புதன், 27 ஜூன், 2012

இனிய திசைகள் ஜூன் 2012

இல்லறம் இனிக்க...



ஆண்-பெண் பருவ வயதை அடைந்தவுடன் ஒவ்வொருவரும் தமக்கென ஒரு துணையைத் தேடுவது இயல்பு. இது மனித இனத்துக்கு மட்டுமின்றி எல்லா உயிரினங்களுக்கும் ஒரு பொது நியதி. அதற்கு இஸ்லாம் அங்கீகாரம் கொடுப்பதோடு வரவேற்கவும் செய்கிறது. அதற்கு மாறாக, உரிய பருவத்தில் திருமணம் செய்யாமல் காலம் கடத்துதல், பிரம்மச்சாரியாக இருத்தல், தனிமையை மேற்கொள்ளுதல் போன்றவற்றை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.

ஒரு குடும்ப வாழ்க்கை மூலமே குலம் விருத்தியடைகிறது. அக்குலம் விருத்தியடைந்தால்தான் மனித சமுதாயம் தழைக்கும். ஆகவே இஸ்லாம் இல்லற வாழ்வை வரவேற்கிறது. கட்டாயப்படுத்துகிறது. மக்களுக்கு ஓர் ஒப்பற்ற தூதராய் வந்த இறுதி இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் உட்பட அவர்களுக்குமுன் வந்த ஏனைய இறைத்தூதர்கள் அனைவரும் மணவாழ்க்கையை மேற்கொண்டுள்ளனர். அது பற்றி உயர்ந்தோன் அல்லாஹ் திருக்குர்ஆனில், உமக்கு முன்னால் நாம் இறைத்தூதர்களை அனுப்பியிருக்கிறோம். அவர்களுக்கு மனைவியரையும் சந்ததிகளையும் ஆக்கியிருக்கிறோம் (13: 38) என்று கூறியுள்ளான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், திருமணம் எனது வழிமுறை. யார் என் வழிமுறையைச் செயல்படுத்தவில்லையோ அவர் என்னைச் சார்ந்தவர் இல்லை. திருமணம் செய்துகொள்ளுங்கள். திண்ணமாக நான் உங்கள் மூலம் சமுதாயத்தை அதிகமாகக் காட்டிப் பெருமிதம் கொள்வேன். யாருக்குச் செல்வம் இருக்கிறதோ அவர் திருமணம் செய்துகொள்ளட்டும். யாரிடம் அது இல்லையோ அவர் நோன்பு நோற்றுக்கொள்ளட்டும். திண்ணமாக நோன்பு அவருடைய இச்சையைக் கட்டுப்படுத்தும் எனக் கூறியுள்ளார்கள். (நூல்: இப்னுமாஜா)

மேலும் திருமணத்தை வலியுறுத்திக் கூறுகின்ற பற்பல நபிமொழிகள் நபிமொழித் தொகுப்பு நூல்களில் காணப்படுகின்றன. அவற்றுள் ஒன்று: இளைஞர்களே! உங்களுள் யார் தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றிருக்கிறாரோ அவர் திருமணம் செய்துகொள்ளட்டும். ஏனெனில் அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும். கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரது இச்சையைக் கட்டுப்படுத்தும். (நூல்: இப்னுமாஜா)

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளதாவது: உஸ்மான் பின் மழ்ஊன் (ரலி) அவர்கள் பிரம்மச்சாரியாக இருப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைசெய்துவிட்டார்கள். நபியவர்கள் அவருக்கு அனுமதி கொடுத்திருந்தால் நாங்களும் (திருமணம் செய்யாமல் இருப்பதற்காகக்) காயடித்துக்கொண்டிருப்போம். (நூல்: இப்னுமாஜா)

திருமணம் செய்யாமலிருக்க அனுமதி கேட்டும் நபியவர்கள் அதற்கு அனுமதி மறுத்துவிட்டார்கள். இன்றைய கணினி யுகத்தில் வாழுகின்ற இளைஞர்களும் இளைஞிகளும் கணினியைப் போன்ற வேகத்தில் பரபரப்புடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அதனால் முற்காலம் தொட்டு இன்றுவரை இருந்து வருகின்ற வாழ்க்கைக் கட்டமைப்பு சிதைந்து போகும் நிலை உருவாகியுள்ளது.

திருமணம் செய்யாமலேயே ஆண்-பெண் இருவரும் சேர்ந்து வாழ்வதும், அவர்களுக்கிடையே ஒத்த கருத்து ஏற்படாவிட்டால் இருவரும் பிரிந்து விடுவதும், பின்னர் அவன் வேறொரு பெண்ணையும், அவள் மற்றோர் ஆணைத் தேடுவதும் பெருகி வருகிறது. இந்நிலை தொடர்ந்தால் பாரம்பரியத் திருமண வாழ்க்கை முறை எனும் கட்டமைப்புச் சிதைந்துவிடும் என்பதில் ஐயமில்லை.

