சனி, 19 டிசம்பர், 2015

எங்கள் பள்ளியில் மீலாது நிகழ்வு

எங்கள் பள்ளியில் மீலாது நிகழ்வு.

மழையும் மனிதனும்


           -மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி எம்.ஏ., எம்.ஃபில்.,

மனிதனின் அறிவுக்கும் ஆற்றலுக்கும் அப்பாற்பட்டவன்தான் இறைவன். அவனுடைய நுண்ணறிவுக்கும் ஆற்றலுக்கும் எதிரே மனிதன் என்னதான் போட்டிபோட்டாலும் இறுதியில் இறைவனின் ஆற்றல்தான் மிகைத்து நிற்கும். மனிதன் என்னதான் புதிய புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்தாலும் இறைவனின் நியதிக்கும் ஆற்றலுக்கும் எதிரே அவன் ஒன்றுமே இல்லை எனலாம்.

கடந்த காலங்களைவிட, அறிவியல் முன்னேற்றத்தின் உச்சாணியில் இருப்பதாகக் கூறிக்கொள்ளும் மனிதன், வருமுன் உரைக்கின்ற பல கருத்துகள் பொய்த்துப்போகின்றன என்பதை நாம்  இன்றும் கண்டுவருகிறோம். அவன் கூறுவது ஓரளவு ஒத்துவரும் என்பதுதான் உண்மை. மழை பொழியப்போகிறது என்று மனிதன் தன் விஞ்ஞான அறிவால் கூறுகின்றான். ஆனால் அதன் அளவு எவ்வளவு, எத்தனை பேர் அதன்மூலம் அழியப்போகின்றார்கள், எத்தனை பேர் அதன்மூலம் பயன்பெறப்போகின்றார்கள், எத்தனைபேரை அது அநாதையாக்கப்போகிறது, எத்தனைபேரை நாசமாக்கப்போகிறது-ஆகிய அனைத்தும் இறைவனின் அறிவுக்கும் ஆற்றலுக்கும் உரியது. இவையெல்லாம் மனித அறிவுக்கு அப்பாற்பட்டது. மனிதன் கணித்துக் கூறுவது ஓரளவு ஒத்துப் போகிறது என்று வேண்டுமானால் கூறலாம்.

இதைத்தான் பின்வரும் வசனத்தில் இறைவன் கூறுகின்றான்: நிச்சயமாக (உலக முடிவு) காலத்தைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடத்தில் (மட்டும்)தான் இருக்கிறது. அவனே மழையை இறக்கி வைக்கிறான். அவனே கர்ப்பங்கüல் தரிப்பதையும் அறிவான். (அவனைத் தவிர) எவரும் நாளைக்கு அவர் என்ன செய்வார் என்பதை அறியமாட்டார். புவியின் எந்தப் பகுதியில் இறப்பார் என்பதையும் (அவனைத் தவிர) எவரும் அறியமாட்டார். நிச்சயமாக அல்லாஹ்தான் (இவற்றை) நன்கறிந்தவனாகவும் தெரிந்தவனாகவும் இருக்கிறான். (31: 34)


தண்ணீரால் அழிக்கப்பட்ட சமுதாய மக்களும் இப்புவியில் வாழ்ந்திருக்கின்றார்கள். தொள்ளாயிரத்து ஐம்பது ஆண்டுகள் ஏகத்துவப் பிரச்சாரம் செய்து நம்பிக்கை இழந்துபோன இறைத்தூதர் நூஹ் (அலை) அவர்கள் இறுதியில் இம்மக்களை அழித்துவிடு என்று அல்லாஹ்விடம் வேண்டியபோது, கடும் மழைப்பொழிவால் ஏற்பட்ட வெள்ளத்தால்தான் அவர்கள் அழிக்கப்பட்டனர். அது குறித்தும் திருக்குர்ஆன் பேசுகிறது.

