வியாழன், 19 ஜனவரி, 2012

இனியதிசைகள் (ஜனவரி 2012)


இனியதிசைகள் (ஜனவரி 2012)


படிக்க இங்கே சொடுக்குக

புதன், 18 ஜனவரி, 2012

இஸ்லாமிய இல்லறம்

ஆங்கிலம்: முஹம்மது முஸ்தஃபா அல்ஜிபாலீ
தமிழாக்கம்: நூ. அப்துல் ஹாதி பாகவி, எம்.ஏ., எம்.ஃபில்.

 திருமணம் என்பது ஒரு மனிதனின் விருப்பத்தை சட்டமுறைப்படி நிறைவேற்றிக் கொள்ளுதல் மட்டுமில்லை. மாறாக ஒருவரின் நற்செயல்களை அதிகப்படுத்திக் கொள்ளவும் வழிவகுக்கிறது. அபூதர்ரு (ரளி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபித்தோழர்களுள் சிலர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் முறையிட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! பணக்காரர்கள் எல்லாவித நன்மைகளையும் அடைந்து கொள்கின்றார்கள். நாங்கள் தொழுவதைப் போன்று அவர்களும் தொழுகின்றார்கள்; நாங்கள் நோன்பு நோற்பதைப்போல் அவர்களும் நோன்பு நோற்கின்றார்கள்; மேலும், அவர்களின் (உபரியான) செல்வத்திலிருந்து தர்மமும் செய்கின்றார்கள். (எங்களுக்கு அதுபோன்று இல்லையே?)

அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்: ஏன், நீங்கள் தர்மமாகக் கொடுப்பதற்கு அல்லாஹ் எதையும் உங்களுக்கு வழங்கவில்லையா? நிச்சயமாக, ஒவ்வொரு தஸ்பீஹும் (சுப்ஹானல்லாஹ் சொல்வது) தர்மமாகும். ஒவ்வொரு தக்பீரும் (அல்லாஹு அக்பர் சொல்வது) தர்மமாகும். ஒவ்வொரு தஹ்லீலும் (லாயிலாஹ இல்லல்லாஹ்’சொல்வது) தர்மமாகும். ஒவ்வொரு தஹ்மீதும் (அல்ஹம்துலில்லாஹ் சொல்வது) தர்மமாகும். நன்மையை ஏவுவதும் தர்மமாகும். தீமையைத் தடுப்பதும் தர்மமாகும். (உன் மனைவியுடன்) உடலுறவு கொள்வதும் தர்மமாகும். அத்தோழர்கள் கேட்டனர்: “அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதன் தன் சுய விருப்பத்தைத் தீர்த்துக் கொள்வதற்கும் நன்மை உண்டா?” அப்போது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ஒருவன் தன் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள தடுக்கப்பட்ட (ஹராமான) வழியைக் கையாண்டால் அது அவனுக்குப் பாவம் இல்லையா? என்று மறுவினாத் தொடுத்தார்கள். ”

 “ஆம்! நிச்சயமாக!’என்று அவர்கள் பதிலளித்தார்கள். அப்போது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறுதியாகச் சொன்னார்கள்: “அவ்வாறே அவன் தன் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள ஹலாலான (ஆகுமான) வழியைக் கையாண்டால் அது அவனுக்கு நன்மையாகும்.” பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தர்மங்களை உண்டாக்குகின்ற பல விசயங்களைக் குறிப்பிட்டார்கள். இறுதியாகச் சொன்னார்கள்: இவை அனைத்தையும் முற்பகல் (ளுஹா) தொழுகை உள்ளடக்கியுள்ளது.” (நூல்கள்: முஸ்லிம், அஹ்மது)

 அல்பானீ (ரஹ்) இதற்கு விளக்கம் கூறுகிறார்: சுயூத்தி இமாம் அவர்கள், “இத்காருல் அத்கார்” எனும் தம்முடைய நூலில், ஒருவன்(தன் மனைவியுடன்) உடலுறவு கொள்வது தர்மமாகும். அவன் அதுபற்றித் தன் மனதில் எதையும் எண்ணாமல் இருப்பினும் சரியே! ஒவ்வொரு தடவை உடலுறவு கொள்ளும்போதும் இந்நன்மை நிச்சயம் உண்டு என்பதே என் கருத்தாகும். ஆனால், குறைந்தபட்சம், அவன் அவளை மணமுடிக்கின்றபோது அது பற்றிய எண்ணம் அவனுள் இருந்திருக்க வேண்டும். மேலும் அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்’என்று கூறுகின்றார். (நூல்: ஆதாபுஸ்ஸிஃபாப், பக்கம்-138)