அது மட்டுமின்றி, கணினி யுகத்தில் அவசரப்படுகின்ற யுவதிகள் தனக்குப் பிடித்த யாரேனும் ஓர் ஆண் துணையைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறாள். இவன்தான் என் காதலன் என்று அவனைத் தன் பெற்றோரிடம் அறிமுகப்படுத்துகிறாள். அவர்கள் எதிர்த்தால், தன் பெற்றோருக்கும் மற்றோருக்கும் தெரியாமல் அவனை மணந்துகொள்கிறாள். இதனால் ஒரு பெண் தன் பெற்றோரை மதிக்காத நிலை உருவாகின்றது. மட்டுமின்றி, அவளுடைய திருமணமும் செல்லாது. இதுவே இஸ்லாம் கூறும் முறையாகும்.

எப்பெண்ணுக்கு அவளுடைய வலீ-பொறுப்பாளி திருமணம் செய்துவைக்கவில்லையோ, அவளுடைய திருமணம் செல்லாது; அவளுடைய திருமணம் செல்லாது; அவளுடைய திருமணம் செல்லாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள்: புகாரீ, இப்னுமாஜா)

கணவனின் கடமை

ஓர் ஆண்மகன் தன்னை நம்பி வருகின்ற பெண்ணுக்குக் கொடுக்க வேண்டிய உரிமைகளைக் கொடுப்பதோடு, அவளுக்கு என்னென்ன அவசியத் தேவைகள் இருக்கின்றனவோ அவற்றை நிறைவேற்றிக்கொடுப்பது அவனுடைய கடமையாகும். உண்ண உணவும், உடுத்த உடையும், இருக்க இருப்பிடமும் அமைத்துக் கொடுக்க வேண்டும்.

நபித்தோழர் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், கணவர்மீது அவனுடைய மனைவிக்கு உள்ள உரிமைகள் என்ன? என்று வினவினார். அவன் உணவுண்டால், அவளுக்கு உணவளிப்பதும், அவன் ஆடையணிந்தால் அவளுக்கு ஆடை அணிவிப்பதும் ஆகும். (அவளுடைய) முகத்தில் அடிக்கக் கூடாது. திட்டக்கூடாது. வீட்டில் தவிர அவளைக் கண்டிக்கக் கூடாது என்று விடையளித்தார்கள். (நூல்: இப்னுமாஜா)

மனைவியின் கடமை

களைத்துப்போய், இல்லாளை நோக்கி இல்லம் திரும்பிவருகின்ற கணவனை தன் அன்பாலும் புன்னகையாலும் அரவணைப்பதும் அவனுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்வதும் ஒரு மனைவியின் கடமையாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீது வைத்துள்ள இறைநம்பிக்கைக்குப் பிறகு, ஒரு முஃமினுக்கு அவருடைய நல்ல மனைவியைத் தவிர வேறெதுவும் மிகச் சிறந்த பயன்கொடுப்பதில்லை. அவர் அவளை ஏவினால் அவள் (அவருக்குப்) பணிவாள். அவர் அவளைப் பார்த்தால் அவரை அவள் மகிழ்விப்பாள். அவர் அவளிடம் சத்தியம் செய்தால் அவருக்கு அதை நிறைவேற்றிக்கொடுப்பாள். அவர் அவளைவிட்டுச் சென்றுவிட்டால், அவள் தன் கற்பிலும், கணவருடைய பொருளிலும் அவருக்கு நன்மையே செய்வாள். (நூல்: இப்னுமாஜா)

மேலும், ஒரு பெண் தன் எந்த அளவுக்குக் கடமைப்பட்டிருக்கிறாள் என்பதற்கு ஓர் உதாரணமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது: ஒருவர் மற்றொருவருக்குச் சிரவணக்கம் செய்யலாம் என்றிருந்தால், ஒரு பெண் தன் கணவனுக்குச் சிர வணக்கம் செய்ய நான் அவளை ஏவியிருப்பேன். ஒருவன் தன் மனைவியிடம், செம்மலையிலிருந்து கருமலைக்கு இடம்பெயர்ந்து செல்ல ஏவினாலும், கருமலையிலிருந்து செம்மலைக்கு இடம்பெயர்ந்து செல்ல ஏவினாலும் அதை அவள் செய்வது அவள்மீது கடமைதான். (நூல்: இப்னுமாஜா)

கணவன் தன் மனைவியைப் பார்க்கும்போது அவனை மகிழ்விக்கும் விதத்தில் சாந்தமான முகத்தோடும், புன்னகை கொஞ்சும் எழிலோடும் காட்சி தருகின்றபோது அவனுடைய உள்ளமெலாம் இளகும். இதுவரை அவன் நெஞ்சில் இருந்த கவலைகளெல்லாம் பஞ்சாகிக் காற்றில் பறந்துவிடும். அத்தகைய பெண்ணே கணவனுக்கு மகிழ்ச்சியைத் தருபவள். அத்தகைய மனைவியைப் பெற்ற இறைநம்பிக்கையாளர் இவ்வுலகிலேயே சொர்க்கத்தைக் காணலாம் என்றால் அது மிகையன்று.

ஆக, இனிமையான இல்லற வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டுமெனில் கணவன் தன் பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவதும், மனைவி தன்னுடைய பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவதும் முற்றிலும் அவசியமாகும்.






இனிய திசைகள் ஜூலை (2012) மாத இதழில் வெளிவந்த பாராட்டுக் கடிதம்.