இவ்வுலகில் உள்ள அனைத்தையுமே அல்லாஹ் தண்ணீரிலிருந்து படைத்ததாகக் கூறுகின்றான். ஊர்வன, பறப்பன, நடப்பன யாவும் தண்ணீரால்தான் படைக்கப்பட்டன. தண்ணீர்தான் படைப்புகள் அனைத்திற்கும் மூலப்பொருள் என்பதைப் பின்வரும் இறைவசனம் எடுத்தோதுகிறது:  "(மனிதர்களே!) ஊர்ந்து செல்லக்கூடிய (உயிர்ப் பிராணிகள்) அனைத்தையும் அல்லாஹ் ஒரேவித தண்ணீரைக் கொண்டு படைத்திருந்தபோதிலும் (அவை யாவும் ஒரே வகையாக இருக்கவில்லை.) அவற்றுள் சில தம் வயிற்றால் (



பாம்புகளைப் போல்) ஊர்ந்து செல்கின்றன. அவற்றுள் சில இரு கால்களால் நடக்கின்றன. அவற்றுள் சில நான்கு கால்களால் நடக்கின்றன. (இவ்வாறு) அல்லாஹ் தான் விரும்பியவற்றை (விரும்பியவாறு) படைப்பான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின்மீதும் மிக்க ஆற்றலுடையவன்.
'' (24: 45)

அந்தத் தண்ணீரையே மனிதர்கள் பருகுகின்றார்கள். அந்தத் தண்ணீரையே எல்லாவற்றிற்கும் பயன்படுத்துகின்றார்கள். அதை இறைவன் உப்புநீராக மாற்றிவிட்டால் பருக இயலுமா என்று அல்லாஹ் மனிதர்களைப் பார்த்து வினாத் தொடுக்கின்றான்: "நீங்கள் குடிக்கின்ற தண்ணீரைக் கவனித்தீர்களா? மேகத்திலிருந்து அதனை நீங்கள் பொழிய வைக்கின்றீர்களா? அல்லது நாம் பொழிய வைக்கின்றோமா? நாம் விரும்பினால் அதனை (நீங்கள் குடிக்க முடியாத) உப்புநீராக ஆக்கியிருப்போம். (இதற்கு) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?''  (56: 68-70)


ஒரே பொருள், ஆக்கவும், அழிக்கவும் உயிர் வாழவும் பயன்படுவது விந்தையிலும் விந்தை. தண்ணீர் இறைவனின் மகத்தான அருட்கொடைகளுள் ஒன்று. அதை உரிய முறையில் பயன்படுத்துவதும் அதை வழங்கியமைக்காக அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவதும் மனிதனின் கடமையாகும். அதைப் பாதுகாப்பதும் அதற்கான ஓடுபாதைகளைத் தடுக்காமல் இருப்பதும் அதற்கு நாம் கொடுக்கும் மரியாதையாகும். அதனுடைய ஓடுபாதையை நாம் தடுத்துக்கொண்டால், அது தேங்கிநிற்குமிடத்தை நாம் ஆக்கிரமித்துக்கொண்டால் அது நம் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கிவிடும், ஏன், உயிரையே பறித்துக்கொள்ளும் என்பதை நாம் இந்த மழைக்காலத்தில் நேரடியாகப் பார்த்துப் புரிந்துகொண்டோம். அவரவர்க்குச் சேர வேண்டிய உரிமையை எவ்வாறு பறிக்கக்கூடாதோ அதேபோல் தண்ணீர் தேங்குமிடத்தை நாம் ஆக்கிரமித்துக்கொள்ளக்கூடாது. அல்லது ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட வீடுகளை நாம் வாங்கிக் குடியிருக்கக் கூடாது. அப்படி நாம் முறையாகச் செயல்பட்டால் ஆக்கிரமிப்பாளர்கள் அடங்குவார்கள். அவர்களின் பேராசையும் அடங்கும்.


இவை எல்லாவற்றையும் தாண்டி, மற்றொரு கோணத்தில் பார்க்கும்போது மனிதர்களிடம் பாவங்கள் ம-ந்துபோய்விட்டன. எங்கு நோக்கினும் பாவங்கள் மிகுந்து காணப்படுகின்றன. சில பாவங்களை அரசாங்கமே அனுமதிக்கிறது. இறைவன் தடுத்தவற்றை மீறி மனிதனும் அரசும் செயல்படுவதால் அந்த இறைவனின் கோபப் பார்வை மனிதர்கள்மீது அவ்வப்போது ஏற்படுகிறது. அதன் ஒரு பகுதிதான் கடுமையான இந்த அடைமழையும் அதனால் ஏற்பட்ட பெருவெள்ளமும் ஆகும். இதைப் பார்த்த பிறகாவது மனிதர்கள் பாவங்கள் செய்வதைவிட்டு விலகிக்கொள்ள முனைய வேண்டும். இல்லையேல் இதைவிடக் கடுமையான ஒரு பெருவெள்ளத்தை அனுப்புவது அல்லாஹ்வுக்கு அவ்வளவு சிரமமில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

எங்கு நோக்கினும் மது குடித்தலும் மாதுவை அனுபவித்தலும் தங்கு தடையின்றி நடைபெறுகின்றது. இந்த இரட்டைப் பாவங்கள்தாம் மனித சமுதாயத்தையே சீரழிக்கக்கூடியவை. சமுதாயத்தைக் கட்டமைத்துள்ள ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் சிதைக்கக்கூடியவை. மது குடிப்பவனுக்கு எண்பது கசையடியும் விபச்சாரம் செய்பவனுக்கு நூறு கசையடியும் வழங்க வேண்டுமென்பது இறைவனின் ஆணை. விபச்சாரம் செய்வோர் மணமானவர்களாக இருந்தால் அவர்களைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும் என்பது இறைக்கட்டளை. இவ்வளவு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தும் அப்பாவங்கள் அரசு அங்கீகாரத்துடன் நடப்பது எவ்வளவு வேதனையான விஷயம் என்பதை நாம் உள்ளூர உணர வேண்டும்.


ஏகத்துவக் கலிமாவை மொழியாதவர்கள் அப்பாவங்களைச் செய்தால், ஏகத்துவக் கலிமாவை  மொழிந்தவர்கள் தம் மனத்தால் அப்பாவங்களை வெறுக்க வேண்டும். ஏகத்துவக் கலிமாவை மொழிந்தவர்கள் யாரேனும் மது குடிப்பதையோ விபச்சாரம் செய்வதையோ கண்டால் நேரடியாகச் சென்று தடுக்க வேண்டும். அதற்கான சூழ்நிலை இல்லையென்றால், அது மிகப் பெரும் பாவம் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். இன்றைய சூழ்நிலையில் மது இல்லாத இடமே இல்லை. இத்தகைய  சூழலில் வாழ்கின்ற முஸ்லிம்கள்கூட மதுவுக்கு அடிமையாகும் அபாயகரமான நிலை உள்ளது. 


எனவே நாம் நம்மைச் சார்ந்தவர்களைப் பாதுகாக்க மது, விபச்சாரம் ஆகியவற்றின் தீமையை அவ்வப்போது உணர்த்திக்கொண்டே இருக்க வேண்டும். மதுவைத் தொட்டவன் அந்நிய மாதுவைத் தொடுவான் அல்லது கொலை செய்யத் துணிவான். இது மதியை மயக்கும் மதுவின் தீய தூண்டலால் ஏற்படுவதாகும். எனவே நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


இறைவனின் கோபப்பார்வையால் கொட்டித் தீர்த்த மழை இனி ஒருபோதும் நமக்கு வரக்கூடாது. இறைவனின் அருளாக மட்டுமே மழை வரவேண்டும். அதற்கு நாம் அனைவரும்  செய்த பாவங்களை எண்ணி வருந்தி, இறைவனிடம் பாவமீட்சி பெற இரு கைகளை அவனை நோக்கி உயர்த்த வேண்டும். நாம் செய்த குற்றங்களை நம் உள்ளங்கள் இசைவோடு ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை நம் அனைவருக்கும் நல்குவானாக!


==========================

என் செய்தியை வெளியிட்ட பத்திரிகைகளுக்கு நன்றி!

இனிய திசைகள், மரபு வழி, மணிச்சுடர் (நாளிதழ்), சமஉரிமை, மனாருல் ஹுதா ஆகிய பத்திரிகைகளுக்கு என் மனமார்ந்த நன்றி!







முகப்பு அட்டையில் என் செய்தியை வெளியிட்ட சமவுரிமை இதழுக்கு நன்றி.


என் செய்தியை வெளியிட்ட சமவுரிமை இதழுக்கு நன்றி.
வாழ்த்தியமைக்கு நன்றி