 இது போன்றதொரு விசயத்தை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூதர் (ரளி) அறிவிக்கின்றார்கள்: ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு நாளும் (ஏதேனும்) ஒரு தர்மம் செய்வது அவசியமாகும்.” இதைக் கேட்ட அபூதர் (ரளி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் எந்தப் பணமும் இல்லாத நிலையில் நான் எப்படி ஒவ்வொரு நாளும் தர்மம் செய்ய முடியும்? என்று வினவினார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்: ஏனெனில் தர்மத்தின் வாசல்கள் பல உள்ளன.

அவை: தக்பீர் (அல்லாஹு அக்பர்) சொல்வது,“சுப்ஹானல்லாஹ் சொல்வது,“அல்ஹம்து லில்லாஹ் சொல்வது,“லாயிலாஹ இல்லல்லாஹ் சொல்வது,“அஸ்தஃக்ஃபிருல்லாஹ் சொல்வது, நன்மை செய்வது, தீமையைத் தடுப்பது, மக்கள் நடமாடும் பாதையில் முட்கள், எலும்புகள், கற்கள் ஆகியவற்றை நீக்குவது, பார்வையற்றவருக்கு வழிகாட்டுவது, செவிடர் செவியுறுவதற்கும் ஊமை விளங்குவதற்கும் உதவி செய்வது, ஒருவர் தாம் தொலைத்துவிட்ட பொருளைத் தேடிக் கொண்டிருக்கின்ற போது அவ்விடம் உனக்குத் தெரிந்தால் அவருக்கு அறிவிப்பது, உதவி கேட்டுக் கூக்குரலிடுகின்ற அப்பாவிக்கு உதவி செய்ய ஓடுவது, பலவீனமானவருக்கு, அவரின் பொருளை உன் கரங்களால் தூக்கிவிடுவது, உன் மனைவியுடன் உடலுறவு கொள்வது- இவை அனைத்திற்கும் உனக்கு நன்மை உண்டு. தர்மத்தை உண்டாக்குகின்ற மேற்கூறிய அனைத்தும் உனக்காக நீ சம்பாதிப்பவையாகும்.

இதைச் செவியுற்ற அபூதர் (ரளி) அவர்கள், என் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கு எப்படி எனக்கு நன்மை வழங்கப்படும்?’என்று வினவினார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்: உனக்கொரு குழந்தை இருக்கிறது; (நீ அதை வளர்த்து வருகிறாய்;) அது பருவ வயதடைகிறது; அக்குழந்தையிடமிருந்து நிறைய நன்மைகளை நீ எதிர்பார்க்கிறாய். ஆனால் அது (திடீரென) இறந்துவிட்டது. (அப்போது) நீ அதற்காக நன்மையைக் கேட்பாயா? (என்று வினவினார்கள்.) ஆம்!’என அபூதர் (ரளி) அவர்கள் பதிலளித்தார்கள்.

அப்போது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள், நீ அந்தக் குழந்தையைப் படைத்தாயா? என்று வினவினார்கள். இல்லை! அல்லாஹ்தான் அதைப் படைத்தான்’என்று கூறினார்கள். நீ அக்குழந்தைக்கு நல்வழி காட்டினாயா?’என்று வினவினார்கள். “இல்லை! அல்லாஹ்தான் நல்வழிகாட்டினான் என்று கூறினார்கள். “நீ அக்குழந்தைக்கு உணவு கொடுத்தாயா? என்று மீண்டும் வினவினார்கள். இல்லை! அல்லாஹ்தான் உணவு கொடுத்தான் என்று பதிலளித்தார்கள். பின்னர் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:அவ்வாறே, உன் விதையை அனுமதிக்கப்பட்ட இடத்தில் (உன் மனைவியிடம்)வை. தடுக்கப்பட்ட இடத்தை விட்டு (விபசாரம்) தவிர்ந்து கொள். பிறகு அல்லாஹ் நாடினால் அதற்கு உயிர் கொடுப்பான்; மேலும், அவன் நாடினால் அதை மரணிக்கச் செய்வான். (இவ்விரு நிலைகளிலும்) நீ நன்மை வழங்கப்படுவாய். (நூல்கள் :இப்னு ஹிப்பான், நசயீ)

-இஸ்லாமிய இல்லறம் எனும் நூலிலிருந்து.