட அறியாமைக்காலச் செயல்பாடுகளையும் அவைபோன்ற வேறு மூடப்பழக்கங்களையும் விட்டு ஒதுங்கி அறிவுப்பூர்வமான மார்க்கத்தைப் பின்பற்றி வாழ்வோமாக!            
-இன் ஷாஅல்லாஹ் தொடரும்.
================


==========

கருத்துகள் இல்லை: