திங்கள், 24 ஆகஸ்ட், 2015

தூது வந்த வீரர்

எழுத்தாளரும் கவிஞருமான ஜனாப் ஏம்பல் தஜம்முல் முகம்மது அவர்களை இன்று (24-08-2015) காலை சந்தித்து இஸ்லாமிய இல்லறம் எனும் நூலைக் கொடுத்தேன். பாராட்டினார்; வாழ்த்தினார்.

அவர் தமிழாக்கம் செய்த தூது வந்த வீரர் எனும் நூலை எனக்குப் பரிசளித்தார். தாமஸ் கார்லைல் எனும் வரலாற்று ஆசிரியர் 150 ஆண்டுகளுக்குமுன் இங்கிலாந்தில் ஆற்றிய சொற்பொழிவின் தமிழாக்கமே அந்நூல். தமிழாக்கம்  என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட முடியாது. அதில் பக்கத்திற்குப் பக்கம் அவரின் அயராத உழைப்பு தெரிகிறது. வாசிக்கும்போது அதனைப் புரிந்துகொள்ளலாம்.

ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய நூலது. எனவே இதுவரை வாசிக்காதோர் யோசிக்காமல் அந்நூலை வாங்கி வாசிக்கத் தொடங்குங்கள். மொழியாக்கம் என்ற எல்லையைத் தாண்டி ஓர் இலக்கிய நூலைத் தமிழில் வாசிக்கின்ற திருப்தி கிடைக்கும்.

நூலைப் பெற தொடர்புகொள்க: 9994405644

குறிப்பு: நான் எனது நூலை அன்பளிப்பாகத்தான் கொடுத்தேன். ஆனால் அவர் அதற்கான பணத்தைக் கொடுத்துவிட்டார். பிறகு அவர் தமது நூலைத் தந்தபோது, பதிலுக்கு நான் அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுத்தேன். அவர் அதை வாங்க மறுத்து, துஆச் செய்யுங்கள் போதும் என்று கூறிவிட்டார். எனவே அவருடைய எழுத்துப் பணி புவியெங்கும் பரவிப் புகழ் பெறவும், அவர் ஈருலகிலும் அபரிமிதமான நன்மைகளை அடையவும் தூயோன் அல்லாஹ்விடம் இருகரமேந்துகின்றேன்.

 மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி, சென்னை-81


சனி, 22 ஆகஸ்ட், 2015

நபிகளார் நவின்ற மூன்றுகள் (தொடர் 22)


மூவருக்கு உதவுவது அல்லாஹ்மீது கடமை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பேருக்கு உதவி செய்வது மகத்துவமும் வல்லமையும் மிக்க அல்லாஹ்வின்மீது கடமையாக உள்ளது. 1. அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர், 2. கற்பைக் காக்க நாடித் திருமணம் செய்ய முனைபவர். 3. கடனை நிறைவேற்ற நாடுகின்ற விடுதலைப் பத்திரம் எழுதிக்கொடுக்கப்பட்ட அடிமை. (நசாயீ 3069)

நபிகளார் காலத்தில் எதிரிகளை எதிர்த்துப் போரிட வேண்டிய நிர்ப்பந்த நிலை முஸ்லிம்களுக்கு இருந்தது. எனவே அக்காலத்தில் நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களைப் போருக்கு அழைத்தார்கள். அவர்களோ அறப்போரில் கலந்துகொள்ள மிகுந்த ஆர்வமுடையவர்களாக இருந்தார்கள். அத்தகையோர் தம் குடும்பத்தையும் பொருட்படுத்தாமல் அல்லாஹ்வின்மீது நம்பிக்கைவைத்துப் போர்க்களத்திற்குச் சென்றார்கள். அதனால் அவர்களுக்கு அல்லாஹ் உதவிசெய்தான். அல்லாஹ்விற்காக அவர்கள் தம் குடும்பத்தையும் பொருட்படுத்தாமல் தம் உயிரையும் பொருட்படுத்தாமல் போருக்குச் சென்றதால் அவர்களுக்கு உதவிசெய்வது அல்லாஹ்வின்மீது கடமையாகின்றது. அந்த உதவி இரண்டு வகைகளில் கிடைக்கலாம். ஒன்று போர்க்களத்திலேயே அல்லாஹ்வின் உதவி கிடைப்பது. அதன்மூலம் அவர்கள் வெற்றி பெறுவது. மற்றொன்று அவர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் பொருளாதார உதவி செய்வது. ஆக அல்லாஹ்வின் உதவி அவர்களுக்குக் கட்டாயம் உண்டு.

முதன்முதலில் நடந்த போர் பத்ருப்போர் ஆகும். அது இஸ்லாமிய மார்க்கத்திற்கே திருப்புமுனையாக அமைந்தது. அப்போதைக்கு இருந்த முஸ்லிம்கள் 313 பேர் மட்டுமே. அவர்கள் அனைவரும் அப்போரில் கலந்துகொண்டார்கள். அந்தப் போரில் முஸ்லிம்கள் அனைவரும் தீரமுடன் கலந்துகொண்டதால் அல்லாஹ் அவர்களுக்கு உதவி செய்தான். முஸ்லிம்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக வானவர்களை அனுப்பி எதிரிப்படையினரை வெருண்டோடச் செய்தான். அல்லாஹ்வின் பாதையில் போராடுகின்ற போராளிகளுக்கு அவனுடைய உதவி கட்டாயம் உண்டு என்பதை இது உறுதிப்படுத்துகிறது.  

இரண்டாவது கற்பைக் காக்க நாடித் திருமணம் செய்ய முனைபவருக்கு அல்லாஹ்வின் உதவி உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் தெரிவித்துள்ளார்கள். ஒருவர் விபச்சாரத்தின் தீமையை உணர்ந்து அதன் தண்டனையைப் பயந்து அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சி, தம் கற்பைக் காத்துக்கொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் திருமணம் செய்ய நாடுகிறார் என்றால் அவருடைய நாட்டத்தை நிறைவேற்றும்பொருட்டு அல்லாஹ் அவருக்கு உதவி செய்கின்றான். அதாவது அவன் மணப்பெண்ணுக்கு வழங்க வேண்டிய மஹர் தொகையைச் செலுத்துவதற்கான ஏற்பாட்டைச் செய்கின்றான். அதன்மூலம் அவன் திருமணம் செய்ய உதவி செய்கின்றான். மேலும் அல்லாஹ் கூறியுள்ளதைக் கவனியுங்கள்: (ஆணாயினும், பெண்ணாயினும்) உங்களுள் எவருக்கும் வாழ்க்கைத் துணை இல்லாவிட்டால், அவர்களுக்கு(ம் விதவைகளுக்கும்) திருமணம் செய்துவிடுங்கள். (அவ்வாறே) உங்கள் அடிமையிலுள்ள நல்லோர்கள் ஆணாயினும் பெண்ணாயினும் சரி (வாழ்க்கைத் துணைவரில்லாத) அவர்களுக்கும் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாயிருந்தாலும் அல்லாஹ் தன்னுடைய அருளைக் கொண்டு அவர்களுடைய வறுமையை நீக்கி விடுவான். (24: 32)

மூன்றாவது, கடனை நிறைவேற்ற நாடுகின்ற விடுதலைப் பத்திரம் எழுதிக்கொடுக்கப்பட்ட அடிமைக்கு அல்லாஹ்வின் உதவி உண்டு. அக்காலத்தில் அடிமைகள் இருந்தனர். அவர்கள் தம் உரிமையாளர்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். அவர்களின் கட்டுப்பாட்டிலேயே வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும். அத்தகைய தருணத்தில் அந்த அடிமைகள் விடுதலைபெற நாடினால் தமக்கான விலையை அந்த உரிமையாளரிடம் செலுத்த வேண்டும். அநத் அடிமைக்கான தொகையை நிர்ணயித்து விடுதலைப் பத்திரத்தை அந்த உரிமையாளர் எழுதிக்கொடுப்பார். நிர்ணயிக்கப்பட்ட தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள்  செலுத்திவிட்டு  அவர் தம் அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற்றுக்கொள்ளலாம். இதுவே அக்காலத்தில் நடைமுறையில் இருந்த விடுதலைப் பத்திரமாகும்.

விடுதலைப் பத்திரம் எழுதப்பட்டவுடன் அந்த அடிமை விரும்பிய இடத்திற்குச் சென்று சம்பாதித்துப் பொருளீட்டித் தன் உரிமையாளரிடம் செலுத்த வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் அவ்வளவு பணத்தைச் சம்பாதிக்க முடியாமல் மீண்டும் அடிமையாகவே ஆகிவிடும் நிலையும் ஏற்படலாம். அதனால் அத்தகைய தருணத்தில் அல்லாஹ் அந்த அடிமைக்குத் திண்ணமாக உதவி செய்வான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.  

மகத்துவமும் வல்லமையும் மிக்க அல்லாஹ்வின் படையினர் மூன்று பேர் ஆவர். (அவர்கள்) 1. போர்வீரர், 2. ஹஜ் செய்பவர், 3. உம்ராச் செய்பவர் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (நசாயீ: 3070)

அல்லாஹ்வின் படையினர் என்று போர்வீரரோடு, ஹஜ் செய்பவரையும்  உம்ராச் செய்பவரையும் அல்லாஹ்வின் தூதர் இணைத்துக் கூறியுள்ளார்கள். அதன்மூலம் ஹஜ்ஜும்  உம்ராவும் செய்வது போர்செய்வதற்குச் சமமான இறைவழிபாடு என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். காரணம் போர்க்களத்தில் எவ்வாறு பல்வேறு சிரமங்களையும் துன்பங்களையும் சகித்துக்கொண்டு போரிட வேண்டுமோ அதுபோலவே ஹஜ்ஜிலும் பல்வேறு மொழிபேசுகின்ற, பல்வேறு நாட்டவர்களின் சிரமங்களையும் துன்பங்களையும் சகித்துக்கொண்டு பொறுமையை மேற்கொள்ளத்தான் வேண்டும். அது மட்டுமல்ல, தட்ப வெப்ப நிலை, காலநிலை மாற்றம், நேர மாற்றம் இப்படி எத்தனையோ இயல்பான வாழ்க்கையைப் பாதிக்கின்றவை இருக்கின்றன. நீண்ட தூரப் பயணம், உணவு முறை ஆகிய சிரமங்களும் உள்ளன. ஆகவேதான் அவ்வாறு கூறியுள்ளார்கள்.  

மகத்துவமும் மேன்மையும் மிக்க அல்லாஹ் ஓர் அம்பின் மூலம் மூன்று பேரைச் சொர்க்கத்தில் நுழையச் செய்கிறான்: 1. செய்கின்றபோது நன்மையை நாடி அதைச் செய்பவன், 2. அதை எறிபவன், 3. அதை (மீண்டும் பயன்படுத்த எடுத்துக் கொடுத்தோ பொருளாதார உதவிசெய்தோ) பரிமாறுபவன் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உக்பா பின் ஆமிர் (ரளி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நசாயீ: 3095)

போர்க்களத்தில் பயன்படுத்தப்படும் அம்பைச் செய்கின்றபோது அதைச் செய்பவர் நன்மையை நாடிச் செய்தால் அவரின் எண்ணத்திற்கேற்ப நற்கூலியை அல்லாஹ் அவருக்கு வழங்குகின்றான். இதன் மூலம் சண்டைகள் பெருக வேண்டும்; அதன் காரணமாக நிறைய வாங்கப்பட வேண்டும்; நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமில்லாமல் தூய எண்ணத்தோடு அதைச்  செய்தால் அவருக்குச் சொர்க்கம் உண்டு. இரண்டாவது, அந்த அம்பை எதிரிகளை நோக்கி எறிபவனுக்குச் சொர்க்கம். இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிராகப் போர்புரிவோர்மீது எய்யப்படுகின்ற ஒவ்வோர் அம்புக்கும் நன்மை உண்டு. அந்த அடிப்படையில் அதை எறிபவருக்குச் சொர்க்கமே உண்டு. போருக்கு உதவியாக இருப்பவருக்கும் சொர்க்கம் உண்டு. ஒன்று பயிற்சியின்போது எய்யப்படுகின்ற அம்பை மீண்டும் மீண்டும் எடுத்துக்கொடுப்பதன்மூலம் சொர்க்கத்தை அடையலாம். அல்லது போருக்காக அம்புகள் வாங்கப் பண உதவி செய்து சொர்க்கத்தை அடையலாம். ஆக ஓர் அம்பு மூவர் சொர்க்கத்தில் நுழையக் காரணமாக அமைகிறது.

தற்காலத்தில் இஸ்லாமியப் போரும் இல்லை; அம்பும் இல்லை. ஆனால் அந்த அம்புக்குப் பதிலாக இன்றைய காலத்திற்கேற்ப இஸ்லாமிய மார்க்கத்திற்குப் பயன்படுகின்ற, மார்க்கத்தைப் பாதுகாப்பதற்குத் தேவைப்படுகின்ற பொருள்களை வாங்கிக் கொடுப்பதன்மூலம் அந்த நன்மையை அடையலாம். சான்றாக, நாவால் செய்யப்படுகின்ற மார்க்கப் பிரச்சாரம், எழுதுகோல்களால் எழுதப்படுகின்ற இஸ்லாமியக் கருத்துகள், இணையதளங்கள்மூலம் பரப்பப்படுகின்ற ஏகத்துவப் பிரச்சாரங்கள், அதற்கான உறுதுணைகள் யாவும் அந்த வகையில் சேரும். ஓர் அம்பு மூவர் சொர்க்கம் செல்லக் காரணமாக இருக்கும் என்றால் ஏன் ஓர் எழுதுகோல் மூவர் சொர்க்கத்திற்கு நுழையக் காரணமாக இருக்கக்கூடாது? நிச்சயமாக நம்முடைய எழுதுகோல் நம்மைச் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லக் காரணமாக அமைய வேண்டுமென்றால் அது நம் கையில்தான் இருக்கிறது.

ஆம்! அந்த எழுதுகோல்மூலம் நாம் நன்மையைப் பரப்புவோராக இருக்க வேண்டும். அத்தகைய நல்வாய்ப்பு இக்காலத்தில் நிறையவே இருக்கின்றது. முகநூல், சுட்டுரை, வாட்ஸ்அப் முதலிய இணையதளங்கள் உள்ளன. அவற்றைத் தாண்டி எத்தனையோ இணையதளங்களிலும் பத்திரிகைகளிலும் நாம் சொந்தமாக எழுதுவதற்காக வாய்ப்பு நிறையவே உள்ளது. எனவே நம் எழுதுகோல் மூலம் நாம் சொர்க்கம் செல்ல இன்றிலிருந்து முயல்வோமாக!  
=========================





மகளிர் மஸ்ஜித்


மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி எம்.ஏ., எம்.ஃபில்.,

நம்முள் பலர் பற்பல நன்மைகளைச் செய்து, தொழுது, வழிபட்டு இனிதே ரமளானை வழியனுப்பி வைத்தோம். இந்த ரமளான் மாதத்தின் நிகழ்வுகள் என்னுள் சில சிந்தனைகளை விதைத்துச் சென்றது.  ரமளான் மாதத்தில் மட்டும் பெண்களுக்கெனத் தனியாகத் தொழுகை நடப்பதும் சில மஸ்ஜிதுகளில் பெண்களுக்கெனத் தனியே இட ஒதுக்கீடு செய்வதையும் காண முடிந்தது. ஆனால் பெண்கள் பலருக்குக் கூட்டாகத் தொழுகின்ற வாய்ப்புக் கிடைப்பதில்லை என்பதும் ஐவேளைத் தொழுகைக்கு  இந்த முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்பதும் என்னுள் வருத்தத்தை ஏற்படுத்தியது.
பெரும்பாலான மஸ்ஜிதுகளில் மகளிர்க்கெனத் தனியாக இட ஒதுக்கீடு செய்யப்படாததால் அவர்கள் வீட்டில் தனியாகத் தொழுவதில் அக்கறை காட்டுவதில்லை. இதனால் பெண்கள் சக பெண்களோடு இணைந்து கூட்டாக வழிபடுவதற்கும் மார்க்கச் சொற்பொழிவுகளைக் கேட்பதற்கும் வாய்ப்பே கிடைப்பதில்லை.

கூட்டாக ஓரிடத்தில் இணைந்து தொழுகின்றபோது சோம்பல் நீங்கி, சுறுசுறுப்போடும்  ஆர்வத்தோடும் வழிபடும் நிலை ஏற்படுகிறது.  பெண்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதால் ஒருவித மந்தநிலை ஏற்படுவது இயல்பு. இதனைப் போக்கும் வண்ணம் அவ்வப்போது மஸ்ஜிதுக்கு ஒரு நடை சென்று, நிம்மதியாகத் தொழுதுவிட்டு மனதாரப் பிரார்த்தனை செய்துவிட்டு, மார்க்க அறிஞரின் சொற்பொழிவைக் கேட்டு, மனநிறைவோடு இல்லம் திரும்பினால் மனதுக்கு ஒரு நிம்மதியும் புதுத்தெம்பும் ஏற்படுவதை உணரலாம்.
ஒரு கணவன் தன் மனைவியிடமும் பிள்ளைகளிடமும் நடந்துகொள்ள வேண்டிய முறையை மஸ்ஜிதில் உள்ள இமாம்கள் ஆண்களிடம் சொல்லிவிடுகின்றார்கள். ஒரு மனைவி தன் கணவனிடமும் பிள்ளைகளிடமும் நடந்துகொள்ள வேண்டிய முறையை, செய்ய வேண்டிய பணிவிடைகளைப் பெண்களிடம் எவ்வாறு சொல்வார்கள்? பெண்களுக்கென இட ஒதுக்கீடு மஸ்ஜிதில் வழங்கப்பட்டிருந்தால் அவர்களும் மார்க்க விளக்கங்களைக் கேட்டு அதன்படி நடந்துகொண்டிருப்பார்கள். அந்த வாசல் அடைக்கப்பட்டுவிட்டதால் அவர்களுக்கு மார்க்க அறிவு எவ்வாறு கிடைக்கும்?
இஸ்லாத்தின்  தொடக்கக் காலத்தில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமியர் என வரிசை வரிசையாக, ஒன்றன்பின் ஒன்றாக நின்று நபி (ஸல்) அவர்களின் தலைமையின்கீழ் ஏக இறைவனை வழிபட்டார்கள்; தொழுதார்கள். ஒரு கட்டத்தில் பெண்கள் மிகுதியாக வருகை புரிவதால் இடப்பற்றாக்குறை ஏற்படுவதைக் கவனித்த நபி (ஸல்) அவர்கள், பெண்கள் வீட்டில் தொழுவதன் சிறப்பையும் முக்கியத்துவத்தையும் கூறலானார்கள். இதனால் பெண்களின் வருகை குறையத் தொடங்கியது. இருப்பினும் அவர்களின் வருகை முற்றிலுமாக நின்றுவிடவில்லை. உமர் (ரளி) அவர்களின் காலம் வரை நடைமுறையில் இருந்தது.

 பெண்கள் அனைவரும் மஸ்ஜிதுக்குத்தான் வந்து தொழ வேண்டும் என்ற கட்டாயம் அவர்களுக்கு இல்லை. அதே நேரத்தில் மஸ்ஜிதுக்கு வருவதற்குத் தடை இல்லை என்பதையும் நாம் உணர வேண்டும். அவர்களுக்கும் வாய்ப்பளியுங்கள் என்றுதான் கூறுகிறேன். ஒவ்வொரு மஸ்ஜிதிலும் பெண்களுக்கெனத் தனியே இட ஒதுக்கீடு செய்யப்பட்டால், அவர்கள் விரும்பினால் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். வாய்ப்பே இல்லாதபோது அவர்கள் எங்கே போவார்கள்? மார்க்க அறிவை எங்கே பெறுவார்கள்?

கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து கடற்கரை, திரையரங்கு, பொழுதுபோக்குத் தளங்கள், சுற்றுலாத் தளங்கள் ஆகிய இடங்களுக்குச் செல்லலாம்; விரும்பினால் தர்ஹாவுக்குச் செல்வார்கள். மஸ்ஜிதுக்குச் சென்று தொழுக முடியுமா? "இன்று நாம் இருவரும் இன்ன மஸ்ஜிதுக்குச் சென்று  பயான் கேட்டு, தொழுதுவிட்டு வரலாம்'' என்று திட்டமிடமுடியுமா? ஆண்களும் பெண்களும் ஒருசேர இணைந்து தர்ஹாவுக்குச் செல்ல அனுமதித்தோர் மஸ்ஜிதுக்குச் செல்ல அனுமதிக்காததும்  அவர்களுக்கெனத் தனியிடம் ஒதுக்காததும் விந்தையிலும் விந்தை!

பயண நேரத்தில் பேருந்து நிலையம் அருகே உள்ள, தொடர்வண்டி நிலையம் அருகே உள்ள மஸ்ஜிதுக்குச் சென்று கணவன் தொழுகிறான்; பெண்களுக்கு உள்ளே அனுமதி இல்லாததால்  அவனுடைய மனைவி மஸ்ஜிதுக்கு வெளியே காத்திருக்கிறாள். இந்த நிலை எப்போது மாறும்?

இன்று பெண்கள் செல்லாத இடமும் உண்டோ? அவர்களின் கால் தடம் படாத இடமும் உண்டோ? பள்ளிக்கூடத்திற்குத் தம் பிள்ளைகளைக் கொண்டு விடுவதும் அவர்களைத் திரும்ப அழைத்து வருவதும், காய்கறிக் கடை முதல் துணிக்கடை வரை விருப்பம்போல் சென்று தாம் விரும்பியதை வாங்கி வருவதும், பொழுதுபோக்குத் தளங்கள் முதல் கொள்முதல் செய்யும் பெரும் பெரும் மால்கள் வரை சென்று வருவதும் பெண்களே! அப்படியிருக்கும்போது அவர்கள் மஸ்ஜிதுக்கு வந்தால் என்னதான் குழப்பம் வந்துவிடப் போகிறது?
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மஸ்ஜிதில் செய்யப்படுகின்ற பிரார்த்தனையில் ஆண்களோடு சேர்ந்து பெண்களும் ஆமீன் சொன்னால் அவர்களுடைய பிரார்த்தனையும் அங்கீகரிக்கப்படலாம் அல்லவா? ஆண்கள் மட்டும் மஸ்ஜிதில் தொழுதுவிட்டு இல்லம் திரும்பும்போது அங்கே இல்லாள் தொலைக்காட்சித் திரையில் தொடர் நாடகத்தைப் பார்த்து உளமுருகி கண்ணீரைச் சிந்திக்கொண்டிருக்கிறாள். கணவனோ மஸ்ஜிதில் கேட்ட பயானின் சுருக்கத்தைச் சொல்லத் தெரியாமல் தவிக்கிறான். இந்நிலை மாற வேண்டுமெனில் மஸ்ஜிதில் மகளிர்க்கான தனி ஒதுக்கீடு செய்வது ஒன்றே வழி! பெண்கள் சிலரின் கோரிக்கையை ஏற்று, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  பெண்களுக்கென ஒரு நாள் ஒதுக்கி, அவர்களுக்குத் தேவையான விஷயங்களைக் கூறினார்கள் என்பதை நபிமொழித் தொகுப்பு நூல்களின் வாயிலாக நாம் அறிகிறோம்.

இறைவனை இதயப்பூர்வமாக வழிபடுகின்ற இஸ்லாமியப் பெண்டிரும் சிலபல இல்லங்களில் உண்டெனினும் இறையில்லத்திற்கு வருகை புரிவதற்கான இனிய வாய்ப்பை உண்டாக்கிவிட்டால் அவ்வாய்ப்பை அவர்கள் பயன்படுத்திக்கொண்டு மார்க்க அறிவை வளர்த்துக்கொள்ள உதவியாக இருக்கும். தற்காலத்தில் பெரும்பாலோர் மனஅழுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மன அமைதியைத் தேடி எங்கேனும் வெளியே செல்ல விரும்புகின்றனர். எனவே அவர்கள் அனைவரும் அமைதியைத் தேடி அல்லாஹ்வின் இல்லத்தை நோக்கி வருமாறு திசை திருப்பிவிடுவது நம் கடமையாகும்.

ரமளானில் பெரும்பாலான மஸ்ஜிதுகளில் கடைசிப் பத்து நாள்களும் சில மஸ்ஜிதுகளில் ஒற்றைப்படை நாள்களிலும் சஹர் உணவு ஏற்பாடு நன்மையை நாடிச் செய்யப்படுகிறது. இதை உண்போர் ஆண்கள் மட்டும்தானே? பெண்கள் அவ்வுணவைச் சுவைக்க வாய்ப்பில்லையே? "நான் மஸ்ஜிதில் சஹர் சாப்பிட்டுக் கொள்கிறேன். நீ உனக்கு மட்டும் சமைத்துக்கொள்'' என்று கூறிவிட்டு மஸ்ஜிதுக்குச் சென்றுவிடுகிறார் குடும்பத்தலைவர். அவளோ வேண்டா வெறுப்பாகத் தனக்கு மட்டும் எதையாவது சமைத்துவிட்டுத் துயில்கொண்டெழுந்து சஹர் உண்கிறாள். ஆண்-பெண் இரு பாலருக்கும் வழிபாட்டிற்கான ஏற்பாடு செய்து, சஹர் நேரத்தில் அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யலாம்; மஸ்ஜிதில் போதிய இடவசதி இல்லையென்றால் அனைவருக்கும் உணவுப்பொட்டலங்களை வழங்கி வீட்டிற்கு அனுப்பலாம். ஆண்களுடைய எல்லாச் செயல்பாடுகளின் பின்னணியிலும் பெண்கள் இருப்பதைப் போன்று, தொழுகையில் ஆண்களின் பின்னணியில் பெண்களும் தனியே நிற்கட்டும். அவர்களும் படைத்தோனை உள்ளச்சத்தோடு வணங்கட்டும்.

பராஅத் இரவு அன்று ஒவ்வோர் ஊரிலும் உள்ள பொது அடக்கத்தலங்கள் (கபரஸ்தான்) தூய்மைப்படுத்தப்பட்டு, வண்ண விளக்குகள் ஒளியை உமிழ ஆண்களுக்கு ஒரு நேரம் பெண்களுக்கு ஒரு நேரம் என ஒதுக்கி ஸியாரத் எனும் ஒரு சுன்னத் உயிரூட்டப்படுவதைக் காண்கிறோம். மதீனாவில் அமைந்துள்ள நபிகள் நாயகம்  (ஸல்) அவர்களின் மஸாரை ஸியாரத் செய்ய ஆண்களுக்கு ஒரு நேரம் பெண்களுக்கு ஒரு நேரம் என ஒதுக்கப்படுகிறது; ஒரு சுன்னத் உயிர்ப்பிக்கப்படுகிறது. சுன்னத்தை நிறைவேற்றக் கொடுக்கப்படுகின்ற முக்கியத்துவம் ஃபர்ளுக்கு ஏன் கொடுக்கக்கூடாது? ஒவ்வொரு ஃபர்ளான தொழுகையையும் நிறைவேற்ற மஸ்ஜிதுக்கு வருகை புரிகின்ற ஆண்களுக்கு ஒரு பாதை, பெண்களுக்கு ஒரு பாதை என முடிவு செய்துவிட்டால் அந்தந்த வழியில் அவரவர் வந்து, இறைவனை வணங்கி, இன்புற்றுச் செல்வார்களே?

 பெண்களுக்கு ஒரு வழி; ஆண்களுக்கு ஒரு வழி. ஆனால் அனைவரும் செல்லுமிடம் ஒன்றுதான். அனைவரும் வழிபடும் இறைவன் ஒருவனே. ஆகவே ஒவ்வொரு மஸ்ஜிதிலும், "பெண்களுக்குத் தனி இடவசதி உண்டு'' என்ற அறிவிப்புப் பலகையை மாட்டி வைப்போம்; சமுதாயத்தை மாற்றியமைப்போம்!





ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

இஸ்லாமிய இல்லறம்

முஹம்மது முஸ்தபா அல்ஜிபாலீ ஆங்கிலத்தில் எழுதிய முஸ்லிம் பேமிலி எனும் நூலை மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி  இஸ்லாமிய இல்லறம் எனும் தலைப்பில் தமிழாக்கம் செய்துள்ளார்.

இந்நூல் தற்போது மூன்றாவது பதிப்பாக வெளிவந்துள்ளது.


கணவன் தன் மனைவியைப் பற்றித் தெரிந்துகொள்ளவும்
மனைவி தன் கணவனுக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகள் பற்றித்
தெரிந்துகொள்ளவும் படிக்க வேண்டிய நூலிது.

இருவரும் இணைந்து இனிதே இல்லறம் நடத்த விரும்பும் ஒவ்வொரு தம்பதியரும் படிக்க வேண்டிய நூலிது.

 இந்நூலில் கணவன் மனைவி ஒருவருக்கொருவர் செய்ய வேண்டிய கடமைகள், திருமணம் தொடர்பான அனைத்துத் தகவல்களும் திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் ஆதாரங்களோடு கூறப்பட்டுள்ளன.

வெளியீடு
248 சாஜிதா பதிப்பகம்
தம்புச் செட்டித் தெரு, மண்ணடி, சென்னை

நூலைப்பெற தொடர்புகொள்ள வேண்டிய செல்பேசி எண்:  9840977758


விலை ரூ. 200 மட்டுமே.

பக்கங்கள்: 448